
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து நாடு விடுதலை பெற்ற பிறகு, அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் தொடர்ச்சியாக 1950 ஜனவரி மாதம் “இந்தியத் தேர்தல் ஆணையம்” அமைக்கப்பட்டது.
மக்கள் பிரதிநிதித்துவ, குடியரசு ஆட்சி முறையில், நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடத்தும் கடமைப் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்திய ஆட்சிப் பணி நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் வாய்ந்த, நேர்மையான நிர்வாகத்தின் அடையாளமாக திகழ்ந்த, மூத்த ஆட்சிப் பணி அதிகாரி சுகுமார் சென் முதல் தேர்தல் ஆணையர் பொறுப்பை ஏற்று, முதல் பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950ன் மூலம் 21 வயது நிரம்பிய ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஒரு மனிதருக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு என்ற முறையில் அரசியல் சமத்துவம் வழங்கி நாடு வரலாற்று சாதனை படைத்தது.
நாட்டின் மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், அரசியல் நடவடிக்கைகளிலும், சமூகத்தின் பொது நிர்வாகத்திலும் விலக்கி வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் என எல்லோருக்கும் வயதின் அடிப்படையில் வாக்குரிமை வழங்கப்பட்டதை உலக நாடுகள் வியந்து பார்த்தன. 1951 அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கி, 1952 பிப்ரவரி 21 ஆம் தேதி வரை நான்கு மாதங்களாக, 68 கட்டங்களாக நடத்தப்பட்டன. வாக்குப் பதிவு 61 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அமைதியாக நடந்து முடிந்த முதல் பொதுத் தேர்தல் மக்களாட்சி வரலாற்றில் மகத்தான சாதனையாக அமைந்தது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் இந்தியா என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கடந்த 75 ஆண்டுகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் 18 முறை நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றியப் பகுதிகள் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலையும் நடத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மீது அவ்வப்போது சில விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டதும், அதன் மீது ஆணையம் கவனம் செலுத்தி திருத்தங்கள் செய்து வந்ததையும் அதன் செயல்முறைகளை கவனித்து வருவோர் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால், ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜக ஒன்றிய அரசு அதிகாரத்தில் அமர்ந்த பிறகு, கடந்த 11 ஆண்டு காலத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் மீது சந்தேக நிழல்கள் படிந்து, படிந்து, இன்று சூரிய ஒளிக்கதிர் வெளிச்சத்தை தடுக்கும் விஷப் புகையாக சூழ்ந்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் ஜனநாயக முறை நிராகரிக்கப்பட்டு, ஆளும் தரப்பினரின் விருப்பப்படி தீர்மானிக்கும் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டது.
சார்பற்ற நடுநிலையோடு செயல்பட வேண்டிய இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கான தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு ஆணையர்கள் என மூன்று ஆணையர்களில் எவர் ஒருவரும் தனித்து முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவரல்ல; மூன்று பேரும் அமர்ந்து விவாதித்து, கருத்திணக்கம் கண்டும், அல்லது பெரும்பான்மை முடிவு அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என்ற ஜனநாயக முறை வகுக்கப்பட்டது.
ஜனநாயகத்தின் சட்டபூர்வ பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய தேர்தல் ஆணையர்களை நாட்டின் பிரதமர், நாடாளுமன்ற மக்களவையின் எதிர்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூவரும் அமர்ந்து பேசி, தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாக பாஜக ஒன்றிய அரசு “தலைமைத் தேர்தல் ஆணையர், மற்றும் ஆணையர்கள் (நியமனம், பணி நிலைகள் மற்றும் கால வரம்பு) சட்டம் 2023 நிறைவேற்றியது.

இதன் மூலம் தேர்தல் ஆணையர்கள் யாராக இருக்கலாம் என்பதை பிரதமர், மக்களவை எதிர்கட்சித் தலைவர், பிரதமரால் தேர்வு செய்யப்படும் ஒன்றிய அமைச்சர் ஒருவர் என திருத்தம் செய்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தேர்வுக் குழுவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். இதன் மூலம் பிரதமர் அல்லது ஒன்றிய அரசு தீர்மானிக்கும் அதிகாரத்தை பாஜக அரசு வளைத்துக் கொண்டது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் ஆணையர்களில் ஒருவர் விலகி வெளியேறியும், கனரக தொழில்துறை செயலாளர் தன்விருப்பு ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம் பெற்றதும், பின்னர் அவரும் ஓய்வு பெறும் முன்பே விலகி சென்றதும் ஆளும் பாஜகவின் தலையீடுகளுக்கான ஆதாரங்களாக வெளிப்பட்டன.
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத் தேர்தலில் “வாக்கு திருட்டு” நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாடாளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி, ஊடகங்களின் செய்தியாளர்களை அழைத்து, அறிவியல் பூர்வமான ஆதாரங்களை முன்வைத்து “வாக்கு திருட்டு” மூலம் சில தொகுதிகளில் ஆளும் கட்சி வெற்றி பெற்றது என்பதை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடந்து வருகிறது.
இந்தச் சூழலில் பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு கடந்த ஜூன் 25, 2025 ஆம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்களார் பட்டியலில் 7 கோடியே 89 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். சிறப்புத் தீவிர திருத்தத்தின் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு பிறகு வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல்களில் இருந்த வாக்காளர்கள் பெயர்கள் மீது வந்த ஆட்சேபனைகள் மற்றும் நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று மேலும் 3 லட்சத்து 66 ஆயிரம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் 2025 ஜனவரி முதல் தேதியில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் 21 லட்சத்து 53 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டு, 7.42 கோடி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் என்ன காரணத்தால் நீக்கப்பட்டனர் என்ற விபரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம், தனது இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் புதிய வாக்காளர் பட்டியல் படி பிகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. தொடர்ந்து 14.11.2025 ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். பிகார் தேர்தல் முடிவுகள் சிறப்புத் தீவிர திருத்தம் எதற்காக நடைபெற்றது என்பதையும் சேர்த்தே வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் சில முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவை விசாரணையில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் நவம்பர் 4 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 4 ஆம் தேதி வரை சிறப்புத் தீவிர திருத்தம் நடைபெறும் என அறிவித்தது. இதனையொட்டி, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர், கடந்த 29.10.2025 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆறு கட்சிகளும், மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆறு கட்சிகளுமாக 12 அரசியல் கட்சிகள் சார்பில், கட்சிக்கு இருவர் வீதம் 24 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாலை 4 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 7 மணி வரை நீடித்தது. கலந்து கொண்ட கட்சிகளில் திமுகழகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், ஆம் ஆத்மி கட்சி, தேசிய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி என 10 கட்சிகளும் தற்போது தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்வது நல்ல பலனை தராது. ஒரு துளியும் தவறு, குறைபாடு இல்லாத துல்லியமான, சரியான வாக்காளர் பட்டியல் தயாரிக்க உகந்த சூழலும், காலமும் இல்லை என்பதை எடுத்துக் கூறி, 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, சுருக்கமுறை திருத்தம் மேற்கொண்டு, அதாவது ஜனவரி 2026 முதல் தேதியில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தும், 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு இறந்து போனவர்கள் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியும் பட்டியலை இறுதிப்படுத்தி 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கருத்துக்களை முன் வைத்தன. கட்சிகளின் உணர்வையும், கருத்துக்களையும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர், இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அஇஅதிமுக, பாஜக கட்சிகளின் பிரதிநிதிகள் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த போதும், அதனை தேர்தல் ஆணையம் குறித்துள்ள குறுகிய கால அவகாசத்தில் நிறைவேற்ற முடியுமா? போதுமான கால அவகாசம் தந்து செய்யலாமே? என்ற கருத்துக்களையும் சேர்த்தே முன் வைத்தனர்
நிறைவாக பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர், இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அவகாசத்தில் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள மட்டுமே பணிக்கப்பட்டுள்ளோம். அதில் எந்தவித மாற்றம் செய்யவும் நமக்கு அதிகாரம் இல்லை. எனவே அரசியல் கட்சிகள் ஒத்துழைத்து உதவுங்கள் என கேட்டுக் கொண்டார்.
நவம்பர் 4 ஆம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடங்கிவிட்டது. அரசியல் களத்திலும், நீதிமன்றத்திலும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான நமது போராட்டம் தொடர்ந்து நடைபெறும். ஆனாலும் வாக்காளர் பட்டியலில் நமது வாக்காளர்கள் எவர் ஒருவர் பெயரும் விடுபடாமல் சேர்ப்பதும், தவறான நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விடாமல் தடுப்பதும் நம் முன் உள்ள உடனடிப் பணியாகும் என்பதை உணர்ந்து களப்பணியாற்ற வேண்டும்.