
ரஷ்யாவில் 1917-இல் நடந்த அக்டோபர் சோசலிசப் புரட்சிக்குப் பிறகு, சோவியத் யூனியனின் அறிவியல் – தொழில் நுட்பத்துறை, பாட்டாளி வர்க்க அரசால் இயக்கப்படும், சக்திவாய்ந்த அமைப்பாக மாறியது. அப்புரட்சி அறிவியல் தொழில் நுட்பத்தில் திருப்புமுனையை உருவாக்கி உலகத்தை மாற்றியமைக்கும் சாதனைகளை படைத்தது.
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் புதிய பண்புநிலை (Qualitative Change) மாற்றம் ஏற்பட்டது. அறிவியல் தொழில் நுட்பத்தை முறைப்படுத்தி பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு, அதன் நோக்கம் மற்றும் முன்னுரிமையில் அடிப்படை மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டன. அறிவியல் தொழில் நுட்பத்துறையின் நோக்கம் லாப நோக்கத்திற்கானது, வணிகப் போட்டிக்கானது என்பதிலிருந்து சமூகத் தேவைக்கானது, மனித முன்னேற்றத்திற்கானது என மாறியது.
அறிவியல் – தொழில் நுட்பம் சமூக உடைமையானது. பாட்டாளி வர்க்க அரசின் மூலம் உழைக்கும் மக்களின் கரங்களுக்குச் சென்றது. காப்புரிமை என்பது ஒழிந்து போனது. நவீனமயமாக்கல் மற்றும் சோசலிச எதிர்காலத்திற்கான திறவுகோலாக அறிவில் தொழில் நுட்பத்தை சோவியத் யூனியன் மாற்றியது.
ஆனால், அக்டோபர் புரட்சிக்கு முன்பு, ஜார் ஆட்சி அறிவியலை, லாப நோக்கில் தனது வர்க்க நலன்களுக்கு ஏற்ப, பழமைவாதத்திற்கு ஆபத்தில்லாத வகையில், வரம்புகளுக்கு உட்பட்டே ஆதரித்தது. போதிய உத்தரவாதமான நிதி ஒதுக்கீடு இல்லை.
ஜார் ஆட்சி காலத்தில் அறிவியல் – தொழில் நுட்பம், நாட்டின் தொழில்துறை, விவசாயத் துறை மற்றும் உழைக்கும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருந்தது. அவை தனிநபர் கரங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரபலமான சில விஞ்ஞானிகள் ரஷ்யாவில் சாதனைகளை புரிந்தனர். வேதியியலில், திமிட்ரி மெண்டலீவ் 1869-இல் தனிமவரிசை அட்டவணையை உருவாக்கினார்.
இது மிகப்பெரிய அறிவியல் சாதனையாகும். இயற்பியலில், அலெக்சாண்டர் போபோவ் வானொலி அலை ஆராய்ச்சியில் ஒரு முன்னோடியாக திகழ்ந்தார். நிகோலாய் ஜுகோவ்ஸ்கி விமானங்களை உருவாக்குவதற்கான அடித்தளங்களை அமைத்தார். அவர், “ரஷ்ய விமானப் போக்குவரத்தின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். உடலியங்கியலில், இவான் பாவ்லோவ் தனது ஆராய்ச்சிக்காக 1904-ல் நோபல் பரிசை பெற்றார்.ஆயினும், ரஷ்யா முழுவதையும் நவீனமயமாக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு ஜார் ஆட்சியில் உருவாக்கப்படவில்லை.
உயர் மட்ட அறிவியல் மையங்களுக்கும், விவசாயிகளின் தொழில்நுட்பத் தேவைகளுக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்தது. தொழில் துறை உற்பத்தியிலும் இதர ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக அறிவியல் தொழில் நுட்பம் பயன் படுத்தப்பட வில்லை. அறிவியல் – தொழில் நுட்பம் மிகப்பெரும் உற்பத்தி சக்தியாக ஜார் ஆட்சியில் வளர்த்தெடுக்கப்படவில்லை.
அக்டோபர் புரட்சிக்குப் பின்பு அறிவியல்
அக்டோபர் சோசலிசப் புரட்சிக்குப் பிறகு நிலைமைகள் மாறின. அறிவியல் “மக்களுக்கான அறிவியலாக” மாற்றப்பட்டது. மார்க்சிய தத்துவஞானமான இயக்கவியல் பொருள்முதல்வாதம் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டியாக, அடிப்படையாக மாறியது.
லெனின் தலைமையில், இளம் சோவியத் அரசு, அறிவியல் – தொழில்நுட்பத்தை , சோசலிசத்தை கட்டி எழுப்புவதற்கான, சமூக முன்னேற்றத்திற்கான, உற்பத்தி சக்திகளை மிக விரைவாக வளர்ப்பதற்கான கருவியாகப் பார்த்தது.
அறிவியல் சோவியத் அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
மையப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களிடையே நெருங்கிய ஒத்துழைப்பு உருவாக்கப்பட்டது. அவை முறைப்படுத்தப்பட்டன.
சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் 1925 ல் உருவாக்கப்பட்டது. இது அனைத்து அறிவியல் நடவடிக்கைகளின் மூளையாக,நரம்பு மண்டலமாக திகழ்ந்தது.
அறிவியலின் வளர்ச்சியும், முன்னேற்றமும் தேசிய முன்னுரிமையாக மாற்றப்பட்டது. கல்வியின் அனைத்து மட்டங்களிலும் அறிவியலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.சிறந்த விஞ்ஞானிகள் மரியாதை செய்து பெருமை படுத்தப்பட்டனர்.
விரைவான தொழில்மயமாக்கல்:
ஒரு பின்தங்கிய விவசாய சமூகத்தை , ஒரு நவீன தொழில்துறை சக்தியாக மாற்றவும், ஏகாதிபத்தியங்களிடமிருந்து பாட்டாளி வர்க்க அரசு தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், சோசலிசத்தை கட்டியெழுப்பவும், ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் பொருளாயத (Material) மற்றும் ஆன்மீகத் (Spiritual) தேவைகளை நிறைவு செய்யவும், உற்பத்தியை வேகமாக அதிகரிக்கவும் அறிவியல் தொழில் – நுட்பம் பாய்ச்சல் வேகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது.சோவியத் சோசலிச குடியரசின் மக்கள் அனைவரின் வாழ்க்கைத் தரத்தை,பண்பாட்டை மேம்படுத்தும் நோக்குடன் அறிவியல் வளர்த்தெடுக்கப்பட்டது.
கடுமையான உடல் உழைப்பிலிருந்து மக்களை விடுவிக்கும் நோக்குடன், மனிதர்களின் வேலை நேரத்தை குறைத்து – ஓய்வு நேரத்தை அதிகரித்திடும் நோக்குடன் அறிவியல் தொழில் நுட்பம் வளர்த்தெடுக்கப்பட்டது.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக :
திருச்சபைகளின் பிற்போக்கான “மூடநம்பிக்கைகளை” எதிர்த்துப் போராடவும், பழமைவாத சிந்தனைகளிலிருந்து மக்களை மீட்கவும், பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்பவும், இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலான அறிவியல் ரீதியான உலகக் கண்ணோட்டத்தை மக்களிடம் உருவாக்கவும் அறிவியல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது. மனிதர்களை “அறிவார்ந்த புதிய வகை மனிதர்களாக” வார்த்தெடுக்க அறிவியல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
அறிவியல் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க ஏராளமான அறிவியல் இதழ்கள் வெளியிடப்பட்டன.அறிவியல் கழகங்கள் மூலம் அறிவியல் ஊக்கப்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு குடிமகனையும் அறிவியல் ரீதியாக கல்வியறிவு பெறச் செய்வதும், சோசலிச கட்டுமானத்திலிருந்து பிரிக்க முடியாத விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்வதும் இதன் நோக்கமாக இருந்தது.
விண்வெளி ஆராய்ச்சி :
ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைக்கோள், 1957 அக்டோபர் 4, 1957 ல் விண்ணில் ஏவப்பட்டது.வரலாற்றில் முதல் முறையாக மனிதன் உருவாக்கிய ஒரு செயற்கைக் கோள் பூமியைச் சுற்றி வந்தது. உலகம் ஆச்சரியத்தில் மூழ்கியது.
ஸ்புட்னிக்-2 செயற்கைக்கோள் மூலம் “லைக்கா” என்ற நாய், நவம்பர் 3, 1957 ல்விண்ணிற்கு அனுப்பப்பட்டது. அதுவே விண்ணிற்கு சென்ற முதல் உயிரினம் .அது பூமிக்கு உயிரோடு திரும்பவில்லை என்பது துயரமான ஒன்று. ஆனால் உயிரினம் விண்ணில் உயிர் வாழ முடியும் என்பதை “லைக்கா” வின் பயணம் உறுதி செய்தது.
லூனா-2 செயற்கைக் கோள், 1959 செப்டம்பர் 12 ல் புவியிலிருந்து ஏவப்பட்டு, இரண்டு நாட்களில் அதாவது செப்டம்பர் 14 ல் சந்திரனில் இறங்கியது. விண்ணில் இயங்கும் துணைக்கோள் அல்லது கோளின் மீது மனிதர்கள் அனுப்பிய ஒரு பொருள் இறங்கியது இதுவே முதல் முறை. இது உலக மக்களை பெருமிதம் கொள்ளச் செய்தது.
ஏப்ரல் 12, 1961 ல் வோஸ்டோக் 1 பயணத்தின் மூலம் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரானார். பூப்பந்தை ஒரு முறை சுற்றி வந்தார். விண்ணிலிருந்து பார்க்கும் பொழுது “பூமி நீல நிறத்தில் தோன்றுகிறது” என அவர் கூறினார். அவரது கருத்து பிரபலமானது. அமெரிக்காவும், ஏகாதிபத்திய நாடுகளும் அதிர்ச்சியில் உறைந்து போயின.
வாலன்டினா டெரெஷ்கோவா, வோஸ்டோக் 6 ன் மூலம் , ஜூன் 16, 1963 ல் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி ஆனார்.
அலக்சி லியோனோவ் ,மார்ச் 18, 1965ல் வோஸ்கோட் 2 விண்கலத்தில் இருந்து வெளியேறி, விண்வெளியில் நடந்த முதல் மனிதரானார்.
வெள்ளி மற்றும் செவ்வாய் கோள்களிலும் சோவியத் யூனியனின் செயற்கைக் கோள்கள்தான் முதலில் தரை இறங்கின.
இவ்வாறு விண்வெளிப் பயணத்தில் ஆராய்ச்சியில் சோவியத் யூனியன் மகத்தான சாதனைகளை படைத்தது.இச்சாதனைகள் சோசலிசத்தின் மீது மிகப் பெரும் ஈர்ப்பை உலக மக்களிடம் உருவாக்கியது.
மின்மயமாக்கல் திட்டம்.
மின்மயமாக்கல் திட்டம் 1920-இல் தொடங்கப்பட்டது .சோவியத் ஆட்சி அதிகாரமும் மின்மயமாக்கலும் ஒன்றிணைந்தால் ,அது தான் கம்யூனிசம் என்று கூட லெனின் குறிப்பிட்டார். இது மின்னிலையங்களைக் கட்டுவதை மட்டும் குறிக்கவில்லை; பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையை முழுமையாக மறுவடிவமைக்க அறிவியலைப் பயன்படுத்துவதையும் குறித்தது.
உலகில், அணுசக்தியை மின் உற்பத்திக்கு பயன்படுத்திய முதல் நாடு சோவியத் யூனியன் தான். அது 1954 ல் இச்சாதனையை செய்தது.
அடிப்படை ஆராய்ச்சிக்கான ஆதரவு:
உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார சிரமங்கள் இருந்த போதிலும், அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. வேளாண்மைத் துறையில், நிக்கோலாய் வவிலோவ் போன்ற விஞ்ஞானிகள், உலகம் முழுவதிலுமிருந்து , தாவர விதைகளை சேகரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விதை வங்கியை உருவாக்கி , பஞ்சத்தை முடிவுக்குக் கொண்டுவர ,சிறந்த பயிர்களை வளர்க்க மரபணுவியலைப் பயன்படுத்துவதும் இதன் நோக்கமாகும். இருப்பினும் ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில், கிரிகோர் மெண்டலின் மரபியல் பண்புகள் குறித்த அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள், மார்க்சியத்திற்கு முரணானது, புரட்சிக்கு எதிரானது என டிரோபிம் லைசென்கோ போன்ற விஞ்ஞானிகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதை நிராகரித்ததின் காரணமாக, மரபியல் அறிவியல் துறையிலும், வேளாண்மை துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இத் தவறு பின்னர் சரி செய்யப்பட்டது.
பொது சுகாதாரம்:
டைபஸ், காலரா , பெரியம்மை மற்றும் மலேரியா போன்ற நோய்களைத் தடுப்பதில் பெரிய கவனம் செலுத்தப்பட்டது. சுகாதாரக் கல்வி மற்றும் மையப்படுத்தப்பட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து பெரியம்மையை ஒழிக்க சோவியத் யூனியன் மிகச் சிறந்த பங்களிப்பை செலுத்தியது.
புதிதாக விடுதலை அடைந்த நாடுகள் உட்பட , பல்வேறு உலக நாடுகள் அறிவியல் – தொழில் நுட்ப ரீதியில் முன்னேற எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் , அக்டோபர் புரட்சி உருவாக்கிய சோவியத் யூனியன் உதவி செய்தது. சோவியத் யூனியன் இன்று இல்லாவிட்டாலும், அறிவியல் – தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அது ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும்.