
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கி ஆளுநர்களின் செயல்பாடுகளை வரையறை செய்த உச்ச நீதிமன்றம், தனி மனித உரிமைகளைத் தடுக்கின்ற மற்றொரு தீர்ப்பையும் அடுத்து வழங்கியிருப்பது வியப்புதான்.
தமிழ்நாடு அரசின் வழக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைகளின் மேன்மையினை உறுதிப்படுத்தி, ஆளுநர்களின் அத்துமீறல்களை அடக்கி வைத்த உச்ச நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் நிறைவிலும் மகிழ்விலும் திளைத்திருக்கும்போதே மற்றொரு தீர்ப்பு எதிர்மறையாகக் கிடைப்பது எதிர்பாராததுதான்.
தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்குப் பிணை வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் முன்னெடுத்த வினாக்கள் முழுமையாக மக்களாட்சி நடைமுறைகளுக்கு மாறானவை.
தவறு செய்தோர் யாராக இருப்பினும், அது ஊழல் குற்றச்சாட்டாக இருந்தாலும் அல்லது வேறு வகைப்பட்ட குற்றச்செயலாக இருந்தாலும் தொடர்புடையோர் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஒருவருடைய தவறுகளையும் முறைகேடுகளையும் மறைக்கவோ அல்லது காப்பாற்றவோ எடுக்கப்படும் முயற்சிகள் என்று எதையும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
அமைச்சர் பொறுப்பில் தொடர்வதையும் பிணை தருவதையும் இணைத்துப் பார்க்கின்ற உச்ச நீதிமன்றத்தின் பார்வையே அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளுக்குப் பொருந்தாததாகும்.
குறிப்பிட்ட அமைச்சர், போக்குவரத்து ஊழியர் தேர்வு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் 471 நாள்கள் சிறையில் கழித்திருக்கிறார். அவருடைய பிணை வேண்டுகோள் 58 முறை பல்வேறு மட்ட நீதிமன்றங்களில் மறுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அவருக்குப் பிணை தருவதற்கு அமைச்சர் பொறுப்பில் நீடித்திருப்பது தடையாக இருப்பது போன்ற தோற்றத்தினை உச்ச நீதிமன்ற நீதியர்கள் ஏற்படுத்தியிருந்தனர். இதனால், வேறு வழியின்றி அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய அவர் பிணையில் வெளியே வந்தார்.
முன்னர் தண்டிக்கப்பட்டிருந்த மற்றொரு தமிழக அமைச்சர் பொன்முடி வழக்கில், அவரது தண்டனை நிறுத்திவைக்கப்பட்டு, அவர் சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடரும் வாய்ப்புக் கிடைத்தது. இருப்பினும், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடர்ந்ததால் அவரை அமைச்சராக அமர்த்த முதலமைச்சர் பரிந்துரைத்தார். இதற்குத் தமிழ்நாடு ஆளுநர் மறுப்புத் தெரிவித்தார்.
அப்போது உச்ச நீதிமன்றம் தலையிட்டு, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடரும் ஒருவருக்கு அமைச்சர் பொறுப்பைத் தருவது முதலமைச்சரின் தனியுரிமையாகும் என்று கூறி, பொன்முடி மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தது.
இந்த முன்னெடுத்துக்காட்டினை வைத்துக்கொண்டு, பிணையில் வந்திருந்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பணி வழங்கப்பட்டது. அவரைப் பிணையில் விடுவித்தபோது, அமைச்சர் பொறுப்பு ஏற்கக்கூடாது என்ற தடை எதையும் உச்ச நீதிமன்ற எழுத்தளவில் குறிப்பிடவில்லை.
ஆனால், தற்போது உச்ச நீதிமன்றம் அமைச்சர் பொறுப்பேற்றதைத் தவறு எனக் கூற முற்படுகிறது. அமைச்சராக அவர் இல்லை என்பதால்தான் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது என்று புதிய விளக்கம் தருகிறது உச்ச நீதிமன்றம். அமைச்சர் பொறுப்பா அல்லது பிணையா என்ற வினாவினை எழுப்பி, இரண்டில் ஒன்று எனக் கட்டளையிட்டு, அமைச்சர் விலகவேண்டிய நிலையினை ஏற்படுத்தி இருக்கிறது.
குற்றச்சாட்டு ஒன்றில் தளைப்படுத்தப்பட்ட ஒருவருக்குப் பிணை வழங்கும்போது அடிப்படையாகச் சில கட்டுப்பாடுகளை வரையறுப்பது நீதிமன்றங்களின் வழக்கமாகவே உள்ளது.
- சான்றாவணங்களை அழிக்கக்கூடாது.
- நேரிடையாக வழக்கில் தொடர்பான சாட்சிகளை அச்சுறுத்தித் தடுக்கக்கூடாது.
- வழக்கிலிருந்து தப்பிக்கத் தலைமறைவாகிவிடக்கூடாது.
- காவல் நிலையத்தில் குறிப்பிட்ட நாள்கள் வரை கையொப்பமிடவேண்டும்.
- குறிப்பிட்ட நாள்கள் வரை வேறு ஊரொன்றில் தங்கிக் காவல் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும்.
என்பன போன்ற சில கட்டுப்பாடுகள் வழக்கமாக இருப்பவைதாம்.
இவற்றுக்கு மாறாக, குறிப்பிட்ட பொறுப்பை ஏற்கக்கூடாது என்று கட்டுப்படுத்துவதும் கட்டளையிடுவதும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் புறம்பானவையாகும்.
குற்றம் உறுதிப்படாமல் இருக்கும்போது, வழக்கு முடிய பல்லாண்டுகள் ஆகலாம் என்கின்ற சூழலில், சிறையில் 471 நாள்கள் அடைத்திருந்ததும் 58 முறை அவரது விடுதலையை மறுத்ததும் மனித உரிமை மீறல் மட்டுமல்லாது, தனி மனித வாழ்வை ஒடுக்குவதாகவே ஆகிறது. இதனை உச்ச நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை.
அடிப்படையில் இந்திய ஒன்றியத்தின் குடிமகனாக அவர் இருக்கிறார். அந்த முறையில் அவருக்கு வாக்குரிமையும் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் என்ற அளவில் பிற தகுதிகளைப் பெற்றுத் தேர்தலில் நின்று மக்கள் ஏற்பினால் சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
சில நடைமுறைச் சிக்கல்களால் சிறையில் இருப்போருக்கு வாக்குரிமை வழங்குவதைச் சட்டங்கள் ஏற்கவில்லை. ஆனால், பிணையில் வந்த ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுவதில்லை. இதைப் போன்றே குற்றம் உறுதிப்படாமல், பிணையில் இருக்கும் ஒருவர், தேர்தலில் நிற்பதும் இந்திய அரசமைப்பில் தடுக்கப்படவில்லை.
இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் பல முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், சட்ட வடிவம் பெறுகின்ற சூழல் இதுவரை ஏற்படவில்லை.
ஒருவரைப் பிணையில் விடுவிக்கும்போது, அவர் அடுத்து வரும் தேர்தலில் வாக்களிக்கக்கூடாது என்று எவரையும் கட்டுப்படுத்த இயலாது. இதைப் போன்றுதான், பிணையில் வெளிவந்த ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும்போது, அமைச்சர் போன்ற பொறுப்புக்களை ஏற்கக்கூடாது என்று கட்டுப்படுத்தவும் முடியாது. இவற்றுக்கு மாறாகச் செயல்படுவது, அரசமைப்புச் சட்டம் தந்திருக்கின்ற அடிப்படை உரிமைகளை மறுப்பதில் முடிந்துவிடும்.
சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு அமைச்சர் பொறுப்புத் தருவது முதலமைச்சரின் தனியுரிமையாகும். இதில் தலையிட உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் உரிமை கொடுக்கப்படவில்லை.
விடுதலை அடைந்த பின்னர், கடந்த பல நிகழ்வுகளில் உச்ச நீதிமன்றமே முதலமைச்சர்களின் இந்த அடிப்படை உரிமைகளை நிலைநாட்டியிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இவை யாவற்றுக்கும் மேலாக, சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்று கட்டுப்படுத்த உச்சநீதி மன்றத்துக்கு உரிமை கொடுத்தது யார்? என்றுதான் புரியவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தானாகவோ அல்லது முதலமைச்சரின் வேண்டுகோளின் அடிப்படையிலோ பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வது என்பது வேறு, விலகவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிடுவது வேறு. எழுதப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அல்லாமல், வாய்மொழியாக அமைச்சர் பொறுப்பா? சிறையா? என்று மிரட்டல் விடுத்து அடிபணியச் செய்வதற்கு எந்தச் சட்டத்தில் இடம் தரப்பட்டுள்ளது? என்பதை உச்ச நீதிமன்றம்தான் விளக்கவேண்டும்.
நீதிமன்ற வழக்காகக்கூட அல்லாமல், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட நிலையிலேயே தங்கள் அமைச்சுப் பொறுப்புகளை விட்டு விலகியோர் இந்திய ஒன்றியத்தின் அரசியலில் இதுவரை விலக்காக இருவரைத் தவிர வேறு பிறர் பெரிதும் இல்லை என்றே கூறலாம்.
ஆனால், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பின்னரும் பஞ்சாபில் பிரதாப் சிங் கைரோன், கேரளத்தில் சங்கர், ஆந்திரத்தில் என். சஞ்சீவ ரெட்டி, கர்னாடகத்தில் நிசலிங்கப்பா போன்றோர் முதலமைச்சர் பதவிகளில் தொடர்ந்தனர்.
அயோத்தி மசூதி இடிப்பு வழக்கில் தளைப்படுத்தப்பட்டுப் பிணையில் வெளிவந்த பின்னர் எல்.கே. அத்வானி ஒன்றிய உள்துறை அமைச்சராகவும் உமா பாரதி மத்தியப் பிரதேச முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுச் செயல்பட்டனர்.
குசராத் கலவரங்கள் தொடர்பான வழக்குகளில் பிணையில் வந்த இன்றைய உள்துறை அமைச்சர் அமித்சா மேல் இன்னும் சில வழக்குகள் முடியாமல் இருக்கின்றன.
பல்லாயிரம் கோடிகளில் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டுச் சிறை சென்ற செயலலிதா பிணையில் வெளிவந்தவுடன் இரண்டு முறை முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். தேர்தல் பரப்புரைகளிலும் கலந்துகொண்டார். அப்போது எவரும் அவரைத் தடுக்கவில்லை.
அண்மையில் தில்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கேச்ரிவால், துணை முதலமைச்சர் சிசோதியா போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டபோது பிணை வழங்க அமைச்சர் பொறுப்பினைத் துறக்கவேண்டும் என்பது வற்புறுத்தப்படவில்லை.
கேச்ரிவால் 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் பரப்புரைக்காக மட்டும் சில நாள்கள் விடுவிக்கப்பட்டார். ஆனால், உடல் நலம் கருதிப் பிணையில் வெளிவந்திருந்த அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாசு சவுதாலா தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டார்.
இதுவரை பிணையில் வந்தோர் எவருக்கும் இல்லாத ஒரு புதிய கட்டுப்பாட்டினையும் தடையினையும் உச்சநீதிமன்றம் வகுத்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லைதான்.
இன்றைய பாரதிய சனதாக் கட்சி அரசு, எதிர்க்கட்சி மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், இன்ன பிற கட்சித் தலைவர்கள் போன்றோரைப் பழிவாங்கவும் முடக்கவும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ஒன்றிய அரசின் வருமான வரிப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் என்பன போன்ற பல அமைப்புகளை வைத்துக்கொண்டு, மாநில அரசுகளின் ஒப்புதல் பெறாமலேயே நடவடிக்கைகள் மேற்கொள்வதும் மேல்மட்டத் தலைவர்களைச் சிறைப்படுத்துவதும் அன்றாட நடைமுறைகளாகிவிட்டன.
இவர்களது செயல்பாடுகளில் 95% வழக்குகள் வெற்றி பெறுவதில்லை அல்லது நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதில்லை. அச்சுறுத்தி அடக்கி வைக்கவும் முன்னெடுத்து முடக்கி வைக்கவும் கருவிகளாக அவை பயன்படுத்தப்படுகின்றன. மராட்டியத்தின் துணை முதல்வர் அசித் பவர் போன்று ஒன்றிய அரசில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்படுகின்றன. பா.ச.க. கூட்டணிக் கட்சியினரின் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதே இல்லை. 100% வழக்குகள் வேண்டாத கட்சிகள் மேல்தான் தொடுக்கப்பட்டு வருகின்றன.
இவற்றுக்கெல்லாம் உறுதுணையாக உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் செயல்படுகின்றனவா? என்ற அய்யம் மக்களிடம் தோன்றி வருவதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இந்த நிலையில், குற்றவாளிகளுக்குத்தான் தண்டனை, குற்றம் சாட்டப்படுவோருக்கு அல்ல என்பதை உச்ச நீதிமன்றம்கூடப் புறக்கணித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
விடுதலை வாய்ப்பு உண்டு என்ற நிலையில் உள்ள வழக்குகளில், பிணை தரும்போது போடப்படுகின்ற கட்டுப்பாடுகள், நீண்ட காலத் தண்டனையாக மாறிவிடக்கூடாது.
தில்லி, சார்கண்டு ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பிற அமைச்சர்கள் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு என்ற பெயரில் சிறையில் தள்ளப்பட்டனர் என்பதை எவரும் மறந்துவிடவில்லை.
சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் அமைச்சராகலாம் என்பது அரசியலமைப்புச் சட்டம் வகுத்துத் தந்திருக்கின்ற உரிமையாகும். இதை உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளும் கட்டளைகளும் பறித்துவிடக்கூடாது.
செந்தில் பாலாஜி வழக்கில் உள்ள உண்மைகளை நீதிமன்றங்கள்தான் கண்டுபிடிக்க முடியும். ஆனால், சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள அவர் அமைச்சராகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடுப்பது முன்னெடுத்துக்காட்டாக மாறிவிடக் கூடாது என்பதே மக்கள் நலனில் பொறுப்புக் கொண்டோர் கவலையாகும்.
தங்களுக்கு எதிராக இருக்கின்ற அரசியல் தலைவர்கள் மேல் வழக்குகளைப் போட்டு நீண்ட நாள்கள் சிறையில் தள்ளுவதையும் பிணை தரும்போது பதவி வாய்ப்புகளைப் பறிப்பதையும் பா.ச.க. பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பளித்துவிடக்கூடாது. இவற்றுக்கு உச்ச நீதிமன்றமும் துணை போய்விடக்கூடாது.