
போர்க்குணமிக்க தோழர்களே!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 29 உடன் நிறைவு பெற்றுள்ளது.
நிதிநிலை அறிக்கையினை நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு மிகவும் சிறப்பான முறையில் தயாரித்தது மட்டுமின்றி, அனைத்துப் பகுதி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்தது அனைவராலும் பொதுவாக வரவேற்கப்பட்டது.
வரவேற்கப்பட்டது மட்டுமின்றி, நிதியமைச்சர் அறிக்கையினை இலக்கிய நயத்தோடு படித்த முறையும் வரவேற்புக்கு உள்ளானது. இதனைப் போன்று வேளாண்மைக்கெனத் தனி அறிக்கை என்பதும் வரவேற்புக்குரியது, ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள பயிர் வகைகள் அதன் சாகுபடி பரப்பளவு, அவைகளை மேம்படுத்திட நிதி ஒதுக்கீடுகள் குறித்து வேளாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கையினை முன் வைத்தார்.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மானியக் கோரிக்கைகளும் அதன் மீது விவாதங்களும், அமைச்சர் பெருமக்களின் பதில்களும் எனத் தொடர்ந்தது.
இக்கூட்டத் தொடரில் பிரதான எதிர்க்கட்சியான அண்ணா தி.மு.க. தனக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளும் தேவையற்ற வெளிநடப்பை மேற்கொண்டதைப் பொதுவாக மக்கள் ரசிக்கவில்லை.
கூட்ட முடிவின் கடைசி ஒரு சில நாட்கள் எதிர்க்கட்சித் தலைவர் மிக ஆவேசமாகப் பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
குறிப்பாக பா.ஜ.கவுடன் கூட்டணி அமைந்துவிட்டதால் ஒன்றிய அரசின் பாதுகாப்பும், பாராட்டும் தனக்குக் கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கருதியிருக்கக் கூடும்.
எதிர்க்கட்சியின் பல்வேறு வினாக்களுக்கு அல்லது உரைக்கு, முதலமைச்சரும் மற்றும் ஏனைய அமைச்சர் பெருமக்களும் உரிய பதில்களை அளித்தனர்.
நமது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான தோழர்கள் டி.ராமச்சந்திரன், கே.மாரிமுத்து இருவரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி ஆக்கபூர்வமான கருத்துகளைத் தெரிவித்தது பாராட்டுக்குரியது.
ஏறத்தாழ முப்பது நாட்கள் நடைபெற்ற கூட்டத் தொடரில் முதலமைச்சர் 110வது விதியினைப் பயன்படுத்திப் பல்வேறு அறிவிப்புகளைச் செய்துள்ளார்.
புதிய சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இக்கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில்தான் ஏப்ரல் 8ஆம் நாள் உச்ச நீதிமன்றம் பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் குறித்து தீர்ப்பளித்தது, நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றது.
இத்தீர்ப்பானது, தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி எனக் குறிப்பிடுவது மிகையாகாது.
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியதன் மூலம், ஒப்புதலுக்கு வரும் மசோதாக்கள் மீது ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள முடியும் என்று வழிகாட்டியுள்ளது.
ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போடுவதை சட்டவிரோதம் என்றும் மூன்று மாத காலத்திற்குள் முடிவு காண வேண்டும் என்றும் கூறியது மட்டுமல்ல, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நாள் முதல் 10 மசோதாக்களும் செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு எனக் கூறாமல் வேறு என்னவென்று கூறுவது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தமிழ்நாடு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் நடத்தி வரும் போட்டி அரசு நடத்துவது, சட்டப்பேரவைகளை மதிக்காமல் தன்னிச்சையாக நடந்து கொள்வது, தங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாகத் தங்களுக்குத் தாங்களே முடி சூட்டிக்கொண்டு இறுமாப்புடன் செயல்படுவது போன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரவி அடங்குவதாகத் தெரியவில்லை. வழக்கம்போல்தான் ஒரு ஆர்.எஸ்.எஸ் இன் பிரச்சாரகர் என்பதனைத் தனது செயல்பாட்டின் மூலம் நிலைநாட்டி வருகின்றார். நாய் வாலை நிமிர்த்த இயலாது என மற்றவர்களைப் பற்றிச் சொல்லலாம்; ஆளுநரைச் சொல்லக் கூடாது.
இக்கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தது அனைவரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இம்மகிழ்ச்சிகரமான சூழலில்தான், கோயில் மனையில் குடியிருப்போர் சங்கம் சார்பில் பேரணி நடத்தி நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர். வாடகை முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது முக்கியக் கோரிக்கையாகும். பரிசீலித்து அரசு நல்ல முடிவை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கின்றோம்!
பணத் தேவை என்பது பலருக்குப் பலவிதங்களில் தேவைப்படுகின்றது. பலருக்கு ஆடம்பரச் செலவினங்களுக்குத் தேவைப்படுகின்றது. அவர்கள் கடன் பெறுவதும், திரும்பச் செலுத்த முடியாமல் நெருக்கடிக்கு ஆளாவதும் ஒருபுறம் என்றால், விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் தங்களின் மிக அத்தியாவசியத் தேவைகளுக்காக கடன் பெறுகின்றார்கள்.
கல்விக் கடன், திருமணக் கடன், தொழில் கடன், வீட்டுக் கடன், வீடுகள் புனரமைக்கும் கடன் என அத்தியாவசியப் பணிகளுக்குக் கடன் பெறுகின்றார்கள். அவ்வாறு பெறப்படும் கடன் தனியாரிடத்தில் அதிக வட்டிக்குப் பெறுகின்றார்கள்.
அவ்வாறு பெறப்பட்ட கடனுக்குரிய வட்டியை அவர்கள் மாதம்தோறும் செலுத்தாமல் இல்லை. வட்டி மற்றும் அசலையும் செலுத்தி வருகின்றார்கள். மாதக் கணக்கில், ஆண்டுக்கணக்கில் வாங்கிய கடனை விட அதிகத் தொகையைத் திருப்பிச் செலுத்தினாலும், முழுக் கடனையும் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் கடன் கொடுத்த கந்துவட்டிக்காரர்கள் எவ்வித இரக்கமும், மனிதாபிமானமும் இன்றிக் கடன் பெற்றவர்களை இம்சிப்பதும், தாக்குவதும், அவமரியாதையாகப் பேசவும், இதன் காரணமாகக் கடன் பெற்றவர்கள் குடும்பங்கள் அவமானப்பட்டுத் தற்கொலை வரைச் செல்லும் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான பல்வேறுவிதமான ஒன்பது சலுகைகள் முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளன. பழைய ஓய்வூதியப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் எனும் நியாயமான கோ£¤க்கை நிலுவையில் உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் உட்பட 18 மசோதாக்களை பேரவை நிறைவேற்றி உள்ளது.
வக்ஃபு போர்டு சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்கிற தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்த மண்ணின் ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக ‘காலனி’ என்ற சொல் மாற்றப்பட்டு இருப்பதால் இனி இந்தச் சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதல்வர் அறிவிப்பு, உள்ளும் புறமுமாக சமூகநீதியை நிலைநாட்டுகிற அரசின் முயற்சியை வெளிப்படுத்துகிறது.
பல்வேறு மசோதாக்களையும், அறிவிப்புகளையும் ஏற்று நிறைவேற்றிய தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டு நம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
தலைநகர் சென்னையில் பேரறிஞர் மார்க்ஸ்க்குச் சிலை வைக்க வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகளும், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளும் கோரி வந்தன. சிலை அமைப்புக் குழு தலைநகர் சென்னையில் மார்க்ஸுக்குச் சிலை வைக்க வேண்டுமென, முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுத்தது. நமது கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் அரசுக்கு கோரிக்கை வைத்தன.
இவைகளை எல்லாம் பரிசீலித்த முதலமைச்சர் தலைநகர் சென்னையில் மார்க்சுக்குச் சிலை வைக்கப்படும் என்று பேரவையில் அறிவித்தது பெரு மகிழ்ச்சியாக அமைந்தது.
உலகம் முழுமையும் உள்ள கரத்தாலும், கருத்தாலும் உழைக்கக்கூடிய எண்ணிலடங்கா உழைப்பாளி மக்களின் விடியலுக்கு வழிவகை செய்திட்ட, உலகமே மாமேதை எனப் போற்றிப் புகழும் மாபெரும் சமூக விஞ்ஞானி மார்க்ஸ்க்குச் சிலை அமைக்கப்படும் என்று பேரவையில் அறிவித்தது மட்டுமல்ல, சென்னை கன்னிமாரா நூலக வாயிலில் சிலை அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகம் நிராகரிக்க முடியாத மாபெரும் சக்தி வாய்ந்த சமூக விஞ்ஞானி! உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், இழக்கப் போவது உங்கள் கை விலங்கே, அடையப்போவதோ பொன்னுலகம்! என்ற மகத்தான உண்மையை உலகத்திற்கு உணர்த்திய மேதை, பொதுவுடமைச் சமுதாயமே அனைத்துக்கும் தீர்வு என்பதனை ஆணித்தரமாக மட்டுமல்ல, ஆதாரப்பூர்வமாக நிரூபித்துக் காட்டிய மேதை.
அப்படிப்பட்ட மாமேதைக்கு தலைநகர் சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்து அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் தொடர் முயற்சிகளை மேற்கொண்ட தோழர்களுக்கும் நன்றி – பாராட்டுக்கள்.
மீண்டும் சந்திப்போம் வணக்கம்