கட்டுரைகள்

தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம் என்ற சொற்கள் கூட இல்லாமல் ஒன்றிய அரசின் தொழிலாளர் கொள்கை

அமர்ஜித் கௌர் கண்டனம்

ஏஐடியுசியின் பொதுச் செயலாளரான அமர்ஜித் கௌர், கடந்த திங்களன்று, கேரளா செல்லும் வழியில், ஏஐடியுசி சங்க நிர்வாகிகள் மத்தியில், ஒன்றிய அரசு, தற்போது வெளியிட்டுள்ள வரைவு தொழிலாளர் அறிக்கையான ஷ்ரம் சக்தி நிதி 2025 பற்றி பேசினார்:

தமிழக அரசு வேலை நேரத்தை உயர்த்தி சட்டம் இயற்றியபோது, அதனை எதிர்த்து தொழிலாளர்களும், ஜனநாயக சக்திகளும் காட்டிய எதிர்ப்பின் விளைவாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனைத் திரும்பப் பெற்றார். தற்போதும் தொழிலாளர்கள் எட்டுமணி நேரத்திற்கும் மேலாக வேலைசெய்துவருகிறார்கள்.

இந்த நிலையில் ஷ்ரம் சக்தி நிதி 2025 என்ற பெயரில் வரைவு தொழிலாளர் கொள்கையை ஆளுகின்ற ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ளது. இப்படி ஒரு கொள்கையறிக்கையை அறிவிப்பதற்கு முன்பு தொழிற்சங்கங்களோடு எந்தக் கலந்துரையாடலையும் தொழிலாளர் துறை நடத்தவில்லை. அதன் நகலைக்கூட தொழிற்சங்கங்களுக்கு அனுப்பவில்லை. இப்படி ஒரு கொள்கையை அரசு வெளியிட்டது பற்றி இந்து நாளிதழில் செய்தி வந்தபின்பே நமக்குத் தெரியவந்தது. இந்த வரைவுக் கொள்கையைத் தொழிலாளர் துறை தமது வலைத்தளத்தில் கூட வெளியிடவில்லை. இதுபற்றி எந்தப் பொது அறிவிப்பையும் விடவில்லை. இந்த வரைவுக்கொள்கையை, அந்தச் செய்தியை வெளியிட்ட இந்து நாளிதழின் நிருபரிடம் இருந்து பெற்றோம். இதனை மற்ற மத்திய தொழிற்சங்கங்களுக்கும் பகிர்ந்தோம். இப்படி வந்துள்ளது பற்றி அவர்களுக்கும் தெரியாது. அது மட்டுமின்றி இந்தக் கொள்கை ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இந்தி உள்ளிட்ட வேறு எந்த மொழிகளிலும் இது வெளியிடப்படவில்லை. இதன்மீது பொதுமக்களின் கருத்துகளைப் பெற்ற பின்பு அதனை அமலாக்க அரசு எண்ணியுள்ளது. இதன்மீது நமது ஆட்சேபணைகளைத் தெரிவித்து உள்ளோம்.

தொழிலாளர் கொள்கைகளை உருவாக்கும் போது தொழிலாளர்களின் கண்ணியம், பாதுகாப்பு, பணிநிலைமைகள் பற்றி உலகத் தொழிலாளர் அமைப்பு (ILO) உருவாக்கியுள்ள சர்வதேச இணக்க விதிகளை இந்த வரைவுக் கொள்கை கண்டுகொள்ளவில்லை. தொழிலாளர், வேலை அளிப்பவர், அரசு ஆகிய மூவரும் உள்ள முத்தரப்பு அமைப்பில் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்ற நெறிமுறை மீறப்பட்டுள்ளது.

மனுஸ்மிருதி, பண்டைய சாஸ்திரங்கள் அடிப்படையில் தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும் என்று அரசின் கொள்கை கூறுகிறது. பண்டைய சாஸ்திரங்களில் சம்பளம் என்ற சொல்லே இல்லை. தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம், போன்ற சொற்களே இல்லாமல் தொழிலாளர் துறை ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது. தொழிலாளர் கொள்கை அமலாக்கத்தில், அரசியல் சட்டம் பற்றிய குறிப்பு இல்லை. வழிகாட்டு நெறிமுறைகள் (directive principles) இதில் இடம் பெறவில்லை. ஆர்எஸ்எஸ் சொல்லும் மனுதர்ம வழியிலான ஆட்சியை இந்தக் கொள்கை தூக்கிப் பிடிக்கிறது. புதிய தொழிலாளர் சட்டங்களை விட இதிலுள்ளவை பிற்போக்கானவை.

தொழிலாளர் சட்டங்களை மீறும் வேலையளிப்பவர்கள் மீது தொழிலாளர் ஆணையாளர், ஆய்வாளர் மூலமாக நடவடிக்கை (regulate) எடுக்கும் முறை மாற்றப்பட்டு, அரசு என்பது ஒரு வசதிசெய்து கொடுப்பவர் (facilitator) என்ற நிலையை இந்தக் கொள்கை ஏற்படுத்துகிறது. இனிமேல், தொழிலாளர் ஆய்வுகளை தனியார் மேற்கொள்ளும் வகையில் கொள்கை வகுக்கப்படுகிறது. அதாவது தொழிலாளர் துறை என்பது இனி வரும் காலங்களில் வேலைவாய்ப்புத்துறையாக அறியப்படும்.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை நிர்வகிக்கும் குழுவில் இருந்து தொழிலாளர் தரப்பு ஏஐடியுசி பிரதிநிதித்துவத்தை அரசு நீக்கிவிட்டது. இந்த அறங்காவலர் குழு உருவாக்கத்தில் ஏஐடியுசி வகித்த பங்கு மகத்தானது. தற்போது தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்புநிதி கணக்கில் இருந்து, வேலையை ராஜினாமா செய்த பின்பு முழுப் பணத்தையும் எடுக்க முடியாது. – குறைந்தது 25 % த்தை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இது தொழிலாளர்களுக்குப் பாதகமாக உள்ளது. இதனை மாற்ற வேண்டும் என்று தொழிலாளர் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 26 அன்று, மாவட்ட தலைநகரங்களிலும், தொழில் மையங்களிலும் போராட்டம் நடைபெறும். மத்திய தொழிற்சங்களும், ஒருங்கிணைந்த விவசாயிகள் முன்னணியும் இணைந்து கூட்டுக் கோரிக்கைகளை உருவாக்கியுள்ளன. நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் போராட்டம் நடத்தி குடியரசுத் தலைவருக்கு, மாவட்டத் தலைவர்கள் மூலமாக மனு அனுப்பப்படும். விவசாயிகளும், தொழிலாளர்களும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து போராடத் தொடங்கிய நவம்பர் 26 ம் நாளை போராட்ட நாளாக தொழிற்சங்கங்களும், விவசாய அமைப்புகளும் அறிவித்துள்ளன. இதனை வெற்றிபெறச் செய்ய வேண்டிய பொறுப்பு தொழிலாளர்களுக்கு உள்ளது என்றார் ஏஐடியுசியின் பொதுச் செயலாளரான அமர்ஜித் கௌர். வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சி.எச்.வெங்கடாச்சலம் தலைமை வகித்தார்.

ஏஐடியுசியின் மாநிலச் செயலாளரான ம.இராதாகிருஷ்ணன், பெண்கள் இரவு நேரங்களில் பணிபுரியும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டத்தைத் திருத்த ஆட்சேபணைகளைக் கோரியுள்ளது என்றார்.

தொகுப்பு : பீட்டர் துரைராஜ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button