வரலாறு

மங்காத வான்சுடர் தோழர் பி.சீனிவாசராவ்

ஆர்.மணிமோகன்

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், தமிழகப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான பி.சீனிவாசராவ் 1961ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் மறைந்தார். அவர் 54 ஆண்டுகள் மட்டுமே இந்த மண்ணில் வாழ்ந்தார்.

தோழர் பி.சீனிவாசராவ் வாழ்ந்த காலம் இந்தியத் தமிழகச் சூழலில் அரசியல் கொந்தளிப்பு மிகுந்த காலம். தெட்ஷின கன்னடம் என்று அழைக்கப்படும் தெற்கு கர்நாடகத்தின் காவிரி உற்பத்தியாகும் குடகுப் பகுதியில் ஒரு நடுத்தர பிராமணக் குடும்பத்தில் 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் பிறந்தவர் சீனிவாசராவ்.

பெங்களூரில் கல்லூரிக் கல்வி முடித்து அவர் மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று விடுதலை இயக்கத்தில் பங்கேற்றுத் தனது இருபதாம் வயதில் கைது செய்யப்பட்டார். பாதுகாப்புக் கைதியாகத் திருச்சியிலும், பின்னர் சேலத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மார்க்சியத் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டுப் பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார்.

தமிழகத்தில் காவிரி பாயும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் (குறிப்பாக, இன்றைய திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள்) சுமார் 70 அல்லது 80 ஆண்டுகளுக்கு முன் நிலப்பிரபுத்துவத்தின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கியது.

நில உடைமையில் கூர்மையான ஏற்றத்தாழ்வுகள் நிலவின. காவிரி தீரத்தின் வளமான 90 சதவீத விளைநிலங்கள் வெறும் 10% ஆதிக்கச் சாதி/வர்க்கத்தைச் சேர்ந்த நிலப்பிரபுக்களிடம் (மடங்கள் உட்பட) குவிந்து கிடந்தது.

அதேநேரம், பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் நிலமற்றவர்களாக, பண்ணையாட்களாக, குத்தகை சாகுபடியாளர்களாக சமூக ஒடுக்குமுறைக்கும் பொருளாதாரச் சுரண்டலுக்கும் ஆட்படுத்தப்பட்டிருந்தனர். (இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பட்டியல் இனத்தவர்). பண்ணையாள் என்றால் பண்ணையடிமை என்பதே உண்மைப் பொருள். இந்தியச் சாதிப் படிநிலை அமைப்பில் இந்தப் பெரும்பான்மை மக்கள் இரட்டைச் சுரண்டலுக்கு ஆளாகித் துன்புற்றனர். இவர்கள் தங்கள் ஆண்டைகள் காலால் இட்ட பணியைத் தமது தலையால் சுமந்தவர்கள்.

தஞ்சை நிலப்பிரபுத்துவத்தின் அடக்குமுறைக் கருவிகளின் கொடிய வடிவம் சாணிப்பால்-சவுக்கடி. பெண்கள் பல்வேறு பாலியல் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளாகினர். இந்தக் கொடுமைகளுக்கு முடிவுகட்ட உழைக்கும் மக்களை ஓரணியில் திரட்டிச் சங்கம் அமைத்து, அவர்களுக்குக் கற்பித்துப் போராட்டக் களம் நோக்கித் திருப்பியவர் சீனிவாசராவ். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு வழிகாட்டியது.

ஆங்கிலத்திலும் தமிழிலும் பத்திரிகை நடத்திய அரசியல் ஆசான் சீனிவாசராவ். பின்னாளில் ஒடுக்கப்பட்ட இந்த உழு குடிகளுக்கான உரிமைச் சட்டங்கள் உருவானதற்குக் காரணமான களப் போராளி. தமிழ்நாட்டில் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்திய தள கர்த்தர். உழைக்கும் மக்களின் விடுதலைக்கு வழிகாட்டிய மங்காத வான்சுடர்!

இன்றைய கார்ப்பரேட் மூலதனம் உழவர்களிடமிருந்தும், மீனவர்களிடமிருந்தும், பழங்குடி மக்களிடமிருந்தும் அவர்களது நிலத்தைக் கட்டாயப்படுத்திப் பறிக்கிறது. இந்துத்துவப் பாசிசம் மக்களைப் பிளவுபடுத்தி வேட்டையாடுகிறது.

இச்சூழலில், நாட்டின் சுதந்திரத்தையும் மக்களையும் காத்திட மங்காத வான்சுடர் பி.சீனிவாசராவ் அவர்களின் வாழ்வும் பணியும் வழிகாட்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button