இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – 2
தீர்மானங்கள் 9 முதல் 19 வரை

9. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழை ஏற்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நீண்டகாலக் கோரிக்கையாகும். அந்தந்த மாநில மொழிகளை அலுவல் மொழியாக அறிவிக்க உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்று 1965ல் ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்ட முடிவு உள்ளது.
இதனைப் பின்பற்றி இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து வரும் கோரிக்கையை, ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பும் போதெல்லாம் உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.உச்சநீதிமன்றத்தில் இந்தி அல்லது அம்மாநிலத்தில் ஆட்சி மொழியாக உள்ள மொழியைப் பயன்படுத்த ஆளுநர், குடியரசுத்தலைவரின் முன் ஒப்புதலுடன் அதிகாரம் அளிக்கலாம் என இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 348(2) தெளிவாக எடுத்துரைத்துள்ளதை சட்டம் நீதி அமைச்சகத்தின் நிலைக்குழு வின் 75 மற்றும் 84 வது மானியக் கோரிக்கைகளுக்கான அறிக்கைகள் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை இல்லை என்பதை வலியுறுத்துகின்றன. இதனை 2016ல் நாடாளுமன்ற நிலைக்குழுவும் தெளிவு படுத்தியுள்ளது.இருப்பினும் ஒன்றிய அரசும் உச்ச நீதிமன்றமும் நிராகரித்து வருவது மாநில மக்களின் உரிமைக்கும் உணர்வுக்கும் விரோதமான செயலாகும்.
தமிழ்நாட்டின் அலுவல் மொழியான தமிழை, உயர்நீதிமன்ற கூடுதல் அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 6.12.2006ல் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழை அறிவித்திட வேண்டுமென ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26வது தமிழ் மாநிலக்குழு மாநாடு வலியுறுத்துகிறது.
10. வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை ஒன்றிய -மாநில அரசுகள் நிறைவேற்றக் கோரி..
அண்மைக் காலமாக வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒன்றிய-மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டுமென்ற கோரிக்கை வழக்கறிஞர்கள் சமூகத்தினரிடம் வலுவான குரலில் ஒலிக்கப்படுகிறது.இதன் காரணமாக வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் சிரமங்களை மனதிற் கொண்டு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை வரைவு செய்வதற்கு ஏழு பேர் கொண்ட குழுவினை இந்திய பார் கவுன்சில் அமைத்தது. அக்குழு பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கான பரிந்துரைகளை வழங்கியது.இந்திய பார் கவுன்சில் 2.07.2021 இல் “ வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட வரைவு மசோதா 2021” எனும் பெயரில் அறிமுகப்படுத்தியது.
எனவே வழக்கறிஞர்களைப் பாதுகாக்க ஒன்றிய மாநில அரசுகள் “வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை” உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26வது தமிழ்நாடு மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.
11. மூத்த குடிமக்களுக்கான இரயில் பயண கட்டணச் சலுகையை மீண்டும் அமுல்படுத்து.
2009 ஆம் ஆண்டு முதல் இந்திய இரயில்வேயில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும் திருநங்கைகளுக்கும் இரயில் பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு கோவிட் – 19 நோய்த் தொற்று பரவல் காரணமாக இரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது.இரயில் சேவை படிப்படியாக தொடங்கிய போது ரயில்வேயின் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 20.03.2020 முதல் மூத்த குடிமக்களுக்கான பயண கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகையை மீண்டும் அமுல்படுத்துமாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் கோரிக்கையை முன்வைத்து வலியுறுத்தியது.
இச் சலுகையை இரத்து செய்ததன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் இந்திய இரயில்வே துறைக்கு ரூ.8913/& கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் அளிக்கிறது.
மூத்த குடிமக்களுக்கான இரயில் பயண கட்டணச் சலுகையை மீண்டும் அமுல்படுத்துமாறு ஒன்றிய அரசின் இரயில்வே அமைச்சகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில 26வது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
12. சிவகளையில் தொல்பொருள் அருங்காட்சியகம் உடனடியாக அமைத்திடுக!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர்-கொற்கை-சிவகளை ஆகிய மூன்று இடங்களும் தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்பட்டு தமிழக அரசின் தொல்லியல் துறையின் சார்பில் அகழ்வாய்வுகள் நடந்து வருகிறது.தூத்துக்குடி மாவட்டத்திற்கு ”சிவகளை” ஒரு முக்கிய அடையாளமாக இடம் பெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், சிவகளையில் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொல்லியல் தளம் சிவகளையைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் குமர குருபர சுவாமிகள் மேனிலைப் பள்ளியில் வரலாற்றாசிரியராக பணிபுரியும் மாணிக்கம் அவர்களால் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.
சிவகளை பரம்பு பகுதியில் 25.05.2020 முதல் தமிழ்நாடு தொல்லியல் துறையால், இதுவரை மூன்று கட்டங்களாக அகழ்வாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன.
சிவகளை பரம்பில் 5 இடங்களில் 70 குழிகள் அமைக்கப்பட்டன. இந்த அகழாய்வில் ”ஆதன்” என்ற தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடு-சுடுமண் பானைகள், முதுமக்கள் தாழிகள் இரும்பு உலோக பொருட்கள் – விளையாட்டு பொருட்கள் -களிமண் பொம்மைகள் – களிமண் கிண்ணம்-கல்லால் செய்யப்பட்ட பந்து, உலோகங்களை சாணைப் பிடிக்கும் கல் -செம்பு நாணயங்கள் – பானைகள் – அழகிய வடிவமைப்பில் வரையப்பட்ட வெள்ளை வண்ண வேலைப்பாடுகள் உடைய கருப்பு – சிவப்பு வண்ணக்கலயங்கள்- குடுவைகள் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சில முதுமக்கள் தாழியில் இருந்து 3200 ஆண்டுகள் பழமையான நெல் மணிகள் – எலும்புகள் உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகளை அகழ்வாராய்ச்சி பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அப்பகுதியை சுற்றிலும் இரும்பு வேலிகள் அமைத்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும். மாநில, தேசிய நெடுஞ்சாலைகளின் ஒரங்களில் “சிவகளை அகழ்வாய்வு இடம்“ குறித்த வழிகாட்டி பலகைகள் அமைக்க வேண்டும்.
2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழரின் தொன்மையை சிவகளை அகழ்வாராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது.”சிவகளை நாகரிகம்“ தமிழகத்தின் தொன்மையான நாகரிகமாகும். இத் தகவல்களை எதிர்கால தலைமுறைகள் தெரிந்து கொள்ளும் வகையில் சிவகளையில் “தொல்பொருள் அருங்காட்சியகம்“ அமைத்திட தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில 26வது மாநாடு கேட்டுக் கொள்கிறது.
13. தமிழகத்தில் நிலுவையில் உள்ள இரயில் பாதை திட்டங்களை நிறைவேற்றுக
97 ஆண்டுகளாக, இந்திய ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வந்தது.2017-18 ஆண்டு நிதியாண்டில் அந்த மரபு மாற்றப்பட்டு இரயில்வே நிதிநிலை அறிக்கை ரத்து செய்யப்பட்டு, பொது நிதிநிலை அறிக்கையுடன் இணைக்கப்பட்டது.
2025-26 நிதியாண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு எந்தெந்த இரயில் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தான தகவல்கள் வெளியிடப்படவில்லை.தமிழக வளர்ச்சிக்கு துணை நிற்கக்கூடிய நிலுவையில் உள்ள இரயில் பாதை திட்டங்களுக்கு போதிய நிதிஒதுக்கீடு செய்யவும், அவற்றை நிறைவேற்றவும் அக்கறை காட்டாமல், ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திண்டிவனம் முதல் செஞ்சி வழியாக திருவண்ணாமலை வரையிலான 70 கி.மீ. இரயில் பாதை, 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திண்டிவனம் முதல் நகரி வரையிலான 179 கி.மீ.இரயில் பாதை, 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அத்திப்பட்டு முதல் புத்தூர் வரையிலான 88.30 கி.மீ.இரயில் பாதை, 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஈரோடு முதல் காங்கேயம், தாராபுரம் வழியாக பழனி வரையிலான 91.05 கி.மீ.இரயில் பாதை, 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை முதல் அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான 143 கி.மீ. இரயில்பாதை, 2013-&14 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் முதல் இருங்காட்டு கோட்டை, ஆவடி வழியாக கூடுவாஞ்சேரி வரையிலான 60 கி.மீ .இரயில்பாதை, சென்னையிலிருந்து மகாபலிபுரம் வழியாக கடலூர் வரையிலான 179.28 கி.மீ இரயில்பாதை, மொரப்பூர் முதல் தர்மபுரி வரையிலான 36 கி.மீ. இரயில்பாதை முதலானவை முழுமையடையாமல் பகுதியாக நிற்கின்றன.
இரட்டை இரயில் பாதை திட்டங்களான, 160 கி.மீ. தொலைவிலான விழுப்புரம் முதல் காட்பாடி வரையிலான இரயில்பாதை, 160 கி.மீ. தொலைவிலான சேலம்-கரூர்-திண்டுக்கல் இரயில் பாதை, 65கி.மீ. தொலைவிலான ஈரோடு – கரூர் இரயில்பாதை, 273 கி.மீ தொலைவிலான விழுப்புரம்-திண்டுக்கல் இரயில்பாதை ஆகியனவும் அகல இரயில் பாதைகளான நாகப்பட்டினம் – திருத்துறைப்பூண்டி- வேளாங்கண்ணி இரயில்பாதை, மன்னார்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான பாதை, தஞ்சாவூர் முதல் பட்டுக்கோட்டை வரையிலான பாதை உட்பட பல திட்டங்கள் நடைபெறாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. இவற்றில் பல இரயில் திட்டங்களுக்கு 2024-&25 நிதியாண்டு பொதுநிதிநிலை அறிக்கையில் வெறும்ரூ. 1000/& மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழகத்தில் நிலுவையில் உள்ள இரயில் பாதை திட்டங்களில் பெரும்பாலானவை கிராமப் புறங்களின் வழியாக வருகிறது. கிராமப் புற வளர்ச்சிக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், ஒட்டு மொத்தமாக இந்தியாவின் வளர்ச்சிக்கும் இந்தத்திட்டங்களை நிறைவேற்றுவது மிகவும் அவசியமானதாகும்.
அதைப்போல சத்தியமங்கலத்தில் இருந்து கோபி வழியாக ஈரோடு அகல ரயில்பாதை 69.3 கி.மீ தொலைவு, சத்தியமங்கலம்-அந்தியூர்-மேட்டூர் ரயில்பாதை 90 கி.மீ திட்டங்களுக்கான நில அளவீட்டுப் பணிகள் முடித்து 2006ம் ஆண்டே இரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டும், இதுவரை திட்டப்பணிகள் துவங்கப்படவில்லை.
எனவே தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள இரயில் பாதை திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, அத்திட்டங்களை மேலும் காலதாமதம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26வது தமிழ்நாடு மாநில மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
14. உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க நடவடிக்கை கோரி
உயர்நீதிமன்றத் தீர்ப்பில், தனக்குரிய நியாயம் கிடைக்கவில்லை என்று கருதும் எந்த ஒரு குடிமகனும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளமுடியும். உச்சநீதிமன்றம் டெல்லியில் இருப்பதால், தென்பகுதியைச் சேர்ந்த சாதாரண மக்கள், அங்கு சென்று வழக்கறிஞரைக் கண்டறிந்து, பெரும் செலவு செய்து, மேல் முறையீடு செய்வது அவர்களுக்கு எட்டாக் கனியாக உள்ளது. இது சாமானிய மக்களுக்கு மேல் முறையீட்டு உரிமையை மறுப்பதாகிவிடுகிறது.
ஏழை எளியமக்களும் உச்சநீதிமன்றத்தின் பலனைப் பெறவேண்டும் என்பதற்காக, உச்சநீதிமன்றத்தின் கிளையை தென்னிந்தியாவில் அமைந்துள்ள சென்னையில் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 130 வது பிரிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் வேறு எந்த இடத்திலும் அமர்வுகளை அமைக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை மற்றும் சட்ட ஆணையங்களின் அறிக்கைகளில் சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய இடங்களில் உச்சநீதிமன்றக் கிளைகளை அமைக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பெருகி வரும் மக்கள்தொகை, அதிகரித்து வரும் வழக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்ட சவால்களை கருத்தில் கொண்டு, இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள எளிய மக்கள் பயனடையும் வகையில், சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஒன்றிய, மாநில அரசுகளை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது தமிழ்நாடு மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
15.வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உறுதிச் சட்டம் மற்றும் அரசு கொள்முதலை உத்தரவாதம் செய்திடுக!
வேளாண் ஆணையப் பரிந்துரைப்படி விளைப் பொருட்களுக்கு விலை அறிவிக்கப்படும் என்றும் இதன் மூலம் மும்மடங்கு உற்பத்தியும் .விவசாயிகளுக்கு இரு மடங்கு லாபமும் கிடைக்கும் என்றும் கூறிய பாஜக அரசு, நடைமுறையில் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது. விவசாயிகளுக்கு விரோதமான, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.
13 மாதங்களாக, 700 பேர் உயிரை பலி கொடுத்து, விவசாயிகள் போராடி அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்தனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஒன்றிய அரசு எழுத்து மூலமாக உறுதியளித்த பின்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் இது வரை எந்தக் கோரிக்கையையும் ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை. இந்தநிலையில் விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக்கி உள்ளோம் என ஒன்றிய வேளாண்மை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறுகிறார். எனவே இந்தியா முழுவதும் விவசாயிகல் போராடி வருகின்றனர்.
வேளாண் ஆணையத்தின் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்திடும் உத்திரவாதச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 23 வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசு விலை நிர்ணயம் செய்கிறது. பிற பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்வதுடன், சந்தையில் விலைவீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படும்போது உடனடியாக அரசு கொள்முதல் செய்திடும் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
16. பருவகால இடர்பாடுகளைத் தடுத்திட, சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடுக!
சுற்றுச் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் இந்திய விவசாயம் சீர்குலைந்துள்ளது. காலநிலை மாற்றம் என்பது வெறும் சுற்றுச் சூழல் பிரச்சனையாக இல்லாமல், வர்க்கப் பிரச்சனையாகவே காணப்படுகிறது. அதனால் பெரிதும் பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான். ஒழுங்கற்ற பருவமழை, நிலத்தடிநீர் வெகுவாக கீழிறங்குவது, வெப்பநிலை உயர்வுகள், மற்றும் கடுமையான வானிலை மாற்றங்கள் ஆகியவைகளால் இந்திய விவசாயிகள் பெரும்பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
ஆனால், சுற்றுச்சூழலைப் பற்றி எள்ளளவும் கவலையின்றி, அதனை மேலும் மாசு படுத்தும் வகையில், பெரு நிறுவனங்களின் நலன்களுக்கே மோடி அரசு முன்னுரிமை தருகிறது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் முதலாளிகளுக்கு தண்டனை வழங்கி, அவர்கள் செலவில் மாசு நீக்கத்தை உறுதி செய்தல், ,விவசாயிகள், மீனவர்கள், வனங்களில் வசிக்கும் பழங்குடிமக்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும். இடையூறுகள் இல்லாத செழுமையான விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் பருவகாலங்களுக்கு ஏற்ப தொழில்கள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் அரசு பொதுமுதலீட்டை வெகுவாக அதிகரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநாடு வலியுறுத்துகிறது.
17. காவிரியைத் தூய்மைப்படுத்தும், ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை உடன் நிறைவேற்றுக!
கர்நாடகத்தில் இருந்தே காவிரி நீர் மாசு கலந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் ஆலைக்கழிவுகளும், திடக்கழிவுகளும், ஒவ்வொரு ஊரின் கழிவுநீரும் காவிரியில் கலக்கப்பட்டு, நீர் பெரிதும் மாசு படுத்தப்படுகிறது.
காவிரியை மீட்டெடுக்க 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாடு சட்டப்பேரவையில், ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்கீழ், தமிழகத்தில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளுக்கு புத்துயிரூட்டுவது, நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது, மாசுபடுதலைத் தடுப்பது ஆகிய முக்கிய பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. முதல் கட்டமாக மேட்டூரில் இருந்து திருச்சி வரையில் ரூ 1,958 கோடியிலும், பின்னர் கடல் முகத்துவாரம் வரை ரூ 8,753 கோடியிலும் திட்டபணிகள் நிறைவேற்றப்படும் என்று அப்போது சொல்லப்பட்டது. ஐந்து ஆண்டுகளான பின்னும் திட்டப்பணிகள் துவங்கவே இல்லை. இதன் முக்கியத்துவம் கருதி உடனடியாக தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, வரும் கோடைக்காலத்திலிருந்து திட்டபணிகளை துவக்கவேண்டுமென என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநாடு கேட்டுக்கொள்கிறது.
18. கோவில்- மடம், பிற மத நிறுவனங்களுக்கு சொந்தமான நில சாகுபடி விவசாயிகளுக்கு குத்தகை உரிமைச்சான்று வழங்கிடுக
பல்வகை ஒப்பந்த சாகுபடி முறைகளில் பல்லாண்டுகளாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு குத்தகை பதிவு சட்டப்படி உரிமை சான்றை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வழங்காது அரசு தடை செய்துள்ளது. தொடர் இயற்கைப் பாதிப்பின் காரணமாக சாகுபடி செய்த விவசாயிகள் குத்தகையை செலுத்திட முடியவில்லை. இந்த நிலையில் இவர்கள் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்து விவசாயிகளை நிலவெளியேற்றம் செய்து வருவதுடன், உள்ளஉள்ளூரிலேவேறு நபர்களிடம் அந்நிலத்தை மீண்டும் குத்தகைக்கு கொடுத்து., .கிராமப்புற ஒற்றுமையை அறநிலைய ஆட்சித்துறை சீர்குலைத்து வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து ஏற்படும் இயற்கை பேரழிவுக் காலங்களில் அரசே நிவாரணம் கொடுத்து ஓரளவு பாதுகாப்பை அளித்து வரும் நிலையில்… பாதிப்பான இந்த ஆண்டுகளில் கூட குத்தகையை தள்ளுபடி செய்யாது விவசாயிகளை நிலவெளியேற்றம் செய்து வருகிறது. ஆகவே குத்தகை விவசாயிகளை பாதுகாத்திட, மேற்கண்ட அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு சாகுபடிக்கான உரிமைச் சான்று வழங்கிடவேண்டும். மேற்கண்ட நிலங்களுக்குச் சொந்தமான புஞ்சை நிலப்பகுதிகளில், புஞ்சைப்பயிர்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகளிடம், மனைப் பகுதிபோல் வாடகைத் தொகை நிர்ணயிப்பதையும் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநாடு வலியுறுத்துகிறது.
19. மீண்டும் பொதுத்துறையில் பயிர்காப்பீட்டு திட்டம் வேண்டும்
ஒன்றிய அரசின் வேளாண்துறை அமைச்சராக தோழர் சதுரானந்த் மிஸ்ரா இருந்த போது முதன் முதலில் அமுல்படுத்தப்பட்ட வேளாண்மை காப்பீட்டுத்திட்டம், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் பொறுப்பில் விவசாயிகளுக்கு ஓரளவு பாதுகாப்பை கொடுத்தது. தற்பொழுது தனியார் காப்பீடு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர்.
எனவே மீண்டும் ஒன்றிய, மாநில அரசுகளே பொறுப்பேற்று பயிர்க் காப்பீடு திட்டத்தை, பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் மூலம் நடத்திட வேண்டும். பயிர் மகசூல் சோதனையை தனிநபர் அடிப்படையில் கணக்கிட்டு, மகசூல் பாதிப்பிற்கு ஏற்ப இழப்பீடு வழங்கிட வேண்டும். கடந்த ஐந்தாண்டு சராசரி மகசூலை அடிப்படையாகக் கொண்டு நடப்பு பருவ மகசூல் குறைவிற்கு மட்டுமே இழப்பீடு என்பது சரியானதல்ல. வறட்சி, புயல், மழை வெள்ளம், நதிநீர் பற்றாக்குறை என மாறி மாறி ஒவ்வொரு ஆண்டும் பாதித்து உற்பத்தி வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், கடந்தாண்டு இழப்புகளை ஒப்பிடக் கூடாது.
எனவே வேளாண்துறையால் மாவட்டவாரியாக வரையறுக்கப்பட்டுள்ள வேளாண்பயிர் உற்பத்திதிறனை அடிப்படையாகக் கொண்டு இழப்பீட்டை நிர்ணயித்து வழங்கிட வேண்டும் என மாநாடு கேட்டுக்கொள்கிறது.