
மதுரை, திருப்பரங்குன்றத்தில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பொறியியல் கல்லூரியில் கம்பர் குறித்த பேச்சுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற்றது.
அந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றுப் பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் உரை நிகழ்த்திய ஆளுநர், தனது உரையின் முடிவில் ‘ஜெய் ஸ்ரீராம்‘ என்ற முழக்கங்களை மூன்று முறை எழுப்பி, மாணவர்களையும் அந்த முழக்கங்களை எழுப்பும்படி கூறினார். பங்கேற்ற மாணவர்களும் அந்த முழக்கங்களை எழுப்பினர்.
இது தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.ஏற்கெனவே தனது செயலால் உச்ச நீதிமன்றத்தின் கடும் குற்றச்சாட்டிற்கு உள்ளான கவர்னர் அதை மறைக்கும் விதமாக இந்த முயற்சியை மேற்கொண்டாரா? ஒரு அரசமைப்புப் பதவியில் இருக்கும் அவர் இதுபோல் நடக்க நடத்தை விதிகள் அனுமதிக்கிறதா? என்ற கேள்விகள் எல்லாம் பலமாக எழுந்து வருகின்றன.
கம்பன் யார்?
‘கல்விக் கூடங்களில் கம்பர்’ என்ற பெயரில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மாநில அளவிலான பேச்சுப் போட்டிகள் நடந்தன.
கல்லூரி மாணவர்களுக்கு ‘கம்பர் காட்டும் ராமன், கம்பர் வழியில் அறம் நிலைநிறுத்தல், என்ற தலைப்புகளிலும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளுக்குப் பல பல்கலைக்கழகங்கள் ஆதரவளித்தன. இதன் கௌரவ புரவலராக ஆளுநர் ஆர்.என். ரவி இருந்து வருவதால் இவ்விழாவில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிய போது தனது உரையில், “ராமாயணம் வடமாநிலங்களில் பட்டிதொட்டியெங்கும் பரவிக்கிடக்கிறது.
ஆனால் துளசிதாசரைவிடப் புலமைமிக்க கம்பர் எழுதிய கம்பராமாயணம் தமிழ்நாட்டில் எங்கும் காணப்படவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. மேலும் தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கம்பருக்கு ஏதாவது இருக்கை இருக்கிறதா? எனத் தேடியபோது அப்படி ஏதும் கிடைக்கவில்லை. என்று பேசி உள்ளார்.
திராவிட அமைப்பினரால் தெய்வங்களுக்குச் செருப்பு மாலை அணிவிப்பது, சனாதன தர்மத்தை டெங்கு- மலேரியாவுக்கு ஒப்பீடு செய்வது போன்ற செயல்கள் நடந்துவருகின்றன.
நாம் என்ன செய்யு முடியும்? நம்மால் என்ன செய்ய முடியும்? என்றிருக்கக் கூடாது. இதற்குப் பள்ளிகளில் இருந்து பொறுப்பைத் தொடங்க வேண்டும். பள்ளிகளில் கம்பரைப் பற்றிய குழுக்கள் ஏற்படுத்த வேண்டும், கம்பனையும் கம்பராமாயணத்தையும் கற்பிக்கலாம் என்று குறிப்பிட்டார்.
ஐயோ பாவம் தமிழ்நாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி கல்வித்துறையிலும் கல்லூரிகளிலும் தமிழ் மொழியில் கம்பராமாயணம் மிகச் சிறப்பாகச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால், மிகப்பெரும் அறிவாளி கவர்னருக்கு இது எல்லாம் தேட நேரம் இல்லை போலும்! அது மட்டுமல்ல இங்கே இராவணனுக்கு மிகப்பெரும் மதிப்பு இருக்கிறது என்பதும் திராவிட இயக்க முன்னோடிகள் ஒருவரான புலவர் குழந்தை ராவண காவியமே படைத்துள்ளார் என்பதெல்லாம் அவருக்கு அறியாத செய்திகள்!
துளசிதாஸ் கண்ட ராமன்!
பிஹார் கல்வி அமைச்சர் சந்திரசேகர், பல்கலைக்கழகம் ஒன்றில் பேசும்போது அவத்தி மொழியில் உள்ள ராமசரித மானஸிலிருந்து ‘கீழ்ச்சாதி மக்கள் கல்வி கற்றால் பாம்பு குடித்த பாலைப் போல விஷமாகி விடுவார்கள்’ என்னும் அதிர்ச்சி மிகுந்த பகுதியை வாசித்துக் காட்டினார்.
சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சுவாமி பிரசாத் மௌரியா பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரை துளசிதாசரின் ‘ராமசரித மானஸ்’ பல வகையில் இழிவுபடுத்துகிறது எனக் கூறி அத்தகைய இடங்களைத் திருத்த வேண்டும் எனக் குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை வைத்தார். பல இடங்களில் இதைக் கண்டித்து இப்பகுதிகளைத் தீ வைத்துக் கொளுத்தும் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.
நிலைமை இப்படி இருக்க ஏதோ வட மாநிலங்களில் ராமனின் ஆன்மீகம் கரைபுரண்டு ஓடுவது போலவும் துளசிதாசரின் படைப்புகள் எந்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது கவர்னருக்கு அழகா? நிலைமை அங்கு அவ்வாறு இல்லை என்பதை மேலே சொன்ன இந்தச் செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன.
கம்பரின் கம்பராமாயணத்தில் ராமனைப் பற்றிய விமர்சனங்கள்
கம்பன், ராமன் தனது மனைவியை நிராகரிப்பதை, சந்தேகப் பட்டதை தார்மீக மற்றதாகக் கருதுகிறார்.
வால்மீகி ராமாயணத்தில், ராமன் வாலியின் முதுகில் துரோகமாக அம்பிட்டுக் கொல்லும் போது, கம்பர் அதன் தார்மீகக் குறைபாடுகளை வெளிப்படுத்துகிறார்.
சாதிக்கு எதிரான கம்பன்
நீதியால் வந்ததொரு நெடும் தருமநெறி அல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி
என்று வீடணன் குறித்து ராமனிடம் கும்பகர்ணன் கூறியது சாதி, சதுர்வர்ண முறைக்கு எதிரான கம்பனின் கருத்து இதற்கு என்ன சொல்வார் கவர்னர்?
குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான் மகனொடும், அறுவர்ஆனேம்; எம்முழை அன்பின்
வந்த அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை.’
என்று பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களை எல்லாம் தன் சகோதரனாகப் பாவித்தவன் ராமன் என்று கம்பர் காட்டுகிறார். நிலைமை இப்படி இருக்க கவர்னர் இப்படிக் கதைப்பதால் எந்தப் பயனும் இல்லை. இது தமிழ்நாடு அதன் சிந்தனை தனித்துவமானது!
கல்வி உதவிக்கு எதிராகப் பேசும் கவர்னர்
அம்பேத்கர் பிறந்த தினத்தில் அன்று பேசிய கவர்னர் தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களைப் பட்டியலிட்டு இவை எல்லாம் பாஜக ஆளும் மாநிலங்களில் இல்லாததைப் போலவும் அதற்குத் தலைமை தாங்கும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களையெல்லாம் தவிர்த்து விட்டு, தமிழ்நாட்டை மட்டும் எடுத்துக் கொண்டார் போலும்! இந்தக் கொடுமைகளை இடதுசாரிகளும், ஜனநாயக, முற்போக்குச் சக்திகளும் கண்டிக்கிறோம் என்றாலும் கவர்னர் வடிப்பது நீலிக் கண்ணீர். இதே கொடுமைகள் பல மடங்கு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடக்கிற போது ராமாயணத்தில் வட மாநிலத்தையும் தென் மாநிலத்தையும் ஒப்பிட்ட கவர்னர் வட புலத்தில் நடைபெறும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை, தாக்குதல்களை ஏன் ஒப்பீடு செய்யவில்லை? கண்டிக்கவில்லை? இதில் அவரது உள்நோக்கம் புரிகிறது அல்லவா!
பாஜக ஆளும் மாநிலங்களில் கல்வி நிலை!
குஜராத்தில் ஒரு தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவருக்குக் கணிதத்தில் 200க்கு 212 மதிப்பெண் வழங்கிய சான்றிதழ் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் விசாக்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் 5 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
குஜராத், பீஹார், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய 5 மாநில மாணவர்கள் ஆஸ்திரேலியா வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் அளிக்கப்படும் கல்விச் சான்றிதழும் போலியானது என்பதையும் கண்டறிந்துள்ள காரணத்தால் இந்தத் தடையை வலுப்படுத்தி இருக்கின்றனர். பிரதமரின் கல்விச் சான்றே உண்மைக்குப் புறம்பாக இருக்கும்போது அந்த மாநிலங்களைச் சார்ந்த மாணவர்களின் சான்றிதழும் அப்படித்தானா? என்ற ஐயம் எழுந்துள்ளது.
மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தில் 2022ல் சேர்ந்த பஞ்சாப், ஹரியானா, குஜராத் மாணவர்களில் பெரும்பகுதியினர், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டதால், அந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என அந்நாட்டு அரசு 2023 ஆம் ஆண்டிலேயே அறிவுறுத்தல் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் அங்கு சென்று பயின்றாலும் தமிழக மாணவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதும் தெளிவாகிறது. எனவே, கவர்னர் அவர்களே நாகாக்க வேண்டும்!
தமிழ்நாடு கவர்னர் ஆர்.எம்.ரவி அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தவறிவிட்டார்.
அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதாக தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறி அவர் செயல்படுவதால், குறிப்பாக மதவெறி முழக்கங்களை அவரே எழுப்பி நாட்டின் மதச்சார்பின்மைக்கு வேட்டு வைத்ததால் அவர் உடனடியாகப் பதவியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். அல்லது விளக்க வேண்டும். அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தைக் காப்போம் என்று சொல்லும் பாஜக இதனைச் செய்வார்களா? அல்லது இதுவும் நடிப்பு தானா?