

இந்தியத் தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய், மிகப் பாதுகாப்பு கொண்ட உச்சநீதிமன்றத்தில், தனது இருக்கையில் அமர்ந்து வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த போது அவர் மீது ஒரு காலணி வீசப்பட்டுள்ளது.
“கடவுள் சொன்னதால் காலணியை வீசினேன். எனது செயலின் பின்விளைவுகள் எனக்குத் தெரியும். நான் ஜெயிலுக்குக் கூடப் போகலாம். ஆனால், எனது செயலுக்காக எந்த வருத்தமும் இல்லை. கடவுளின் பெயரால் அப்படிச் செய்தேன். கடவுள்தான் என்னை அப்படி செய்யத் தூண்டினார்” என்று வித்தகம் பேசியிருக்கிறார் வீசி எறிந்த 71 வயது வழக்கறிஞர் ராஜேஷ் கிஷோர்.
சனாதனத்தை அவமதிக்கும் வகையில் பேசியதால் தாக்க முயன்றதாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
“இந்தியர்கள் ஒவ்வொருவரும் இதற்காக தலைகுனிய வேண்டும்” என்று தன் பங்குக்கு நீட்டி முழக்கி இருக்கிறார் பிரதமர் மோடி.
தமிழ்நாட்டின் இன்றைய துணை முதலமைச்சர், “சனாதனம் என்பது மலேரியா டெங்கு மற்றும் கொரோனா கிருமிகளுக்கு நிகரானது. அதனை எதிர்த்துப் பயனில்லை, ஒழிக்க வேண்டும் என்று 2023 செப்டம்பர் 2ம் தேதி பேசினார்.
உடனே இதற்குத் தக்க பதில் அளிக்குமாறு தனது அமைச்சர்களைக் கேட்டுக்கொண்ட மோடி, “எந்த மதத்துக்கும் எதிராகப் பேசுவது அரசியல் சாசனத்திற்கு விரோதம்” என்று கூறி விவாதத்தைத் துவக்கி வைத்தார்.
அந்த சனாதனத்துக்காகத்தான் நீதிபதி மீது செருப்பை எறிந்ததாக வழக்கறிஞர் சொல்லும் போது மோடி தான் தலை குனிய வேண்டும்! எதற்கு இந்தியர்கள் தலைகுனிய வேண்டும்.
தன் மீதான பாலியல் வழக்கைத் தானே விசாரித்துத் தீர்ப்பு சொன்ன முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஓய்வு பெற்ற உடனேயே மாநிலங்களவை உறுப்பினர் பதவியளித்து அழகு பார்த்தவர் மோடி.
பாபர் மசூதியை இடித்தது தவறு. ஆனால் இடித்தவர்களுக்கு அந்த இடம் சொந்தம் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து தீர்ப்பு எழுதியதாகச் சொன்னவர் இன்னொரு முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திர சூட்.
கவாய், தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற போதே, நான் ஓய்வு பெற்றபின் எந்த அரசுப் பதவியையும் ஏற்க மாட்டேன் என்று தெளிவுபட அறிவித்தவர்.
அதிகாரம் மிக்கது உச்ச நீதிமன்றமா நாடாளுமன்றமா? என்று விவாதத்தை பிஜேபி எழுப்பிய போது, எல்லோரையும் விட உயர்ந்தது இந்திய அரசியல் சாசனம்தான் என்று பதிலளித்தவர் கவாய்.
அரசாங்கத்தின் நிர்வாக எந்திரம், நீதியளிக்கும் பொறுப்பை ஏற்க முடியாது. சட்டத்தின் ஆட்சியே நிலவ வேண்டும். புல்டோசர் கொண்டு வீடுகளை இடிக்கும் உத்திரப்பிரதேச அரசின் நடவடிக்கை, அரசியல் சாசனத்தின் 21வது பிரிவுக்கு எதிரானது என ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
‘யுனெஸ்கோ’வால் உலகப் பாரம்பரியச் சின்னம் என்று அறிவிக்கப்பட்டு, இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் ‘கஜூராஹோ’வில் உள்ள விஷ்ணு சிலையைப் புதுப்பித்து வழிபாடு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
“விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று கூறுகிறீர்கள். நீங்கள் நேரடியாகச் சென்று விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த இடம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்“ என அவர் உத்தரவிட்டார்.
பதவிகள் தருவதாக நாக்கில் தேன் தடவி, கட்டுப்படுத்த முடியாதவர் என்று அறிந்து கொண்ட மத வெறிக் கும்பல் இப்போது செருப்பு வீசத் தொடங்கியுள்ளது.
இது தனிநபர் மீதான தாக்குதல் அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து தலைமை நீதிபதியாக உயர்ந்தவரின் மீதான தாக்குதல்.
அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிக்கும் உச்ச நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் தாக்குதல்.
தாக்கியவரும் தனி நபரல்ல. அவர் மக்களிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கும் சனாதனத்தின், மதவெறி பாசிசத்தின் பிரதிநிதி.
கவாய் மீது வீசப்பட்ட செருப்பு, திணிக்கப்படும் மனு தர்மத்தை எதிர்த்து, சமத்துவத்தை வழங்கும் அரசியல் சாசனத்தின் ஆட்சியை வலியுறுத்தும், ஒவ்வோர் இந்தியன் முகத்தை நோக்கியும் வீசப்பட்ட செருப்பு.
ராஜேஷ் கிஷோரை, பார் கவுன்சில் உறுப்பினர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்வது போதாது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்து கைது செய்ய வேண்டும்.