
தேசப் பாதுகாப்பு, இறையாண்மை, வெளியுறவுக் கொள்கை தொடர்பான முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும், நாட்டின் மிக உயர்ந்த ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றத்தின் மூலம் மக்களுக்குப் பொறுப்புக்கூற கடமைப்பட்டவர் பிரதமர். இந்தப் பொறுப்புக்கூறலில் இருந்து அவர் ஒருபோதும் விலகிச் செல்ல முடியாது. எனவே நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாகக் கட்சியின் தேசியச் செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களும் ஜனநாயக சக்திகளும் உறுதியுடன் ஒன்றுபட்டு நிற்கின்றனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவிகளை இழந்த துக்கத்தில் நாடு ஆழ்ந்திருந்த போது, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் தேச நலன் சார்ந்த முக்கியமான கேள்விகளுக்கும் சிந்தூர் நடவடிக்கை குறித்தும் விளக்கம் அளிக்க அவர் தவறிவிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அணு ஆயுத அச்சுறுத்தலை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்றும், எந்தவொரு பயங்கரவாத சவாலையும் எதிர்கொள்ள நாடு தயாராக இருக்கிறது என்றும் உறுதியளித்ததைத் தவிர, பேசிய அனைத்தும் வார்த்தை ஜாலங்களே. அவரது உரை, பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நம்பகமான வழியைச் கோடிட்டுக் காட்டத் தவறிவிட்டது. அவரது உரையில் இடம்பெற்றுள்ள பிரகடனங்கள் தெளிவாக இல்லை. சூழ்நிலையின் அடிப்படையான சிக்கலை அடையாளம் காணவும், சர்வதேச நாடுகளின் பங்கேற்பு மற்றும் பொறுப்புக்கூறலைக் கட்டாயமாக்கவும் தவறிவிட்டது.
பின்னணியில் இருந்து செயல்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பது குறித்து பிரதமர் மோடி எதுவும் பேசாமல் மிகக் கவனமாகத் தவிர்த்துள்ளார். இது வெளிப்படைத்தன்மை, காஷ்மீர் பிரச்சனையானது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருதரப்புக்கு மட்டுமே தொடர்புடையது என்ற இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில், வெளிசக்திகள் அதிகாரப்பூர்வமற்ற வகையில் செல்வாக்கு செலுத்தினால், அவற்றின் தன்மை மற்றும் பங்கு குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை மட்டுமல்ல, உண்மை, வெளிப்படைத்தன்மை, நீதி ஆகியவை அவசியமாகும். அமைதியை ஏற்படுத்துவதில் அரசுக்கு அக்கறை இருக்குமேயானால், அதன் ராஜதந்திர நடவடிக்கைகள் தெளிவாக வெளிப்படுத்தப்படுவதுடன், உள்நாட்டுப் பொறுப்புக்கூறலுக்கான உறுதிப்பாட்டுடன் செயல்பட வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், எல்லை தாண்டிய பயங்கரவாத கட்டமைப்பு
களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கான பாகிஸ்தானின் எதிர்வினையில், இராணுவ வீரரும் பொதுமக்களும் பலியாகி உள்ளனர். இது குறித்து பிரதமரின் உரையில் எதுவும் குறிப்பிடாதது அதிர்ச்சியளிக்கிறது.
இதேபோன்று, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட விதமும் கவலையளிக்கிறது. அமைதியை விரும்பும் நாட்டு மக்கள் அனைவரும் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என வலியுறுத்திய போதும், போர் நிறுத்தத்தை இந்தியா அல்லது பாகிஸ்தான் தலைமை முதலில் அறிவிக்கவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதலில் அறிவித்து, அதற்கான பெருமையைப் பெற்றார். இருநாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்தும் அவர் அறிவித்துள்ளார்.
இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் கொள்கைத் திட்டத்தை தீர்மானிக்கும் தன்னாட்சி (Strategic Autonomy) ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. சிம்லா ஒப்பந்தமும், மூன்றாம் தரப்பின் தலையீடு இல்லாமல் இருதரப்பும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நம்முடைய நீண்டகால அணுகுமுறையும் பெரும் பின்னடைவுக்கு ஆளாகியிருக்கிறது.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதில் அமெரிக்காவின் பங்கு குறித்து பிரதமர் மோடி எதுவும் பேசாமல் மவுனமானது ஏன்? அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக கூறப்பட்டதில் பின்பற்றப்பட்ட விதிமுறைகள் என்ன? அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட வர்த்தக விரிவாக்கம் எவை? இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் அவை எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்? என்பது குறித்து தமது உரையில் பிரதமர் மோடி பேசத் தவறியிருப்பது ஏற்க முடியாததும் ஆழ்ந்த கவலைக்குரியதும் ஆகும்.
எனவே, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது. தேசப் பாதுகாப்பு, இறையாண்மை, வெளியுறவுக் கொள்கை தொடர்பான இப்பிரச்சனைகள் குறித்து, நமது நாட்டின் மிக உயர்ந்த ஜனநாயக அமைப்பான மக்களவையில் விவாதிக்கப்பட வேண்டும், தொலைக்காட்சிகளில் நிகழ்த்தும் ஒருவழிப் பேச்சுகள் மூலம் இதனை விவாதிக்க முடியாது. நாடாளுமன்றத்தின் மூலம் மக்களுக்குப் பொறுப்புக்கூற கடமைப்பட்டவர் பிரதமர். இந்த பொறுப்புக்கூறலில் இருந்து ஒருபோதும் அவர் விலகிச் செல்ல முடியாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.