
மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்), மன நெருக்கடி என்ற வார்த்தைகளை இன்றைக்கு பரவலாக கேட்க முடியும். இவற்றில் இருந்து விடுபடுவதற்கான பயிற்சிகளை பல சாமியார்கள் வழங்கி வருகின்றனர். ஜக்கி வாசுதேவ், வாழும் கலை ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற பல கார்ப்பரேட் சாமியார்கள் இதற்காக பல லட்சங்கள் வரை வாங்குகின்றனர். இவர்களுக்கு எல்லாம் முன்னோடி ஓசோ போன்ற சாமியார்கள்.
அத்தனைக்கும் ஆசைப்படு; மூன்றாவது கோணம், உனக்காகவே ரகசியம்; மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி?; வாழ்க்கை ரகசியம்; ஆனந்தம் உனக்குள்ளே; கதவைத்திற காற்று வரட்டும் இப்படி கவர்ச்சியான பெயர்களில் இந்த சாமியார்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளனர். நடுத்தர மக்கள் நிறைந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற வியாபாரத்தில்(!) ஆன்மீக வாதிகளின் கல்லா நிரம்பி வழிகிறது.
மன அழுத்த மேலாண்மை (Stress Management) என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள், பயிற்றுநர்கள் பலர் இதுபோன்ற பயிற்சிகளை அளித்து வருகின்றனர். அதற்கான கட்டணம் லட்சத்தில் இருந்துதான் தொடங்குகிறது. இவர்களுக்கு சமூகம் என்றாலே கசக்கும். தனிமனிதன்.. தனிமனிதன்.. தனிமனிதன் தான் எல்லாமே.
“சமூகம் என்பதே மிகப் பெரிய பொய். எனக்குத் தெரிவதெல்லாம், உங்களையும் என்னையும் போன்ற தனித்தனி மனிதர்கள்தான்.
சமூக சேவை என்ற எண்ணத்தை ஒதுக்கிவையுங்கள். உங்களை முதலில் வளமாக்கிக் கொள்ளுங்கள். ஆனந்தமாக இருப்பது எப்படி?, அமைதியாக இருப்பது எப்படி? என்பது உங்களுக்கே தெரியவில்லை என்றால், சுற்றி உள்ளவர்களுக்கு உங்களால் என்ன வழங்க முடியும்? உங்கள் கோபத்தையும், பொறாமையையும், சோகத்தையும், வேதனைகளையும் அல்லவா மற்றவர்கள் மீது சுமத்திவிடுவீர்கள்?
தனி மனிதர்கள் மாறாமல் மோசமாக இருக்கும் களத்தில், சமூகத்தைத் திருத்துவதற்காக நீங்கள் அதிகபட்சம் என்னதான் செய்யமுடியும்? வெற்றுச் சட்டங்களை இயற்றலாம். வேலைக்கு உதவாத விதிமுறைகளைக் கொண்டுவரலாம்.”
இது ஜக்கி வாசுதேவ் சாமியார் கூறியிருப்பது. இவர் வெள்ளியங்கிரி மலையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். இவர் எவ்வளவு தெளிவாக சொல்கிறார் பாருங்கள்.
“சமூகம் என்பதே மிகப் பெரிய பொய். எனக்குத் தெரிவதெல்லாம், உங்களையும் என்னையும் போன்ற தனித்தனி மனிதர்கள்தான்.”
“சமூக சேவை என்ற எண்ணத்தை ஒதுக்கிவையுங்கள். உங்களை முதலில் வளமாக்கிக் கொள்ளுங்கள்.” என்று ஜக்கி வாசுதேவ் எவ்வளவு தெளிவாக, வெளிப்படையாகச் சொல்கிறார் பாருங்கள். சமூகம், சமுதாயம் என்பதெல்லாம் பொய்; அதைப் பற்றி எதற்காக கவலைப்படுகிறாய்?; தனித்தனி மனிதர்கள் முன்னேறினால் சமுதாயம் முன்னேறி விடும். வளர்ந்துவிடும் என்கின்றனர். இந்தக் கருத்துகளைத்தான் யோகா, தியானம், ஆழ்மனப் பயிற்சி, கடவுள், ஆன்மா போன்ற வண்ணக் கலவைகளையும் தூவி விற்கின்றனர்.
இந்த கார்ப்பரேட் சாமியார்களுக்கு மார்க்சியம் என்றாலே கசக்கும். மார்க்சியத்திற்கு மனித மனங்களைப் பற்றியோ, மனிதர்களின் ஆசாபாசங்கள் பற்றியோ கவலையில்லை. பொருள், சமூகம், இயற்கை, பொருள் முதல் வாதம், கட்சி என்றுதான் பேசிக்கொண்டிருக்கும். மனித மனதைப் பற்றியோ, மனித சிந்தனையைப் பற்றியோ மனிதனுடைய வாழ்க்கைச் சிக்கலைப் பற்றியோ உறவுகளைக் கையாள்வது, மேம்படுத்திக்கொள்து பற்றியோ மார்க்சியம் பேசாது. மார்க்சியத்திற்கு இவை பற்றியெல்லாம் கவலையில்லை என்று இந்த சாமியார்கள் சாடுகின்றனர்.
இப்படி கார்ப்பரேட் சாமியார்கள் சொல்வது உண்மையா?
“உங்கள் அனுபவங்களுக்கு விதி, தன்மானம், சுய கௌரவம், ரோஷம் என்று எதன் மீதாவது பழி சுமத்திக்கொண்டு இருக்கும் வரை, ஒரு நாளும் ஆனந்தத்தின் ருசியை நீங்கள் உணர மாட்டீர்கள். எல்லாவற்றுக்கும் முழு முதற் காரணம் நீங்கள், நீங்கள், நீங்களேதான். இது நீங்கள் தெளிந்துணர வேண்டிய ரகசியம். இதை உணர்ந்துவிட்டால், மிச்சமிருக்கும் வாழ்க்கையையாவது அற்புதமாக, ஆனந்தமாக நடத்திக்கொள்வது எப்படி என்று பார்க்க ஆரம்பிப்பீர்கள்.” – இப்படிச் சொல்வது ஜக்கி வாசுதேவ் சாமியார்.
மன அழுத்தம், நிம்மதியில்லை, பதற்றமாக இருக்கிறது என்று பதறும் தகவல் நுட்ப நிறுவனங்களின் (ஐ.டி. கம்பெனிகள்) பணியாளர்கள் உட்பட கார்ப்பரேட் நிறுனங்களின் ஊழியர்கள், நடுத்தர வர்க்க மக்கள், அதிலிருந்து விடுபட கார்ப்பரேட் சாமியார்களை நாடி ஓடுகின்றனர். அவர்களோ, “இந்தப் பிரச்சனைகள் உனக்கு வரக் காரணமே நீதான்.” என்று கூறுகின்றனர்.

ஜக்கியின் வார்த்தையில் கூறினால், “எல்லாவற்றுக்கும் முழு முதற் காரணம் நீங்கள், நீங்கள், நீங்களேதான். இது நீங்கள் தெளிந்துணர வேண்டிய ரகசியம்.”
அப்படியானால், மன அழுத்தம், மன நெருக்கடி வரக் காரணம் என்ன?
- நிர்வாகம் ஊழியர்களுக்குத் தரும் ‘டார்க்கெட்’ நெருக்கடி
- அதிகப்படியான வேலை நேரம்.
- பாதுகாப்பற்ற வேலைச்சூழல் – எப்பொழுதும் வேலை பறிபோகலாம் என்ற நிலை.
- குறைவான சம்பளம் அல்லது ஒப்பந்தப் பணியில் இருப்பது.
- வேலைச்சூழலில் தொடர் கண்காணிப்பு (மானிடரிங்)
போன்ற காரணங்களால் ஊழியர்களுக்கு மன அழுத்தம், மன நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு “நீ தான் காரணம்” என்று, அவர்கள் மீதே கார்ப்பரேட் சாமியார்கள் குறை கூறுகின்றனர். “மன அழுத்தத்தை உனக்கு கையாளத் தெரியவில்லை. அவற்றில் இருந்து மீண்டுவர உனக்குத் தெரியவில்லை. அதை நாங்கள் கற்றுத் தருகிறோம்” என்றும் அழைக்கின்றனர்.
மன அழுத்தம், நெருக்கடி ஏற்படுவதற்கான சமூகக் காரணங்களை நோண்டாதே. அது தேவையில்லை.
துன்பத்திலும் அமைதியாக இரு;
தியானம் செய்; யோகா கற்றுக்கொள்;
மனதை வெறுமையாக வைத்துக்கொள்ளப் பழகு
என்று கார்ப்பரேட் சாமியார்கள் போதிக்கின்றனர். இதற்கான பயிற்சிகளையும் அளிக்கின்றனர்.
அதாவது, கார்ப்பரேட் சாமியார்கள் மன அழுத்தத்திற்கான சமூகக் காரணங்களை மறைத்து, அதை தனிநபருடைய மனப் பிரச்சனையாக மாற்றுகின்றனர்.
அவர்களுடைய பயிற்சிகளில் முதன்மையானது ‘நிகழ்நேர விழிப்புணர்வு’ (Mindfulness) ஆகும். அந்தநேரத்தில் நடப்பதை மட்டும் முழு கவனத்துடன் கவனி; முன் அனுமானங்கள், முன் கருத்துகள் எதுவும் இன்றிக் கவனிக்கும் விழிப்புணர்வு வேண்டும். இந்த ‘நிகழ்நேர விழிப்புணர்வுப்’ பயிற்சியில், கடந்த காலத்தைப் பற்றிய சிந்தனையோ மனப்பதிவுகளோ இருக்காது. எதிர்காலத்தைப் பற்றிய அச்சமோ அனுமானமோ இருக்கக் கூடாது. இந்தக் கணம், இந்த நிகழ்வு என்பதை மட்டும் விழிப்புடன் கவனிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, சாப்பிடும்போது சாப்பிடுவதை மட்டும் உணர வேண்டும். நடக்கும் போது நடப்பதில் மட்டும் கவனம் இருக்க வேண்டும். கோபம் வந்தால் “நான் கோபப்படுகிறேன்” என்ற விழிப்பு வேண்டும்.
இதனால் மனம் இலேசானது போன்ற உணர்வு ஏற்படும். அப்போதைக்கு மன அழுத்தம் தணியும். “அப்பாடா” என்ற எண்ணம் உருவாகும்.
இந்த மன அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த, நிறுவனத்தில் கொடுக்கப்படும் டார்க்கெட் நெருக்கடி குறையாது. அதிகமான நேரம் பணியாற்ற வேண்டிய நிலையில் மாற்றம் ஏற்படாது. சம்பளம் அதிகரிக்காது. பணிப் பாதுகாப்பற்ற சூழலில் மாற்றம் வராது.
உழைப்புச் சுரண்டல், உற்பத்திச் சுரண்டல், அறிவுச் சுரண்டல் எதுவும் மாறாது. அவற்றுக்கு எதிராக உருவான எதிர்ப்பு உணர்வு, அதிருப்தி உணர்வு தணிக்கப்படும். மழுங்கடிக்கப்படும். அதனை ஏற்கும் இயல்பு உருவாக்கப்படும். சமூக அநீதி இயல்பானதாக மாற்றப்படும். நிலவும் சமூகத்தை மாற்ற வேண்டிய தேவையில்லை என்ற மனநிலை உருவாக்கப்படும். உலகம் இப்படித்தான் இருக்கும்; நீதான் மாறிக்கொள்ள வேண்டும் என்ற மனநிலை உருவாகும். இதைத்தான் கார்ப்பரேட் சாமியார்கள் தேன் தடவிக்கொடுத்து ஏற்றுக்கொள்ளச் செய்கின்றனர்.
உன்னுடைய சமூகச் சூழல்; வேலைச் சூழல் எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்! அதன் மீது கோபம் கொள்வதால் நீ பாதிக்கப்படுகிறாய்! இதனால் கோபம், அதிருப்தியை கைவிடு! எதிர்த்துக் கொண்டே இருப்பது நோய். அந்த வகையான மன நோய்க்கு ஆட்படாதே! – இவைதான் கார்ப்பரேட் சாமியார்களின் பயிற்சிகளில் ஊட்டப்படுபவை. இதனை நரம்பியல் அறிவியல் (neuroscience), உளவியல் (psychology) என்று கார்ப்பரேட் சாமியார்களும் ஆன்மீகவாதிகளும் விளம்பரப்படுத்துகின்றனர்.
இவை மன அழுத்தம் ஏற்படுவதற்கான சமூக மற்றும் புறக் காரணங்களை மறைத்து, அதனை தனிநபரின் மனப் பிரச்சனையாக மாற்றுகிறது. சமூக விமர்சனம் அகற்றப்படுகிறது.
மன அழுத்தம் எந்த சமூகத்தில் ஏற்படுகிறது? யாருக்கு ஏற்பட்டது? ஏன் ஏற்படுகிறது? என்பது குறித்து பேசப்பட வேண்டும். ‘நிகழ்நேர விழிப்புணர்வு’ (Mindfulness) பயிற்சி என்பது ஒரு கருவி. அது எதற்குப் பயன்படுகிறது என்பதில்தான் அரசியல் இருக்கிறது. அது சுரண்டலை நிலைநிறுத்தவும் பயன்படலாம். மனித விடுதலைக்கும் பயன்படலாம்.
‘நிகழ்நேர விழிப்புணர்வு’ சமூக விமர்சனத்துடன் இணைக்கப்பட வேண்டும். அப்போது தான் மனித விடுதலைக்குப் பயன்படும். இதைத்தான் மார்க்சியம் சொல்கிறது.
கார்ப்பரேட் ஆன்மீக வாதிகள், சமூக விமர்சனத்தில் இருந்து ‘நிகழ்நேர விழிப்புணர்வை’ (Mindfulness) துண்டிப்பதன் மூலம் சுரண்டலையும் நிலவும் சமூகத்தையும் காக்கின்றனர். சமூகத்தை மாற்றாமல் அதற்கு ஏற்றவாறு மனிதனை மாற்றுகின்றனர்.
இதனால்தான் கார்ப்பரேட் சாமியார்களுக்கு, ஆன்மீக வாதிகளுக்கு அரசு பெரும் ஆதரவளிக்கிறது. பெரிய நிறுவனங்கள், தொழிலதிபர்கள் பணத்தை வாரியிறைக்கின்றனர். சட்டம் நிறைய சலுகைகளை அளிக்கின்றது. பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் சொகுசு ஆசிரமங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.
ஆளும் வர்க்கத்தின் அங்கமாகிவிட்ட கார்ப்பரேட் சாமியார்கள் ஏற்படுத்தி வரும், “சமூகத்தை மாற்ற நினைக்காதே; உன்னை மாற்றிக்கொள்” என்பது சமூக மனிதனை தனித்தனி மனிதர்களாக மேலும் கூறு போடுகிறது. இதனால் தனிமனிதனுக்கு பிரச்சனைகள் அதிகரிக்குமே தவிர தீர்வு கிடைக்காது.