
தமிழ் செம்மொழி, கீழடி தொல்லியல் அகழ்வாராய்ச்சி மூலம் கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்து வடிவம் உடையது என நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாகப் பேச்சுமொழி, எழுத்து மொழிக்கு முந்தியதாக இருக்கும், எனவே தமிழ் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் நீண்ட நெடிய பாரம்பரியம் உடையது. உழைப்பிலிருந்து தோன்றியதுதான் மொழி.
அது ஒரு சமூகத்தின் வளர்ச்சியோடு தோன்றி, அது வளரும்போது வளர்ந்து, சமூகம் மறையும் போது மறைகிறது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றி நூறு ஆண்டுகள் ஆகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தோன்றுவதற்கு முன்பே புரட்சி, பொதுவுடமை, வார்த்தைகளைத் தமிழ் மொழிக்கு அளித்தவர் மகாகவி பாரதி.
ரஷ்யப் புரட்சிகள் 1905 & 1917 குறித்து தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசிய விடுதலை எழுச்சி, உழைப்பாளர் எழுச்சி, ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி, பெண்கள் எழுச்சி, மொழி எழுச்சி எனத் தகித்துக் கொண்டிருந்தது தமிழகம். இந்த எழுச்சிகளின் இலக்கிய வடிவமாக பாரதி படைப்புகள் இருந்தன. வசன கவிதை, காவியங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் படைத்து தமிழ் மொழி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் பாரதியார்.
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் கட்சி தொடங்குவதற்கு முன்பே 1922 கயா காங்கிரஸ் மாநாட்டில் தன்னை உலக கம்யூனிஸ்டுகளின் பிரதிநிதி என அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாற்றியவர். கட்சியின் முதல் மாநாட்டின் தலைவர், ‘தொழிலாளி’ என்ற தமிழ் மாத இதழைத் தொடங்கி சர்வதேசத் தொழிலாளர்களின் எழுச்சியை தமிழகத்தில் பரப்பியவர்.
இந்தியாவில் முதல் மாநகராட்சியாக விளங்கிய சென்னை மாநகர் மன்றத்தில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. 1925-ஆம் ஆண்டு சென்னை மாநகர மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்காரவேலர் தன்னுடைய கன்னிப் பேச்சைத் தமிழில் நிகழ்த்தி புரட்சி செய்தார். அதோடு மட்டுமில்லாமல் அனைத்து உறுப்பினர்களும் ஆங்கிலத்தில் ஆண்டவன் பெயரால் உறுதிமொழி எடுத்த போது சிங்காரவேலர் மனச்சாட்சியின் அடிப்படையில் தமிழில் உறுதிமொழி எடுத்தார்.
தொடக்கப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு மதிய உணவும் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகையும் வழங்க வழி வகுத்தார் சிங்காரவேலர். ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’, ‘ரிவோல்ட்’, ‘புரட்சி’ உள்ளிட்ட பல இதழ்களில் பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூக அறிவியல், மார்க்சியம் குறித்த பல கட்டுரைகளை எழுதினார். 1935-ல் அறிவியலுக்கு என்றே ‘புது உலகம்’ என்ற இதழைத் தொடங்கி தமிழ் மக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இலக்கியப் பேராசான் தோழர் ஜீவானந்தம் அவர்கள் அரசியலையும் இலக்கியத்தையும் இணைத்துக் களமாடியவர். ‘ஜனசக்தி’, ‘தாமரை’, ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’ போன்ற பத்திரிகைகளில் இலக்கிய, ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். 1932-ல் ‘பெண்ணுரிமை கீதங்கள்’ என்ற படைப்புதான் ஜீவா அவர்களின் முதல் படைப்பு. 1934-ல் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற பகத்சிங் அவர்களின் நூலை மொழி பெயர்த்தார். அரசு இந்த நூலைத் தடை செய்து பறிமுதல் செய்து சிறையில் அடைத்தது.
1937-இல் ஜனசக்தி ஆரம்பிக்கப்பட்டது. அதில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களையும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களையும் பல பாடல்களை எழுத வைத்தார். தொழிலாளர்களின் அவலத்தைப் பல உணர்ச்சிமிக்கப் பாடல்களின் வழியாக தமிழகமெங்கும் பட்டிதொட்டி எங்கும் எடுத்துரைத்தார். பாடகர்கள் கோவை ராமதாஸ் மற்றும் கே.பி ஜானகியும் இதைச் சாத்தியமாக்கினர்.
‘இலக்கியச்சுவை’, ‘சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள்’, ‘கலை இலக்கியத்தின் புதிய பார்வை’, ‘மொழியைப் பற்றி’, ‘புதுமைப்பெண்’, ‘மதமும் மனித வாழ்வும்‘ போன்ற கட்டுரைத் தொகுப்புகளை வழங்கியுள்ளார். திராவிட நாடு கோரிக்கையில் புதுக்கோட்டையும், குமரி மாவட்டமும் இல்லாத போது அதையும் உள்ளடக்கி ‘ஐக்கிய தமிழகம்’ என்ற நூலை எழுதினார்.
1959-ல் தாமரை ஆரம்பிப்பதற்கும் 1961-ல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தோன்றுவதற்கும் மூல காரணமாகப் பணியாற்றியுள்ளார். தமிழகமெங்கும் கம்பராமாயணத்தையும், பாரதியையும் தன்னுடைய மேடைப் பேச்சுகள் மூலம் மக்களிடம் சேர்த்தார். பாரதியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கியதில் பெரும்பங்கு ஆற்றினார்.
தமிழகத்தின் ஞானரதம் என்று வர்ணிக்கப்படும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 1951 ஜூன் 1 அன்று தொடங்கப்பட்டது. தோழர் பி.சீனிவாசராவ், எம்.ஆர்.வெங்கட்ராமன், ஜீவா, பி.ராமுமூர்த்தி போன்ற தலைவர்களால் வளர்க்கப்பட்டது. தோழர் ராதாகிருஷ்ணமூர்த்தி, யு.எம்.உசேன் உள்ளிட்ட எண்ணற்ற தோழர்கள் இந்த ரதத்தைத் தமிழகமெங்கும் இடைவிடாது இழுத்துச் சென்றனர். தமிழகத்தின் அறிவுப் பெட்டகமாக, ரஷ்ய, உலக இலக்கியங்களை, மார்க்சியக் கருத்துக்களை அறிமுகப்படுத்தும் சாளரமாக கடந்த 75 ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
1952-ஆம் ஆண்டு தோழர் பி.இராமமூர்த்தி தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக தமிழில் உரையாற்றினார். மொழி வழி மாநிலம் வேண்டி தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் இயக்கத்தை நடத்தியது. வெளியில் மட்டும் இல்லாமல் சட்டமன்றத்திற்குள்ளும் பி.இராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், எம்.கல்யாணசுந்தரம், கே.டி.ராஜு, மணலி கந்தசாமி குரல் கொடுத்தனர்.
மொழி வழி மாநிலம் அமைந்த 1956 நவம்பர் 1-ஆம் தேதியை ‘தேசியப் பெருநாள்’ என அறிவித்து தலையங்கம் எழுதியது ஜனசக்தி. சென்னை மாகாணத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றக் கோரி மாநிலங்களவையில் 1961-ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்த திருத்த மசோதா மீது விரிவான விவாதத்தை துவக்கியவர் மாநிலங்களவை உறுப்பினர் பூபேஷ் குப்தா.
மொழியை வாக்கு வங்கி அரசியலாக அணுகாமல் விஞ்ஞான ரீதியில் கம்யூனிஸ்டுகள் அணுகினர். அதனால்தான் மொழி வழி மாநிலங்கள் அமைவதைத் தீவிரமாக ஆதரித்தனர், அதில் தமிழ் ஆட்சி மொழியாக, கல்விக்கூடங்கள், நீதிமன்றங்கள், ஆட்சிமன்றங்கள், நிர்வாகம் முதலியவற்றில் இயங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தச் சூழலில்தான் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டக் கோரி 1956 ஜூலை 27 முதல் அக்.13 வரை 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் தன்னுடைய உடலை கம்யூனிஸ்ட்களிடம் ஒப்படைக்குமாறு உயில் எழுதி வைத்தார். புதுச்சேரி மக்கள் தலைவர் சுப்பையா தான் நடத்தி வந்த ‘சுதந்திரம்‘ பத்திரிகையில் பாரதியின் வெளிவராத பல படைப்புகளை அச்சிட்டுள்ளார்.
வெ.நா.திருமூர்த்தி தனது ஜனரஞ்சகமான பாடல்கள் மூலம் விவசாயிகளையும், தொழிலாளிகளையும் எழுச்சியுரச் செய்தார். பாவலர் வரதராஜன், பாஸ்கர், ராஜா, அமர்சிங் மாநிலம் முழுவதும் கட்சியின் கொள்கைகளைப் பாடல்களாக வழங்கினர். மேலும் நாகர்கோவில் விசாலம், சிவகிரி பாண்டியன், சென்னை பின்னி மில் பூஞ்சோலை, ஓவியர் ராகி, கமலாச்சி போன்றவர்களும் பாடகர்களாக வலம் வந்தனர். வில்லிசை வேந்தர் சாத்தூர் பிச்சைக்குட்டி, சிவகிரி கார்க்கி வில்லிசை மூலம் சமூக மாற்றத்திற்கான முற்போக்குக் கருத்துக்களை எடுத்துச் சென்றனர்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆரம்பிப்பதற்கு முன்பாக கம்யூனிஸ்டுகள் பல்வேறு குழுக்களில் பணியாற்றி வந்தனர். வள்ளுவர், வள்ளலார், கம்பன் மற்றும் பல்வேறு கலை நாடகக் குழுக்களில் இணைந்து செயல்பட்டனர். புதுவை கலா மன்றம் மதுரையில் தோன்றியது. மதுரை மணவாளன், எம்.ஆர்.எஸ்.மணி, ஐ.வி.சுப்பையா, எம்.எம்.மாணிக்கம், சங்கரராஜூ, கே.பி.ஜானகி, சுப்புலட்சுமி, ஆனந்தராஜ், மாயாண்டி பாரதி, சங்கரய்யா, ராமமூர்த்தி போன்றவர்கள் இதில் செயல்பட்டனர்.
புதுவை கலா மன்றத்தின் மற்றொரு பகுதியாக மாணவர் கலா மன்றம் எம்.பி.சீனிவாசனால் ஆரம்பிக்கப்பட்டது. திண்டுக்கல் அமெச்சூர் இயல் இசை நாடக மன்றம் இடதுசாரி கருத்துக்களைத் தீவிரமாகப் பரப்பியது. தோழர் மணிவேல் அமரகவி பாரதி மன்றமும் இப்பணியைச் செய்தது. பொள்ளாச்சியில் 1952-ல் செஞ்சுடர் கலா மன்றம் ‘உழவன் குரல்’ ‘என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள்’, ‘முப்பது நாள்’ ‘சாந்தி பெற்ற தானம்‘ ‘விஷச்சோறு’ போன்ற நாடகங்களை இயற்றியது. ‘பெற்ற தானம்‘ சேலத்தில் நடந்த ஏ.ஐ.டியு.சி அகில இந்திய மாநாட்டில் அரங்கேற்றப்பட்டது.
புதுச்சேரியில் கவி.வே.நாரா, எள்ளுருண்டை நடேசன், வில்லியனூர் ஜெயராமன் வாத்தியார், தியாகி சர்க்கரை, ஜெயராமன், எம்.கே.ராமன், சுப்பராயலு போன்றோர் மிகத் தீவிர கலை இலக்கியச் செயல்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
திருவொற்றியூர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி முயற்சியில் பாரதி கலா மன்றம், தஞ்சை சிவராமன் நாடகம் மன்றம், உத்திரப்பட்டி சுந்தர்ராஜ் நாடகக் குழு, பொன்மலையில் வள்ளுவர் கலா மன்றம், கோவை வேலாண்டிப்பாளையம் கலா மன்றம், பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நாடக கலா மன்றம் எனப் பரவலாக அமைப்புகள் செயல்பட்டு வந்தன.
1934-ல் சோவியத் எழுத்தாளர்களின் அகில யூனியன் காங்கிரஸ் கூடியது. அதில் ‘சோசலிச எதார்த்தவாதம்‘ மக்களுக்காகப் பாடுபடும் எழுத்தாளர் அனைவருக்கும் உரியது எனப் பிரகடனப்படுத்தியது. அதன் அடிப்படையில் தமிழகத்திலும் ஏழை, எளிய பாட்டாளி மக்களை கதாநாயகர்களாகக் கொண்ட இலக்கியப் படைப்புகள் தோன்றத் தொடங்கின. கவிஞர்கள் குயிலன், தமிழ் ஒளி இருவரும் கம்யூனிஸ்ட் கவிஞர்கள் என அழைக்கப்பட்டனர்.
இவர்கள் முயற்சியால் ‘முன்னணி’ இதழ் வெளிவந்தது. கவிஞர் தமிழ் ஒளி காவியங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், சிறார் பாடல்கள், சிறார் கதைகள், நாடகங்கள் எனத் தன்னுடைய பங்களிப்பைத் தந்தார்.
தொ.மு.சி.ரகுநாதன் தன்னுடைய 24 வயதில் ‘இலக்கிய விமர்சனம்‘ என்ற கட்டுரை நூலை எழுதினார். ‘பஞ்சும் பசியும்’ நாவல், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் ஆய்வு நூல்களை வழங்கினார் தொமுசி. கம்யூனிஸ்ட் உறுப்பினரான கு.அழகிரிசாமி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். அழகிரிசாமி நாவல்கள், நாடகங்கள், இலக்கிய விமர்சனம், காவடிச்சிந்து ஆய்வு எனப் பல்வேறு பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
1950-களிலேயே கம்யூனிஸ்டுகளும் சினிமாவில் தடம் பதித்தனர். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் 1955-ல் வெளிவரத் தொடங்கின. அடுத்த நான்காண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்த மக்கள் கவிஞர் இந்தக் குறுகிய காலத்தில் திரைப்படப் பாடல்களின் தன்மையையே மாற்றியமைத்தார்.
1951-ல் விஜயபாஸ்கரன் நடத்தி வந்த ‘விடிவெள்ளி’, ரகுநாதன் 1954-ல் தொடங்கிய ‘சாந்தி’, 1955-ல் விஜயபாஸ்கரன் தொடங்கிய ‘சரஸ்வதி’, இஸ்மத் பாட்சா நடத்திய ‘சமரன்’ இதழ் எனப் பல்வேறு இடதுசாரி கருத்துடைய இதழ்கள் வெளிவந்தன. இதன் மணிமகுடமாக 1959-ல் ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு ‘தாமரை’ தொடங்கப்பட்டது. இடதுசாரி முற்போக்குக் கருத்துக்களைத் தங்களுடைய படைப்புகளில் வெளிப்படுத்திய எழுத்தாளர்கள் அனைவரையும் ஒரு குடைக்குள் கொண்டு வந்தது தாமரை. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 1961-ல் உதயமாகியது.
தோழர் தா.பாண்டியன் முதல் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இது அந்த நேரத்தில் தமிழகத்தில் பரவிய நச்சு இலக்கியங்களுக்கு மாற்றாக முற்போக்கு இலக்கியங்களை, இலக்கியவாதிகளை ஒருங்கிணைத்தது. எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், விந்தன், ஆர்.கே.கண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், கு.சின்னப்பாரதி, டி.செல்வராஜ், கவிஞர் சிற்பி, புவியரசு, தி.க.சி, வல்லிக்கண்ணன், ராஜம் கிருஷ்ணன், பூமணி, சு.சமுத்திரம், பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி, பிரபஞ்சன், பா.ஜெயப்பிரகாசம், சோலைச் சுந்தரபெருமாள் என ஒரு பெரும் பாரம்பரியத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் விஞ்ஞானப் பூர்வமான ஆய்வு முறையைக் கொண்டு வந்தது இடதுசாரி சிந்தனையாளர்கள்தான். நா.வானமாமலை 1967-ஆம் ஆண்டு நெல்லை ஆய்வுக்குழுவைத் தொடங்கினார். 1969-ல் ஆராய்ச்சி காலாண்டு இதழ் துவங்கப்பட்டது. மார்க்சிய ஆய்வு முறையைத் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தி ஒரு நீண்ட பரம்பரையை உருவாக்கினார். தோத்தாரி, வெ.கிருஷ்ணமூர்த்தி, மே.து.ராசுகுமார், தி.சு.நடராஜன், முப்பால் மணி, ஆ.சிவசுப்பிரமணியன், ந.ராமச்சந்திரன், முத்து மோகன், பா.ஆனந்தகுமார் போன்றோர்களை ஆய்வாளர்களாகப் பரிணமித்தனர்.
ஜார்ஜ் தாம்சனின் மாணவர்களான இலங்கை பேராசிரியர்கள் கைலாசபதி, கார்த்திகேச சிவத்தம்பி ஆய்வு முறையில் புது தடம் பதித்தனர். மேலும் மக்களிடம் விளங்கி வந்த நாட்டார் கதைகள், கதைப் பாடல்கள், கலை இலக்கிய வடிவங்களை, சொலவடைகள் அனைத்தையும் சேகரித்து நாட்டார் வழக்காற்றியல் என்ற துறையைத் தமிழகத்தில் ஆரம்பிக்க நா.வானமாமலை அடிகோலினார்.
கம்யூனிஸ்டு கட்சி பிளவிற்குப் பின் 1969ல் கே.முத்தையாவை ஆசிரியராகக் கொண்டு ‘செம்மலர்’ ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் அருணன், கந்தர்வன், செந்தில்நாதன், தமிழ்ச்செல்வன், எஸ்.ஏ.பெருமாள், வை.பெருமாள்சாமி, மேலாண்மை பொன்னுச்சாமி என முற்போக்கு எழுத்தாளர்கள் உருவாகினர். செம்மலரில் எழுதிய எழுத்தாளர்கள் 1974ல் சந்தித்து ஒரு புதிய இலக்கிய அமைப்பு குறித்து விவாதித்தனர். இதன் விளைவாக 1975ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
உழைக்கும் மக்கள் அறக்கட்டளை சார்பாக பாரதி புத்தகாலயம் 2002-ல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் பல்வேறு முற்போக்கு ஜனநாயகக் கருத்துக்கள் அடங்கிய படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இடதுசாரி கலை இலக்கிய அமைப்புகளின் கொடைதான் பட்டிமன்றம். இதன் மூலம் மக்களைப் பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் மக்களின் முன் விவாதமாக்கப்பட்டது. ‘மக்கள் கலை விழா’, மற்றும் ‘கலை இரவு’ என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகளை மேடை ஏற்றியதும் இடதுசாரி கலை இலக்கிய அமைப்புகள்தான். இந்த அமைப்புகள் கவியரங்கம் என்ற பெயரில் தனிநபரைப் புகழ்ந்து பாடும் போக்கை மாற்றி சமூகப் பிரச்சினைகளைக் கவியரங்கின் பாடு பொருளாக மாற்றின. இன்றைய தினம் எந்தக் கலை இலக்கிய வடிவத்தை எடுத்தாலும் அதில் இடதுசாரியின் பங்கு கணிசமாக இருக்கும்.
சமூக மாற்றத்திற்கு மூன்று தளங்களில் மாற்றங்கள் ஏற்படவேண்டும். சித்தாந்தப் போராட்டத்தின் ஒரு அங்கமான கலை இலக்கியத் தளங்களில் கம்யூனிஸ்டுகள் காத்திரமான பணிகளைச் செய்துள்ளனர். இதனோடு பொருளாதார, அரசியல் போராட்டங்களினால் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளனர்.
இந்த வகையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு கம்யூனிஸ்ட்கள் இந்த மூன்று தளங்களிலும் தங்களது இடைவிடாத செயல்பாட்டின் காரணமாக தொடர்ந்து தமிழ் மொழியை வளர்த்து வருகின்றனர்.