கட்டுரைகள்

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான உச்ச நீதிமன்ற அறிவுரைகள்

மே.து.ரா.

இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலச் சட்டப்பேரவைகள் நிறைவேற்றும் சட்ட முன்வடிவுகள் குறித்து முடிவெடுக்க ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடுவினை வலியுறுத்தித் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 08.04.2025இல் தீர்ப்பு வழங்கியிருந்தது.

நீதியர்கள் சே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டன என்றுதான் கூறவேண்டும்.

வரலாற்றுத் தீர்ப்பு

1. அமைச்சரவையின் அறிவுரையுடன் பெறுகின்ற சட்ட முன்வடிவுகளுக்கும், சட்டப்பேரவையின் மீளாய்வுக்குத் திருப்பியதை அடுத்து மீண்டும் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கும் ஒரு திங்களுக்குள் ஒப்புதல் வழங்கவேண்டும்

2. சட்டப்பேரவையின் மீளாய்வுக்குத் திருப்புவதாக இருந்தாலும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவதாக இருந்தாலும் மூன்று திங்கள்களுக்குள் முடிவெடுக்கவேண்டும்

3. நீண்ட காலமாகக் கிடப்பில் போட்டிருந்த 12 சட்ட முன்வடிவுகளுக்கு அரசியல் சட்டம் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கியிருக்கும் சிறப்பு உரிமையைப் பயன்படுத்தி ஒப்புதல் தந்தது.

4. சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் தருதல், சட்டப்பேரவையின் மீளாய்வுக்குத் திருப்புதல், குடியரசுத் தலைவரது ஒப்புதலுக்காக அனுப்புதல் ஆகிய மூன்று வழிமுறைகள் மட்டுமே அடிப்படையாக அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200இல் கூறப்பட்டுள்ளன; நான்காவதாக, சட்ட முன்வடிவினைக் காலவரையறையின்றிக் கிடப்பில் போட்டு நிறுத்திவைக்கும் உரிமை ஆளுநருக்கு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

அரிய தீர்ப்பைத் திருத்த முயலும் பா.ச.க.

இவற்றை எதிர்த்து மறு ஆய்வு, சீராய்வு, மேல்முறையீடு போன்ற வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்காமல், குடியரசுத் தலைவர் வழியாகப் பிரிவு 143 அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையினைப் பெறும் வகையில் 14 வினாக்கள் எழுப்பப்பட்டிருந்தன.

மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்ட முன்வடிவுகளைக் காலவரையறை இன்றிக் கிடப்பில் போட்டுச் சட்டமாகாமல் தடுக்கும் உரிமை ஆளுநருக்கு உள்ளது என்பதையும், ஒப்புதல் தரக் காலக்கெடு எதுவும் இருக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தி பா.ச.க.வின் ஒன்றிய அரசும் பா.ச.க. ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தை நாடியதுதான் 14 வினாக்களுக்கான நோக்கமாக இருந்தது.

இந்த வினாக்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் அய்ந்து நீதியர்கள் கொண்ட அமர்வு 20.11.2025 அன்று 111 பக்கங்களில் விரிவான விளக்கங்களை அறிவுரையாக வழங்கியிருக்கிறது.

நீண்ட விளக்கங்களுடனும் முன்னர் வழங்கப்பட்டிருந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை எடுத்துக்காட்டியும் அந்த அறிவுரைகள் உள்ளன. அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களை முழுதும் உள்வாங்கிக்கொள்ளாமல் பல முரண்பாடுகளுடன் அவை வழங்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை நிலை.

நெடிய விளக்கங்கள் வேண்டுமென்றாலும், சில அடிப்படைகளை மட்டும் இங்கு நாம் காணலாம்.

1. மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்ட முன்வடிவுகள் குறித்து முடிவெடுக்க மூன்று வழிமுறைகள் மட்டுமே இருக்கின்றன. நான்காவதாகக் கிடப்பில் போட்டுத் தடுத்து நிறுத்தும் உரிமை இல்லை. அப்படிச் செய்வது கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும்.

2. அரசமைப்புச் சட்டப் பிரிவு 200 இல் கூறப்பட்டுள்ள கடமைகளைச் செய்ய மாநில அமைச்சரவையின் அறிவுரைகளை ஆளுநர் ஏற்க வேண்டியதில்லை. ஆளுநர் தனிப்பட்ட முறையில் தன்விருப்பப்படி செயல்படும் உரிமை கொண்டிருக்கிறார்.

3. குடியரசுத் தலைவர், ஆளுநர் போன்ற மதிப்புமிக்க ஆட்சியாளர்களுக்குக் காலக் கெடுவினை வரையறுக்கும் உரிமை உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை.

4. அரசமைப்புச் சட்டம் 142 வழங்கியுள்ள தனி உரிமைகளைப் பயன்படுத்தி சட்ட முன்வடிவுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்க இயலாது. அப்படிச் செய்வது, ஆட்சியாளருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொள்வது போன்றதாகும்.

5. சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் கிடப்பில் போட்டிருந்தால் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். அப்போது உச்ச நீதிமன்றம் கால கெடுவினைக் குறிப்பிடாமல், ‘எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில்’ ஒப்புதல் தருமாறு அறிவுரை மட்டுமே வழங்க முடியும்.

இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளையும் முறைமைகளையும் நோக்கங்களையும் உணர்வுகளையும் உச்ச நீதிமன்றம் அடிப்படையிலேயே புரிந்துகொள்ளவில்லை எனத் தோன்றுகிறது.

அமைச்சரவைக்கு அடங்கவேண்டிய ஆளுநர்

மாநில ஆளுநர்கள் தங்களது அனைத்துச் செயல்பாடுகளிலும் அமைச்சரவையின் உதவியையும் அறிவுரையையும் ஏற்றுத்தான் செயல்பட முடியும் என்பதை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 163 தெளிவுபடுத்துகிறது.

அரசமைப்புச் சட்டம் குறிப்பிட்டுக் கூறியிருக்கும் செயல்பாடுகளில் மட்டுமே ஆளுநர்களுக்குத் தனியுரிமை உள்ளது. அரசமைப்புச் சட்டம் குறிப்பிட்டுக் கூறாத எத்தகைய செயல்பாடுகளிலும் ஆளுநருக்குத் தனியுரிமை இல்லவே இல்லை என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சட்ட முன்வடிவுகளுக்கான ஒப்புதல் குறித்து அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200இல் கூறியுள்ள வழிமுறைகளில் செயல்படத் தனியுரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது அடிப்படையிலேயே பொருந்தாததாகும்.

ஆனாலும், ‘பொதிந்திருக்கும் உள்பொருள்’ (implication) என்ற புதிய கண்டுபிடிப்பை உச்சநீதிமன்றம் எடுத்துக்கொண்டுள்ளது. அதாவது, ஆளுநருக்குத் தனியுரிமை இந்த இடத்தில் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு புதிய விளக்கத்தை உச்ச நீதிமன்ற நீதியர்கள் தருகின்றனர்.

இந்த இடத்தில் மட்டுமல்லாமல், வேறு சில இடங்களிலும் அரசமைப்புச் சட்டம் குறிப்பாகக் கூறாத இடங்கள் பலவற்றிலும், ஆளுநருக்கு உரிமை உள்ளது என்று நீதியர்களே கற்பித்துக் கொள்கின்றனர்.

மீளாய்வு என்பது வேண்டாத நடைமுறை

மாநிலச் சட்ட முன்வடிவு குறித்து ஆளுநர்கள் மீளாய்வு செய்யத் திருப்பும் நடைமுறை இந்திய ஒன்றிய நிலைமைகளுக்கு எவ்வகையிலும் பொருந்தாததாகும்.

அமெரிக்கா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரும் நாடாளுமன்றமும் (காங்கிரசு) தனித்தனியாக இருக்கும்போது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலின்றி அல்லது அவரது கருத்துக்கு மாறாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியும். அதனால், அங்குக் குடியரசுத் தலைவர் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆளுநர்களுக்கு அத்தகைய உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், அங்கு ஆட்சி மேலாண்மை என்பது வேறு, சட்டமியற்றும் அமைப்பு வேறு.

ஆனால், இந்திய ஒன்றியத்தில் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையும் செல்வாக்கும் அவற்றுக்குப் பொறுப்பும் கொண்டிருக்கின்ற அமைச்சரவைகளே இருக்கின்றன.

இதனால், பெரும்பான்மை வலிமை கொண்ட அமைச்சரவையின் எண்ணங்களுக்கு மாறாக நாடாளுமன்றமும் மாநிலச் சட்டப்பேரவையும் சட்டம் இயற்றிவிட வாய்ப்புகள் இல்லை.

அமைச்சரவையின் முன்னெடுப்புடனும் முன்மொழிவுடனும் நிறைவேற்றும் சட்ட முன்வடிவினை மீளாய்வுக்குத் திருப்ப அமைச்சரவை அறிவுறுத்தும் சூழ்நிலை இங்கு எழவில்லை.

எனவே, மீளாய்வுக்குத் திருப்புவது என்பது இங்கு வேண்டாத ஒரு வழிமுறை என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அமைச்சரவைக்கு அடங்கவேண்டிய ஆளுநர்

சட்ட முன்வடிவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது தொடர்பாக உள்ள அரசமைப்புச் சட்டப் பிரிவு 200இல் உள்ள ‘ஆளுநரின் கருத்தில்’ என்ற சொற்களை எடுத்துக்கொண்டு, ஆளுநருக்குத் தனியுரிமை இதில் குறிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்தை முழுமையாகப் படிக்காதவர் போல உச்ச நீதிமன்ற நீதியர்கள் முடிவு செய்திருப்பது பெரும் வியப்பையே ஏற்படுத்துகிறது.

ஆளுநர் விரும்பும் வரை அமைச்சரவை பொறுப்பில் நீடிக்கலாம் என்று பிரிவு 164 கூறுகிறது. குடியரசுத் தலைவர் விரும்பும் வரை ஆளுநர் பொறுப்பில் நீடிக்கலாம் என்று பிரிவு 156 சொல்கிறது. இதுபோன்ற சொல்லமைப்புகள் ஆங்காங்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பெரிதும் விரவி வருவதைக் காணலாம்.

இருந்தாலும், குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் தங்களது அமைச்சரவையின் அறிவுரைப்படி மட்டுமே செயல்படவேண்டும் என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இந்த நோக்கம் தெளிவான சொற்களில் குறிக்கப்பட்டிருப்பதையும் மறந்துவிடக்கூடாது.

குடியரசுத் தலைவரை மதிக்காத உச்ச நீதிமன்றம்

குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் போன்ற மதிப்புமிக்க பொறுப்பில் இருப்போருக்குக் கால வரையறை செய்வது அரசமைப்புச் சட்டத்தின் உணர்வுகளுக்கு மாறானது என்று இப்போது உச்சநீதிமன்றம் பாடம் எடுக்கிறது.

உண்மையில், பிரிவு 200இல் ‘எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில்’ என்று உள்ளது. இதுவே ஆளுநருக்குத் தரப்பட்டுள்ள தெளிவான வரையறையாகும். ‘கூடிய விரைவில்’ என்பதை ஆளுநர்கள் ஆண்டுக் கணக்கில் என்று எடுத்துக்கொள்கின்றனர்.

இதனால், ‘கூடிய விரைவில்’ என்னும் சொற்களுக்கு விளக்கம் தரும் பணியைத்தான் தமிழ்நாடு வழக்கில் உச்ச நீதிமன்றம் மேற்கொண்டது.

விளக்கங்கள் தருவதும் பொருத்தம் காண்பதும் நடைமுறைப்படுத்துவதும் உச்ச நீதிமன்றத்தின் கடமையாக இருப்பதால்தான், தமிழ்நாடு வழக்கில் ‘கூடிய விரைவில்’ என்பதற்கான விளக்கமாகக் கால வரையறை தரப்பட்டுள்ளது என்பதை உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தும் அய்வர் அமர்வு புரிந்துகொள்ளவில்லை என்பது வருந்துவதற்குரியது.

காலம் தாழ்த்தும் தீர்வு

இந்த நிலைமைக்குத் தீர்வாக, சட்ட முன்வடிவுகளைத் தகுந்த காரணிகளின்றி ஒப்புதல் தராமல் ஆளுநர்கள் இழுத்தடித்தால், உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்று அறிவுரை கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு சட்ட முன்வடிவுக்கும் நாடுவது என்பது மேலும் காலம் தாழ்த்தும் ஒரு நிலையை உருவாக்கிவிடும் என்பதை உச்சநீதிமன்றம் ஏன் புரிந்துகொள்ளவில்லை என்று தெரியவில்லை.

உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதியர் பணியமர்வில் அரசமைப்புச் சட்டம் கூறாத ‘தேர்வுக் குழு’ என்று ஒன்றினை உருவாக்கிக்கொண்டு, ஒன்றிய அமைச்சரவையும் குடியரசுத் தலைவரும் தேர்வுக் குழுவின் அறிவுரையைக் கேட்டாகவேண்டும் என வற்புறுத்தும் உச்ச நீதிமன்றம், தற்போது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களது மதிப்பைக் காக்க முயல்வது வேடிக்கையாகவே இருக்கிறது.

இதுபோன்று, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களின் வேறு பல உரிமைகளை உச்ச நீதிமன்றம் பறித்துக்கொண்ட எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த அறிவுரைகள் வெறும் கருத்துக்கள் மட்டுமே. இவை தீர்ப்புகள் அல்ல. எந்த நீதிமன்றத்தையும் கட்டுப்படுத்துவனவல்ல என்பதே கிடைக்கும் ஆறுதலாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button