வரலாறு

ஆவணம் அறிவோம் 2 – நாம் கொடுத்த தர்மமாவது!

ஆ.சிவசுப்பிரமணியன்

தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தவையாகக் கோயில்களில் இடம் பெற்றுள்ளன என்றாலும் அவை உருவான காலத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகம் சார்ந்த செய்திகளையும் தம்முள் கொண்டுள்ளன. பல்லவர் காலம் (கி.பி. 3 – 9) தொடங்கி தமிழ்நாட்டில் இனக்குழுக்கள், சாதிகளாக உருவாகத் தொடங்கிவிட்டன.

இடங்கை, வலங்கை என்ற பிரிவுகள் உருவாகி சாதிகள் இவற்றுள் ஒரு பிரிவில் இணைந்தமையும் பின்னர் நிகழ்ந்துள்ளது. அத்துடன் வடபுல வைதீகச் சமயத்தின் தாக்கம் அல்லது ஊடுறுவலும் நிகழலாயிற்று. தீண்டாமையும் வேர்பிடிக்கத் தொடங்கிவிட்டது.

இடைக்காலச் சோழர்களும் பாண்டியர்களும் மனு தர்மத்தின் மீது காதலுற்றுத் தம் ஆட்சியின் குறிக்கோள் மனுதர்மத்தை நிலைநாட்டுவதே என்பதை, “மனுவாறு (மனு காட்டும் வழி) சிறக்க”, “மனு நீதி தழைத்தோங்க”, “அறநெறி வளர”, “மறை* (*வேதம்) நெறி வளர” “மனு நெறி திகழ”, “மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க”, “மனுவாறு பெருக”, “மனு நீதி முறை வளர” என்றெல்லாம் தம் மெய்க்கீர்த்திகளில் பொறித்து வெளிப்படுத்தியுள்ளனர். மனுநீதிச் சோழன் என்ற கற்பனை மன்னன் கூட உருவாக்கப்பட்டான். இச்செய்திகளின் பின்புலத்தில் இரண்டு கல்வெட்டுக்களைக் காண்போம்.

இடையர் பெற்ற உரிமைகள்

இக்கல்வெட்டு விக்கிரமச் சோழன் ஆட்சிக் காலத்தில், கி.பி.1290 இல் பொறிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் கீரனூர் என்ற ஊரிலுள்ள வாகீஸ்வரர் கோயிலிலுள்ள இக்கல்வெட்டு இடையருக்குத் தர்மமாகச் சில உரிமைகளை வழங்கியுள்ளதைக் கூறுகிறது. இதைக் கூறும் பின்வரும் கல்வெட்டைப் படித்துப் பார்த்தால் அவன் வழங்கிய தர்மம் எவை என்பது தெரியவரும். கல்வெட்டைத்தான் பார்ப்போமே!
“கீரனூரான கொடுமங் கொண்ட சோழநல்லூர் இடையர்க்கு நம்பேரால் கொடுத்த தர்மமாவது” என்று தொடங்கும் இக்கல்வெட்டில் அவன் வழங்கிய தர்மம் வருமாறு:

(1) வீட்டின் இரண்டு புறமும் வாசல் வைத்துக் கொள்ளலாம்.
(2) வீட்டிற்குச் சாந்து பூசிக் கொள்ளலாம்.
(3) நன்மைக்குப் (மங்கல நிகழ்வுக்கு) பல்லக்கில் ஏறலாம்.
(4) தீமைக்குப் (இறப்புக்கு) பாடை கட்டிக் கொள்ளலாம்.
(5) உடலில் பட்டாடை போர்த்திக் கொள்ளலாம்
(6) இடையர்களின் இல்ல நிகழ்வுகளில் உவச்சர்கள் மேளம் வாசிக்கலாம்.

இவை எல்லாம்தான் இடையர்கள் பெற்றுக் கொண்ட தர்மங்கள் ஆகும் (தெ.இ.க. 5: எண் 283).

இத்தர்மத்தைப் பெற்றுக்கொள்ளும் முன் இப்பண்பாட்டு உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

திடீரென்று இத்தர்மத்தை வழங்குவதற்கான காரணம் என்ன என்பது கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. பொதுவாக ஓர் உரிமை புதிதாக வழங்கப்பட பின்வரும் மூன்று காரணங்களில் ஒன்றோ, அனைத்துமோ இருக்கலாம். (1) உரிமையை வேண்டுதல், (2) உரிமைக்காகப் போராடுதல், (3) மன்னனின் அதிகாரிகளோ நெருங்கிய உறவினர்களோ, ஊர் அவையோ பரிந்துரைத்தல். இக்கல்வெட்டில் இக்காரணங்கள் எவையும் இடம் பெறவில்லை. அப்படியானால் இவற்றைக் கடந்த சமூக நிகழ்வு ஒன்றிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதுகுறித்த ஆய்வில் இடையர்களின் சமூக நிலை எவ்வாறிருந்தது என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது.

இடையரின் சமூக நிலை

தமிழ்நாட்டின் தொன்மையான சமூகங்களில் ஒன்று இடையர் சமூகம். பண்டைத் தமிழகத்தின் ஐந்திணைச் சமூகத்தில் முல்லைத் திணையின் தலைமக்களாக தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் ஆயர் என்ற பெயரில் இவர்களைக் குறிப்பிடுகின்றன. முல்லைத் திணையில் கொல்லை (தோட்ட) வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் இவர்களது பொருளாதாரச் செயல்பாடுகளாக இருந்துள்ளன. உபரி உற்பத்தி இங்கு உருவானது. குறிஞ்சித் திணையில் தனிச் சொத்துரிமை கால் கொள்ளாத நிலையில் முல்லைத் திணையில் கால்நடைகள் தனிச் சொத்தாயின. வளர்க்கும் கால்நடைகளின் அடிப்படையில் எருமை வளர்ப்போர், கோட்டினத்தாயர் (கலித்தொகை 103:33, 105:58) என்றும். பசு வளர்ப்போர், நல்லினத்தாயர் அல்லது கோவினத்தாயர் (கலித்தொகை: 103:36, 104:6, 113: 10) என்றும் ஆடுகளை வளர்ப்போர், புல்லினத்தாயர் (கலித்தொகை: 103:47, 110:1) என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வகையில் பொருளாதார வேறுபாட்டின் அடிப்படையில் உருவான ஒன்றாக இதைக் கருதவும் இடமுள்ளது. சங்ககாலத்தில் மாடுகள் செல்வமாகக் கருதப்பட்டமையும், அவற்றைக் கவர்ந்து செல்லவும் அவ்வாறு கவர்ந்து சென்றதை மீட்கவும் போர்கள் நடந்துள்ளதையும் சங்க இலக்கியங்கள் பதிவிட்டுள்ளன. தொல்காப்பியம் ஆநிரை கவர்தலையும் அவற்றை மீட்பதையும் கருவாகக் கொண்டு வெட்சி, கரந்தை என இரு திணைகளை வகுத்துள்ளது. மாடு என்ற சொல் செல்வத்தைக் குறிக்கவும் பயன்பட்டுள்ளது.

இடைக்காலத் தமிழகத்தில் சைவ, வைணவக் கோயில்கள் முக்கியத்துவம் பெற்றன. இவற்றுக்கு இணையாக இல்லாவிடினும் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்குச் சமணப் பள்ளிகளும் பௌத்த விகாரங்களும் இடம்பெற்றிருந்தன. இவற்றில் விளக்கெரிக்க உதவும் பொருளாக எருமை, பசு, ஆடு என்ற மூன்று விலங்குகளின் நெய் பயன்பட்டது. இவற்றை வழங்கும் பொறுப்பு இடையர்களிடமே வழங்கப்பட்டிருந்தது. விளக்கெரிக்க, நிலம், பொன், பணம் என்பனவற்றைக் கொடையாகப் பெற்று மேற்கூறிய விலங்குகளை விலைக்கு வாங்கி அவற்றை வளர்த்து நெய் தயாரித்து, வரையறுக்கப்பட்ட அளவிலான நெய்யை மட்டும் கோயிலுக்கு வழங்கும் பணியை இவர்களில் சிலர் மேற்கொண்டிருந்தனர். இது அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபுரிந்ததுடன் சமூக மதிப்பையும் வழங்கியது. “விளக்குக் குடிமக்கள்”, “திருநந்தாவிளக்குக் குடிகள்” என்று இவர்களை அழைக்கலாயினர். மன்றாடிகள் என்ற பட்டமும் இவர்களுக்குண்டு.

கால்நடை வளர்ப்புச் சமூகத்தை அடுத்து உருவான வேளாண் சமூகத்தில் இவர்களும் வேளாண் குடிகளும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்துள்ளனர். பாலும் பால்படு பொருள்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் என்பனவும் பரிவர்த்தனை மதிப்பைப் பெற்றன. இது இவர்களது பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நின்றது. மற்றொரு பக்கம் மேற்கூறிய கல்வெட்டில் இடம்பெற்றுள்ள ஆறு பண்பாட்டு உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன. அவர்களது தொழில் சார்ந்து, அவர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு வரிகட்டுவோராகவும் இருந்துள்ளனர். பால், பால்படு பொருள்களைப் பரிவர்த்தனை செய்வதன் வழி பணமும் பொன்னும் பெற்றுவந்தனர். இம்முரண்பாடான நிலையில் அரசின் வருவாய் ஈட்டலில் துணை நிற்கும் ஓர் இனக்குழுச் சாதியைப் பகைத்துக் கொள்ள விரும்பாத நிலையில் மேற்கூறிய ஆறு பண்பாட்டு உரிமைகளையும் வழங்கியதுடன் இச்செய்தியைக் கல்வெட்டிலும் செப்புப் பட்டயத்திலும் வேண்டுமிடத்தில் வெட்டி வைத்துக்கொள்ள அனுமதியும் இக்கல்வெட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதை இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ள “செம்பிலும் சிலையிலும் வெட்டிக்கொள்வார்களாகவும் நம் ஓலை குடுத்தோம்” என்ற தொடர் வழி அறியமுடிகிறது.

கம்மாளர் பெற்ற உரிமைகள்

கி.பி.1300 இல் தென் கொங்குப் பகுதியில் வாழும் கம்மாளர்களுக்குப் பின்வரும் பண்பாட்டு உரிமைகள் வழங்கப்பட்டதைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் வருமாறு:
(1) இரட்டைச் சங்கு ஊதுதல்
(2) பேரிகை உள்ளிட்டவற்றைக் கொட்டுவித்துக் கொள்ளுதல்
(3) செருப்பணிதல்.
(4) வீடுகளுக்குச் சாந்து பூசிக் கொள்ளுதல்
இதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் இச்செய்தி எழுதப்பட்ட ஓலையை ஆதாரமாகக் கொண்டு தங்களுக்கு வேண்டும் இடங்களில் கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ளும் அனுமதி தரப்பட்டுள்ளது என்ற செய்தியும் இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.

கம்மாளர்

தட்டார் (பொற்கொல்லர்), கன்னார், சிற்பி, தச்சர், கொல்லர் ஆகிய ஐந்து வகையான தொழில் செய்வோரையும் குறிக்கும் பொதுச் சொல்லே கம்மாளர் என்பதாகும். இவர்கள் தமிழ்நாட்டின் தொடக்கக் காலக் கைவினைஞர்களாவர். தொல் தமிழ்க் கல்வெட்டுக்களிலும் சங்க இலக்கியங்களிலும் இவர்களைக் குறித்த பதிவுகள் உள்ளன. இடைக்காலத் தமிழகத்தில் இவர்கள் பட்டறைத் தொழில் மேற்கொள்வோராக இருந்து அரசுக்கு வரி செலுத்தி வந்துள்ளனர். தென்காசி மாவட்டம் கல்லிடைக் குறிச்சி வட்டத்திலுள்ள குறிச்சி என்ற ஊரின் குலசேகரமுடையார் கோயில் நுழைவாயிலிலுள்ள கி.பி. 1558 ஆவது ஆண்டுக் கல்வெட்டில் கொல்லர், தச்சர் ஆகியோருக்கு வரிவிலக்கு அளிக்கும் செய்தி அடங்கிய கல்வெட்டு இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நிலவியுள்ளது.

மேலே குறிப்பிட்ட நான்கு பண்பாட்டு உரிமைகளை வழங்கிய காலத்திற்கும் (கி.பி. 1300) வரிவிலக்கு வழங்கிய காலத்திற்கும் (கி.பி.1558) இடையே கால இடைவெளியிருப்பினும் இவற்றிற்கான காரணமாக அமைவது சமூகத்தில் ஓர் இன்றியமையாத உறுப்பாக இவர்கள் செயல்பட்டதுதான்.

இவர்களது பணி தேவைப்படும் தொழில்களும் இக்காலத்தில் இயங்கின. சான்றாகத் தறிப்பாட்டம், தறியிறை என்ற பெயர்களில் வரி செலுத்திவந்த நெசவாளர்கள், செக்கிறை, செக்குக் கடமை என்ற பெயர்களில் வரி செலுத்திவந்த எண்ணெயாட்டுவோர் இரும்பாலாகிய கொழு பொருத்தப்பட்ட மரக் கலப்பைகளையும், மாடுகளால் இழுக்கப்படும் வண்டிகளையும் பயன்படுத்தும் உழுகுடிகள், தம் சரக்குகளை ஏற்றிச்செல்ல வண்டிகளைப் பயன்படுத்தும் வணிகர்கள் ஆகியோருக்கு இவர்களின் பணி அவசியமானதாகும். போர்க்கருவிகள் உள்ளிட்ட பலவேறு மர, இரும்புப் பொருட்கள், தங்க அணிகலன்கள், வீட்டுப் பயன்பாட்டிற்கான உலோகப் பாத்திரங்கள் செய்யவும் கம்மாளர்கள் என்ற பிரிவின் பணி தேவைப்பட்டது.

மன்னர்கள் கட்டிய கோயில்களில் கடவுளர்களின் உலோகப் படிமங்களையும், திருவுருவச் சிலைகளையும் பூசையில் பயன்படுத்தும் உலோகப் பாத்திரங்களையும் தேர்கள், சப்பரங்களையும் இவர்கள்தான் உருவாக்கினர்.

அத்துடன் இவர்களும் தாம் செய்யும் பணிக்கேற்ப “கொல்”, “தைச்சு” “தட்டார்பாட்டம்”, “கன்னார் இறை” என்ற பெயர்களில் வரி செலுத்தி வந்தனர். எனவே இவர்களை நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் மன்னனுக்கு இருந்துள்ளது. இக்கட்டாயமே மறுக்கப்பட்டிருந்த பண்பாட்டு உரிமைகளை அவர்களுக்கு வழங்கும் படியும் வரிக்குறைப்புச் செய்யும் படியும் செய்துள்ளது.

மேலும் கைவினைஞர்களும் உழவர்களும் வரி அதிகரிக்கும் போது வரியை எதிர்க்கும் வழிமுறையாக வலசை போதலை (இடப் பெயர்ச்சியை) மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவ்வழியைப் பின்பற்றிக் கம்மாளர்கள் வலசை போனால் அவர்கள் செலுத்தும் வரி நின்று போவதுடன் அவர்களது பணி தேவைப்படும் ஏனைய கைத்தொழில்களும் பாதிக்கப்படும். இதுவே வரிக்குறைப்புச் செய்யத் தூண்டியுள்ளது.

இப்போது ஒரு கேள்வி எழுகிறது. இதுவரை இப்பண்பாட்டு உரிமைகளை மறுக்கும்படி மன்னர்களைத் தூண்டியது எது என்பதுதான் அக்கேள்வியாகும். இக்கேள்விக்கான விடை அவர்களின் ஆட்சிக்காலக் கல்வெட்டுக்களிலேயே இடம் பெற்றுள்ளது. அது வருமாறு:

கல்வெட்டுகள் கூறும் விடை

தமது ஆய்வு நூல் ஒன்றில் திருமலை என்ற ஆய்வாளர் (1987:183), நாகை மாவட்டத்தின் சீர்காழி வட்டத்திலுள்ள ஆச்சாள்புரம் என்ற கிராமத்தில் சிவலோக தியாகர் கோயிலில் கிடைத்துள்ள இரண்டாம் இராசாதிராசனின் கல்வெட்டு ஒன்றை, பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளார். இதன் காலம் கி.பி.1177 ஆகும். இதே கல்வெட்டினைப் பேராசிரியர் விஜய வேணுகோபால் படியெடுத்து அக் கல்வெட்டை ‘ஆவணம்’ இதழில் (2010 இதழ்: 21 பக்கம்: 41) வெளியிட்டுள்ளார். பண்பாட்டு ஒடுக்குமுறை தொடர்பான ஆய்வுக்குப் பெரிதும் துணைபுரியும் இக்கல்வெட்டில் பல்வேறு சாதியினர் பின்பற்றக்கூடாத பண்பாட்டு அடையாளங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவை வருமாறு:
· பணி செய்வோர் வேள், அரசு ஆகிய பட்டங்ளைப் பயன்படுத்தக் கூடாது.
· உழவர்கள், குயவர்கள், உவச்சர்கள், நெசவாளர்கள், பாணர்கள் ஆகியோர் குடிகள் அல்லாதவர்கள் ஆகியோரின் நன்மை தீமைக்குப் பேரிகை கொட்டக் கூடாது.

மூன்றாம் இராஜராஜனின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றில் ஒரு குறிப்பிட்ட சாதியினர், மேளம், பறை ஆகிய இசைக் கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும், ஒரே தண்ணீர்த் துறையில் நீராடக் கூடாது என்றும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன (தெ.இ.க.7:385). கல்வெட்டு சிதைந்துள்ளமையால் இக்கட்டுப்பாட்டுக்கு ஆளான சாதி எது என்று தெரியவில்லை.

இடையருக்கும், கம்மாளருக்கும் வழங்கப்பட்ட புதிய உரிமைகள் முன்னர் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இதுபோன்று பின்பற்றக் கூடாதவையாக இருந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இக்கட்டுப்பாடுகள் யாவும் மனுதர்ம சாஸ்திரம் என்ற நூலின் மூன்றாவது நான்காவது இயல்களில் புதைந்துள்ளன.

“மனுநீதி முறை வளர” என்று தம் மெய்கீர்த்திகளில் பதிவிட்டதற்கு ஏற்ப நம் மன்னர்கள் அதை ஒழுங்காகவே பின்பற்றியுள்ளார்கள்! இக்கட்டுப்பாடுகளுக்கு ஆளான மக்களின் துணை தேவை என்றபோதோ அல்லது அவர்களின் எதிர்க்குரலை மட்டுப்படுத்தும் வழிமுறையாகவோ மேற்கூறிய பண்பாட்டு உரிமைகளைத் ‘தர்மமாக’ வழங்கியுள்ளார்கள். தர்மம் என்ற சொல்லுக்கு அகராதிகள், நிகண்டுகள் தரும் பொருள் உயர்வானதே. ஆனால் வெகு மக்களின் வழக்காற்றில் ‘பிச்சை’ என்ற பொருளும் உண்டு. எது பொருத்தம் என்று கருதுகிறீர்களோ அந்தப் பொருளைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button