அறிக்கைகள்

“செம்மொழி இலக்கிய விருது” மக்கள் ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கும்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள “செம்மொழி இலக்கிய விருது” மக்கள் ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒன்றிய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக சாகித்ய அகாடமி விருது அமைப்பு 1954 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பாஜக ஒன்றிய அரசு அமைந்த ஆரம்ப காலத்தில் இருந்து இதன் தன்னாட்சி செயல்பாட்டில் தலையிட்டு, தனது கருத்தியல் பரப்புரையாளர்களை ஊக்குவிக்கும் மேடையாக மாற்றி வருகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதாளர்களை அதன் நிர்வாகக் குழு தேர்வு செய்து, அதிகாரப்பூர்வமாக ஒப்புதலும் தந்துள்ள நிலையில், ஊடகங்களுக்கு அறிவிக்கும் முன்பு, ஒன்றிய அரசின் பண்பாட்டு அமைச்சகம் தலையிட்டு நிறுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் சுதந்திரமாக, ஜனநாயக நெறிகளில் செயல்பட்டு, தலைசிறந்த படைப்பாளர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்த பாரம்பரிய மிக்க சாகித்ய அகாடமி அமைப்பை, பாஜக ஒன்றிய அரசு அதன் உயர்ந்த மரபுகளை சிதைத்து விட்டது.

ஒன்றிய அரசின் அரசியல் தலையீடு காரணமாக நாடு முழுவதும் உள்ள படைப்பாளர்கள், எழுத்தாளர்களின் சுதந்திரமான படைப்புரிமை, கருத்துரிமைக்கு பாதிப்பு ஏற்படும் பேராபாயம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தேசிய அளவில் “செம்மொழி இலக்கிய விருது” ஆண்டு தோறும் வழங்கப்படும் என அறிவித்திருப்பது படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் புத்தெழுச்சியை உருவாக்கும் செயலாகும்.

“இலக்கியத் தளங்களில் அரசியல் குறுக்கீடுகள், ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்” என்ற முதலமைச்சரின் கருத்து ஆழமான பொருள் பொதிந்தது. வெறுப்பு மற்றும் பகைமை வளர்க்கும் சார்பு நிலையை எதிர் கொள்ளும் வலிமை கொண்டது.

முதல் கட்டமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய ஆகிய எழு மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் “செம்மொழி இலக்கிய விருது”-ம், ரூபாய் 5 லட்சம் மதிப்புறு தொகையும் வழங்கி படைப்பாளர்களை ஊக்கப்படுத்தும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பதுடன், அறிவிக்கப்பட்ட மொழிப் பட்டியலில் பஞ்சாபி மற்றும் உருது மொழிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button