கட்டுரைகள்

காவல் தலைவர் தேர்வில் மாநில உரிமைகள் பறிப்பு

மே.து.ரா.

தமிழ்நாட்டின் காவல் துறைத் தலைவர் (காவல் பொது இயக்குநர் டி.ஜி.பி.) பணியிலிருந்த சங்கர் சிவால் ஆகத்து 31இல் ஓய்வு பெற்றார். புதிய காவல் தலைவரைப் பணியமர்த்துவதில் ஏற்பட்ட சுணக்கத்தினால், மூப்பில் பின்னிருக்கும் தலைமையகப் பணியிலிருக்கும் வெங்கட்ராமனுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது வழக்கமான நடைமுறைதான் என்றாலும், எதிர்க்கட்சிகள் மறுப்புக் குரல் எழுப்பத் தவறவில்லை.

மாநில உரிமைகளைப் பறித்த உச்ச நீதிமன்றம்

தற்போது அனைத்து மாநிலங்களிலும் காவல் துறைத் தலைவர்கள் பொறுப்புக்குப் பணியமர்த்தும் நடைமுறைகள், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடந்துவருகின்றன. 2006ஆம் ஆண்டு பிரகாசு சிங் எதிர் இந்திய ஒன்றியம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வழிமுறைகளை வழங்கியது. இதன் அடிப்படையில் ஒன்றிய அரசு 2009 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் சில நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறது.

1. ஒன்பது பெயர்கள் கொண்ட பட்டியலை மூன்று திங்கள்களுக்கு முன்னரே ஒன்றியப் பணியாளர் தேர்வாணையத்துக்கு மாநில அரசுகள் வழங்கவேண்டும்.

2. இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை பணியில் தொடரும் வாய்ப்புள்ள மூன்று பெயர்களை ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுத்துத் தரும்.

3. மாநிலங்கள் இந்த மூன்று பெயர்களில் உள்ள ஒருவரைத்தான் காவல் துறைத் தலைவராகப் பணியமர்த்தவேண்டும்.

4. இடைக்காலப் பொறுப்பில் வேறு எவரையும் பணியமர்த்தக்கூடாது.

5. பணியமர்த்தப்பட்டவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பணி ஓய்வு பெறும் நிலையிருந்தாலும், முழுமையாக இரண்டு ஆண்டுகள் அவர் நீடிக்கவேண்டும்; இதற்கு மேலும் இவருக்கு வேண்டுமெனில் பணி நீட்டிப்புத் தரலாம்.

6. பணி ஓய்வு பெறும் நாளில் ஒருவருக்குப் பணி தந்து, மேலும் இரண்டு ஆண்டுகள் பணியில் தொடரச் செய்யும் நிலை ஏற்புடையதல்ல.

7. இந்த நடைமுறைகளுக்கு மாறாக ஒன்றிய, மாநில அரசுகளின் விதிமுறைகள் இருந்தால், அவை நிறுத்தப்படவேண்டும்.

இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்டத்தில், சட்டம் ஒழுங்கு ஆகிய கடமை களை மேற்கொள்ளும் காவல் பணிகள் மாநிலப் பட்டியலில் உள்ளன. அரசமைப்புச் சட்டம் தந்த உரிமைகளைப் பயன்படுத்தி மாநிலங்கள் தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்பக் காவல் தலைவரைப் பணியமர்த்தும் உரிமையினை உச்ச நீதிமன்றம் மாநிலங்களிடமிருந்து பறித்துக்கொண்டது.

இங்கு, அரசமைப்புச் சட்டத்துக்கு மாறான தீர்வினை வழங்க உச்ச நீதிமன்றத்துக்கு உரிமையுள்ளதா என்னும் வினாவும் எழாமலில்லை.

ஒன்றியத் தேர்வாணையத்துக்குத் தகுதியில்லை.

குறிப்பாக ஒன்பது பெயர்கள் கொண்ட பட்டியலிலிருந்து, ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் மூன்று பெயர்களைத் தேர்ந்தெடுத்துத் தரும் தகுதி கொண்டதா என்பதை நோக்கவேண்டும்.

அரசுப் பணியாளர்களைத் தொடக்க நிலையில் தேர்வு செய்வது வேறு; உயர் தலைமைக்குப் பொருத்தமானவரைத் தேர்ந்தெடுப்பது வேறு.

ஒன்றிய மற்றும் மாநிலத் தேர்வாணையம் ஆகியன கல்வி, அடிப்படை அறிவு, ஊக்கம் ஆகிய தொடக்கநிலைத் தகுதிகளை மட்டுமே வைத்துப் பணியாளர்களைத் தேர்வு செய்கின்றன.
ஆனால், மேலாண்மை நடைமுறைகளைப் பயிலுதல், பட்டறிவு, நோக்கு முறை, நடந்துகொள்ளும் பண்பு, பணி ஈடுபாடு, புரிதல், இயல்புகள் என இன்னும் எண்ணற்ற நடைமுறைத் தகுதிகளை தங்களது பணிக் காலங்களில்தான் அலுவலர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.

இவற்றையெல்லாம் மதிப்பிட்டுத் தேர்வு செய்யும் அறிவு, ஆற்றல், தகுதி ஆகிய எதுவும் தேர்வாணையத்துக்கு இருக்க வாய்ப்பில்லை.

மாநில அரசின் நம்பிக்கை வேண்டும்

இரண்டு ஆண்டுகள் பணியில் நீடித்திருக்கவேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகத் தெரியவில்லை.

உயர் பணிக்கு அமர்த்தபட்டவர் மாநில அரசு எதிர்பார்க்கின்ற அளவில் செயல்பட இயலாதவராகத் தெரிந்தால், அவரை மாற்றும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறித்துவிடக்கூடாது.

மாநில அரசியல், பண்பாடு, மொழி, நடைமுறைகள், சிக்கல்களை எதிர்நோக்கும் திறன் ஆகியவற்றுடன், பக்குவம் உள்ளோரைப் பணியமர்த்தும் தகுதியும் உரிமையும் மாநில அரசுக்கு மட்டுமே இருக்கிறது.

உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதியர்கள் போன்று சட்டங்களின் வரையறைகளுக்குள் நின்று தீர்ப்பு வழங்குவோராகக் காவல் துறைத் தலைவர்கள் இருப்பதில்லை.

தேர்தல் ஆணையம், புலனாய்வுப் பொறுப்புகள் போன்று, குறிப்பிட்ட பணிகளை மட்டும் செய்வோராகவும் அவர்களது கடமைகள் வரையறுக்கப்படவில்லை.

காவலர்களின் பணிகளை மேற்பார்வையிடுதல், பணி மாறுதல், பணி நிலை உயர்வு ஆகிய மேலாண்மைப் பொறுப்புகளுக்கு அப்பால், காவல் துறைத் தலைவர்களுக்குப் பெரும் கடமைகள் உள்ளன.

சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு அவர்கள் மாநில அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியுள்ளது. உள்ளூர் அரசியல், போராட்டங்கள், கலவரங்கள், மோதல்கள், பூசல்கள் போன்ற பல்வேறு வினைகளை எதிர்கொள்ளும்போது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களையும் எண்ணங்களையும் அணுகுமுறைகளையும் உள்வாங்கிக் கொண்டாகவேண்டும்.

சில போராட்டங்களை விட்டுப் பிடிக்க லாம்; உடனடியாக அடக்க முற்படலாம். சாதி மோதல்கள் போன்றவற்றில் மக்களது உணர்வுகளைப் புரிந்திருக்கவேண்டும்.

தலைமை அலுவலர் என்ற முறையில் இவற்றை எதிர்கொள்ளும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை களுக்கேற்ப வழிகாட்டுதல்களைப் பெறவேண்டியிருக்கும்.

அரசியல் தலையீடு வேறு, அரசின் வழிகாட்டுதல் வேறு

காவல் துறைத் தலைவர் பக்குவப்பட்ட பணியாளராகச் செயல்பட வேண்டியவரேயன்றி, படை நடத்துவோர் அல்லர். பகைவரிடமிருந்து நாட்டைக் காக்கும் படைத் தலைவர்கள்கூட, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அரசியல் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் செயல்படுகின்றனர்.

காவல் பணி நிலைகளுக்கு அப்பால், மாநில அரசின் முடிவுகளை நிறைவேற்றுவோராகத்தான் இருக்க வேண்டும்; இருக்க முடியும்.

குற்றம் அல்லாத பிற வழக்குகளைப் பதிவு செய்வதும் வழக்குகளைத் திரும்பப் பெறுவதும் தளைப்படுத்துவதும் விடுதலை தருவதும் எனப் பல்வேறு நடவடிக்கைகள், அரசியல் முடிவுகளுக்கு இயைந்ததாகவே இருக்கமுடியும்.

சட்டம் ஒழுங்கினை நிறைவேற்றுவதிலும் காவல்துறைத் தலைவர் தனித்துச் செயல்பட முடியாது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பிறரோடு ஒன்றிணைந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் ஒத்துழைப்போடுதான் பணியாற்றவேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக மாநில அரசின் முழுமையான நம்பிக்கையை அவர் பெற்றிருக்க வேண்டும்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், புதிய ஆட்சியாளர் தங்களது நம்பிக்கைக்குரிய ஒருவரைப் பணியமர்த்துவது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

காவல் பணிகளில் அரசியல் தலையீடு என்பது வேறு; அரசியல் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, வழிகாட்டுதல் ஆகியவற்றைப் பெறுதல் என்பன வேறு.

இந்த வேறுபாடுகளைத் தனித்துப் பிரித்துப் பார்க்க உச்ச நீதிமன்றத்தின் நெறிமுறைகள் தவறிவிட்டன என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும்.

பணி மூப்புக்கு அப்பால்

1971இல் நாடாளுமன்ற, தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றபோது, கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு தோல்வியடைந்து, காமராசர் தலைமையிலான நிறுவன காங்கிரசு வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் தலைமைச் செயலாளர் ராயப்பா, காவல் துறைத் தலைவர் (அப்போது அய்.ஜி. நிலை) மகாதேவன் ஆகியோர் சில அத்துமீறல்களில் ஈடுபட்டனர் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி உள்ளிட்ட கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கண்டது. கலைஞர் முதல்வர் பொறுப்பேற்றவுடன், தலைமைச் செயலாளர் ராயப்பா மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராகப் பணி மாற்றம் செய்யப்பட்டார். மகாதேவன் இருந்த இடத்தில் ஒன்றியப் பணியிலிருந்த பணி மூப்பு கொண்ட அருள் அழைக்கப்பட்டுப் பணியமர்த்தப்பட்டார்.

தனது பணி மாற்றத்தை எதிர்த்து ராயப்பா தொடர்ந்த வழக்கில், அய்ந்து நீதியர்களைக் கொண்ட அரசமைப்பு அமர்வு, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரை வேறு இணையான பணிக்கு மாற்றியதை ஏற்றுக்கொண்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் நம்பிக்கையைப் பெற்று இணக்கமாகச் செயல்படுகின்ற ஒருவரைத் தலைமைச் செயலாளராக அமர்த்தும் உரிமை உறுதி செய்யப்பட்டது.

அய்ந்து நீதியர்களின் அரசமைப்பு அமர்வு 1974இல் வழங்கிய இந்தத் தீர்ப்புக்கு முரணாக, 2006இல் மூன்று நீதியர்கள் கொண்ட பிரகாசு சிங் வழக்கு வகுத்துத் தந்த வரையறைகள் செல்லத்தக்கவையல்ல என்பதை மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிடவேண்டும்.

இன்று போல் அல்லாமல், அன்றைய காலகட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல் தலைவர் (பொதுக் காவலர் அய்.ஜி.) நிலையில் ஒவ்வொருவர் மட்டுமே இருந்தனர். 1969இல் இ.பி.ராயப்பா தலைமைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பணி மூப்பிலிருந்த 11 பெயர்கள் முன்மொழியப்பட்டன. இவர்களில் பலர் தவிர்க்கப்பட்டனர். நான்காவதாக இருந்த மணி என்பாரது செயல்பாடுகளில் சில குறைகள் காணப்பட்டதால், பத்தாவதாக இருந்த ராயப்பாவுக்குத் தலைமைச் செயலாளர் பணி உயர்வு வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதியர் தேர்விலும், உயர் நீதிமன்ற நீதியர்களின் பணி மூப்பு மீறப்படுகிறது.

மாநில அரசின் உரிமை மேலானது

மாநிலத் தலைமை வழக்கறிஞர், குற்றவியல் தலைமை வழக்கறிஞர், பிற அரசு வழக்கறிஞர்கள் போன்றோர் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்றபோது தங்களது பணிகளிலிருந்து விலகுவது நடைமுறையாக உள்ளது.

அரசு சார்ந்த வழக்குகளை, தமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நேர்மையுடன் நடத்தக்கூடிய நம்பிக்கை கொண்டவர் களைப் பணியமர்த்தும் வாய்ப்புப் புதிய அரசுக்குக் கிடைக்கிறது.

தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர் போன்றோர் நிலையான பணிகளில் இருப்போர் என்பதால் விலக வேண்டியதில்லை. இருப்பினும், தங்களுக்கு ஏற்புடையோரைப் பணியமர்த்தும் வாய்ப்பு மாநிலங்களுக்கு இருக்கவேண்டும்.

தலைமைச் செயலாளர், காவல் தலைவர் தகுதிகளில் தற்போது பலர் இருப்பதால், இவர்களில் ஒருவரைத் தேர்வு செய்வதில் சட்டச் சிக்கலும் வரப்போவதில்லை.

மாநிலப் பட்டியலில் உள்ள சட்டம் ஒழுங்கு தொடர்பான தலைமையினைப் பணியமர்த்தும் உரிமை மாநில அரசுகளுக்கு மட்டுமே இருக்கிறது; இருக்கவேண்டும்.

ஒன்றிய அரசினால் அமர்த்தப்பட்ட ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுத்துத் தரும் மூவரில் ஒருவரை ஏற்கவேண்டும் என்பது மாநில உரிமைகளில் தலையிடுவதாக அமையும்.

அடுத்தடுத்து பல வகையாகப் பறிக்கப்படும் மாநில உரிமைகளில் இதுவும் ஒன்றாக இருந்துவிடக்கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button