கட்டுரைகள்வரலாறு

சமதர்மச் சூறாவளி ப.ஜீவானந்தம்-3

க.திருநாவுக்கரசு

1930ஆம் ஆண்டு, உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கிய ஆண்டாகும். சென்னையில் போலீஸ் அடக்குமுறை கடுமையாக இருந்தது. இதனைக் கண்டனம் செய்து இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின்மீதே ஜீவா பேசினார். அவர் பேசும்போது. ‘சாதி, மத விவகாரங்களில் மட்டும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொண்டால் போதாது. அரசியல் விவகாரங்களிலும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்‘ என்றார்.
1931ஆம் ஆண்டு -ஜீவா கோட்டையூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே ஜீவாவின் முதல் அரசியல் நுழைவு எனலாம். காங்கிரசில் இருந்து கொண்டே பலர் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்தனர். அதுபோலவே ஜீவாவும் தமது ஆதரவினை நல்கியதோடல்லாமல் 1931இல் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது சுயமரியாதை மாநாட்டிலும் கலந்து கொண்டார். இந்த மாநாடு காந்தியடிகளின் கதர்ப் பொருளாதாரத்தைக் கடுமையாக விமர்சனம் செய்தது. வளரும் பொருளாதாரத்தில் கதர் ஒரு பிற்போக்கானது என்றும் பிச்சை எடுப்பதற்கு ஒரு மாற்றாகக் கொள்ளத்தக்கது என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. மாநாட்டின் பெரும்பான்மை கருத்து இதுவாகவே இருந்தது. ஜீவா இக்கருத்துக்கு எதிராக ‘ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு தேசியத் திட்டம்‘ என அதனைக் குறிப்பிட்டார்.
என்றாலும், ஜீவா சுயமரியாதை இயக்கத்தின் இதர கொள்கைகளைப் பெரிதும் வரவேற்றார். இக்கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராய் அம்மாநாட்டில் ஓர் தீர்மானம் கொண்டு வந்தார். அதாவது ஒரு ஆங்கில நாளேட்டைத் தொடங்க வேண்டுமென்பதே அத்தீர்மானமாக இருந்தது. இந்தத் தீர்மானம் மாநாட்டில் எல்லோருடைய ஆதரவையும் பெற்றது. இதன் பயனாகத் தொடங்கப்பட்டதுதான் ‘ரிவோல்ட்’ என்ற சுயமரியாதை ஆங்கில ஏடு!
இம்மாநாட்டிற்குப் பிறகு ஈரோட்டில் (1931) நவஜவான் மாநாடு எனும் பெயரில் இளைஞர்களைத் தட்டி எழுப்பிய மாநாடு நடைபெற்றது. மாவீரன் பகத்சிங்கோடு குற்றம் சாட்டப்பட்டு 63 நாட்கள் வரை வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த ஜதீந்திர தாஸின் சகோதரர் கிரன்தாஸ் அம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். ஜீவா இம்மாநாட்டில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சட்டமறுப்பு இயக்கம் கொழுந்து விட்டெரியவே அதிற் பங்கு கொண்டு தடையுத்தரவை மீறி முழங்கிக் கைதானார் ஜீவா! இதுவே அவருடைய முதல் சிறைவாசமாகும்.
ஜீவாவின் வாழ்வில் சிறை மகத்தான மாறுதலை உண்டு பண்ணிற்று. சிறையில் மாவீரன் பகத்சிங்கின் தோழர்களான பூதகேஸ்வர தத், குந்தர் லால் ஆகியோரையும், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சாட்டர்ஜி போன்றவர்களையும் சந்தித்து சோஷலிஸம், கம்யூனிஸம் போன்றவற்றைப் பற்றிப் பேசினார். புரட்சியால் பூத்து குலுங்கியிருந்த சோவியத் யூனியன் குறித்தும் விவாதித்தார். இந்தக் கருத்துகளைத் தம்முடைய அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துச் சிந்திக்கத் தொடங்கினார்.
1932 ஜனவரியில் சிறை சென்ற ஜீவா நவம்பரில் விடுதலையானார். இக்கால கட்டத்தில்தான் 1932இல் ஜூன் முதல் சிந்தனையாளர் சிங்காரவேலரின் கட்டுரைகள் குடிஅரசில் வெளிவரத் தொடங்கின. இக்கட்டுரைகள் வெளிவரத் தொடங்கியபிறகுதான், தந்தை பெரியார் அவர்கள் அய்ரோப்பியச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பே 1931 அக்டோபர் குடிஅரசு இதழில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிங்காரவேலரின் பல ஆய்வுக் கட்டுரைகளும், மொழி பெயர்ப்புகளும் குடிஅரசில் இடம் பெற்றன.
சுயமரியாதை இயக்க ஏடான குடிஅரசின் மறுமலர்ச்சி ஜீவாவை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. சுயமரியாதை இயக்கத்தை ஓர் அரசியல் இயக்கமாக மாற்றச் சிந்தனையாளர் சிங்காரவேலர் ஈரோட்டுத் திட்டத்தை வகுத்தளித்து. ஒரு மாநாட்டை ஈரோட்டில் கூட்டினார். இம்மாநாட்டில் ஜீவா கலந்து கொண்டார்.
இம்மாநாட்டின் மூலமாகத்தான் சிந்தனையாளர் சிங்காரவேலரோடு ஜீவா அவர்களுக்குப் பழக்கம் ஏற்பட்டது.
இந்தத் தொடர்பால் -விஞ்ஞானம், சோஷலிசம், நாத்திகம் பற்றிய ஏராளமான புத்தகங்களைச் சிங்காரவேலரிடமிருந்து ஜீவா வாங்கிப் படித்தார். சிறையிலிருந்து ‘கம்யூனிஸ்ட்டாக’ வெளிவந்த அதற்குரிய அறிவுப் பயிற்சியை நிரம்ப எடுத்துக் கொண்டார். பொதுவுடைமையைப் பயிலத் தொடங்கினார். அவர் புத்தகங்களைப் படிப்பதோடு ஜீவா நின்றுவிடவில்லை. சுயமரியாதை இயக்கத்தின் வெளியீடுகளான குடி அரசு, பகுத்தறிவு. புரட்சி முதலிய பத்திரிகைகளில் ஜீவாவின் எழுத்துக்கள் வெளிவந்தன.
1932-40களில் அவர் நிறைய இசைப் பாடல்களைப் புனைந்தார். இவரது இசைப்பாடல்கள் தொகுப்பு நூலாக என்.சி.பி.எச். நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் சில குடிஅரசிலும் வெளிவந்தன.
இவரது இசைப் பாடல்கள் சில சுந்தரரின் தேவாரத்தை நினைவுப்படுத்தும் விதமாகவும், இராமலிங்க அடிகளின் வெண்ணிலா கண்ணிகளைப் போன்றும் அமைந்துள்ளன. ஜீவாவின் இசைப்பாட்டு காலுக்குச் செருப்புமில்லை என்ற பாடலை, கோவை எம்.ஆர். ராமதாஸ் பாட. அதைக் கேட்ட வ.ரா. உணர்ச்சிப் பெருக்கோடு தாரை தாரையாகக் கண்ணீர் விட்டாராம்.
அந்தப் பாடலைப் பாடிப் பாருங்கள். இதோ அந்தப் பாடல்:

காலுக்குச் செருப்பு மில்லை
கால்வயிற்றுக் கூழுக்கு வழியுமில்லை
பாழுக் குழைத்தோ மடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா

குண்டிக் கொருதுண்டு மில்லை
கொல்வறுமை தாள வில்லை
ஒண்டக் குடிசையில்லை
(காலுக்கு)
என் தோழனே
உழைத்திளைத்துப் போனோமடா
(காலுக்கு)

நோய்நொடிகள் வெம்புலி போல்
நூறுவிதம் சீறுவதால்
தாய் தந்தையர் பெண்டு பிள்ளை
என்தோழனே
சாய்ந்து விழக் கண்டோமடா
(காலுக்கு)

பாலின்றிப் பிள்ளை அழும்
பட்டினியால் தாய முவாள் வேலையின்றி நாம முவோம்
வீடு முச்சூடும் அழும்
என் தோழனே (காலுக்கு)
கையிலொரு காசுமில்லை
கடன் கொடுப் பாருமில்லை
திண்டாட்டம் கொல்லுதடா
என் தோழனே (காலுக்கு)

வாங்கிய கடன்தீர்க்க
வக்கில்லை யானாலும்
ஏங்கி இரந்துண்ணவோ
என் தோழனே
எங்கள் மனம் கூசுதடா
(காலுக்கு)

என் தோழனே
செய்யும் தொழில் கிட்டவில்லை
கொச்சைப் பிழைப்பறியோம்
கொலை திருட்டும் அறியோம்
இச்சகப் பேச்சறியோம்
எத்தும் புரட்டறியோம்

கோணல் மாணல் திட்டங்களால்
கோடி கோடியாய்க் குவித்தே
வீணர் சிலர் கொழுக்கக் கண்டால்
வெஞ்சினம் பொங்குதடா
(காலுக்கு)
என் தோழனே
(காலுக்கு)

மாட மாளிகை யவர்க்கு மன்னர் மகுட மவர்க்கு
வாட வறுமை நமக்கு
என் தோழனே
வந்திடல் வாழ்வெதற்கு
(காலுக்கு)

ஒன்றுபட்டுப் போர் புரிந்தே
உயர்த்துவோம் செங்கொடியை
இன்றுடன் தீருமடா – என் தோழனே
இம்சை முறைகளெல்லாம்
(காலுக்கு)

இத்தகைய பல பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். முதன் முதலாகப் பகத்சிங் தன் சகோதரனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தை (அது நூலாக வெளியிடப்பட்டிருந்தது) ஜீவா தமிழில் மொழி பெயர்த்தார். சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தினர் அந்நூலை வெளியிட்டனர். அந்நூலின் பெயர் ‘நான் ஏன் நாஸ்திகனானேன்?’ என்பதாகும். அதற்காக ஜீவா கைது செய்யப்பட்டார். கொடுமைப்படுத்தப் பட்டார். கோவை மாவட்டத்தின் ஒவ்வொரு சிறையிலும் அவர் பந்தாடப்பட்டார்.
சர்க்கஸிலிருந்து தப்பியோடிய மிருகத்தைத் திரும்பவும் கூண்டிலடைக்கச் சங்கிலிகளால் பிணைத்துக் கொண்டு செல்லப்படுவதைப் போல, ஜீவா தெருக்களில் அழைத்துச் செல்லப்பட்டார். ஒரு நூல் எழுதியதற்காகக்கூட அல்ல. மொழி பெயர்த்ததற்காக முதன் முதலில் சிறைத் தண்டனையும் கொடுமையும் அனுபவித்தவர் ஜீவ அவர்கள் தான்! இந்நூலை வெளியிட்ட தந்தை பெரியாரின் தங்கை கண்ணம்மாவையும் கைது செய்தனர்.
இந்தக் கொடுமைக்கும், சிறை வாழ்வுக்கும் ஜீவா கலங்கி விடவில்லை, அரைக்க அரைக்கச் சந்தனம் மனம் கமழ்வதைப் போல, அடிக்க அடிக்க பந்து எழுவதைப் போல. ஜீவா சுயமரியாதை இயக்கத்தை வளர்ப்பதில் மேலும் முனைந்தார். ஜாதி மத ஏற்றத் தாழ்வுகள் மட்டுமல்ல, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் ஒழிய வேண்டும்; ஆண்டான் – அடிமை, உடையவன் இல்லாதவன் என்ற நிலையும் ஒழிய வேண்டும் என ஜீவா ஓயாது பணியாற்றத் தொடங்கினார். இதற்காக அவர் ஜமீன்தார் அல்லாதார் மாநாடு, பணக்காரர் அல்லாதார் மாநாடு, லேவாதவிக் காரர் அல்லாதார் மாநாடு என மாநாடுகளை நடத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button