இந்தியா

கொடிக்கம்பங்களை அகற்றுவதை நிறுத்துக!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு முழுவதும் அரசு நிலம், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுத்தளங்களில் அமைக்கப்பட்டிருந்த நிரந்தர அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு (SLP) தாக்கல் செய்திருந்தார்.

நவம்பர் 17ம் தேதியன்று இந்த மனு, நீதிபதி விக்ரம் நாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, நீதிமன்றம் “நோட்டீஸ் அனுப்பவும், கூடுதல் நடவடிக்கைகளை நிறுத்தவும்” (Issue notice and status quo) என்று உத்தரவிட்டது.

ஏற்கனவே, கொடிமரங்களை அகற்ற உத்தரவிட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், தீர்ப்பு எதுவும் வழங்க முடியாதெனக் கடந்த ஆகஸ்ட் 13 அன்று சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்தது. இதே விவகாரத்தில் மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விரிவான விசாரணை இல்லாமல் ‘in limine’ என உச்சநீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்திருந்ததே இதற்குக் காரணமாகும்.

இதனால், ஒரே நீதிபதியின் தீர்ப்பில் கூறப்பட்ட நிலையான கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவு நடைமுறைக்கு வந்தது.

எனவே, இந்த மேல்முறையீட்டை விசாரிக்க வேண்டுமென இரு நீதிபதிகள் அமர்வின் முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பின்வரும் வகையில் வாதங்களை முன்வைத்தது.

-உச்சநீதிமன்றத்தின் முந்தைய நிராகரிப்பு in limine என்பதால், இணைவுக் கோட்பாட்டுக்கு (merger doctrine) பொருந்தாது. இதன் அடிப்படையில், உயர்நீதிமன்றம் வழக்கின் தகுதி மற்றும் காரணங்களை மீண்டும் பரிசீலிக்க இயலும்.

-உயர்நீதிமன்றம் அரசியல் கட்சிகளை நேரடியாக விசாரணைக்கு அழைக்காமலும், ஆழமான பரிசீலனை இல்லாமலும் உத்தரவுகள் வழங்கியது.

-இத்தீர்ப்பு அரசியல் சாசனத்தின் 19(1)(a) பிரிவு (கருத்து வெளிப்பாட்டு உரிமை) மற்றும் 19(1)(c) பிரிவு (அமைப்புளை உருவாக்குவதற்கான உரிமை) ஆகிய அரசியல் உரிமைகளை மீறுகிறது.

-எந்தச் சட்டத்திலும் பொது இடங்களில் நிரந்தரக் கொடிக்கம்பங்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனக் குறிப்பிடப்படவில்லை என்பதை அனுமதிக்கவே கூடாது என்பதாக நீதிமன்றம் மிகைப்படுத்திப் பயன்படுத்தியுள்ளது.

முந்தைய ஒற்றை நீதிபதியின் உத்தரவு

-மாநில அரசியல் கட்சிகள், அமைப்புகள், சமுதாயக் குழுக்கள் ஆகியவை பொது இடங்களில் வைத்திருந்த நிரந்தரக் கொடிக்கம்பங்கள் அனைத்தையும் அகற்ற 12 வார கால அவகாசம் வழங்கியது.

-அவகாசத்திற்குள் அகற்றவில்லை என்றால், அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், செலவினத்தைப் பொறுப்பாளர்களிடமிருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டது.

-காவல்துறை அல்லது வருவாய் துறை அலுவலர்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் NOC வழங்க அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டது.

-இத்தகைய நிரந்தரக் கொடிக்கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறாகின்றன என்றும் பதிவு செய்யப்பட்டது.

அதே நேரத்தில்,

-தனியார் பட்டா நிலங்களில் அரசியல் பிரச்சாரம், தர்ணா, பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்காக தற்காலிகக் கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதிக்கலாம்.

-நிகழ்ச்சி முடிந்தவுடன் அவற்றை அகற்றியும், நிலத்தை முன்னைய நிலைக்கு மாற்றித் தந்துவிட வேண்டும்.

-தனியார் நிலங்களில் கொடிக்கம்பம் அமைக்க விதிகளை அரசு உருவாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

வழக்கின் விவரங்கள்

Case No: Diary No. 53681 / 2025
Case Title: Communist Party of India vs State of Tamil Nadu

இது தற்போது உச்சநீதிமன்றத்தில் தொடரும் ஒரு முக்கிய வழக்காகும்; அரசியல் கட்சிகளின் பொதுத் தளப் பயன்பாடு, கருத்து வெளிப்பாடு, சட்ட வரம்பு ஆகியவற்றில் இது நாட்டிலேயே ஒரு குறிப்பிட்ட முன்னுதாரணத்தை உருவாக்கக்கூடியதாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button