ரயில் மோதியதில் பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பு – படுகாயம்
ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

ரயில் மோதியதில் பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பு – படுகாயம் அடைந்துள்ள அதிர்ச்சியூட்டும் விபத்துக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், மற்ற குழந்தைகள் உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் நெஞ்சை பிளக்கும் வேதனை அளிக்கிறது.
இந்த ரயில்வே கிராசிங் வாயிலை, ரயில் வரும் முன்பாக, குறிப்பிட்ட காலத்தில் மூட வேண்டிய வாயில் காப்பாளர் (Gate Keeper), கடமையை மறந்து தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. வாயில் காப்பாளரின் அலட்சியத்தால், மூன்று குழந்தைகளின் உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தத் தவறுக்கு ஒன்றிய அரசும், ரயில்வே அமைச்சகமும் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
ஒன்றிய அரசு உயிரிழந்த குழந்தைகள் குடும்பங்களுக்கு தலா ரூ 5 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். படுகாயமடைந்த குழந்தைகளுக்கு தேவையான உயர் சிகிச்சை செலவுகளை ஒன்றிய அரசு ஏற்பதுடன், அவர்களது குடும்பங்களுக்கும் ரூ 25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், உயிரிழந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
