
விருந்தோம்பலுக்கு அடையாளமான மக்கள் தமிழர்கள்தானாம். ஆனால் அரசியல் கலாச்சாரம் தான் கவலைதருகிறதாம். தேசத்தின் பிற பகுதிகளில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறதாம். ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கலாய்த்திருக்கிறார்.
கிண்டி ராஜ்பவன், ஆர்எஸ்எஸ்ஸின் தமிழ்நாட்டு தலைமையகமாகி நீண்ட காலமாகிவிட்டது. ஆர்எஸ்எஸ் உபதேசிக்கும் கலாச்சாரத்தை, தமிழ்நாட்டுக்குள்ளும் புகுத்தி விட அவர்கள் தவியாய்த் தவிக்கிறார்கள்.
வேறு எதனையும் போலவே, கலாச்சாரமும் மாறாமல் நிலைபெற்று இருப்பது அல்ல.
தமிழ்ப் பண்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அறிவியலோடும் காலத்தோடும் இணைந்து பண்பாடு முன்னேறுகிறது.
ஆனால் அவ்வாறு முன்னேறக்கூடாது; பழைய நிலையில் தேங்கிக் கிடக்க வேண்டும்; இன்னும் சொல்லப்போனால் மூடநம்பிக்கைகளிலும் மதத்தின் பிடிகளிலும் ஆழ்ந்து கிடக்கும் வகையில் தமிழ்ப் பண்பாட்டைப் பின்னோக்கித் தள்ள வேண்டும் என ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது.
அது நிறைவேறாத நிலையில், ஆளுநருக்கு ஆற்றாமை பொங்குகிறது.
“காரல் மார்க்ஸைப் பின்பற்றுவோர் சுதந்திரத்திற்குப் பிறகு நம் நாகரிகம், கலாச்சாரத்தை அழித்து வருகின்றனர்” என்று இடதுசாரி சிந்தனையாளர்கள் மீது தன் வன்மத்தைக் கொட்டுகிறார்.
காரல் மார்க்ஸ் என்ற மனிதரால் தானே இடதுசாரி சிந்தனை வளர்ந்தோங்கியது. எனவே அவரையே நேரடியாக தாக்குகிறார். “இந்தியாவிற்கு ஏகாதிபத்தியம் தேவை என காரல் மார்க்ஸ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்” என்று ஆளுநர் பேசியிருக்கிறார்.
இந்தியாவைப் பற்றி நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் பத்திரிகையில் காரல் மார்க்ஸ் எழுதியது வலைத்தளங்களில் கிடைக்கிறது என்று ஆளுநர் குறிப்பிட்டுப் பேசியிருப்பதால், அவர் அதைப் படித்திருக்க வேண்டும். காரல் மார்க்ஸின் அந்தக் கட்டுரைகள் ‘இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ்’ என்று புத்தகமாகக் கிடைக்கிறது. இந்தக் கட்டுரைகளில் மார்க்ஸ் சொல்கிறார்:
“அரேபியர்கள், துருக்கியர்கள், முகலாயர்கள், மங்கோலியர்கள் இந்தியா மீது படையெடுத்தனர். அவர்களால் இந்திய நாகரிகத்தை அழிக்க இயலவில்லை. மாறாக, அவர்கள் இந்தியமயமாக்கப் பட்டனர். இந்தியாவை வென்றவர்களில் பிரிட்டிஷ்காரர்கள்தான் இந்திய உள்ளூர் சமூகங்களை உடைத்து அழித்தனர். உள்ளூர்த் தொழில்களை நசுக்கினர். எதுவெல்லாம் மிக உயர்வாக இந்திய நாகரிகத்தில் கருதப்பட்டதோ அனைத்தும் சுக்கு நூறாக உடைக்கப்பட்டது. இந்த அழிவைத் தவிர வேறு எதையும் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிற்குத் தரவில்லை”
“இந்தியாவுக்கு ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய துன்பம், இந்தியா இதற்கு முன் எதிர்கொண்ட எந்தத் துன்பத்தையும் விட ஆழமானதும் முடிவில்லாததுமாக உள்ளது.”
1857-ல் இந்தியாவில் நிகழ்ந்த முதலாவது விடுதலை யுத்தத்தின் போது, அதனை ஆதரித்து காரல் மார்க்ஸ் எழுதி இருக்கிறார். அதில் நிறைவாக “ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து துரத்தப்படவேண்டும்” என்கிறார்.
இதையெல்லாம் மறைத்துவிட்டு, இந்தியா ஆங்கிலேயர்களுக்கு அடிபணிய வேண்டும் என்று மார்க்ஸ் சொன்னதாக ரவி பேசுகிறார் என்றால், அது அவரது அறியாமை அல்லது பச்சையான அயோக்கியத்தனம்!
பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு நன்மை செய்பவர்கள் அல்ல; ஆனால் “அவர்களே அறியாத வகையில், இந்தியாவில் ஒரு சமூக மாற்றம் ஏற்படுவதற்கு வரலாற்றின் கருவியாக பிரிட்டிஷ் ஆட்சி இருக்கிறது” என்று 1853 இல் மார்க்ஸ் எழுதினார்.
இதைத்தான் ஆர்.என்.ரவி வசை பாடுகிறார். கணவன் இறந்ததும் மனைவியைச் சிதையில் தூக்கி எறியும் காட்டுமிராண்டித்தனம் இந்தியாவிலே இருக்கவில்லையா? மந்திரச் சடங்குகளும் நரபலியும் கூட இந்த நவீன காலத்திலும் கூட நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
“ராமாயண காலத்திலேயே விமானம் இருந்தது, விண்வெளிக்கு போன முதல் மனிதன் அனுமன்தான், மனித உடலில் யானையின் தலையைப் பொருத்தியதன் மூலம் பிளாஸ்டிக் சர்ஜரியை இந்தியர்கள்தான் முதலில் கண்டுபிடித்தார்கள்” என்று பிரதமர் உள்பட சங்கிகள் பலரும் இன்றும் பிதற்றித் திரியவில்லையா?
ஆளும் வர்க்கம் மண்ணின் கலாச்சாரத்தைத் தனது அதிகாரத்தைக் கொண்டு தனக்கேற்றபடி மாற்றி அமைக்கிறது. அரசு மேடைகள், நாக்கைத் தொங்கப் போடும் ஊடகங்கள், அஞ்ஞானத்தை உபதேசிக்கும் சங்கிகள் கூட்டம், இவற்றுக்காகச் செலவழிக்க கட்டுக்கடங்காத பணம் எல்லாவற்றைக் கொண்டும், தமிழ்நாட்டை தமதாக்கிக் கொள்ள முடியாத ஆர்எஸ்எஸ்ஸின் புலம்பல்தான் இது.
மார்க்ஸினுடைய லட்சிய நோக்கம் தொழிலாளி வர்க்கமும் மற்றும் மனிதகுலம் முழுவதும் ஆன்மீகத் துறையிலும் சமுதாயத்துறையிலும் முழு விடுதலை அடையவேண்டும் என்பதாகும்.
அதை மனிதகுலம் எப்போதும் முன்னெடுத்துச் செல்லும். அதன் முன்பு ஆர்.என்.ரவியின் ஆளுநர் பதவி வெறும் தூசு!