Uncategorizedவரலாறு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 தோழர்கள் சேலம் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்

எம்.ரவி

பிரிட்டிஷ் ஆட்சியாளரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய மக்களுக்கு பரிபூரண விடுதலை (முழு விடுதலை) வேண்டும் என்று முதன் முதலில் முழக்கமிட்டவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்.

இது மட்டுமல்ல, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, வங்கம் முதல் மும்பை வரை குறுக்கும் நெடுக்குமாக இந்தியா முழுவதும் நடைபெற்ற விடுதலை வேள்வியில் பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் அளப்பரிய தியாகங்களைச் செய்தார்கள்.

இதன் காரணமாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதன் தலைவர்கள் மீது பொய்ச் சதி வழக்குகள் போடப்பட்டன. சிறை, சித்திரவதை, அடக்குமுறை, தூக்கு, துப்பாக்கிச் சூடு எனப் பலவிதமான துன்பதுயரங்களை அனுபவித்தார்கள். ஆயினும், கம்யூனிஸ்டுகள் அஞ்சவில்லை, கெஞ்சவில்லை, ஓடி ஒளிந்து கொள்ளவில்லை. தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டே விவசாயிகளையும், தொழிலாளர்களையும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணி திரட்டி மாபெரும் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.

இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வீர, தீர போராட்டங்களைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் அரசாங்கம் காங்கிரஸ் கட்சியுடனும், முஸ்லிம் லீக்குடன் ஒரு சமரச உடன்பாடு செய்துகொண்டு இந்தியா – பாகிஸ்தான் என நாட்டை இரண்டாகப் பிளந்து வைத்து விட்டு வெளியேறியது.

வகுப்புவாத வெறியாட்டம்

தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மதவெறியர்கள் மனித மிருகங்களாக மாறினர். ஒன்றுபட்ட இந்தியாவில் சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடையே பகைத்தீயை மூட்டினர். மக்கள் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்க்க வைத்தனர். திரும்பிய பக்கமெல்லாம் கலவரம், சூறையாடல், பஞ்ச நதிகள் பாய்ந்தோடும் பஞ்சாபிலும், கங்கை நதி கரை புரண்டோடும் வங்கத்திலும், ரத்த நதிகள் தெருக்களில் ஓடின. பல லட்சக்கணக்கான மனித உடல்கள் மண்ணில் சிதறிக் கிடந்தன. பிணந்தின்னிக் கழுகுகள் கொழுத்தன. குருஷேத்திரப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த கண்ணபிரானை அப்போது காணவில்லை. ஆனால், மகாத்மா காந்தியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் களத்தில் இறங்கினர்.

ஒருபுறம் மகாத்மா காந்தி அமைதியான அறவழியில் மதவெறியர்களை மடக்கினார். இன்னொரு புறம் இந்தியக் கம்யூனிஸ்டுகள் மதவெறியர்களைத் துரத்தியடித்தனர்.
“நேரு சர்க்காரை காப்பாற்றுவோம்“ என்ற கம்யூனிஸ்டுகளின் முழக்கம் தேசமெங்கும் எதிரொலித்தது. நேரு சர்க்கார் காப்பாற்றப்பட்டது.

ஆனால், இந்து மதவெறி, கொலைகாரன் கோட்சேவின் மூலம் மகாத்மா காந்தியைக் கொன்று பழிதீர்த்துக் கொண்டது. வெகுண்டெழுந்த இந்திய மக்கள் இந்து மதவெறி கும்பலை, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவாரங்களைத் துவம்சம் செய்தனர். மதவெறியர்கள் அடங்கி, ஒடுங்கி, பதுங்கினர்.

கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதம்

இந்த நிலையில், இந்தியா முழு விடுதலை பெறவில்லை, அரசியல் விடுதலை மட்டும் போதாது. பொருளாதார, சமூக விடுதலை வேண்டும். அதனை நிலபிரபுத்துவப் பெரு முதலாளித்துவ ஆதரவு கொண்ட காங்கிரஸ் அரசாங்கத்தால் நிகழ்த்த முடியாது. “எல்லோரும் எல்லாம் பெறுகிற” சோசலிசத்தை நோக்கிய புரட்சியை முன்னெடுக்க வேண்டும். உழைக்கும் வர்க்கத்தின் உன்னத ஆட்சியைப் படைக்க வேண்டும் என்ற நிலையை, முடிவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மேற்கொண்டது.

இதனால், 1948 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சட்டவிரோதமான அமைப்பு என்று வங்க மாகாண அரசு தடை செய்தது. அதற்குப்பின் ஒவ்வொரு மாகாண அரசுகளும் ஒன்றன்பின் ஒன்றாக தடை செய்தன.
சென்னை மாகாண அரசு 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியையும், அதன் துணை அமைப்புகளான 19 அமைப்புகளைச் சட்டவிரோத அமைப்புகள் என்று தடை செய்து உத்தரவைப் பிறப்பித்தது.

சிறைப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள்

இந்தியாவில் விடுதலைப் போராளிகளை அடக்கி ஒடுக்க ஏற்கெனவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியதால் 200 ஆண்டு காலமாக இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்ட சிறைச்சாலைகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் அடைக்கப்பட்டனர்.

சென்னை மாகாணத்தில், சேலம், வேலூர், கடலூர், நெல்லூர், அலிபுரம், நெல்லை, மதுரை, கோவை, தஞ்சை உட்பட அனைத்துச் சிறைச்சாலைகளும் இந்தியக் கம்யூனிஸ்டுகளால் பொங்கி வழிந்தன. மத்திய ஆட்சிப் பீடத்தில் இருந்த காங்கிரஸ் அரசு குறிப்பாக, மதவெறி ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஆதரவான வலதுசாரி முதலாளித்துவச் சிந்தனை கொண்டவரும் ”இரும்பு மனிதர்” என்ற பட்டம் சூட்டப்பட்டவருமான உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது அரசாங்கத்தின் இரும்புக் கரத்தைப் பிரயோகித்தார்.

இந்தியச் சிறைச்சாலைகளில் இருக்கும் கம்யூனிஸ்டுகள் அரசியல் கைதிகள் அல்ல அவர்கள் கிரிமினல் குற்றவாளிகள், பயங்கரவாதிகள். எனவே, அதற்குரிய வகையில் அவர்களுக்குத் தண்டனைகள் வழங்கப்படும் என வல்லபாய் பட்டேல் கொக்கரித்தார். இதனால் சிறைக் கொட்டடிகளில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது அடக்குமுறைகள் கோரத் தாண்டவமாடின.

சேலம் சிறை கொடூரம்

இதன் ஒரு பகுதியாக, சேலம் சிறையில் 350 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். சேலம் சிறை நடைமுறையில் கிரிமினல் குற்றவாளிகள் சிறைக்குள் கறுப்புக் குல்லாய் அணிந்திருக்க வேண்டும். இது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த சிறை விதி. ஆனால், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தோழர்கள் “நாங்கள் அரசியல் கைதிகள்” எனவே, கறுப்புக்குல்லாயை அணிய மாட்டோம் என மறுத்துவிட்டனர்.

இதனால், தங்களது ஆதிக்க அதிகாரத்திற்கு அவமானமாகக் கருதிய சென்னை மாகாண சிறைத்துறை அமைச்சர் மாதவமேனன், சேலம் சிறைத் தலைமை வார்டன் தாமோதரன், ஜெயிலர்கள் கிருஷ்ணன் நாயர் மற்றும் அய்யாபிள்ளை ஆகியோர் கடும் கோபம் கொண்டனர். இந்த கம்யூனிஸ்ட் கைதிகளுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் எனச் சதித் திட்டம் தீட்டினர்.

1950 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி சேலம் சிறைக்கொட்டடி ”ஜாலியன் வாலாபாக்காக” மாறியது.

ஜெயிலர் அய்யாபிள்ளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை மிக அசிங்கமாக, அறுவெறுப்பாக வசைமாரிப் பொழிந்தார். அத்துடன் குண்டாந்தடியுடன் 150 காவலர்கள் அவருக்குப் பின்னால் அணிவகுத்து நின்றனர். அதற்கடுத்து 100 ஆயுதப்படைக் காவலர்கள் ஷிபிளிஸிஜி விகிநிகிஞீமிழிணி லிணிணி ணிழிதிமிலிணிஞி – 307 என்ற வகை துப்பாக்கிகளோடு சிறைக்குள்ளே திடீரென்று புகுந்தனர்.

இவ்வாறு குண்டாந்தடிகளுடனும், துப்பாக்கிகளுடனும் 250 க்கு மேற்பட்ட காவலர்கள் உள்ளே நுழைவதைக் கண்ணுற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பெரும் அசம்பாவிதம் நடைபெறப்போகிறது என்றுணர்ந்து வெள்ளைத் துண்டை எடுத்து அசைத்துத் தாக்குதல் வேண்டாம் என்று சமிக்ஞை செய்தனர்.

ஆதிக்கவெறி கொண்ட ஜெயிலர் அய்யாபிள்ளை மேலிடத்து உத்தரவை அமல்படுத்தும் விதமாக நிராயுதபாணிகளாக இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களை குண்டாந்தடியால் தாக்கவும், துப்பாக்கியால் சுடவும் உத்தரவிட்டார். வனங்களில் மிருகங்களை வேட்டையாடுவது போல், கண்மூடித்தனமாக காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

குண்டாந்தடியால் அடித்து நொறுக்கப்பட்டனர். சிட்டுக்குருவிகளை சுட்டுத் தள்ளுவதைப் போல துப்பாக்கிகளால் சுட்டனர். சற்றும் எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த தோழர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அங்குமிங்கும் ஓடினர். சிறைக்குள், குளியலறைக்குள், கழிவறைக்குள் என பதுங்கியவர்களை துரத்தி,துரத்தி அடித்தும் சுட்டும் வீழ்த்தினர்.

சேலம் சிறைக்குள் ரத்தம் ஆறாக ஓடியது. சிறைக்கொட்டடி கசாப்பு கடை போல் காட்சியளித்தது. ஏற்கனவே, செய்து வைத்த ஏற்பாட்டின் படி துப்பாக்கி வீரர்கள் புடைசூழ சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரிஜ் கிஷோர் பிரசாத் மிகிஷி அவர்கள் உயர்மட்ட அதிகாரிகளுடன் அங்கு வந்து சேர்ந்தார். சிறை நிர்வாகத்தை மாவட்ட அரசு நிர்வாகம் கையில் எடுத்துக் கொள்கிறது என்று உத்தரவை பிறப்பித்தார். உயிரற்ற சடலங்களையும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உடல்களையும் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினார். ஆனால், அதிகாரிகளும், ஊழியர்களும், அரசு மருத்துவர்களும் உடனே உள்ளே செல்ல முடியவில்லை. தாங்கள் அணிந்திருந்த முழுக்கால் ட்ரவுசர்களை (பேண்ட்) முழங்கால் வரை மடித்து விட்டு தான் அங்கு செல்ல முடிந்தது. ஏனென்றால், அந்த அளவிற்கு உயிரற்ற மனித உடல்களும், சதைகளும், எலும்புகளும், ரத்தமும் சேரும், சகதியாய் குவிந்து கிடந்தன.

காவல்துறையின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களால் சிறைக்குள்ளேயே 17 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கொல்லப்பட்டனர். கடும் காயமுற்ற 5 தலைவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி மாண்டு போனார்கள். இவ்வாறு 22 தோழர்கள் கொல்லப்பட்டதோடு, குண்டாந்தடியாலும், துப்பாக்கி குண்டுகளாலும், மேலும், 107 தோழர்கள் படுகாயமுற்றனர் அதில், பலருக்கு கைகள், கால்கள், கண்கள், சிதைக்கப்பட்ட நிலையில் உடல் ஊனமுற்றவர்களாகினர்.
அஞ்சா நெஞ்சினர் கம்யூனிஸ்ட்டுகள்

கொடூர தாக்குதலுக்கு ஆளான போதும் உடனிருந்த சக தோழர்களின் உயிர்களைப் பறித்த போதும் அவயவங்கள் சிதைந்து ஊனமுற்றபோதும் சிறைக்குள்ளிருந்த கம்யூனிஸ்டுகள் மனம் தளரவில்லை, அவர்களின் வீரம் தனியவில்லை. மேலும், வீறு கொண்டு எழுந்தனர்.

எங்கள் அனைவரையும் கொன்றழித்தாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம்.”நாங்கள் கம்யூனிஸ்டுகள்”. இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியவர்கள், இப்போது இந்தியாவில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்கிற சோசலிச சமுதாயத்தை படைப்பதற்காக, இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சி அமைப்பதற்காக எங்கள் உயிர்களை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறோம். எனவே, நாங்கள் அரசியல் போராட்டக் கைதிகள் – “கருப்பு குல்லாய் அணிய மாட்டோம்“ “சிறை நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கு பணிய மாட்டோம்“ என வீரத்துடன் கர்ஜித்தனர்.”இதனால் சிறை நிர்வாகமும், அரசாங்கமும் பணிந்தன.

இந்தக் கொடூர கொலைச் சம்பவம் நடைபெற்ற தருணத்தில் சென்னை மாகாண முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூ.ச.குமாரசாமி ராஜா பதவி வகித்தார். கிருஷ்ண குமார சிங்ஜி பவசிங்ஜி என்பவர் ஆளுநராக (கவர்னர்) இருந்தார். இந்த கொடூர சம்பவத்தையொட்டி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனின் அறிக்கை 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதியன்றே சென்னை மாகாண அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. ஆனால், அந்த அறிக்கையை வெளியிடாமல் அரசு ரகசியமாக வைத்திருந்தது.

காலம் உருண்டோடியது. 1951 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது. 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சி ஐக்கிய முன்னணி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மகத்தான வெற்றியை பெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆட்சி அமையவிருந்த தருவாயில் ஒன்றிய காங்கிரஸ் அரசாங்கம் சதி வேலைகளில் ஈடுபட்டது. தேர்தலிலேயே போட்டியிடாத திரு.இராஜகோபாலாச்சாரியர் அவர்களை மேலவை உறுப்பினராக்கி முதலமைச்சராகவும் தேர்வு செய்து ஐக்கிய முன்னணியில் இருந்த கூட்டணி கட்சிகளை உடைத்து இழுத்து குறுக்கு வழியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் ஜீவா அவர்கள் கடந்த 1950 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சேலம் சிறையில் நடைபெற்ற கொடூரம் குறித்துப் பேசியதோடு அதன் மீதான விசாரணைக் கமிஷனின் அறிக்கை என்ன ஆயிற்று? எனக் கேள்விக்கணை தொடுத்தார். இதனால், 2 1/2 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த சேலம் சிறை தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை 1952 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை மாகாண சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

சேலம் விசாரணை அறிக்கை

அந்த விசாரணை அறிக்கையில் சிறையில் கொல்லப்பட்ட, காயமடைந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கீழ்கண்ட பெயர் பட்டியலும், விவரங்களும் வெளியிடப்பட்டிருந்தன.

11.02.1950 -ல் சேலம் மத்திய சிறையில் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 வீரத் தியாகிகள்

தோழர்கள்:

1) திருச்செங்கோடு, சூரியம்பாளையம் நெசவாளி காவேரி முதலியார்
2) சேலம், சூரமங்கலம், அரியாக் கவுண்டன்பட்டி, மில் தொழிலாளி ஆறுமுகம்
3) கடலூர் கம்யூனிஸ்ட் கட்சியின் போராளி ஷேக் தாவூத்

மலபார் பகுதியைச் சேர்ந்த தோழர்கள்

4) எம்.கே.கோபாலன் நாயர் 5) பி.கோபாலன் நாயர்
6) நீலஞ்சேரி நாராயணன் நாயர்
7) எம்.கோபாலகுட்டி நாயர்
8) எம்.நாராயண நம்பியார் (மயிலப்பிரவின் நாராயண நம்பியார்)
9) புள்ளாச்சி ஏதேன் கோவிந்தன் நம்பியார்
10) ஏ.கே.குஞ்சப்பன் நம்பியார்
11) உடையாமடத்து பலக்கல் ஆனந்தன் நம்பியார்
12) தாளன் ராமன் நம்பியார்
13) பரம்பிக் கடாரம் குஞ்சியப்ப நம்பியார்
14) கு.குஞ்சிராமன்
15) நந்தாரி குஞ்சாம்பு
16) காலத்தொக் கோவில் ஏதேன்
17) மாரோலி கோரான்
18) வாடசோறையின் மான் ஆசாரியார் (அம்பாடி ஆசாரி)
19) நக்கை கண்ணன்
20) காட்டூர் நடுவலப் பிறையில் மா.கோரன்
21) நடுக்காண்டி பத்மநாபன்
22) நலப்பறக்கல் பாலன்

இவர்களின் 17 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர் என்றும், 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர் என்றும், மேலும் 63 பேர் துப்பாக்கி குண்டுகளாலும் 14 பேர் குண்டாந்தடியடியாலும், 20 பேர் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டும், தடியடியாலும் படுகாயமுற்றனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டதுஎன்றும் அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

1951 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதிருந்த தடை நீக்கப்பட்டவுடன் சேலம் சிறையிலிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் விடுதலையாகி வெளியே சோர்வடைந்துவிடவில்லை. கட்சிப் பணிகளிலும், வந்ததும் ஓய்வெடுக்கவில்லை, போராட்டங்களிலும் மிகத் தீவிரமாகப் பங்கேற்றனர்.

குறிப்பாக, உடலில் 5 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ரத்தம் வெளியேறி மூர்ச்சையடைந்த தோழர் நாராயணா நம்பியார் மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டார். துப்பாக்கிக் குண்டுகளாலும், குண்டாந்தடியாலும் சதைப் பிளந்து எலும்புகள் உடைந்து ரத்த வெள்ளத்தில் அசைவற்றுக் கிடந்த தோழர் கன்ஹிலாட் குஞ்சாம்பு அவர்களை இறந்துவிட்டதாக கருதி மருத்துவமனையின் சவக்கிடங்கில் கிடத்தி விட்டார்கள். ஏதேச்சையாக அங்கு சென்ற மருத்துவமனை ஊழியர் ஒருவர் அவரது உடலசைவதைக் கண்டு மருத்துவரிடம் தகவல் தெரிவித்ததால் தீவிர சிகிச்சையளித்துக் காப்பாற்றப்பட்டார். இவர்களைப் போல் பாதிக்கப்பட்ட பலரும் அத்தோடு, தற்போதைய நாமக்கல் மாவட்டம், பழையபாளையத்தைச் சேர்ந்த தோழர் பி.சுப்பு, சேலத்தை சேர்ந்த உத்தமலிங்கம், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட காவேரி முதலியாருடன் சிறையிலிருந்த அவரது மகன் சோசலம் போன்ற பல தோழர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்ந்து பணியாற்றினார்கள் என்பது பெருமைக்குரியதாகும்.

சிறைத் தியாகிகள் மணிமண்டபம்

இத்தகைய தியாகிகளின் நினைவைப் போற்றும் விதமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 26 ஆவது மாநாடு நடைபெற்ற அரங்கத்திற்கு “சேலம் சிறைத்தியாகிகள் அரங்கு” என பெயர் சூட்டப்பட்டது.

இந்த மாநில மாநாட்டின் கோரிக்கையை ஏற்று சேலம் சிறைத் தியாகிகளின் தியாகத்தை என்றென்றும் நினைவு கொள்ளும் வகையில் சேலம் சிறை வளாகத்திற்குள்ளேயே சேலம் சிறை தியாகிகள் மணிமண்டபம் அமைக்கப்படும் என உறுதியளித்து, உடனடியாக உத்தரவும் பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் நன்றியும், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button