எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளூர்த் தீவிரவாதம்: ஒன்றிய அரசே தார்மீகப் பொறுப்பு!
மு.வீரபாண்டியன்

காஷ்மீரில் சுற்றுலா தளமான பகல்ஹாமில், பாகிஸ்தான் எல்லையோரம் இயங்கும் பயங்கரவாதிகள், ஏதுமறியாத அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியது. உலகம் முழுவதும் கண்டனம் எழுந்தது.
நாடு கடந்த பயங்கரவாதத்தை எதன் பொருட்டும் ஏற்க இயலாது. நாடே ஒன்றுபட்டு அதனை எதிர்க்க வேண்டும்.
நாட்டில் ஏற்க இயலாத நிகழ்வுகள் ஏற்படும் போது, அதனை இந்து-முஸ்லிம் பிரச்சனை போல் திசைத்திருப்பும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.
பகல்காமில் எந்தச் சூழலிலும் இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரத்துடன் வாழ்வோம் என்பது ஓர் இஸ்லாமிய குதிரையோட்டின் மூலமும், இன்னும் பிற சுற்றுலாப் பணியாட்கள் மூலமும் நிரூபணமாகிவிட்டது.
நாட்டில் பயங்கரவாதச் செயல்கள் நிகழும் போது, நாட்டின் உளவுத்துறை மீதும், எல்லையோரப் பாதுகாப்புக் கட்டமைப்பின் மீதும் கேள்வி எழுவது இயல்பு. இதற்கு தார்மீக பொறுப்பு அரசுதான்.
பாகிஸ்தான் அரசுடன், இந்திய அரசுக்கு நல்லுறவு இல்லை. இச்சூழலில் சிந்து நதிநீர் நிறுத்தம், பாகிஸ்தானியர் வெளியேற்றம், தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் என்பது அரசின் பொறுப்பை உணர்த்தவில்லை.
இதில் கூட குஜராத் முதலாளிகளின், பாகிஸ்தான் வர்த்தகம் பாதித்துவிடக் கூடாது என்பது தெரிகிறது.
பாகிஸ்தான்-இந்தியப் பிரச்சனைக்கு ராணுவம்தான் தீர்வு என்பது போன்ற நடவடிக்கைகள், இன்னும் பகைமையும், வெறுப்பும் சூழவே வழி வகுக்கும்.
பாகிஸ்தான் எல்லையோரம் செயல்படும் பயங்கரவாத முகாம்களை, பாகிஸ்தான் அரசும் தனது நடவடிக்கைகளால் ஒடுக்க வேண்டும். சில பயங்கரவாதக் குழுக்களால் பாகிஸ்தான் அரசும் பாதிப்படுவதை உணர வேண்டும்.
இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் அரசியல் பேச்சுவார்த்தைகளைத் துவக்கி, எல்லையோர எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.
அதே நேரத்தில், ஆயுதம் தாங்கிய குழுக்கள் அனைத்தையும் பயங்கரவாதக் குழுக்கள் என்ற முடிவிற்கும் வர முடியாது.
பாலஸ்தீன விடுதலைக்குப் போராடும் ஹமாசும், பாகிஸ்தான் எல்லையோர ஆயுதக் குழுக்களும் ஒன்றல்ல. பாகிஸ்தான் எல்லையோர ஆயுதக் குழுக்கள் எந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடுகிறது?
எல்லைப் பிரச்சினைக்கு ஆயுதம் தீர்வல்ல! போர் தீர்வு அல்ல! அரசியல் பேச்சுவார்த்தைகள்தான் தீர்வு!
ஒரு நாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிகழும் போது, அதனை அரசு பயங்கரவாதம் கண்டிக்க எந்தத் தார்மீகமும் இல்லை.
மருத்துவமனையின் மீதும், அகதி முகாம்கள் மீதும் வான்வழித் தாக்குதல் நடத்தி, அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலும், அதற்குத் துணை போகும் அமெரிக்கா போன்ற நாடுகளும் பயங்கரவாதத்தைக் கண்டிக்க தார்மீகம் உண்டா? கடந்த நூற்றாண்டுகளில் உலகம் இதுவரை கண்டிராத அரச பயங்கரவாதம் என்பது “மயிலாயி” தான்.
வியட்நாமின் மிகச் சிறிய அழகிய கிராமம் அது. வியட்நாமின் வீரம் செறிந்த, கொரில்லா போர் முறைகளை எதிர் கொள்ள முடியாமல், தோல்வியைச் சந்தித்த அமெரிக்க ராணுவம், மயிலாயி கிராமத்து மக்களை ஒட்டுமொத்தமாகச் சுட்டுக் கொன்றது. உலகமே அதிர்ந்தது.
பின்லேடன், சீக்கிய தீவிரவாதிகள் உலகம் முழுவதும் தீவிரவாத குழுக்கள் எனத் தொடர்புகள் கொண்டவர்கள் யார்?
வரலாறு எதையும் மறைக்காது, மன்னிக்காது.
ஒன்றிய அரசு “நக்சலைட்” குழுக்களை, பயங்கரவாத குழுக்களாக, அதிலும் இடது பயங்கரவாத குழுக்களாக அறிவித்து நரைவேட்டை ஆடுகிறது.
நமக்கு நக்சலைட் வழிமுறைகள் ஏற்கத்தக்கதல்ல, அவர்கள் ஆயுதங்களைத் தவிர்த்து, ஜனநாயக பாதைக்குத் திரும்புவது நல்லது.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், சிபிஐ எம்.எல் அப்படித் திரும்பியது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், தோழர் தீபங்கர் பட்டாச்சார்யா பின்வருமாறு கூறினார். “நாங்கள் எங்கள் சொந்த அனுபவத்தின் மூலமும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அரசியல் கட்சிகளின் தோழமை அழுத்தங்களாலும் ஜனநாயக பாதைக்குத் திரும்பினோம். இதில் தோழர் ஏ.பி.பரதன் அவர்களின் பங்கு சிறப்பானது” என்றார்.
ஆளும் அரசு ஒன்றை ஆழமாக உணர வேண்டும்.
உள்ளூர் நக்சல் குழுக்கள், எளிய மக்களின் கோரிக்கைகளால் உருவாகிறது. அவர்கள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன.
“சால்வா ஜுடும்“ போன்ற நிலப்பிரப்புகளின் படுகொலைச் செயல்களால் உருவாகிறது.
அரசு அதிகாரிகளின் அலட்சியம், ஆட்சியாளர்களின் பொய்களால், தவறான கொள்கைகளால், உள்ளூர்த் தீவிரவாதம் பிறப்பெடுக்கிறது.
உள்ளூர்த் தீவிரவாதம் “கோரிக்கை மொழி”, அதனை “தீர்வு மொழியால்” வெல்லும் கொள்கை அரசுக்கு உண்டா?
சொந்த மண்ணில் பிறந்து, வளர்ந்த மிக, மிக எளிய மக்கள்தான் ஆயுதம் ஏந்துகிறார்கள்.
அவர்கள் கோருவது குடிதண்ணீர், நிலம், வேலை, மருத்துவமனைகள், கல்வி.
அரசு தரும் புள்ளி விவரப்படி பல நூறு கிராமங்களுக்கு அரசு அதிகாரிகள் செல்வதே இல்லை.
திட்ட நிதிகள் களவாடப்படுகிறது. திட்டங்கள் ஆதிக்க சக்திகளால் தடுக்கப்படுகிறது.
நில பிரபுக்களின் ஆயுதப் படைகள் இன்னும் இயங்கும் போது, நக்சலிசம் எப்படி ஒழியும்.
நக்சல் பாதை சரியல்ல என்றாலும், கோரிக்கைகள் சரிதானே?
ஆதனை ஒடுக்க முடியுமா என்ன?
- போர்களின் வெடிச் சத்ததில் மானுடத்தின் அழுகுரல் கேட்காது.
- நாடுகளின் இடையே எழும் மோதலை, முரண்களை, போர்களாக்கும் முதலாளித்துவம், போர்களால் ஆயுதச் சந்தை உற்சாகமடையும், அதாவது முதலாளிகள்! மக்களோ அச்சத்தில்! துயரில்!!
- போர்களுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம்தான் முதல் குரல் எழுப்ப வேண்டும். இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் தொழிலாளர் வர்க்கம் யுத்தத்திற்கு எதிராக, பல மாதங்கள் வேலை நிறுத்தம் செய்தது.
பாட்டாளி வர்க்க ரஷ்யாவைப் பாதுகாப்போம் என்று அது குரல் எழுப்பியது.
தேசியத்தையும் தாண்டிய சர்வதேசிய குரல் அது.