
பீகார் தேர்தல் முடிந்து, புதிய அமைச்சரவை பொறுப்பேற்கிறது. அரசை மக்கள் தேர்வு செய்யும் முறை தகர்ந்து வாக்காளர் யார் என அரசு தேர்வு செய்யும் புதிய முறை வந்துள்ளது.
குடியரசு முறைமையை, திடீர் ராணுவக் கலகம் மூலம் சிதைப்பதை உலக வரலாற்றில் கண்டிருக்கிறோம். ஆனால் மிகவும் அமைதியாக, அலுவலகச் சுற்றறிக்கைகள், தரவுகளை நீக்குவது, மாற்றுவது போன்ற வழிகளிலும் குடியரசு முறைமையை உள்ளிருந்தே சிதைக்கும் புதிய வழிமுறைகளை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
“கோயிற் பூசை செய்பவன், சிலையை விற்பது போல” இந்த அமைதியான சிதைவின் வடிவமைப்பாளராக தேர்தல் ஆணையமே மாறி இருப்பதுதான் வினோதமானது.
வாக்காளர் எனும் தகுதியையே முற்றாக அழித்து விட்டு, குடிமக்கள் தமது வாக்குரிமையை தாமாகவே தரவுகள் மூலம் நிரூபித்துத்தான், புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெறமுடியும் என்ற முன்னெப்போதும் இல்லாத புதிய கட்டாயத்தை தேர்தல் ஆணையம் மக்கள் மீது திணித்துள்ளது.
2025 ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிடப்பட்ட பீகார் வாக்காளர் வரைவுப் பட்டியலில், அதற்கு முன்பிருந்த பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். நீக்கப்பட்டவர்களின் பெயர் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
உச்சநீதிமன்றம் தலையிட்டு விவரங்களை வெளியிடுமாறும், ஆதார் அட்டையையும் சான்றாக ஏற்குமாறும் உத்திரவிட்டது.
அதன் பின்பு 2025 செப்டம்பர் 30ல் இறுதிப் பட்டியல் வெளியானது. இதில் மேலும் 3.66 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அதே நேரத்தில் 21.53 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். ஆகவே நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 47.13 லட்சம் பேர் மட்டுமே என்று சொல்லப்பட்டது.
ஆனால் சேர்க்கப்பட்ட 21 லட்சம் பேரும், ஏற்கெனவே பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களே என்பதற்கு எந்தத் தரவுமில்லை. இவர்கள் எங்கிருந்து முளைத்தார்கள் என்ற கேள்விக்கு எந்தப் பதிலும் இல்லை.
சராசரியாக ஒரு தொகுதிக்குப் பத்தாயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவை கணிசமான தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானித்துள்ளன.
தேர்தல் அறிவிப்பை ஆணையம் வெளியிட்டதும், தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. தமிழ்நாட்டில் கட்டுமான, அமைப்பு சாராத தொழிலாளர் வாரியங்களில் உறுப்பினராக உள்ள பல லட்சம் தொழிலாளர்களுக்கு நிதி உதவித் தொகை வழங்குவதையும், புதிய உறுப்பினர் பதிவு செய்வதையும் கூட தேர்தல் முடிவு வரும் வரை நிறுத்தி வைத்து விடுகிறார்கள்.
ஆனால், தேர்தல் அறிவிப்பு வரும் நேரத்தில், “பெண்கள் வேலைவாய்ப்பு திட்டம்” உருவாக்கப்பட்டு, பெண்கள் அனைவருக்கும் பத்தாயிரம் ரூபாய் கொடுப்பது என பீகார் அரசு முடிவு செய்தது.
பீகாரில் நவம்பர் 6, 11 ஆகிய நாட்களில் இரண்டு கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் மாதிரி நடைமுறைகள் அக்டோபர் 6ம் தேதி அமலுக்கு வந்தன.
ஆனால் அக்டோபர் 17, 24, 31 தேதிகளிலும், முதல் கட்ட தேர்தல் வாக்கெடுப்பு நடந்து முடிந்தபின்னர் நவம்பர் 7ம் தேதியிலும் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டது. இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் எழுப்பப்பட்டபோது, அது ஏற்கனவே அமலில் உள்ள திட்டத்தின் தொடர்ச்சிதான் எனக் கூறி, தடுப்பதற்கு மறுத்துவிட்டது.
இது சரியென்றால், 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் இயங்கிவரும் கட்டுமானத் தொழிலாளர் வாரியத்தை, தேர்தல் காலத்தில் முடக்கிவைப்பது ஏன்?
கட்சிகள் தமது தேர்தல் வாக்குறுதிகளில், வாக்காளர்களுக்கு நிதி உதவி செய்வோம் என்று சொல்வது கூட தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் கருத்து சொல்லியிருக்கிறது. தேர்தல் நடந்துகொண்டிருக்கும் போதே, ரூ.10,000 கொடுப்பது தவறு என்று உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இனிமேல்தான் விசாரணைக்கு வரவுள்ளது. இனி தீர்ப்பு வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?
வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்ல வாகனங்களைக் கட்சிகள் பயன்படுத்தியது உண்டு. ஆனால் அவையெல்லாம் தவறு எனத் தடுத்து நிறுத்தப்பட்டன. ஆனால் பீகார் தேர்தலில் வாக்காளர்களை வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவர சிறப்பு ரயில்களே இயக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் கண்ணை இறுக மூடிக்கொண்டுவிட்டது.
ஆர்எஸ்எஸ்-பிஜேபி ஆட்சியின் கையில் ஒரு அரசியல் ஆயுதமாக தேர்தல் ஆணையம் மாற்றப்பட்டு விட்டது.
தேர்தல் வரவிருக்கும் சூழலில், இவற்றை தமிழ்நாடு உற்றுக் கவனித்தாக வேண்டும்.