
“ஆணையிட நான், அடிபணிய நீ” என்று ஒன்றிய அரசு மாநில உரிமைகளை படிப்படியாக பறித்துக் கொண்டே இருக்கிறது.
தண்டனைச் சட்டம் (ஐபிசி) குற்றவியல் சட்டம் (சிஆர்பிசி), சாட்சிய சட்டம் ஆகியவற்றை பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ், பிஎஸ்ஏ சட்டங்களாக ஒன்றிய அரசு மாற்றியது.
இதனை செயல்படுத்துவதற்கான கூடுதல் காவலர்கள் நியமனம், நீதிமன்றங்கள், சிறைகள் அதிகரிப்பு வழக்கு நிர்வாகம் ஆகியவற்றை மாநில அரசு ஏற்க வேண்டும்.
ஆனால் இவ்வாறு சட்டங்களை மாற்றுவது குறித்து, மாநிலங்களைக் கலந்து ஆலோசிக்கவே இல்லை.
தொழிலாளர் துறை ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவானது. நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ஒன்றிய அரசு கொண்டு வந்த போதும் மாநிலங்களிடம் பேசவில்லை.
தொழிலாளர் சட்டங்கள் குறித்து இனி ஒன்றிய அரசுதான் முடிவு செய்யும். அதனை நிறைவேற்ற வேண்டிய முகவர்களாக மாநில அரசுகளின் அதிகாரம் சுருக்கப்பட்டு விட்டது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்பது வீடு கட்டும் திட்டம். அதற்கான இடத்தை கையகப்படுத்துவது, பயனர்களை தேர்வு செய்வது, அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது மட்டுமின்றி, வீடு கட்டுவதற்கான செலவிலும் 40% மாநில அரசு ஏற்க வேண்டும். நடைமுறையில் மாநில அரசின் செலவு 60%க்கும் மேல் போகிறது.
பிரதம மந்திரி போஜன் என்றொரு மதிய உணவு திட்டம். தானியத்தை ஒன்றிய அரசு தரும். அதை எடுத்து வரும் போக்குவரத்து செலவு, சமையல் மற்றும் சமையலருக்கான செலவு, எரிவாயு செலவு எல்லாவற்றையும் மாநில அரசுதான் பார்க்க வேண்டும்.
‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற மருத்துவ சிகிச்சை திட்டம் ஒன்றிய அரசின் கொள்கை. ஆனால் மருத்துவமனைகள் நிர்வாகம், பராமரிப்பு, காப்பீடு மாநில அரசின் தலையில்!
மழலையர் கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரை சமக்கிரா சிக்ஷா அபியான் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதன்படி நிதி ஒதுக்க வேண்டுமானால் மாநில அரசு கட்டாய இந்தியை, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும். அதை தமிழ்நாடு அரசு மறுத்ததால் சுமார் 2400 கோடி ரூபாய் கல்வி நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. மாநில அரசு அதற்கும் செலவு செய்கிறது.
இப்போது உயர் கல்வியிலும் கை வைக்கிறார்கள். “விக்க்ஷித் பாரத் சிக்ஷா ஆதிக்ஷன்” என்ற ஒரே திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்க ஒன்றிய அரசு மசோதா தாக்கல் செய்துள்ளது. UGC, AICTE, NCTE போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதாக சொல்லி, முழு அதிகாரத்தை ஒன்றிய அரசு, கையில் எடுக்கப் போகிறது. கல்வித்துறையும், ஒன்றிய – மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் வரும். இனி ஒன்றிய அரசு வைத்ததே சட்டம். தனது தன்னிச்சையான உத்தரவுகளுக்கு அடிபணியா விட்டால் மாநில அரசுகளுக்கான உயர்கல்வி நிதியும் வெட்டப்படும்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை மாற்றி, ‘விபி-ஜி ராம் ஜி’ என மாற்றியுள்ளனர். காந்திக்கு பதில் இனி ராம்! 100 நாள் வேலைக்கு பதிலாக இனி 125 நாள் வேலை என்ற ஆரவார அறிவிப்பு. முழுச் செலவையும் ஒன்றிய அரசு செய்த நிலை மாறி, இனி மாநில அரசு 40 சதவீதம் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலக்கை நிறைவேற்ற கூடுதல் செலவானால் அதையும் மாநில அரசு ஏற்க வேண்டும்!
ஏற்கனவே, மாநில அரசின் வரி வருவாய் அனைத்தையும், தனது கைக்கு மாற்றி ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு பறித்துக்கொண்டது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை 2023 வரை தர ஒத்துக்கொண்டது. ஆனால் அதிலும் தமிழகத்துக்கு தர வேண்டிய நிதி பாக்கி இருக்கிறது. இப்போது இழப்பீடும் இல்லை, வரி வசூல் உரிமையும் மாநில அரசுக்கு இல்லை.
மொத்தத்தில்,“அதிகாரம், கொள்கை வகுக்கும் உரிமை, இதனால் கிடைக்கும் விளம்பரம் அனைத்தும் ஒன்றிய அரசுக்கு! இவற்றை அமலாக்கும் கடமை, நிதிச் செலவு, நிதி பற்றாக்குறையால் ஏற்படும் குறைகள் காரணமாக மக்கள் எதிர்ப்பு அனைத்தும் மாநில அரசுக்கு!
அரசியல் சாசனம் வலியுறுத்தும், கூட்டாட்சி முறைமைக்கு மோடி அரசு வேட்டு வைத்து விட்டது.