ஒன்றிய அரசின் “ஷ்ரம் ஷக்தி நிதி 2025” – தொழிலாளர்களை மீண்டும் பழைய சங்கிலியில் பிணைக்கும் முயற்சி
டி.எம்.மூர்த்தி

ஒன்றிய அரசு புதிய தேசியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கையை வெளியிட்டுள்ளது. வழக்கம் போல அதற்கும் சமஸ்கிருதப் பெயர் வைத்துள்ளனர் – “ஷ்ரம் ஷக்தி நிதி 2025”.
செல்வத்தைக் குவிக்கிற சிலர் மேலும் மேலும் குவித்துக் கொண்டே இருக்கிறார்கள்; உழைப்பைத் தருபவர்கள் கீழே தள்ளப்படுகிறார்கள். – இது ஒன்றிய அரசாங்கத்திற்கே தெரிந்திருக்கிறது.
அதனை இந்தக் கொள்கையில் ஒரு வரியில் அவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்:
“தொழில்திறன் மற்றும் தொழில் வளர்ச்சி நிலைத்த முறையில் உயர்ந்தாலும், ஊதியப் பாகுபாடு, பாலினச் சமநிலை இல்லாமை, திறன் பொருத்தமின்மை ஆகியவை தொடர்கின்றன.”
(1.2 நிலைத்த சவால்கள் மற்றும் உருவாகும் மாற்றங்கள்)
நோக்கமும் நடைமுறையும்
இதனைத் தடுப்பதற்காக இந்த அரசு ஏதோ செய்யப் போகிறது என்று எதிர்பார்ப்போடு படித்தால், அந்தக் கொள்கையின் கண்ணோட்டம் (vision) பின்வருமாறு கூறுகிறது:
“ஒவ்வொரு தொழிலாளியும் கண்ணியத்துடனும், பாதுகாப்புடனும், வாய்ப்புகளுடன் வாழுகிற, ஒருங்கிணைந்த, சமமான, உறுதியான தொழில் வாழ்வை உருவாக்குவது; இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மக்களை மையமாகக் கொண்டு இருப்பது.”
(2. பார்வை மற்றும் பணிக்குறிக்கோள்)
இதனைச் செயல்படுத்துவதற்காக, இந்திய அரசியல் சாசனத்தில் தொழிலாளர்களுக்கான உரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளை அவர்கள் தேடி எடுத்துள்ளனர். அந்த வாசகங்களையும் இந்தக் கொள்கை அப்படியே தந்துள்ளது. அது வருமாறு:
“‘ஷ்ரம் ஷக்தி நிதி 2025’ இந்திய அரசியலமைப்பிலிருந்து தன் சட்டப்பூர்வ நியாயத்தையும், ஒழுக்கப்பூர்வ அதிகாரத்தையும் பெறுகிறது… அரசியல் சாசனத்தின் 14, 16, 19(1)(c), 23 ஆகிய பிரிவுகள், சட்டத்தின் முன் சமத்துவம், வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு, அமைப்பாக ஒன்று சேர்வதற்கு உரிமை, தொழிற்சங்கங்களை அமைத்துக் கொள்வதற்கான சுதந்திரம், கட்டாய வேலையில் இருந்தும் சுரண்டலில் இருந்தும் உழைப்பவர்களுக்கு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்கின்றன. இவை அனைத்தும் இந்திய தொழிலாளர் நிர்வாகத்தின் ஒழுக்க, சட்ட அடித்தளமாக அமைந்துள்ளன. இதை முழுமைப்படுத்தும் வகையில், அரசியல் சாசனத்தின் நோக்கக் குறிப்புகள் (Directive Principles) – குறிப்பாக 38 முதல் 43 வரையிலான பிரிவுகள் – நீதி அடிப்படையிலான சமூக ஒழுங்கை நிலைநாட்டவும், மனிதநேயமான பணிநிலைகளை உறுதிசெய்யவும், வாழ்வூதியத்துடன் ஓய்வு மற்றும் ஓய்வு கால நலனை வழங்கவும் அரசை வற்புறுத்துகின்றன.”
(2.1 தொழிலாளர் கொள்கையின் அரசியலமைப்பு அடித்தளம்)
இதனால் அரசியல் சாசன அடிப்படையை அவர்கள் நன்றாக அடையாளம் கண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் நடைமுறை வழிமுறையில் அதனை எப்படி கையாளப்போகிறார்கள் என்பதே முக்கியம்.
நான்கு “தூண்கள்”
இந்தக் கொள்கை நான்கு தூண்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. பின்வருபவை தான் அந்த நான்கு தூண்கள்:
1. தொழிலில் கண்ணியம் மற்றும் சமத்துவம்: தொழில் என்பது நாட்டின் வளமைக்கும், சமூக ஒற்றுமைக்கும் அடிப்படையாகும் என அங்கீகரித்தல்.
2. சார்ந்த ஒருங்கிணைப்பு: அமைப்பு சார்ந்த, அமைப்பு சாராத, புலம்பெயர்ந்த, ‘கிக்’ நடைபாதை தொழிலாளர்கள் எல்லோரையும், யாரையும் புறக்கணிக்காமல் ஒன்றிணைத்தல்.
3. கூட்டாட்சி முறைமை: செயல்பாட்டில் ஒன்றிய அரசு, மாநில அரசு, உள்ளாட்சிகளை ஒருங்கிணைத்தல்.
4. தரவு (Data) வழி ஆட்சி: வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, திறன் ஆகியவற்றுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.
நல்ல விஷயங்களைத் தான் பேசினார்கள். ஆனால் தொழிலாளர் கொள்கையின் தூண்கள் அரைகுறையாக நிற்கின்றன. இவற்றைப் பார்த்தால் சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன.
முரண்படும் நடைமுறைகள்
வேலை என்பதை, நாட்டின் வளமைக்கும், சமூக ஒற்றுமைக்கும் அடிப்படையாகக் காண்பது சரி. ஆனால் வேலை செய்யும் தொழிலாளிக்குக் கண்ணியத்தை, சமத்துவத்தைத் தரப்போவதாக தலைப்பு வைத்துவிட்டு, அதைப் பற்றி எதையும் பேசாமல் கடந்து செல்வது ஏன்?
அமைப்பு சார்ந்த, அமைப்பு சாராத புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் யாரையும் விட்டுவிடாமல் இணைப்பது என்பது சரி. ஆனால் எவ்வாறு இணைக்கப் போகிறார்கள்?
பணிப் பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பெறுபவர்கள் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களாவர். அமைப்பு சாராத, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இதே பாதுகாப்பை இந்த கொள்கை வழங்கப் போகிறதா? அல்லது அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு இருக்கும் பாதுகாப்புகளை பறித்துவிட்டு, எந்த தொழிலாளிக்கும் பாதுகாப்பு இல்லை என்று ஒன்றிணைக்கப் போகிறதா?
கூட்டாட்சி முறைமை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படைகளில் ஒன்று. அதே நேரத்தில் தொழிலாளர் என்பது ஒன்றிய அரசு, மாநில அரசு ஆகியவற்றின் இடையே பொதுப்பட்டியலில் வருகிறது. ஆனால் இப்போது உள்ளாட்சி நிறுவனங்களையும் இதில் புதிதாக இணைப்பதன் காரணம் என்ன?
தரவுகளின் அடிப்படையில் அரசாட்சி என்பதில் புதுமை என்ன உள்ளது? இதுவரை தரவுகளற்ற அரசாட்சியா நடந்து வந்தது? புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது என்பது, காலம் தோறும் நடந்து கொண்டே தான் உள்ளது. இப்போது அதை ஒரு கொள்கையாக அறிவிக்க வேண்டிய காரணம் என்ன?
மேற்கண்ட கேள்விகளுக்கான விடையை, 20 பக்கங்களைக் கொண்ட இந்த கொள்கை அறிவிப்பில் தேடினால், சொல்லப்படும் நோக்கம் ஒன்றாகவும், ஆனால் அதைத் தொடர்கிற செயல்பாடு நோக்கத்திற்கு நேர் எதிராகவும் இருப்பது புலப்படுகிறது.
இந்தக் கொள்கை கூறுகிறது:
- “தொழில் என்பது ஒரு புனிதக் கடமையும் சமூக மதிப்புமாகும்..”
- “வேலை என்பது ஒரு வாழ்வாதார வழிமுறையாக மட்டும் அல்ல; அது ஒரு ‘தர்மம்’ என்பதால் ஒரு தவிர்க்கக் கூடாத கடமையாகும்.”
இதன் பொருள் – தொழிலாளர் வேலை செய்வது கடமையேயன்றி, உரிமையல்ல.
சமூகப் பாதுகாப்பு: கட்டப்படுகிறதா? இடிக்கப்படுகிறதா?
அனைவரையும் இணைக்கும் திட்டமாக அவர்கள் கூறுவது:
“ஈ.பி.எஃப்., ஈ.எஸ்.ஐ., இ-ஷ்ரம், மாநில தொழிலாளர் நல வாரியங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பொதுவான ஒரே சமூகத்திட்டம் உருவாக்கப்படும்.”
இபிஎஃப், இஎஸ்ஐ ஆகியவை இந்தியா முழுமையிலும் ஒரே மாதிரியான சமூக பாதுகாப்பு நலன்களை தொழிலாளர்களுக்கு வழங்கும் ஒன்றிய அரசின் கீழ் உள்ள அமைப்புகள் ஆகும். இவற்றுக்கு வேலை அளிப்பவரும் நிதிப் பங்களிப்பு செய்கிறார்.
ஆனால் மாநில தொழிலாளர் நல வாரியங்களை பொருத்தவரை, ஒவ்வொரு மாநில அரசும் வேறுபட்ட திட்டங்களை வைத்துள்ளன. கேரளா, தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள், இத்திட்டங்களை மற்ற பல மாநிலங்களோடு ஒப்பிடும்போது சிறப்பாக செயல்படுத்துகின்றன. பல மாநிலங்களில் சட்டம் இருந்தும் இவை சரியாக செயல்படுத்தப்படுவதில்லை. மேலும் அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு வேலையளிப்பவர் நிதிப் பங்களிப்பு என்று எதுவும் இல்லை.
இந்த திட்டங்கள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கலாம் என்று சொல்லும்போது, மிகப்பெரிய தொழிற்சாலைகளில் கூட வேலையளிப்பவரின் நிதிப் பங்களிப்பு எதுவும் இல்லாத சூழலை உருவாக்கப் போகிறார்களா என்று தெரியவில்லை. ஏனெனில் இதைப் பற்றிய எந்த விளக்கமும் இந்த கொள்கையில் சொல்லப்படவில்லை.
கூட்டாட்சியா? காட்டாட்சியா?
கூட்டாட்சி முறைமை பற்றி பேசும் போது, புதிதாக உள்ளாட்சிகளை தொழிலாளர் நிர்வாகத்தில் இணைப்பது மட்டுமின்றி, மாநில அரசுகளின் அதிகாரங்களும் இங்கு பறிக்கப்படுகின்றன. இந்தியா முழுமைக்குமான தொழிலாளர் சட்டங்கள் இருக்கும்போதே, மாநில அரசுகளும் தனிச் சட்டங்களை நிறைவேற்றும் உரிமை இப்போது இருக்கிறது. அதுமட்டுமின்றி ஒன்றிய அரசின் சட்டங்களிலும் கூட, விதிகளை மாநிலங்கள் வகுக்கும்போது, தமது மாநிலத்துக்கேற்ற விதிகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.
தமிழ்நாட்டிலும், தமிழ்நாடு தொழிலக நிலையாணைச் சட்டம், தமிழ்நாடு நிரந்தர தகுதியளிக்கும் சட்டம், தமிழ்நாடு பிழைப்பூதியம் வழங்கல் சட்டம் போன்ற மாநில சட்டங்களும், தொழிற் தகராறு சட்டத்தில் 10பி பிரிவு போன்ற மாநிலத் திருத்தங்களும் உண்டு.
ஆனால் புதிய கொள்கை, ஒன்றிய அரசின் சட்டங்களை, விதிமுறைகளை மாநிலத்தில் அமலாக்கும் முகவராக மாற்றப்படுகிறது என்பதை “தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ், ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளை இணைக்கும் உச்சமட்டக் குழு, திட்டங்களை வகுத்து, அவற்றைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை உறுதிசெய்யும்.”
“இவற்றை அமுலாக்க ஒவ்வொரு மாநிலமும், உள்ளாட்சி நிறுவனங்களுடன் இணைந்து சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும்.”
என்று இந்தக் கொள்கை குறிப்பிடுவதில் இருந்து உணர முடியும்.
மேலும், புதிதாக நுழைக்கப்படும் மாவட்ட நிர்வாகம் என்பதன் பணியாக “மாவட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு ஆதார மையங்கள், தொழிலாளர்களை பதிவு செய்தல் மற்றும் தொழிலாளர் குறை களைதல் பணிகளை ஒற்றைச் சாளர சேவை மூலம் நிறைவேற்றும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை தொழிலாளர் நிர்வாகத்தில் உள்ளாட்சிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை. தொழிலாளர்களின் குறைகளைக் களைவது உள்ளாட்சிகளின் பணி என்றால், அதற்கான கட்டமைப்பு எது? யார் அந்தப் பணிகளில் ஈடுபடுவர் என்பதைப் பற்றி எந்தத் தகவலும் இந்தக் கொள்கையில் இல்லை
சட்டத் தொகுப்புகளே அடிப்படை
திரும்பத் திரும்ப ஒன்றிய அரசு ஏற்கனவே முன் மொழிந்துள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மட்டுமே இந்தக் கொள்கை சுற்றிச் சுழல்கிறது.
2019-ல் கொண்டுவரப்பட்ட ‘ஊதிய சட்டத்தொகுப்பு’ மற்றும் 2020 இல் கொண்டுவரப்பட்ட இதர மூன்று சட்டத் தொகுப்புகள் ஆகியவற்றை இன்று வரை அமலாக்க முடியவில்லை. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான பொதுப்பட்டியலில் தொழிலாளர் வருவதால், மாநிலங்களும் இந்தச் சட்டத் தொகுப்புகளுக்கு விதிகளை அறிவிக்கை செய்தால் மட்டுமே இதை நிறைவேற்ற முடியும்.
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் வரைவு விதிகளை கொண்டு வந்துள்ளனவே தவிர, அவற்றை இறுதிப்படுத்தி அறிவிக்கை (நோட்டிபிகேஷன்) செய்யவில்லை. ஆர்எஸ்எஸ்சின் அங்கமான பிஎம்எஸ் உள்ளிட்ட இந்தியாவின் மத்திய தொழிற்சங்கங்கள் எவையும் இந்தச் சட்டத் தொகுப்புகளை ஏற்கவில்லை. ஏனெனில் அவை தொழிலாளர்களுக்கு புதிய உரிமைகள் எதையும் தராதது மட்டுமின்றி, ஏற்கனவே 150 ஆண்டு காலப் போராட்டங்கள் மூலமாக தொழிலாளர்கள் பெற்றுள்ள உரிமைகளையும் பறித்து விடுகின்றன.
எனவே புதிய கொள்கை என்ற பெயரில், மீண்டும் அதே சட்டங்களை செயல்படுத்துவதற்கான முயற்சியாகவே இது இருக்கிறது.
சாஸ்திர அடிப்படை : பண்டைய அடிமைத்தனத்தின் மீளுருவாக்கம்
இந்தக் கொள்கையின் தத்துவ அடித்தளம், ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாஸ்திரங்கள் என இந்தக் கொள்கை கூறுகிறது:
“மனுஸ்மிருதி, யாஜ்ஞவல்க்யஸ்மிருதி, சுக்ரநீதி, அர்த்தசாஸ்திரம் ஆகிய பண்டைய நூல்கள், ‘ராஜதர்மம்’ எனும் கருத்தின் மூலம், தொழிலாளர்களுக்கு நீதி, நியாயமான ஊதியம், சுரண்டலிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தின. இவை நவீன தொழிலாளர் சட்டங்களுக்கு முன்பே, இந்திய நாகரிகத்தின் ஒழுக்க அடித்தளத்தில் தொழிலாளர் நிர்வாகத்தின் தத்துவத்தைக் கட்டியமைத்தன.”
ஆனால் அந்த நூல்களைப் படித்தால், அவை தொழிலாளர்களுக்கு சமத்துவம், கண்ணியம், நியாயம் ஆகியவற்றை அளிப்பதற்குப் பதிலாக, அடிமைத்தனத்தை நிலைநாட்டும் விதமாக இருக்கின்றன:
மனுஸ்மிருதி:
- உடலால் உழைப்பவன் சூத்திரன்; அவன் அடிமை.
- கூலி கொடுத்தோ கொடுக்காமலோ அவனிடம் வேலை வாங்கலாம்.
- பணிவிடை செய்வது தவம்.
- சூத்திரன் செல்வம் சேர்க்கக்கூடாது. சேர்த்தால் பறித்து விடலாம்.
- வேலையை முடிக்காவிட்டால் தண்டனை உண்டு. கூலி தரத் தேவையில்லை.
சுக்ரநீதி:
- ஏவல் செய்பவன் இழிவான பிறவி.
- உணவுக்கும் உடைக்கும் அளவு கூலி போதுமானது.
- கூடுதல் கூலி கொடுத்தால் அது ஒரு பாவச் செயல்.
யக்ஞவல்கிய ஸ்மிருதி:
- வேலை செய்யும் போது பொருள் சேதமானால், அதைச் சொந்தமாக தொழிலாளி ஈடு செய்ய வேண்டும்.
- எஜமானன் அடிக்கலாம், அபராதம் விதிக்கலாம்.
- கீழ்சாதி தொழிலாளர் மேல்சாதியாரை திட்டினால் உதடுகளைக் கிழிக்கலாம் எனச் சொல்கிறது.
நாரதஸ்மிருதி:
- “கூலி கொடாமை” என்றே தனி அத்தியாயம் உள்ளது.
இவ்வாறான நூல்களை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர் கொள்கை வடிவமைக்கப்படுவது, உழைப்பை அடிமைத்தனத்தின் நிலைக்கு தள்ளும் ஆபத்தான போக்காகும். வரலாற்றை மீண்டும் பின்புறம் சுழற்றும் முயற்சியாகும்.
இது ஒரு “புதிய கொள்கை” அல்ல. பண்டைய வேத நூல்களின் அடிமைத்தனக் கோட்பாட்டை நவீன பொருளாதாரத்தில் புதுப்பித்த வடிவமே.
இது உண்மையில் தொழிலாளர் உரிமைக்கான கொள்கை அல்ல; உழைப்பை “புனிதக் கடமை” என மத மயமாக்கும் அரசியல் முயற்சி மட்டுமே.
முடிவு
“ஷ்ரம் ஷக்தி நிதி 2025” என்ற புதிய தொழிலாளர் கொள்கை கண்ணியமும் சமத்துவமும் என்ற பெயரில் அதிகாரங்களை ஒன்றிய அரசிடம் குவித்தல், மாநில அதிகாரக் குறைப்பு, மற்றும் உழைப்பை உரிமை அல்ல, கடமை எனக் கூறும் தத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்துகிறது.
பண்டைய சாதி அடிமைத்தன நூல்களைச் சுட்டிக்காட்டி, தொழிலாளர் விரோத நான்கு சட்டங்களை மீண்டும் திணிக்க முயற்சிப்பது, தொழிலாளர் இயக்கங்களின் பல நூற்றாண்டு போராட்டப் பலன்களைப் பறிப்பதற்கான முயற்சியாகும்.