
ஏஐடியுசி சார்பாக தமிழ்நாடு தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசே, தொழிலாளர் கொள்கையை வெளியிடு! நிரந்தர தன்மையுள்ள பணியிடங்களில், நிரந்தரமற்ற தொழிலாளர்களை நியமிக்காதே! சம ஊதியச் சட்டத்தை மீறி, ஒப்பந்தப்பணி, வெளிப்பணி ஒப்படைப்பு (அவுட்சோர்சிங்) போன்றவற்றை நடைமுறைப்படுத்தாதே! தனியார் மயம் என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்களை ஒப்பந்த நிறுவனங்கள், அதிகாரிகள் சுரண்டலுக்கு ஆட்படுத்தாதே! குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை உடனே நடைமுறைப்படுத்து! என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோவையில் ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எம்.ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கடலூரில் மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேசியச் செயலாளர் டி.எம்.மூர்த்தி உரையாற்றினார். திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே க.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஜி.மஞ்சுளா, விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் இந்திரஜித் ஆகியோர் உரையாற்றினர்.


மதுரையில் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலாளர் பாரதி ஏஐடியுசி தேசியக்குழு உறுப்பினர் நந்தா சிங் உரையாற்றினர். நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் த.அறம் உரையாற்றினார்.


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ஏஐடியுசி மாவட்டத் தலைவர் இரவி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தி.ராமசாமி முன்னாள் எம்.எல்.ஏ, பி.லிங்கம் முன்னாள் எம்.பி. உள்ளிட்டோர் உரையாற்றினர். திருவள்ளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநிலத் தலைவர் எஸ்.காசி விஸ்வநாதன் உரையாற்றினார்.


செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மாவட்ட உள்ளாட்சித் தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நா.பெரியசாமி முன்னாள் எம்.எல்,ஏ., தென்சென்னையில் ஏஐடியுசி தேசிய செயலாளர் வஹிதா நிஜாம், எஸ். ஏழுமலை, எஸ்.கே.சிவா, விழுப்புரத்தில் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி ஆகியோரும் சிறப்புரையாற்றினார்.


சிவகங்கையில் மாவட்டத் தலைவர் காளை லிங்கம் தலைமையிலும், தேனியில் ராஜ்குமார் தலைமையிலும், சிவகாசியில் கூடலிங்கம் தலைமையிலும், தென்காசி மாவட்டம் சங்கரங்கோவிலில் மாவட்டத் தலைவர் டி.சுப்பையா தலைமையிலும், மயிலாடுதுறையில் க.மாரிமுத்து எம்.எல்,ஏ, அ.சீனிவாசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும் தொழில் நகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.