
சாதிப் பிரிவினை அறிவியல் பூர்வமானது என்று அடித்துச் சொன்ன ஆர்.எஸ்.எஸ் இன்று தன் நிலையில் இருந்து மாறி, பேசி வருகிறது. உத்தரப்பிரதேசம் அலிகர் நகரில் நடந்த ஆர்.எஸ். எஸ் விழாவில் பங்கேற்ற மோகன் பகவத் இந்துக்கள் அனைவரும் ஒரே கோயில், ஒரே சுடுகாடு, ஒரே கிணறு என்ற கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அருள்வாக்கு அளித்துள்ளார்.
குறிப்பாகப் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் கோவில்களில், பொதுக் கிணறுகளில், சுடுகாடுகளில் அனுமதிக்க மறுப்பது இன்னும் சில இடங்களில் தொடர்கிறது என்றும் பேசியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் பிளவுகளைக் கடந்து இந்துக்களின் ஒற்றுமைக்கு முயல வேண்டும் என்றும் பேசி உள்ளார். இதுதான் சாத்தான் வேதம் ஓதுவது என்பதாகும்.
மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப இது போன்ற பச்சோந்தித்தனமான பல பேச்சுகளை வெளிப்படையாகப் பேசுவார்கள். ஆனால், நடைமுறையில் அதற்கு எதிராகவே நிற்பார்கள் இதுதான் அவருடைய சுயரூபம், கடந்த கால வரலாறு!
ஆர்.எஸ்.எஸ் உருவான நோக்கம்
நிலப்பிரபுகள்- பிராமணர்களின் ஆதிக்கங்களை உடைக்க ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களின் விளைவால் பிராமணர்கள் & நிலப்புரபுக்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.
மொழி வழி மாநிலம், உழுபவனுக்கே நிலம் சொந்தம், அனைவருக்கும் கல்வி, நில உச்சவரம்புச் சட்டம் ஆகியவை குறித்து இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள், தேசிய இயக்கம் போராடிய போது அதற்கு எதிர்நிலை எடுத்தது ஆர்.எஸ்.எஸ்!
காலனிய காலகட்டத்தில் தொடங்கிய பிராமணரல்லாதோர் இயக்கம், படிநிலை சாதி அடிப்படையிலான ஒழுங்கை எதிர்த்துச் சமத்துவத்தையும் நீதியையும் கோரியது. அதற்காகத்தான் சமூகத்தில் உயர் அடுக்கினரை ஒருங்கிணைத்து ஆர்.எஸ்.எஸ் நாக்பூரில் உருவானது.
சாதி உருவாக்கம் குறித்து ஆர்.எஸ்.எஸ்
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்ட பிறகு சங் பரிவார் தலைவர்கள் இந்தச் சாதிகள் அந்நியப் படையெடுப்பாளர்களின் அட்டூழியங்களால் தோன்றியதாகவும், இந்து மதத்தில் முன்பு இருந்ததில்லை என்று கூறத் தலைப்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷியின் கூற்றுப்படி, இடைக்கால சகாப்தத்தில் இஸ்லாமிய அட்டூழியங்கள் தீண்டாமை தோன்ற வழிவகுத்தன, “சன்வர்வன்ஷிய க்ஷத்திரியர்களின் இந்து ஸ்வபிமான் [பெருமையை] மீறுவதற்காக, அரேபியர்களிடமிருந்து வந்த வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள், முஸ்லிம் ஆட்சியாளர்கள் மற்றும் மாட்டிறைச்சி உண்பவர்கள், பசுக்களைக் கொல்வது, தோலை உரிப்பது மற்றும் அவற்றின் சடலங்களை வெறிச்சோடிய இடங்களில் வீசுவது போன்ற அருவருப்பான வேலைகளைச் செய்ய அவர்களைக் கட்டாயப்படுத்தினர். இவ்வாறு வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள் பெருமைமிக்க இந்து கைதிகளுக்குத் தண்டனையாக இதுபோன்ற வேலைகளை வழங்குவதன் மூலம் வசீகரமான கர்மா (தோலை கையாளும்) என்ற சாதியை உருவாக்கினர்.” என்று ஒரே போடாகப் போட்டுள்ளார். அப்படி என்றால் ரிக் வேதத்தில் குறிப்பிடும் நால்வருணம், புருஷ சூக்தம் ஏன் வந்தது?
சாதிப்பிரிவினையை நியாயப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தத்துவம்`இந்துத்துவா’. இது நால்வர்ண சாதிய அமைப்பிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். ஆர்.எஸ்.எஸ் சாதி அமைப்பை முழுமையாக நம்புகிறது. அதன் கொள்கையின் படி, ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதி வழக்கப்படி மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகளை எவரும் குறைகூறாத அளவிற்குச் செவ்வனே ஆற்றிவர வேண்டும். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினருக்குத் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீது எந்தக் காலத்திலும் நேசம் இருந்தது கிடையாது. மாறாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கோல்வால்கர் தன்னுடைய `சிந்தனைத் கொத்துகள்’ என்ற நூலில் பாகம் 2, அத்தியாயம் 10-இல், `தேசமும் அதன் பிரச்சனைகளும்’என்ற தலைப்பின்கீழ், எல்லாம்வல்ல இறைவனால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நால்வர்ணச் சமூகம் அனைவராலும் பூஜிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்,’ என்று கூறியுள்ளார். மேலும் சாதிய அமைப்புமுறை குறித்து அவர், “பழங்காலத்திலும் சாதிகள் இருந்திருக்கின்றன, நம் பிரகாசமான தேசிய வாழ்க்கையில் பல்லாயிரம் ஆண்டுகளாகவே அது தொடர்ந்திருக்கிறது. அது சமூகத்தில் பல்வேறு பிரிவினரையும் இணைப்பதில் பெரும் பங்கு வகித்திருக்கிறது,” என்று சாதி அமைப்பு முறை குறித்துப் பெருமிதமாகக் குதூகலித்தார்.
பட்டியல் இனத்திற்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்
ராமஜென்ம பூமிக்கான அரசியலில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்ட முதல் கல்லை ஒரு தலித்தான் நட்டார் என்று பெருமை பேசினார்கள். ஆனால், புதுதில்லியில் உள்ள வசந்த் குஞ்சில் கடந்த 2001 ல் ஆர்.எஸ். எஸ் சார்பில் வேதங்கள் ஆய்வு நிறுவனம் (Institute for Vedic Studies) அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெற்ற போது, அங்கே குடியிருந்த 10 தலித் குடும்பங்களைச் சேர்ந்தவர்களைக் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தி விட்டார்கள். ஏனெனில், தலித்துகள் அங்கே இருந்தால் அந்தப் பகுதி தீட்டாகிவிடும் என்று அந்த விழாவை ஏற்பாடு செய்தவர்கள் நினைத்ததால்தான் இது நடந்தது.நிகழ்ச்சியில் பங்கேற்ற எல்.கே.அத்வானி உட்பட எந்த ஆர்.எஸ்.எஸ் தலைவரும் இதனை எதிர்க்கவில்லை.
முசாபர்நகரின் புர்காசி பகுதியில் தனது சொந்த சமூகத்தினர் வீடுகளுக்கு வெளியே இந்து கடவுள்களின் சுவரொட்டிகளைக் கிழித்து, அதற்குப் பதிலாக பி.ஆர்.அம்பேத்கரின் படங்களை ஒட்டியதற்காக ஒரு தலித் இளைஞரை அடையாளம் தெரியாத குண்டர்கள் கட்டைகளால் தாக்கி, “ஜெய் ஸ்ரீ ராம்” “மா காளி கி ஜெய்’’ மற்றும் ‘‘போலேநாத் கி ஜெய்’’ என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தியது. கேமராவில் பதிவான இந்த அடிதடியில், ஹெல்மெட் அணிந்திருந்த அந்தத் தலித் நபர் கருணைக்காகக் கெஞ்சுவது காட்டப்பட்டது.
2017 அக்டோபர் தொடக்கத்தில், குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள லிம்போதராய் கிராமத்தில் ஒரு இளம் தலித் மீசை வைத்திருந்ததால் தாக்கப்பட்டார். இன்னும் ஒரு இடத்தில் தனது திருமணத்தின்போது குதிரையில் ஏறி மணமகன் வந்த காரணத்தால் தாக்குதலுக்கு உள்ளான செய்தியும் வந்தது.
அன்றைய ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங், இரண்டு தலித் சிறுவர்கள் சன்பெத் என்னுமிடத்தில் மிகவும் கொடூரமான முறையில் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட நிகழ்வை, நாயைக் கல்லால் அடித்துக் கொல்வது போன்றதே என்று குறிப்பிட்டார். ஏன் சாட்சாத் நமது பாரத பிரதமர் கையால் மலம் அள்ளுபவர்கள் கூட அவர்கள் தொழிலில் உள்ளார்ந்த மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர் என்று குறிப்பிட்டதும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் தலித்துகள் தாக்குதலுக்கு உள்ளாவதும், பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது. இன்றும் கோவில்களில் பட்டியல் சாதியினர் நுழைந்து வழிபட முடியாத சூழலில் உள்ளது.
இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் இவற்றைத் தீர்க்க ஆர்.எஸ்.எஸ் எந்த நேரடிப் போராட்டங்களையும் மேற்கொள்ளவில்லை? அவர்கள் ஆழ்மனதில் என்ன இருக்கிறது என்பதை இது படம் பிடித்துக் காட்டுகிறது.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்
சங்க பரிவாரங்கள், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்சின் பல மூத்த தலைவர்கள் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுகளுக்கு எதிராகத் தீவிரமான நிலைப்பாட்டைக் கடந்த காலங்களில் எடுத்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டில், ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசலக் மோகன் பகவத் இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பீகாரின் தேர்தலின் போது அழைப்பு விடுத்ததை மறக்க இயலாது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆறு பொதுச் செயலாளர்களில் ஒருவரான மன்மோகன் வைத்யா: “எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு வேறுபட்ட சூழலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களுக்குச் செய்யப்பட்ட வரலாற்று அநீதியைச் சரிசெய்ய அரசியலமைப்பில் இது வழங்கப்பட்டுள்ளது. அது எங்கள் பொறுப்பு. எனவே, அவர்களுக்கான இடஒதுக்கீடு (அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து) இருந்து வருகிறது. ஆனால், அம்பேத்கர் கூட அது நிரந்தரமாகத் தொடர்வது நல்லதல்ல என்று கூறியுள்ளார். அதற்கு ஒரு காலக்கெடு இருக்க வேண்டும்.” என்று பேசினார். உண்மையில் டாக்டர் அம்பேத்கர் நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களுக்கான அரசியல் இட ஒதுக்கீடு குறித்து தான் ஒரு கால வரையறையைக் குறிப்பிட்டிருந்தார். கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் அப்படி எதுவும் குறிப்பிடப்படாத போதும் வேண்டுமென்றே திரித்துப் பேசியவர்தான் அவர். வரலாற்றுச் சூழலில் தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இட ஒதிக்கீடு பொருந்தும் என்றால் உயர் சாதி அரிய வகை ஏழைகளுக்கு எப்படி அந்த 10% இடஒதுக்கீடு பொருந்தும்? ஆர்.எஸ்.எஸ் இதை எதிர்த்து ஏன் குரல் எழுப்பவில்லை?
பசுந்தோல் போர்த்திய புலி
கடந்த பல ஆண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் ஆதரவாளர்கள் மதவெறிக் கருத்துகளைப் பரப்பவும், வரையறுக்கவும் 500க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளையும், சிந்தனைக் குழுக்களையும் அமைத்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் பின்னணியைக் கொண்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் எந்தவொரு ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தையும் எதிர்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர். ஆயினும்கூட, விமர்சனங்களுக்கு மிகவும் நெகிழ்வான முறையில் பதிலளிப்பதன் மூலம் அதன் பொதுத் தோரணையை மாற்றியமைக்கவும் முடிவு செய்துள்ளனர். அதாவது பசுந்தோல் போர்த்திய புலியைப் போல! அதனால்தான் இது போன்ற வார்த்தை ஜாலங்களை வாரி வழங்கி வருகின்றனர்.
உண்மையில் ஆர்.எஸ்.எஸ் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் சமத்துவ மற்றும் மதச்சார்பற்ற கண்ணோட்டத்திற்கு எதிராகவே இருக்கிறது. அடிப்படையில் உயர்சாதியினரின் அமைப்பாகவே இது உள்ளது. இந்தப் பிற்போக்கு அமைப்பு சுதந்திரப் போராட்டத்தின் போது வெள்ளையர்களை ஆதரித்தது. இப்போதும் உலக மய நவ காலனியாதிக்கத்திற்கு ஆதரவாகவே உள்ளது. எனவே, இந்திய வகைப்பட்ட பாசிசமான அந்த நச்சுக் கருத்துக்களை எதிர்த்து முறியடிப்போம். தற்போது அறிவித்துள்ள இந்த முழக்கத்தில் தங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்பது உண்மையானால் ஆர்எஸ்எஸ் இன் தலைவராக ஒரு தலித்தையோ அல்லது ஒரு பிற்படுத்தப்பட்டவரையோ நியமிப்பார்களா? இந்து மத சங்கராச்சாரியார்களில் சிலரை மாற்றி ஒடுக்கப்பட்ட சமூகத்தவரை நியமிப்பார்களா?