தமிழகம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவுப்பகுதி

தீர்மானங்கள் 57 முதல் 68 வரை

57. டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு…

தமிழ்நாட்டில் மதுபான சில்லறை விற்பனையை தமிழ்நாடு அரசு நேரடியாக மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மூலம் நடைபெறும் மதுபான சில்லறை விற்பனை பிரிவில் பணியாற்ற சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

பணி நியமனம் பெற்று 23 ஆண்டுகள் பணித் தொடர்ச்சி கொண்ட டாஸ்மாக் பணியாளர்கள், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், இஎஸ்ஐ உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 2025 அக்டோபர் 2 ஆம் தேதி தலைமைச் செயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்பு மற்றும் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியுசி) அறிவித்துள்ளது. சங்கம் அறிவித்துள்ள போராட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 26-வது மாநாடு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.

பணியாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக அரசு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறது.

58. பீடி தொழிலாளர் கூலி உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்குக!

தமிழ்நாட்டில் சுமார் மூன்று லட்சம் பேர் பீடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உயர்ந்த பட்ச ஜிஎஸ்டி உட்பட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக பீடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்து முத்தரப்பு ஒப்பந்தம், அரசு ஆணை மூலம் அமலாக்கப்படுகின்றன. கடந்த ஒப்பந்தம் 2022-ஆம் ஆண்டு மே பத்தாம் நாள் ஏற்பட்டது. இதற்கு தொழிலாளர் துறை நாளது தேதி வரை இறுதி அரசாணை வெளியிடவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக காரணம் சொல்லப்படுகிறது. இது சரியான அணுகுமுறை இல்லை. முத்தரப்பு ஒப்பந்தத்தை வழக்கு மன்றத்தில் தீர்வு காண தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10.5.2022 ஆம் நாள் ஏற்பட்ட 12 (3) முத்தரப்பு ஒப்பந்தம் 9.5.2025 ஆம் நாள் முடிவுக்கு வந்துவிட்டது. புதிய கூலி உயர்வுக்கான கோரிக்கைகளை ஏ.ஐ.டி.யு.சி உட்பட தொழிற்சங்கங்கள் தொழிலாளர் துறையிடமும், நிர்வாகங்களிடமும் சமர்ப்பித்து விட்டன. எனவே புதிய கூலி உயர்வுக்கான பேச்சுவார்த்தையை துவங்கி கூலி ஒப்பந்தம் ஏற்படுத்தித் தர வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 26 வது மாநாடு கேட்டுக்கொள்கிறது.

59. புலம் பெயர்ந்த தொழிலாளர்

நாட்டின் சமச்சீர் அற்ற வளர்ச்சி காரணமாக, ஓரளவு வளர்ந்த பொருளாதாரத்தை கொண்ட தென் மாநிலங்களை நோக்கி, வட மாநில தொழிலாளர்கள் படையெடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 30 லட்சம் வரையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் இது குறித்த சரியான தரவுகளை இதுவரை திரட்டவில்லை.

பொதுவாகவே சொந்த ஊரில் தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தால் தங்களுடைய உரிமைகளை வலிமையாக வலியுறுத்துவார்கள் என்பதற்காகவே, வெளியூர், வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் முறை அதிகரித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் அயல் மாநிலத் தொழிலாளர்கள் வேலை பார்க்கும் போது, தமிழ்நாட்டு தொழிலாளர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று வேலை தேட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. பெருமுதலாளிகளின் வரையறையற்ற லாப வேட்டையும், கொடூர சுரண்டலும்தான் புலம் பெயர்ந்த தொழிலாளர் முறைமையை அதிகரிக்கின்றன.

மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சட்டம் ஒன்று இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி அரசுகளோ, வேலையளிப்பவர்களோ கவலைப்படுவதில்லை. குறைந்த சம்பளம், மிகக் கூடுதலான வேலை நேரம் என்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பு கொடூரமாக சுரண்டப்பட்டு வருகிறது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்து அடையாள அட்டை வழங்கும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது என்றாலும், புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டத்தை உயிரோட்டத்தோடு அமலாக்குவதற்கும், சம வேலைக்கு சம சம்பளம், குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றை அமலாக்குவதற்கும் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் அந்தந்த மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு, புலம்பெயர் தொழிலாளர் முறை மூலம் வேலை இழப்பு ஏற்படாதவாறு பொருத்தமான விதிமுறைகளை வகுத்து செயல்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26 வது மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.

60.கிராம ஊராட்சி தொழிலாளர்களை முழுநேர தொழிலாளர்களாக அறிவித்திடுக!

தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர், தூய்மை காவலர்கள் நேரம் காலம் இல்லாமல், விடுமுறை, பண்டிகை கால விடுமுறை போன்ற எதுவும் வழங்கப்படாமல் வேலை வாங்கப்படுகிறது. ஆனால் இவர்கள் அரசால் பகுதி நேரத் தொழிலாளர்கள் என வகைப்படுத்தப்படுகின்றனர். நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் வரை, 20 ஆண்டுகளைக் கடந்து பணிபுரியும் தொழிலாளிக்கு கூட அதிகபட்சமாக ரூபாய் 6000 தான் ஊதியமாக வழங்கப்படுகிறது. அதிகாலை 6 மணிக்கு வேலையை தொடங்கி. இரவு இருட்டும் நேரம் வரை இடுப்பொடிய பணி புரியும் இத்தொழிலாளர்களை, பகுதி நேரத் தொழிலாளர்கள் என்று அரசு கூறுவது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல.

எனவே. கிராமப்புற தொழிலாளர்கள் அனைவரையும் முழுநேர தொழிலாளிகளாக அறிவித்து பணி நிரந்தரம் செய்து, கால நிர்ணய ஊதியம் வழங்கி, அவர்களின் 75 ஆண்டு கால கோரிக்கைகளை தீர்க்க வேண்டுமென தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 26 வது மாநாடு கேட்டுக் கொள்கிறது.

61.ஆஷா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்க

தமிழகத்தின் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் 2700 ஆஷா பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் தமிழகத்தின் மலைப்பிரதேச கிராமங்களில் மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்தும் வேலையைச் செய்து வருகிறார்கள். இந்தியாவில் தாய் இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் குறைந்ததற்கு ஆஷா பணியாளர்களின் பெரும் பங்களிப்பே காரணம் என்று பிரதமர் உட்பட அமைச்சர்களும் பல்வேறு கட்டங்களில் கூறியுள்ளார்கள். கொரனா பெருந்தொற்று காலத்தில் ஆஷா பணியாளர்களின் பெரும் பங்களிப்பைப் பாராட்டி உலக சுகாதார அமைப்பு அவர்களுக்கு 2022ம் ஆண்டுக்கான உலக சுகாதாரத் தலைவர்கள் என்ற பெருமையை வழங்கி கௌரவித்தது.

மாநில அரசின் சுகாதார நலத் திட்டங்களை கிராமங்களின் செயல்படுத்தி வரும் ஆஷா பணியாளர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாதம் ரூ.26000/- தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது தமிழ் மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.

62. சேலம் சிறைத் தியாகிகளுக்கு மணிமண்டபம் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டும் நன்றியும்.

விடுதலை இந்தியாவில் சேலம் சிறையில் வைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்டுகள் மீது 11.02.1950 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 22 பேர் மரணம் அடைந்தனர். ஏராளமானவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் நினைவாக, சேலத்தில் ஒரு நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது தமிழ்நாடு மாநில மாநாட்டில், 16.8.2025 அன்று நடைபெற்ற, “வெல்க ஜனநாயகம்” கருத்தரங்கில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், சேலத்தில் அந்த 22 தியாகிகளுக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும், அதற்கான உத்தரவைப் பிறப்பித்து விட்டு தான் மாநாட்டுக்கு வந்ததாகவும், உடனடியாக பணிகள் துவங்கப்படும் என்றும் அறிவித்தார். கோரிக்கையை ஏற்று மணிமண்டபம் கட்ட உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவிக்கிறது.

63. அரசுப் பண்ணைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்க

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பண்ணைகள், எண்ணெய் வித்து பண்ணைகள், தோட்டக்கலை பண்ணைகள் என பல்வேறு அரசு பண்ணைகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கின்ற வகையிலும் பல்வேறு செயல்பாடுகள் கடந்த காலத்தில் நடைமுறையில் இருந்தன. தற்போது உரிய நிதி ஒதுக்கப்படாமலும், சரியான கண்காணிப்பு இல்லாமலும் பண்ணை நிலங்கள் பல இடங்களில் தரிசு போடப்பட்டு அது முழுமையாக ஆராய்ச்சிக்கும், விவசாயிகளுக்கும் பயனளிக்காத நிலையில் உள்ளது.

தமிழ்நாடு அரசு உடனடியாக இதுகுறித்து விரிவாக பரிசீலனை செய்து, அரசு பண்ணை நிலங்களை தரிசு போடாமல் முழுமையாக சாகுபடி செய்யவும், இது விவசாய உற்பத்திக்கு முழுமையாக பயன்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பண்ணைகளில் தினக்கூலியாக பல ஆண்டுகள் பணிபுரிந்து வருபவர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டுமென தமிழக அரசை 26வது தமிழ்மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.

64. நெல் கொள்முதலை தனியாருக்கு விடுவதை கைவிடுக

மத்திய அரசினுடைய நெருக்குதல் காரணமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நடைபெற்று வருகின்ற கொள்முதல் படிப்படியாக தனியாருக்கு விடும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. என்.சி.சி.எப் (National co-operative consumer federation) என்ற கூட்டுறவு நிறுவனம் இடைத்தரகர்கள், அரிசி ஆலை முதலாளிகள், நெல் அரவை முகவர்கள், லாரி போக்குவரத்து ஒப்பந்தக்காரர்களின் ஆதிக்கத்தில், கூட்டாகச் செயல்படுகின்ற கூட்டுறவு நிறுவனமாகும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தைப் போல, மத்திய அரசுக்கு ஒரு முகவராக கொள்முதல் செய்வதற்கு இந்த கூட்டுறவு நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பின் காரணமாக டெல்டா மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் இந்த நிறுவனத்தின் மூலம் கொள்முதல் நடைபெற்றது. பெரிய அளவிற்கான நிதி மோசடிகள், விவசாயிகளுக்கு உரிய தொகை கிடைக்காத காரணத்தினால் இந்தக் கொள்முதல் முற்றிலுமாக தோல்வியடைந்து, தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.எனவே தமிழக அரசு ஒன்றிய அரசினுடைய அழுத்தத்திற்கு அடிபணியாமல் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமே முழுமையாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

மேலும் மேட்டூர் அணை நிரம்பி ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்ற சூழ்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பெரும்பகுதி விவசாயம் செய்யப்பட்டிருக்கிறது. விவசாயிகள் கொண்டு வருகின்ற நெல்லை முழுமையாக தடையின்றிக் கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடுகள் செய்வதில் குறைபாடுகள் உள்ளன. எனவே உடனடியாக தமிழக அரசு அதற்கான முன்னேற்பாடுகளை செய்து தங்கு தடைஇன்றி கொள்முதல் செய்யவும் உடனுக்குடன் இயக்கம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

65.வீடில்லாதோர் வீடு கட்ட தலா ரூ.6 லட்சம் மானிய நிதி வழங்குக

ஒன்றிய அரசும், மாநில அரசும் ஒருங்கிணைந்து வீடு கட்டும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு தற்போது வழங்கப்படும் நிதி பற்றாக்குறையால் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. வீடு கட்டும் பணி பாதியில் நின்று விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு வறுமை நிலையில் வாழும் குடும்பங்கள் அனைத்தும் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளுடன் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு கட்டிட, குடும்பங்களுக்கு தலா ஆறு லட்சம் முழு மானியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26 வது மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.

66. வசிப்பிடம் வழங்கும் பெரும் திட்டம் உருவாக்குக

நீர் தேக்கங்கள், நீர் வழிப்பாதைகள், வடிகால்களின் கரைகள், சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இதே வகைப்பட்ட நிலங்களில் தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள், தனியார் நடத்தும் கேளிக்கை விடுதிகள் போன்ற நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறித்து எந்த கேள்வியும் யாரும் எழுப்புவதில்லை.

ஆனால் வீடற்றோர் குடியிருப்புகள் அனைத்தும் அகற்றப்படுவது இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் சேதாரங்களை தடுப்பதற்கு இன்றியமையா தேவை என்பது அரசின் கொள்கையாக இருக்க வேண்டும் என நீதிமன்ற தீர்ப்புகளை வரவேற்கிறோம். ஆனால் இதில் உடல் உழைப்பு மட்டுமே வாழ்க்கையின் ஒரே ஆதாரம் என்ற நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு மாற்று வீடு, மனை நிலம் வழங்கி, வீடுகள் கட்டித் தருவது குடிமை சமூகத்தின் தவிர்க்க முடியாத சட்டப் பூர்வ கடமை பொறுப்பாகும் என்பதை சமூகம் உணர வேண்டும்.

மேலும் கால வளர்ச்சியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் சில நீர்த் தேக்கங்கள் நீர்வழிப் பாதையில் முற்றிலுமாக தானாக தூர்ந்து எதிர்காலத்திலும் அந்த நிலத்தை பயன்படுத்த முடியாத நிலையை எட்டி உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியாளர்கள் தலைமையில் வல்லுநர் குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தீர்வு காண்பதும் தமிழ்நாட்டில் வசித்து வருவோர் அனைவருக்கும் வசிப்பிடம் வழங்குவதும் அவசியமாகும். இந்த முக்கியப் பிரச்சினையில் அரசின் ஆட்சேபகரமான நில வகைகளில் வசித்து வரும் குடும்பங்களுக்கு தலா 10 சென்ட் மனை வழங்கும் ஒரு பெரும்திட்டம் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

67. வேலை நாள்களை உயர்த்துக

தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வேலை நாள்களை 150 நாள்களாக உயர்த்தப்படும் என தி.மு.கழக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது. தற்போது கர்நாடக மாநிலத்திலும் ராஜஸ்தானிலும் வேலை நாட்களை உயர்த்தியிருப்பது போல் தமிழ்நாட்டிலும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நாள்களை 150 நாள்களாக உயர்த்தி வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26 வது மாநில மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

68. மூடிய என்டிசி பஞ்சாலைகளை திறந்து நடத்துக:

தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமாக இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் 23 ஆலைகள் இயங்கி வந்தன. தமிழ்நாட்டில் கோவை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 7 இடங்களில் உள்ளன. கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது இந்த ஆலைகள் மூடப்பட்டன. அதனால் தேசிய பஞ்சாலைக் கழகத்துக்கு சொந்தமான இந்த ஆலைகளில் பணியாற்றிய 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ஆலைகளை முழுமையாக இயக்கிட வேண்டும் என்று மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

நிறைவு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button