இந்தியா

சட்டத்தை மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்

டி. ராஜா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத், சட்டப்படி பதிவு செய்யாததை பெருமையாக பேசியுள்ளார். சட்டப்படி பதிவு செய்ய மறுப்பது தேச பக்தி அல்ல, சட்டங்களில் இருந்து தப்பிப்பதற்கான வழி என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியது வருமாறு:

ஆர்.எஸ்.எஸ்க்கு மிகவும் பிடித்தமான நடவடிக்கையையே இன்று மோகன் பகவத் மீண்டும் அரங்கேற்றி இருக்கிறார். சீர்குலைவை, பாதுகாப்பு எனும் உறை போட்டு மறைக்கிறார்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் 1925ல் தொடங்கப்பட்டதுதான். அது காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டது. பலமுறை சட்ட விரோதம் என்று தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அது பதிவு செய்யப்பட்டது. இந்திய அரசியல் சாசனத்துக்கு இணங்க இயங்குகிறது. அது மறைப்பதற்கு ஏதுமில்லை; வெளிப்படையானது.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் ரகசியத்திலேயே பிறந்தது. ரகசியமாகவே இயங்குவது. இப்போதும் அதைத்தான் தொடர்கிறது. “தடை செய்யப்பட்டதே தனக்கான அங்கீகாரம்” என்று சொல்வது நகைப்புக்குரியது. பதிவு செய்யப்படாத பல அமைப்புகளும், தீவிரவாத அமைப்புகளும் கூட தடைசெய்யப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ் தன்னை அந்தக் கூட்டத்தோடு சேர்த்துக் கொள்கிறதா?

சட்டப்படி பதிவு செய்து கொள்ள மறுப்பது தேசபக்தி அல்ல. அது சட்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழி. இதனால் ஆர்.எஸ்.எஸ் பொதுக் கணக்குத் தணிக்கை, வரி விதிப்பு, சட்டப் பொறுப்பு ஆகியவற்றிலிருந்து தப்பிக்கிறது. அதன் தலைமையகம் கூட அதன் பெயரில் பதிவு செய்யப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ் ஒரு “இந்துத் தர்ம” இயக்கம் என்று மதத்துடன் இணைத்துக் கொள்வது மற்றொரு மோசடியாகும். எந்த மதத்திற்கும் இந்தியாவில் பதிவு தேவை இல்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் இந்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை; யாரையெல்லாம் விலக்கி வைப்பது என்ற வெறுப்புக் கருத்தியலையே அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

“சாதி மனதில் மட்டுமே உள்ளது” என்று கூறுவது, அதை ஒழிக்கத் தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த சீர்திருத்தவாதிகள், போராட்ட வீரர்களை அவமதிப்பதாகும். குரு நானக், கபீர், பூலே, பெரியார், அம்பேத்கர் போன்றோர் அதை அழிக்கப் போராடினர். ஆனால் சாதி இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. அதனை மனதளவிலும், அமைப்பு வழியாகவும் கட்டமைத்துக் காப்பாற்றும் இயக்கங்களில் முக்கியமானது ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ் இன் சொற்கள் மாறுகின்றன; ஆனால் அதன் வஞ்சகம் மட்டும் மாறவே இல்லை. வரலாற்றைத் திரித்து எழுதுவது, சட்டத்தின் பிடிகளில் இருந்து தப்பிப்பது, தனது மதவாத இலக்குகளுக்கு ஏற்ப ஒரு பிளவு கொடுக்கப்பட்ட இந்தியாவை மறு கட்டமைப்பு செய்வது என்ற அதன் நோக்கம் அப்படியே இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button