
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வெற்றிப் படங்களில் ஒன்று கர்ணன். அப்படத்தின் பாடல்களில் ஒன்றான கவியரசு கண்ணதாசன் எழுதி, புகழ் மிக்க சீர்காழி கோவிந்தராஜன் பாடிய
“செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா, கர்ணா வஞ்சகன் கண்ணனடா” என்கிற பாடல் நெஞ்சை விட்டு நீங்காது.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்று அந்தப் பாடல் தொடங்கும்.
ஒளிந்து, மறைந்து, விளையாடிய கண்ணாமூச்சி விளையாட்டு, தற்போது வெட்ட வெளிச்சம் ஆகவிட்டது.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்று தோற்றுப் போய்விட்ட நிலையில், உள்ளதை உள்ளபடி சொல்லியாக வேண்டிய நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் ஒருவர்.
சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதனை புறந்தள்ளி விட்டு டெல்லிக்கு செல்கிறார்.
பத்திரிகையாளர்கள் எங்கே வந்தீர்கள் என கேட்க, கட்சியின் அலுவலகத்தை பார்க்க வந்தேன் என்று பதில் அளித்தார். இது நடந்தது காலை வேளையில்.
அன்று இரவு யாருக்கும் தெரியாமல், உள்துறை அமைச்சரை சந்தித்தார் சகாக்களுடன். வெளியே வந்தார், பத்திரிகையாளர்கள் கேட்டனர். என்ன சந்திப்பு என?
தமிழ்நாட்டு மக்கள் கோரிக்கைகளுக் காக என்று பதிலளித்தார். இவைகளை தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் வாசகப் பெருமக்கள் நன்கு அறிந்ததே.
திரு எம்ஜிஆர் தொடங்கிய கட்சி, மக்களின் ஆதரவு பெற்ற கட்சி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் முதல்வர் பொறுப்பில் இருந்த கட்சி.
இன்றைக்கு அக் கட்சி ஆட்சியில் இல்லாவிட்டாலும், சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள கட்சி. செயல்படும் கட்சியா என்பது வேறு விஷயம்!
அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி உள்ளார் என்பதனை அவரே அதனை திரும்பத், திரும்பக் கூறி வருகின்றார்.
நான்தான் பொதுச் செயலாளர், அடுத்து வரும் தேர்தலில் அதிமுக அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி வாகை சூடும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. நான்தான் முதலமைச்சர் என்று மணி தவறாமல், நாள் தவறாமல் கூறி வருகின்றார்.
இவை மட்டுமல்ல, நாங்கள் தன்மானமிக்கவர்கள், யாருக்கும் பயப்பட மாட்டோம், அஞ்ச மாட்டோம் என்று மார்தட்டுகிறார். எனது தலைமையில் பலம் வய்ந்த மெகா கூட்டணி அமைப்பேன் என்கிறார். எங்களோடு பல கட்சிகள் வந்து சேர உள்ளன என்கிறார். திமுக கூட்டணி உடையும், அக்கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களுடன் வந்து சேர்வார்கள் என்கிறார். அப்படி வருகின்றவர்களை ரத்தின கம்பளம் கொண்டு வரவேற்பேன் என்கிறார். பல மாதங்களாக இக்கருத்துக்களை தனது பிரச்சாரத்தில் தெரிவித்து வருகின்றார்.
ஆனால் எக் கட்சியும் அவருடன் பேசவில்லை, எந்த கட்சியும் அவரது அழைப்பை ஏற்கவில்லை என்பது மட்டுமல்ல, நிராகரித்து விட்டன என்பது எல்லோரக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிமுக, பாஜக கூட்டணியா? அல்லது கூட்டணி ஆட்சியா? என்பது கூட முடியாத நிலையில், அவ்விரு கட்சிகள் மட்டுமே கூட்டணி என்று ஒரே மேடையில் அல்ல, தனித்தனியாக கிணற்றுத் தவளை போன்று கத்தி வருகின்றனர்.
பாஜக கூட்டணியில் இருப்பதாக இதுநாள் வரை கூறிவந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அக்கூட்டனியில் இருந்து விலகி விட்டதாக அறிவித்துவிட்டார்.
மற்றொருவரான டி.டி.வி.தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக கூறியது மட்டுமல்ல, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்பதனை திட்டவட்டமாக கூறிவிட்டார். கூறியது மட்டுமல்ல எடப்பாடி பழனிச்சாமி பெரும் துரோகி என்றும் பகிரங்கரமாக அறிவித்துள்ளார். பாஜகவுடன் உறவில் தொடர்ந்த இருவரும் விலகி விட்டார்கள்.
அதிமுகவின் தொடக்க கால உறுப்பினர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவராகவும், முன்னாள் அமைச்சராகவும் செயல்பட்டு வந்த செங்கோட்டையன் பிரிந்தவர்களை சேர்க்க வேண்டும் என்று மனம் திறந்து பேசி, பத்து நாள் கெடு வைக்க, கோபத்தின் உச்சத்திற்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் வகித்த பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டார்.
நீக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவின் நிர்வாகிகள் நூற்றுக்கணக்கான ராஜினாமா கடிதங்களை எடப்பாடியாருக்கு அனுப்பி வைக்கும் படலம் தொடர்கிறது என்கிறார்கள். செங்கோட்டையன் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் டெல்லிக்கு புறப்பட்டார்.
புறப்பட்டவரை பத்திரிகையாளர்கள் விமான நிலையத்தில் பேட்டி கண்டனர். டெல்லிக்கு ஏன் செல்கிறீர்கள்? யாரைப் பார்க்க? என வினா தொடுத்தனர். ஹரித்துவார் செல்கின்றேன், அங்கு சென்று ராமபிரானை தரிசிக்க உள்ளேன். மன அமைதிக்காக ஏன்றார். ஹரித்வாரில் ஏது ராமர் கோவில்?
அவர் கூறியபடி அரித்துவார் செல்லவில்லை, மாறாக டெல்லியில் முகாமிட்டார். அங்கு அமித்ஷா என்ற ராமரை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். என்ன மனவலிமை பெற்றாரோ, தொ¤யவில்லை ஊர் திரும்பிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரப் பயணங்களை ஒத்திவைத்து, அவசரமாக டெல்லி புறப்பட்டார். அவர் மட்டுமின்றி, அவரது சகாக்களுடன் விமானத்தில் விரைந்தார்.
பத்திரிகையாளர்கள் டெல்லி பயணத்தின் நோக்கம் என்ன என்று வினவினர். புதிய குடியரசு துணைத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க செல்கிறேன் என்றார்
ஆனால் என்ன நடந்தது? இரவோடு இரவாக அமித் ஷாவை சந்தித்தனர். கூட்டாக சந்தித்தது மட்டுமல்ல, தனித்தும் எடப்பாடி- அமித்ஷா சந்திப்பு நடந்து முடிந்துள்ளது.
எடப்பாடி தனி காரில் சென்றார், போகும்போது பயன்படுத்திய கார், திரும்ப வரும் போது பயன்படுத்தவில்லை. வருவதற்கு வேறொரு கார் என்பது மட்டுமல்ல, முன் இருக்கையில் அமர்ந்து புன்னகையோடு கம்பீரமாக வரவேண்டிய தன்மானம் மிக்க தலைவர், பின் இருக்கையில் அமர்ந்து, முகத்தை மூடி மறைத்து, முகமூடி கொள்ளையன் போன்று வரவேண்டிய அவசியம் என்ன?
ஏன் இந்தப் பதுங்கல்? ஏன் இந்த புற வழிப் பாதை? ஏன் இந்த ஒளிவு மறைவு? ஏன் இந்த குறுக்கு வழி அரசியல்? குறுக்கு வழி அரசியல் வெற்றி பெறுமா?
திரு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் உருவாக்கப்பட்டு, செல்வி ஜெயலலிதாவால் வழி நடத்தப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய பொதுச் செயலாளராக கோலோச்சும் மாட்சிமை தாங்கிய, முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு பகிரங்கக் கேள்வி?
உங்கள் கட்சியை வழி நடத்துவது யார் ஐயா? உங்கள் கட்சியின் நீண்ட கால உறுப்பினர், ஜெயலலிதாவிற்கு நெருக்கடி ஏற்பட்டு, தான் வகித்த முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலக வேண்டிய அரசியல் நெருக்கடி வந்த போது, அவரால் முதலமைச்சராக அடையாளம் காட்டப்பட்டு, அரியணையில் அமர வைத்து அழகு பார்த்த ஓ. பன்னீர்செல்வம்.
ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்க வந்தபோது, அதனை முழு மனதோடு ஏற்று, விட்டுக் கொடுத்தார் என்பதனை, ராமாயணக் கதையை கூறி, இராமன் அரியணை ஏற வழிவிட்ட பரதனோடு ஒப்பிட்டு, ஓ பன்னீர்செல்வத்தை மனமார பாராட்டி மகிழ்ந்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, இரவு பகல் பாராது மருத்துவமனையிலேயே கதி என இருந்தார் ஓபிஎஸ். அம்மையாரின் மறைவிற்குப் பின்னர் முதல்வராகவும் பொறுப்பு ஏற்று செயல்பட்டார்.
அப்படிப்பட்ட ஓபிஎஸ்ஸை ஜெயலலிதாவின் சமாதி முன் அமர்ந்து தர்ம யுத்தத்தை நடத்தச் செய்தது யார்?
திருமதி சசிகலாவை சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்து, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருசேர கையெழுத்திட்டு கொடுத்த கடிதத்தை அலட்சியப்படுத்தி, வாரக்கணக்கில் பொறுப்பு ஆளுநர் இழுத்தடிக்க யார் காரணம்?
ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீதுள்ள வழக்கு தீர்ப்பை விரைவாக வழங்க செய்து, ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்க செய்தது யார்? சசிகலாவையும், அவரது உறவினர்களையும் சிறைக்குத் தள்ளியது யார்? தெய்வம் போல போற்றப்படும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை சோதனை போட்டது யார்?
தற்போது ஓபிஎஸ் அணி, தினகரன் அணி, சசிகலா அணி, செங்கோட்டையன் அணி என அதிமுகவை கூறு போட்டது யார் ஐயா? உங்களை மட்டுமல்ல, உங்கள் கட்சியில் உள்ள ஒவ்வொரு தலைவரையும், தனித்தனியாக சந்தித்து, ஆலோசனை வழங்கி கொண்டிருப்பவர்கள் யாரையா?
மானஸ்தரே! தன்மானமிக்க தலைவரே! உங்க குடுமி யார் கையில் இருக்கிறது ஐயா?
ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் மற்றொரு கட்சி தலையீடு செய்வது அரசியல் அநாகரிகம் அல்லவா?
அதுவும் தோழமைக் கட்சியை, உள் புகுந்து, மித்திர பேதங்கள் புரிந்து, ஒருவருக்கொருவர் பகை மூட்டி, மோதலை உருவாக்கி, மோதச் செய்து, மோதலில் மண்டை உடை பட்டு, ஒழுகும் ரத்தத்தை ருசி பார்ப்பது எந்த நரி ஐயா?
இவையெல்லாம் போதாது என அண்ணாவின் பிறந்த நாளில் ஆற்றிய பேருரையில் “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பழனிசாமி சந்தித்து பேச்சு நடத்த இருக்கிறார். உட்கட்சி பிரச்சனைகளை குறித்து பேச இருக்கிறார் என்கின்றனர். அதிமுகவை எவராலும் எதுவும் செய்ய முடியாது. எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் தான் முக்கியம்“ (தினமலர் 16.9.2025) என்று பேசியது பழனிசாமி தானா? அப்படியானால்? அது உண்மையானால்? 16ஆம் தேதி இரவோடு இரவாக, முக்காடிட்டு உள்துறை அமைச்சரை சந்தித்தது ஏன்? தன்மானம் என்ன ஆனது?
அதே உரையில் கூறுகின்றார் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், சிலர் அதிமுகவை கபளீகரம் செய்யவும், ஆட்சியை கவிழ்க்கவும் பார்த்தனர்.
“மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தான் அதை காப்பாற்றி கொடுத்தனர். அதனால் நன்றி மறவாமல் இருக்கின்றோம். எதிரிகளை வீழ்த்துவதற்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்“
இவ்வாறு கூச்சம், நாச்சம், வெட்கம் ஏதும் இன்றி பேசியுள்ளார் எடப்பாடியார்.
ஆப்பசைத்த குரங்கை போன்று அலறுகின்றார்.
நாங்கள் பயந்தவர்கள் அல்ல, தன்மானம் உள்ளவர்கள் என்பது உண்மையானால், டெல்லிக்கு காவடி எடுத்து ஓடுவது ஏன்?
நன்றி மறப்பது ஆகாது என திருக்குறளை மேற்கோள் காட்டுகின்றார். யாருக்கு நன்றி? எதற்காக நன்றி? கட்சியை கூறு போட்டு, சுக்குநூறாக உடைப்பதற்கு நன்றியா?
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் பேர் சொல்லடா’’
பாரதத்தில் கண்ணன்!
அதிமுகவிற்கு வஞ்சகன் யார்?
அமித்ஷா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரே, பதில் சொல்லுங்கள்.