நாடாளுமன்றத்தைக் கூட்டி விளக்கம் அளிக்காமல் உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கச் செல்வதா?
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஒன்றிய அரசு நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் விளக்கம் அளிக்காமல், உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க பிரதிநிதிகள் குழுவை அனுப்புவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் உட்பட முக்கிய நாடுகளுக்கு அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அனுப்ப இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்திய அரசு உண்மையை மறைத்தும் விலக்கிவைத்தும் நடந்துகொள்வதன் குறியீடாக இது உள்ளது. அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவோ விளக்கம் அளிக்கவோ இல்லை. அனைத்துக்கட்சிப் பிரதிநிதி குழுக்கள் எதற்காக அனுப்பப்பட்டுள்ளன? அவை என்ன செய்யப் போகின்றன? என்பது தெளிவாக்கப்படவில்லை.
இந்தியா சொந்த நாட்டு மக்களையும் நாடாளுமன்றத்தையும் இருளில் வைத்துவிட்டு, வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கம் அளிக்கச் செல்வது ஏற்க முடியாததாகும்.
பகல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்தை நாடு ஒற்றுமையுடன் எதிர்த்து நின்றது. ஆனால், பாஜகவோ வேறுபாடுகளை அதிகரிக்கவும் அரசியல் ஆதாயம் அடையவும் கருத்து மாறுபாடுகளை அடக்கவும் அந்த உணர்வுகளை பயன்படுத்திக் கொண்டது. பேராசிரியர் அலிகான் மஹ்முதாபாத் கைது -& அவரது வார்த்தைகளுக்காக அல்ல, அவரது அடையாளம் மற்றும் நியாயமான விமர்சனத்திற்காக குறிவைக்கப்பட்டது -& அரசின் அத்துமீறல்களில் ஒன்றாகும்.
போர்நிறுத்தம் மேற்கொண்டதற்கான விதிமுறைகள், அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பங்கு ஆகியவை குறித்து குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன. அணு ஆயுத மோதலை பொறுப்பற்ற முறையில் கையாள்வதாக டிரம்ப் மறைமுகமாக சாடியிருந்தார். இவை குறித்து ஒன்றிய அரசு விளக்கமளிக்க வேண்டும். ஆனால் இந்திய அரசு, அதிபர் டிரம்பின் கூற்றுகளை வெளிப்படையாக மறுக்காமலும் கண்டிக்காமலும் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும், இருநாடுகளும் வழக்கமான போரில்தான் (conventional warfare) ஈடுபட்டதாக வெளியுறவுச் செயலாளர் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது அதிபர் டிரம்பின் கூற்றுக்கு நேர் எதிராக உள்ளது. இவை குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்குமா? அல்லது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு என்பது டொனால்ட் டிரம்பின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டதாக இருக்குமா?
பாஜக 11 ஆண்டுகளாகப் பின்பற்றிய வெளியுறவுக் கொள்கைகள் மிகச் சிறிதளவே பலனளித்துள்ளன. ஜி-20 மாநாடும் புகைப்படம் எடுத்தல்களும் ஆரவாரமாக நடந்த போதும், இந்தியாவுடன் எந்தப் பெரிய நாடும் உறுதியாக நிற்கவில்லை. இன்னும் மோசமாக பாஜக தலைவர்களில் ஒருவரான விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை அவருடைய மத அடிப்படையில் பயங்கரவாதிகளுடன் இணைத்துப் பேசினார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் அமைச்சராகவே தொடர்கிறார். இது சர்வேதச அளவில் அவமானத்தைத் தேடித் தந்திருக்கிறது.
இந்திய அரசு உலக நாடுகளுக்குச் சென்று விளக்கும் முன்பு, சொந்த நாட்டு மக்களையும் ஜனநாயக அமைப்புகளையும் முதலில் மதிக்க வேண்டும். இந்தியா போற்றப்படுவது வெளிப்படைத்தன்மை, ஒற்றுமை கண்ணியம் ஆகியவற்றுக்காக இருக்க வேண்டுமே தவிர, ஆணவம், உண்மைகளை மறைப்பது, அடக்குமுறை ஆகியவற்றுக்காக அல்ல என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.