சண்டிகரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுச்சிமிகு 25வது கட்சிப் பேராயம்
பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாகத் தேர்வு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது கட்சிப் பேராயம் (கட்சி காங்கிரஸ்) எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

25வது கட்சிப் பேராயம் (கட்சி காங்கிரஸ்) பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள சுராவரம் சுதாகர் ரெட்டி நகரில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. 21ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா மற்றும் தேசியச் செயலாளர்கள் உரை நிகழ்த்தினர்.
இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் மீறி பெருந்திரளான பஞ்சாப் மக்கள் கலந்துகொண்டனர்.
இரண்டாவது நாளான செப்டம்பர் 22ஆம் தேதி, பகத்சிங்கின் உறவினர் பேராசிரியர் ஜக்மோகன் சிங் தேசியக்கொடியையும், பஞ்சாப் மாநில முன்னாள் செயலாளர் பூபீந்தர் சாம்பார், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியையும் ஏற்றி வைத்தனர். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் மாநாடு தொடங்கியது.

மாநாட்டை நடத்துவதற்கான 30 பேர் கொண்ட தலைமைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில், அமர்ஜித் கவுர், நாகேந்திரநாத் ஓஜா, ஏ.வெங்கய்யா, ஹர்தேவ் சிங் ஆர்ஷி, டி.எம்.மூர்த்தி, அ.மு.சலீம், பிராண்டி அதிகாரி, தேவிகுமாரி, தினேஷ் சீரங்கராஜ் ஆகியோர் பொறுப்பேற்று செயல்பட்டனர்.
டி.ராஜா துவக்க உரை
பொதுமாநாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தொடங்கி வைத்து உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) லிபரேஷன் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் ஜி.தேவராஜன், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா ஆகிய இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்திப் பேசினர்.

பொது மாநாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, “நாட்டை பாதுகாப்பதில் தோளோடு தோள் நின்று போராடும் சக இடதுசாரி கட்சி தலைவர்களை வரவேற்கிறேன்.
தலைமுறைகளின் தியாகங்கள் நிறைந்த 100 ஆண்டுகளின் பயணத்தில், கட்சி நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், உண்மையான விடுதலையை நேசித்தும், சுரண்டலுக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டத்தை நாம் நடத்தி இருக்கிறோம். இது பெருமிதத்துக்கான நேரம் மட்டுமல்ல, புதிய பொறுப்புகளை ஏற்பதற்கான நேரமும் ஆகும்.
நம்மோடு சேர்ந்து போராட்டத்தின் முன்னணியில் நின்ற பல தோழர்கள் உடல் ரீதியாக இப்போது நம்முடன் இல்லை. ஆனால் அவர்களது போராட்டப் பாரம்பரியம் நம்மை இயக்கிக் கொண்டே இருக்கிறது.
வாழ்நாள் முழுவதையும் கட்சியைக் கட்டுவதிலேயே செலவிட்ட, தெளிந்த சித்தாந்த வழிகாட்டுதலை வழங்கிய தோழர் சுதாகர் ரெட்டி இந்த பேராயத்தில் நம்முடன் இல்லை. சோர்வற்ற போராளி, விவசாயிகள் தொழிலாளர்கள் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தோழர் அதுல் குமார் அஞ்சான் இன்று நம்மிடம் இல்லை. சமரசம் இல்லாத போராட்டக்காரராக கட்சியை வழி நடத்திய தோழர் கானம் ராஜேந்திரனும் விடை கொடுத்து சென்று விட்டார். அவர்கள் இல்லை என்றாலும், அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கைப் பாரம்பரியம் நம்மை எப்போதும் வழிநடத்தும்.
வரலாற்று சிறப்புமிக்க பஞ்சாப் மாநிலத்தில் நமது பேராயம் நடக்கிறது. இந்தியாவின் மிக உயரமான போராளிகளை உருவாக்கித் தந்த மாநிலம் இது. புரட்சியின் பதாகையை உயர்த்திப் பிடித்த, கெதர் கட்சியின் நிறுவனர் சோகன் சிங் பாக்னாவின் பூமி இது. ஜாலியன் வாலாபாக்கில் பல நூறு பேரை சுட்டுக்கொன்ற வெறியன், ஜெனரல் டயரை தேடிச்சென்று மாய்த்த உத்தம் சிங்கின் மண் இது. எந்நாளும் நினைவில் நீங்காது இருக்கும் இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கத்தை எழுப்பிய, இந்தியாவின் எரி நட்சத்திரம் பகத்சிங், ராஜகுரு ஆகியோர் நடந்த நிலம் இது. காலிஸ்தான் பிரிவினைவாதத்தை எதிர்த்துப் போராடி 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் உயிர் தியாகம் செய்த மாநிலம் இது.
இதுவரை நான்கு கட்சிப் பேராயங்கள் பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளன. 1958ல் அமிர்தசரஸிலும், 1978ல் படிண்டாவிலும், 2005ல் இதே சண்டிகரிலும், இப்போதும் நடந்த நமது பேராயங்கள் நமது ஆற்றலை அதிகரித்துள்ளன. திருப்புமுனைகளாக நின்று இருக்கின்றன.
இப்போது வரியையே ஆயுதமாகக் கொண்டு ஒரு யுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி இருக்கிறார். அதன் மூலம் உலகத்தில் மேலாதிக்கம் செலுத்த விரும்புகிறார். முதலாளித்துவத்தின் உச்சகட்டமாக ஏகாதிபத்தியம் உருவெடுப்பதைப் பற்றி 100 ஆண்டுகளுக்கு முன்பே லெனின் எழுதியிருக்கிறார்.
இதுவரை கண்டிராத கொடும் தாக்குதலை மனித குலம் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஒட்டுமொத்த மனித குலத்தையும் வாழ்விப்பதற்குப் பதிலாக, பெரும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட சமத்துவமின்மையைத் தோற்றுவித்துள்ளன. மனிதர்களுக்கு மட்டுமல்ல. முதலாளித்துவத்தின் கொள்ளை லாபப் பேராசையால், சுற்றுச்சூழல் படுமோசமாகப் பாதிக்கப்பட்டு, பூமியின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி வருகிறது.
இந்தத் தீமைகளுக்கு எதிரான குரலை இடதுசாரிகளால் மட்டுமே எழுப்ப முடியும். மாற்றுத் திட்டத்தையும் வழங்க முடியும். ஊழலுக்கும், எதேச்சதிகாரத்துக்கும் எதிரான பெரும் மக்கள் எழுச்சிகளை இலங்கை, வங்கதேசம், நேபாளம் போன்றவை அண்மைக் காலத்தில் சந்தித்தன.
நமது நாடு ஒரு நெருக்கடியான காலத்தின் ஊடாகப் பயணிக்கிறது. நமது நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயகம், ஆர்எஸ்எஸ் பாசிச சக்திகளின் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.
நாடாளுமன்றமே ஒதுக்கி வைக்கப்படுகிறது. நீதிமன்றங்கள் மீதான அழுத்தங்களால், அவை பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டாட்சி முறைமை தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருகிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதைச் சிதைத்து, ஒரே இந்தியா எனக் கூறி அதிகாரங்கள் அனைத்தையும் மையத்தில் குவிக்கும் வேலை நடந்து வருகிறது. ஊடகங்கள் முடக்கப்பட்டுவிட்டன. அரசின் பிரச்சாரப் பீரங்கிகளாக மாற்றப்பட்டுவிட்டன.
சமூகத்தின் அனைத்துப் பகுதிகளும், ஏதேனும் ஒரு வகையில், அரசின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.
அரசியல் சாசனத்தை புறந்தள்ளிவிட்டு ஒரு மதம் சார்ந்த, இந்து ராஷ்டிரத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி முயல்கின்றன. “ஒரு இந்து ராஷ்ட்ரம் உருவாகும் என்றால் அது இந்தியாவை பேரபாயத்துக்கு உள்ளாக்கும்” என்றார் பி.ஆர்.அம்பேத்கர். வகுப்புவாதத்தை மூர்க்கத்தனமாக பிஜேபி அரசு திணித்துக் கொண்டிருக்கிறது.
மக்கள் நலன்களுக்கு எதிராக, அதானி, அம்பானிகளுக்கு ஏராளச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்றன.
வேலையின்மை உச்சத்துக்கு சென்றிருக்கிறது. உணவுப் பாதுகாப்பு ஒழிந்துபோயிற்று. விவசாயிகள், வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லிக்கு சென்றனர். அவர்கள் தடுக்கப்பட்டதால் டெல்லியை முற்றுகையிட்டனர். அவர்களைப் பற்றி பொய்க்கதைகளை ஊடகங்கள் பரப்பின. அதானி, அம்பானி இருவருடைய சொத்துக்கள், இந்தியாவின் சரிபாதி மக்களுடைய சொத்துக்களை விட அதிகமாக உள்ளன.
பிஜேபி ஆட்சி அகற்றப்படாவிட்டால், இந்த அவல நிலை இன்னும் ஆழமாகிவிடும். மதச்சார்பற்ற ஜனநாயகம் பறிக்கப்பட்டுவிடும்.
இவையனைத்துக்கும் இடதுசாரி கட்சிகளால் மட்டுமே தக்க மாற்றை வழங்க முடியும். நமக்கு இடையிலான குறுகிய கண்ணோட்டம் கைவிடப்பட வேண்டும். இடதுசாரி சக்திகள் இன்னும் நெருக்கமாக ஒன்றுபட வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் நெருக்கம் அதிகரிக்க வேண்டுமானால், இடதுசாரிகள் ஒன்றுபடுவது இன்றியமையாததாகும்.
பாசிசத்தை முறியடிக்க, ‘அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உணவு, கல்வி, மருத்துவம் எல்லோருக்கும் கிடைக்க, சமத்துவம் நிலைநாட்டப்பட இந்த நாட்டை சோஷலிச திசையில் திருப்பினால் மட்டுமே சாத்தியம்” என்று டி.ராஜா உறுதிபடத் தெரிவித்தார்.
