தலையங்கம்

காவி இருள் சூழவிடோம்! தமிழ்நாடு தலை தாழ்த்தாது!

தனது சாணக்கிய நரித் தந்திரங்களை எல்லாம் சரியாகக் கண்டுணர்ந்து, சொல்லுக்கு சொல் அம்பலப்படுத்தும் தமிழ்நாட்டை கண்டு ஆர்எஸ்எஸ், பிஜேபிக்கு அவ்வளவு ஆத்திரம்!

அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி எவ்வளவு அடித்தாலும், அதையெல்லாம் தாங்கிக்கொண்டு, தனது மனுஸ்மிருதி கனவை நிறைவேற்ற விடாமல், தன்னை எதிர்க்கும் அத்தனை மாநில அரசுகளையும் எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி, தினந்தோறும் தனக்கு தலைவலி தந்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை, ஆட்சியிலிருந்து இறக்கி விட வேண்டும் என்று எந்தப் பழி பாவத்திற்கும் அஞ்சாமல் களமிறங்குகிறது ஆர்எஸ்எஸ், பாஜக. எத்தனை நூற்றாண்டுகளின் சதி அனுபவம்!

திமுக கூட்டணி தவிர்த்து, தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் பாஜக கொண்டு வந்து விட்டது. சேர்ந்து நின்று மக்களிடமிருந்து வாக்கை வாங்கி பாஜக வாயில் போட சில கட்சிகள், தனித்து நின்று தனக்கு வராத வாக்குகளை பிரித்து வீணாக்க சில கட்சிகள்.

இனி ஒரு நாளும் பாஜகவோடு சேர மாட்டோம் என்று கத்திக் கூப்பாடு போட்டு வந்த எடப்பாடி, திடீரென திமுகவை தோற்கடிப்பதுதான் எங்கள் இலக்கு என்றது, வலைக்குள் மீன் சிக்கிவிட்டதைக் காட்டியது. எந்த ரெய்டு புண்ணியமோ!

அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்த அமித்ஷா, எடப்பாடியின் ‘சீரிய’ தலைமையில் கூட்டணி அமைந்திருப்பதாக சொன்னார். அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை என்றால், எடப்பாடி தானே கூட்டணியை அறிவித்திருக்க வேண்டும்!

ஆனால் அந்த ‘சீரிய’ தலைவர் ‘ம்’ என்ற சிறிய வார்த்தையைக் கூட பேசவில்லை. பேட்டி முடியும் வரை பேசிய அமித்ஷாவின் வாயையே பார்த்துக் கொண்டு கைகட்டி அமர்ந்திருந்தார்.

சனாதனம், மும்மொழித் திட்டம், தொகுதி மறு சீரமைப்பு ஆகியவற்றைச் சொல்லி மக்களை திமுக திசை திருப்புவதாக அமித்ஷா சொன்னார்.

இந்தப் பிரச்சனைகளில், கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதிமுகவின் நிலை என்ன? சனாதனத்தை ஏற்கிறதா? மும்மொழித் திட்டத்தைப் போற்றுகிறதா? தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவதை ஒப்புக் கொள்கிறதா?

கடந்த 48 ஆண்டுகளில், ஏழு முறை வென்று ஆளுங்கட்சியாகவும், வெற்றி பெற முடியாத நேரங்களில் பெரும்பாலும் முக்கிய எதிர்க்கட்சியாகவும் விளங்கிய ஒரு கட்சியின் தலைவர் அவர். தனது கட்சிக்கு மாற்றுக் கருத்து உள்ளது என்பதை முனகக்கூட முடியவில்லை.

மோடி அரசு ஊழலுக்காக ரெய்டு விட்ட முன்னாள் மந்திரிகள் மேடையில் இருக்கும் போது, திமுக அரசு செய்துள்ளதாக கூறி பல ஊழல்களை பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பட்டியலிட்டார் அமித்ஷா!

தமிழ்நாட்டுக்கு ஒவ்வாததாகவே ஒவ்வொரு விஷயத்தையும் செய்து கொண்டிருக்கும் பாஜக தலைவருக்கு திடீரென்று தமிழ் மீது பாசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது!

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளை எல்லாம் தமிழிலும் எழுதலாம் என்ற முறையை மோடி தான் கொண்டு வந்தார், திமுக கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி நடத்திய போது ஏன் இதைச் செய்யவில்லை என்று குண்டு போட்டார்.

1966 ஆம் ஆண்டிலேயே, தமிழில் ஐஏஎஸ் தேர்வு எழுதலாம் என்று வந்துவிட்டது. அப்படி தமிழில் எழுதி ஐஏஎஸ் அதிகாரி ஆகி, 60 வயது வரை பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களே தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்! எவ்வளவு பச்சைப் பொய்.

செம்மொழி ஆய்வு நிறுவனத்தை மோடி தான் உருவாக்கினார் என கூச்சமின்றி சொன்னார். உண்மையில் செம்மொழி ஆய்வு நிறுவனம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் 2006ல் நிறுவப்பட்டு, 2008ல் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மோடிக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

திருக்குறளை உலக மொழிகளில் எல்லாம் மோடி மொழி பெயர்த்து கொடுத்திருப்பதாக வேறு புரட்டினார்! 1794 ஆம் ஆண்டிலிருந்து திருக்குறள் ஆங்கிலத்தில் 80 தடவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 50 க்கு மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் உள்ளது. மோடி தான் செய்தார் என்று சொல்ல எவ்வளவு தைரியம்?

அதிமுக உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்றார் அமித்ஷா. நேற்று வரை செங்கோட்டையனை வரவழைத்துப் பேசியது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் கொடுத்துக் கொஞ்சியது, டிடிவி தினகரனை ஆரத்தழுவி குலாவியது எல்லாம் எதற்கு?
காவி இருள் சூழவிடோம்! தமிழ்நாடு தலை தாழ்த்தாது. தீ பரவட்டும்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button