
காந்தீயம், ‘புராதன இந்தியாவை’ பூசலின்றிப் படைப்பதில் முனைந்து நின்று செயலாற்றுவதுபோல ஒரு தோற்றத்தை அளித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் ஜீவா காந்தீயவாதி ஆனார். அதனால் ஆசிரமங்கள் தோற்றுவிப்பது அப்போதெல் லாம் ஒரு வழிமுறையாக இருந்தன. அப்படி உருவான ஆசிரமங்களில் ஒன்றான சேரன்மாதேவி குருகுல ஆசிரமத்தில் தம்மை இணைத்துக் கொண்டார் ஜீவா. ஆனால், அவ்வாசிரமம் பார்ப்பனப் பிள்ளைகளுக்கு ஒரு மாதிரியாகவும், பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு ஒரு மாதிரியாகவும் உணவு வழங்கியதில் வேறுபாட்டைக் காட்டி இயங்கியது.
தமிழ்நாடு காங்கிரசின் நிதியில் இயங்கிய அக்குருகுலத்தின் இச்செயற்பாட்டினைத் தந்தை பெரியார், வரதராஜூலு நாயுடு, திரு.வி.க. போன்றோர் கண்டித்தனர்; போராடினர். அக்குருகுலத்தை இறுதியில் இழுத்து மூடினர். இத்தலைவர்கள் அக்கொடுமையை எதிர்த்துப் போராடிய போது ஜீவா தமது ஒத்துழைப்பை நல்கினார். அக்கொடுமைக்கு எதிராகத் தாமும் களத்தில் இறங்கினார்.
இந்தச் சேரன்மாதேவிக் குருகுல நிகழ்ச்சிதான் தமிழகத்தின் அரசியலை மாற்றத் திருப்பு முனையாக இருந்தது. இதன் தொடர்ச்சியாகத் தந்தை பெரியார் காங்கிரசில் வகுப்புரிமையை வற்புறுத்தினார். அதனைக் காங்கிரஸ் ஏற்க மறுத்தது. அதனால் வெளியேறிச் சுயமரியாதை இயக்கத்தைத் தந்தை பெரியார் தொடங்கினார். இதனுடைய கொள்கைகள் ஜீவாவைக் கவர்ந்தன. சமுதாயத் துறையில் மேல்தட்டு ஆதிக்கத்தை வீழ்த்தத் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தையும், மொழித் துறையில் அவர்களின் ஆதிக்கத்தை வீழ்த்தத் தொடங்கிய மறைமலையடிகளாரின் தனித் தமிழ் இயக்கத்தையும் ஜீவா ஆதரிக்கத் தொடங்கினார்.
சேரன்மாதேவிக் குருகுலம் மூடப்பட்டவுடன் காரைக்குடிக்கு அருகே சிராவயலில் ஜீவா ஓர் ஆசிரமத்தைத் தொடங்கி நடத்தலா னார். 1927இல் காந்தியடிகள் இலங்கைக்குச் செல்கிற வழியில் காரைக்குடிக்கு வந்து ஜீவாவின் ஆசிரமத்தைப் பார்வையிட்டார். காந்தியடிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்புப் பத்திரத்தில் வர்ணாசிரமத்தைக் கண்டித்து ஜீவா எழுதியிருந்தார். அதுமட்டுமல்லாமல் அது குறித்துக் காந்தியடிகளிடம் ஜீவா வாதிட்டார். அந்த உரையாடல் பின்வருமாறு அமைந்திருந்தது.
ஜீவா: குணத்திற்கும் தர்மத்திற்கும் தக்கபடி நான்கு வர்ணங் களை நான் சிருஷ்டித்திருக்கிறேன் என்ற கீதா வாக்கியம் உங்களுக்கு உடன்பாடல்லவா?
காந்தியடிகள்: ஆம்.
ஜீவா: அப்படியானால் சாத்வீகத் தன்மையிலும் நன்னெறி ஒழுக்கத்திலும் சிறந்தவராக விளங்குவதனால் நீங்கள் ஒரு பிராமணன் அல்லவா? பிராமணனாகப் பிறந்த தீய ஒழுக்கமு டைய ஒருவன் சூத்திரன்தானே?
காந்தியடிகள்: இல்லை. நான் நல்ல வைசியன், தீய ஒழுக்கங்களுடைய பிராமணன். கெட்ட பிராமணன்.
காந்தியடிகளின் இந்தப் பதில் ஜீவாவுக்கு நிறைவைத் தரவில்லை. சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம்தான் ஜீவா அவர்களிடம் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. காந்தியடிகளை விடுதலை இயக்கத்திற்கும், சமுதாய சீர்திருத்தத்திற்கு தந்தை பெரியாரையும் ஜீவா வழிகாட்டிகளாகக் கொள்ளத் தொடங்கினார். ஜீவாவிடம் சுயமரியாதை நாட்டம் வளர வளர, சிராவயல் ஆசிரமத்திலிருந்து விலகி நாச்சியார்புரம் என்ற ஊரில் உண்மை விளக்க நிலையம் என்கிற அமைப்பை உருவாக்கினார்.
இவ்வமைப்பின் கொள்கை வெளியீட்டில் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் எதிரொலிக்கக் காணலாம். அவை வருமாறு:
1. வறுமை, பிணி, அறியாமை, அடிமை ஆகியவைகளை ஒழித்தல்.
2. சாதி, சமய, மொழி வேற்றுமைகளைப் பாராட்டாதிருத்தல்.
3. பிறப்பு வேற்றுமையை ஒழித்தல்
4. பார்ப்பனீயம் ஒழித்தல்
5. தீண்டாமை ஒழித்தல்
6. குருட்டுப் பழக்க வழக்கங்களை ஒழித்தல்
7. கள் & குடி ஒழித்தல்
8. ஆதி திராவிடருக்கு உழைத்தல்
9. பெண்ணுரிமை பேணல்
ஜீவா இக்கொள்கைகளின் அடிப்படையில் பணியாற்றத் தொடங்கினார். சிந்தனையாளர் சிங்காரவேலர் குடி அரசில் எழுதத் தொடங்குவதற்கு முன்பே ஜீவா சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். சுயமரியாதை இயக்க மாநாடுகளிலும் பொதுக் கூட்டங்களிலும் பேசத் தொடங்கினார்.
1929ஆம் ஆண்டு நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டிலும், இதே ஆண்டில் நடைபெற்ற முதலாவது சுயமரியாதை மாநாட்டிலும் ஜீவா கலந்து கொண்டார். இதனால் தந்தை பெரியார், ஜே.எஸ். கண்ணப்பர், கைவல்ய சாமியார், கோவை அய்யாமுத்து ஆகியவர்களோடு ஜீவாவுக்குத் தொடர்பு உண்டாயிற்று.
ஜீவாவின் பேச்சு உணர்ச்சிமயமானதாக, மிக ஆவேசமானதாக இருக்கும். சொற்கள் இயல்பாக வந்து விழும். சில நேரங்களில் இடக் கையைக் காதில் வைத்துக் கொண்டு ஓங்கி அறைந்து பேசுவார். ஒருவகைச் சீற்றத்தோடும் அவர் பேசுவதுபோல் தோன்றும். எப்பிரச்சினை குறித்துப் பேசுகிறாரோ அப்பிரச்சினையில் தோய்ந்து மூழ்கிய பேச்சாளராகவே அவர் காட்சியளித்தார்.
ஜீவா விடுதலை இயக்க மேடைகள், சுயமரியாதை இயக்க மேடைகள், இலக்கிய மேடைகள். தொழிற்சங்க இயக்க மேடைகள் எனப் பலவற்றில் கலந்து கொண்டார். எப்பொருள் குறித்தும் பேசும் ஆற்றலுடைய ஜீவா 1930களில் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் கனல் தெறிக்கப் பேசினார்.