Uncategorizedதமிழகம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – 4

தீர்மானங்கள் 34 முதல் 43 வரை

34. மத்திய, மாநில அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பல லட்சக்கணக்கான காலியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

தற்போதைய ஒன்றிய அரசு கடைபிடித்து வரும் மக்கள் விரோதக் கொள்கைகளின் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் தலைவிரித்தாடுகிறது. கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தைத் தீவிரமாகக் கவனத்தில் எடுத்து இதனை ஓரளவிற்காவது தீர்த்து வைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு துறைகளில் உள்ள பல லட்சக்கணக்கான காலியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு முன் வர வேண்டுமென வலியுறுத்துகிறது.

அதே போன்று மத்திய, மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களும், இந்நிறுவனங்களில் காலியாக உள்ள அனைத்துப் பதவிகளையும் நிரப்பிட வேண்டும். வேலை வாய்ப்பினை அடிப்படை உரிமையாக்க வேண்டுமெனப் போராடி வரும் தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவினைத் தெரிவித்துக் கொள்வதோடு இப்போராட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாகப் பங்கு கொள்ளும் என்பதனையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 26 வது மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

35. மூடப்பட்ட தரணி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்துக…!

தென்காசி மாவட்டத்தில் விவசாயம்தான் பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக சுமார் 20,000 ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. இந்தப் பகுதி கரும்பு விவசாயத்தின் முக்கியத்துவம் கருதி எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் வாசுதேவநல்லூர் பகுதியில் தனியார் தரணி சர்க்கரை ஆலை கொண்டுவரப்பட்டுச் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையைக் கொடுக்காமல் திடீரென்று ஆலையை நிர்வாகம் மூடிச் சென்று விட்டது. இதைத் தொடர்ந்து நமது கட்சி தொடர் போராட்டங்கள் நடத்தியதுடன் நமது கட்சியின் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையில் 50 சதவீதம் பணத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். இது அந்தப் பகுதி விவசாயிகளின் மத்தியில் நமது கட்சிக்கும், விவசாயச் சங்கத்திற்கும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் தொடர்ந்து விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை பாக்கியைப் பெற்றுக் கொடுக்கவும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலன் கருதி ஆலையை உடனே திறக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது ஆலையை அரசே நடத்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 26வது மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

36. இந்திய நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் பங்காற்றிய படைத்துறை தொழிற்சாலைகளை நிர்மூலமாக்கும் மத்திய அரசின் கொள்கையைக் கண்டித்து தீர்மானம்!

இந்திய நாட்டின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை மேற்கொண்டு வரும் இந்திய அரசின் பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான 41 படைத்துறை தொழிற்சாலைகளையும் தனியார் மயமாக்கும் நோக்கோடு கடந்த 2021-ஆம் ஆண்டு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமாக மாற்றியது. படைத்துறை தொழிற்சாலை வாரியமாக இருந்ததை 7 பொதுத்துறை நிறுவனங்களாகக் கூறுபோட்டு கடந்த 4 ஆண்டுகளில் இத்தொழிற்சாலைகளுக்குப் போதுமான பணிகளைக் கொடுக்காமல் நலிவடைந்த தொழிற்சாலைகளாக மாற்றுகின்ற சதித்திட்டத்தை செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 6 தொழிற்சாலைகள் உள்ளன. பாதுகாப்புத்துறைத் தளவாட உற்பத்தியின் கதவை அதானி, அம்பானி போன்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் 100 சதவீதம் அந்நிய மூலதனத்தையும் மத்திய அரசு அனுமதித்துள்ளது. அரசின் மோசமான இக்கொள்கையை எதிர்த்தும், அரசு ஊழியராகப் பணியில் சேர்ந்த தங்களை ஓய்வு பெறுகின்ற வரையில் அரசு ஊழியராகவே பணிபுரிய அனுமதிக்க வேண்டுமெனவும் போராடி வருகின்றனர்.

தனியார் துறை கார்ப்பரேட்டுகளிடம் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியைக் கண்மூடித்தனமாக ஒப்படைப்பது என்பது நாட்டின் பாதுகாப்பையே ஆபத்துக்குள்ளாக்கிவிடும். நாடு நெருக்கடியான காலகட்டத்திற்கு வரும்போது தனியார் நிறுவனங்கள் தாங்கள் நிர்ணயிக்கின்ற விலையில்தான் அரசு தங்களிடமிருந்து தளவாடங்களை வாங்க வேண்டுமென அரசிடம் பேரம் பேசும்.

எனவே நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக மோடி அரசு எடுத்துள்ள மேற்கண்ட முடிவுகளைத் திரும்பப் பெற வேண்டுமெனவும், படைத்துறை தொழிற்சாலைகளை மீண்டும் அரசுத்துறை தொழிற்சாலைகளாக மாற்றியமைக்க வேண்டுமெனவும், அது வரையில் இத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களைக் கட்டாயப்படுத்திப் பொதுத்துறை ஊழியர்களாக மாற்றாமல் அவர்களை அரசு ஊழியராகவே நீட்டிக்க வைக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 26வது மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

37. மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து 2003-ஆம் ஆண்டு அன்றைய பிஜேபி அரசு பங்களிப்பில்லாத உத்தரவாதப்படுத்தப்பட்ட பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பணியில் சேரும் அரசு ஊழியர்களுக்குப் பங்களிப்புள்ள புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி அரசு ஊழியர்களின் ஓய்வுக் கால வாழ்க்கையைக் கேள்விக்குறியாக மாற்றியது. பங்களிப்பு பென்ஷன் திட்டம் என்பது பங்குச்சந்தையைச் சார்ந்திருக்கும் பென்ஷன் திட்டம் என்பதனால் அது எந்நேரமும் பெரும் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்துவதற்குச் சாத்தியமுள்ளது. எனவேதான் அரசு ஊழியர்கள் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

பங்களிப்பு பென்ஷன் திட்டத்தில் முன்னேற்றம் கொண்டு வருகிறோம் எனும் பெயரில் மத்திய அரசு ஏப்ரல் 2025-ஆம் ஆண்டிலிருந்து அமல்படுத்தியுள்ள ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஊழியர்கள் அத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் புறக்கணித்துள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் நியாயமான பங்களிப்பில்லாத பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டு பங்களிப்பு பென்ஷன் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

38. தமிழ்நாட்டில் பழங்குடியினருக்குத் தனி நலத்துறை அமைக்க வேண்டும்!

தமிழ் நாட்டில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பழங்குடி மக்கள் சுமார் 10 இலட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள்.தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் பட்டியலில் 37 பழங்குடியினங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவைகளில் பல தமிழ்நாட்டிலேயே இல்லை; அண்டை மாநிலத்து இனங்கள்; இவை ஆய்வு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இல்லாத இனங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

பல பழங்குடியினங்கள் அங்கீகரிக்கப்படாமல் உள்ளன. ஒரே மாநிலத்திற்குள் ஒரு பகுதியில் பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்டவர்கள், இன்னொரு பகுதியில் அங்கீகரிக்கப்படாமல் உள்ளனர். தமிழ்நாட்டின் பல முன்மொழிவுகள் பல ஆண்டுகளாக ஒன்றிய அரசால் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் உள்ளது.

இந்த நிலையை மாற்ற தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை, மானுடவியல் வல்லுநர்கள், அரசியல் சட்ட நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, தனிக்கவனம் செலுத்தி, நிராகரிக்க முடியாத முன் மொழிவுகளை அனுப்பிச் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

புலிகள் காப்பகங்கள், வன உயிரினச் சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், யானை வழித்தடங்கள் என்ற பெயரில் சட்டவிரோதமாகப் பழங்குடிகள் வெளியேற்றப்படுகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் சுமார் 800 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வெளியேற்றப்பட்டு, உரிய சட்டப்படியான நிவாரணம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த மக்களை மீண்டும் அவர்களுடைய பூர்வீக கிராமங்களிலேயே குடியமர்த்த வேண்டும்.

வனஉரிமைச்சட்டம் 2006 நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆதிவாசி மக்களுக்கு இழைத்த அநீதிகளைச் சரி செய்யவே இச்சட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. பழங்குடியினர் நலத்துறையில் உள்ள அலுவலர்கள் யாரும் இத்துறையிலேயே நிரந்தரமாக இருப்பதில்லை எனும் நிலை உள்ளது.

அமல்படுத்தும் இடத்தில் உள்ள வருவாய்த் துறை அலுவலர்கள் சட்டத்தைப் புரிந்து பணியைத் தொடங்குவதற்குள் பணியிட மாற்றத்திற்கு ஆளாகிறார்கள். வன உரிமைச் சட்டம் பழங்குடியினருக்கு மட்டுமல்லாது, பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழ்வோர் அனைவருக்குமானது.

பட்டியல் பழங்குடியினர் சிறப்புத் திட்டத் (TRIBAL SUB PLAN-TSP)தின் மூலம் பல நூறு கோடிகள் ஒன்றிய, -மாநில அரசுகளால் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் இந்த நிதி பல்வேறு துறைகளுக்குப் பிரித்தளிக்கப்பட்டு, சிதறடிக்கப்படுகிறது.

எனவே, தமிழ்நாட்டின் பழங்குடியினர் நலத்துறையை ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்து பிரித்து, பழங்குடியினருக்கு ‘தனி நலத்துறை’ ஒன்றை அமைத்துத் தனிக் கவனம் செலுத்தித் தீர்வு காணும் வகையில் தமிழ்நாட்டுப் பழங்குடியினருக்கு தமிழ்நாடு அரசு தனித்துறையை அமைக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

39. அரசுப் போக்குவரத்து தனியார்மயம் – மின்சாரப் பேருந்து இயக்கம்:

ஜெர்மன் வளர்ச்சி வங்கி மூலம் தமிழக அரசு மின்சாரப் பேருந்துகள் மொத்தச் செலவு ஒப்பந்த மாதிரி அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூவிருந்தவல்லி, தண்டையார்பேட்டை ஆகிய நான்கு பணிமனைகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. பேருந்து பராமரிப்பும், இயக்கமும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களை நியமனம் செய்யும் ஸ்டால் வாட் தனியார் நிறுவனம் 20 -ல் இருந்து 50 வயது வரை உள்ள நடத்துநர்கள் தேவை, 26 நாட்கள் பணிபுரிவதற்கு ஒரு மாதத்திற்கு 25,102 ரூபாய் சம்பளம், இலவசத் தங்கும் வசதி உள்ளது எனவும் நேரடியாக கோடம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அல்லது வியாசர்பாடி பணிமனையில் தொடர்பு கொள்ளும் படியும் விளம்பரம் செய்துள்ளது.

மின்வாகனப் பேருந்து இயக்கம் முழுவதும் தனியார் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது ஆட்சேபனைக்குரியது.

அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் மற்றும் பராமரிப்பு ஊழியர்களுக்கு நமது சாலைப்போக்குவரத்து நிறுவனம் மூலம் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய பயிற்சி அளித்து மின்சாரப் பேருந்துகளை அரசு இயக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனை தமிழக அரசு செய்திட வேண்டும்.

தமிழகத்தில் விரிவுபடுத்தப்பட்ட மினிப் பேருந்துத் திட்டம்:

தமிழகத்தில் மினிப் பேருந்துத் திட்டத்தை தஞ்சாவூரில் தமிழக முதல்வர் துவக்கி வைத்துள்ளார். தமிழகத்தில் 1997 ம் ஆண்டு பேருந்து வசதி இல்லாத குக்கிராம மக்களுக்கு வசதி பெறும் நோக்கில் தனியார் மினி பேருந்துத் திட்டம் கலைஞர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி பேருந்துகள் இயக்கப்படாத வழித்தடம் 16 கி.மீ. மற்றும் பேருந்து இயக்க வழித்தடத்தில் 4 கிமீ. என மொத்தம் 20 கி.மீ வரை மினிப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

பல இடங்களில் அரசு வழித்தட நகரப் பேருந்துகளுக்கு வரவேண்டிய வருவாயினைத் தனியார் மினிப் பேருந்துகள் அபகரித்துச் செல்கின்றன. வழித்தட அனுமதிக்கு மாறாக மினிப் பேருந்துகள் இயக்கப்பட்டு நீதிமன்றத்தில் பல வழக்கு நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் விரிவுபடுத்தப்பட்ட மினிப் பேருந்துத் திட்டத்தின் கீழ், நூறு குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் கிராமங்களை, நகரப் பகுதிகளுடன் இணைக்கும் விதமாக அதிகபட்ச வழித்தடத் தூரத்தை 25 கிலோ மீட்டர் ஆக நீட்டிப்பு செய்து அதில் பேருந்து இயங்காத வழித்தடங்களில் குறைந்தபட்சம் 65% பேருந்துகள் இயக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து மினிப் பேருந்துகள் புறப்படவும், நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது மினிப் பேருந்து இயக்கி வருபவர்கள் புதிய திட்டத்திற்கு மாற்றம் பெற்று இயக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2094 புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய திட்டத்துக்கு மாறுதல் செய்யப்பட்ட 1009 வழித்தடங்கள் என மொத்தம் 3103 வழித்தடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டுச் செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்தின் மூலம் தமிழக மக்களுக்குப் பேருந்து இயக்கப்படாத 25,708 கி.மீ. நீளத்திற்குப் புதிதாக பேருந்து வசதி கிடைக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைவான மூலதனத்தில் இந்தப் பேருந்து வசதிகளை அரசே ஏற்று நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மினிப் பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்களே இயக்க வேண்டும். அப்போதுதான் அரசின் நோக்கமான கடைகோடி கிராமத்திற்கும் பயண வசதி என்பது நிறைவேறும். இதனை வலியுறுத்திப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இம்மாநாடு அதனை ஆதரிக்கின்றது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களை வலுப்படுத்துவதற்கான முறையில் மினிப் பேருந்துகள் மற்றும் மின்சாரப் பேருந்துகளை மாநிலப் பொதுத்துறை ஏற்று இயக்கிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநாடு கேட்டுக்கொள்கிறது.

ஒப்பந்த முறை பணியாளர் நியமனம் கைவிட வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள நிரந்தரத்தன்மை உள்ள 30,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவைகளை ஒப்பந்த முறை பணியாளர் நியமனம் செய்வதால், பணிப் பாதுகாப்பு, சட்டபூர்வ உரிமைகள் மறுக்கப்பட்டு, இடைத்தரகர்கள் லாபம் பெறுவதற்கு வழி ஏற்பட்டு விடும். சாலை போக்குவரத்து நிறுவனத்தில் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்களுக்குப் பணி நியமனம் வழங்கிட வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட்டு நேரடி நியமனம் செய்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநாடு கேட்டுக்கொள்கிறது.

40. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது குறித்த தீர்மானம்.

மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளில் உள்ள எம்.பி.பி.எஸ் – பி.டி.எஸ், ஆயுஷ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக இளநிலை நீட் நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு திணித்துள்ளது. இது ஏற்புடையதல்ல.

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. ஏழை – எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு எதிராக உள்ளது. தனியார் பள்ளிகளிலும் தனியார் பயிற்சி மையங்களிலும் பயிற்சி பெறும் வசதி படைத்த மாணாக்கர்களுக்குச் சாதகமாக உள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு, தனது கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு முறை மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியது.

நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தராமல் ஒன்றிய அரசு மிகவும் காலம் கடத்தி திருப்பி அனுப்பி விட்டது. இது கடும் கண்டனத்திற்குரியது. இப்போக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தையும், மக்களையும் இழிவுபடுத்தும் செயலாகும். மருத்துவக் கல்வியில் மாநில உரிமையைப் பறிக்கும் செயலாகும். இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 26வது மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அவசியப்பட்டால் சட்டப் போராட்டத்தை நடத்திடவும் தயார் என தமிழ்நாடு அரசு கூட்டிய சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அது வரவேற்பிற்குரியது. அம்முயற்சியைத் தொடர வேண்டும்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 26வது மாநாடு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

எனவே, ஒன்றிய அரசு மாநில மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மாநில உரிமைகளை மருத்துவக் கல்வியில் காக்கும் வகையில், உடனடியாக இச்சட்டங்களில் திருத்தம் செய்து, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்க வேண்டும், என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 26வது மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

41. அரசுப் போக்குவரத்துப் பொதுத்துறை பாதுகாத்திட வரவு -செலவு பற்றாக்குறையினை ஈடு செய்க

அரசு போக்குவரத்துக் கழகங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமார் 19,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவைகளில் 10,000 நகரப் பேருந்துகளாகும். நகரங்களுக்கு இடையே மட்டுமல்லாது கிராமப்புறங்களுக்கும் மகளிர் விடியல் பயணம் மற்றும் மாணவர் கல்வி சேவை போன்ற தமிழ்நாடு அரசின் சமூக நலத்திட்டங்களையும், குறைந்த கட்டணத்தில் பாமர மக்களின் பயணத் தேவையும் செயல்படுத்தி சேவையாற்றி வருகின்றன. இயல்பாகவே இதில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை ஈடு செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது. தற்போது ஓராண்டுக்கு சுமார் 6200 கோடியும் மாதம் ஒன்றிற்கு 500 கோடியும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றது. வரவு செலவு பற்றாக்குறையை ஈடு செய்து பொதுத்துறை போக்குவரத்துக் கழகங்களைப் பாதுகாத்திட வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. ரூபாய் 2000 கோடி அரசால் ஒதுக்கப்பட்டது வரவேற்கின்றோம்.

42. மாநிலக் கல்விக் கொள்கை மற்றும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்புவது சம்பந்தமாக

தேசியக் கல்விக் கொள்கையை நிராகரித்து, மாநிலக் கல்விக் கொள்கை அறிவித்துள்ளதை வரவேற்கின்றோம். பள்ளிக் கல்விக்கு மட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேல்நிலைக் கல்விகளுக்கும் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். அதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கற்பித்தல் முறையில் தேக்க நிலை உள்ளது. இதர மாநிலங்களைக் காட்டிலும் கல்வி அறிவில் முன்னிலையில் உள்ள தமிழ்நாட்டில் எதிர்கால மனித வளங்களை உருவாக்குவதற்கான பயிற்சிக் கூடங்களில் இத்தகைய தேக்கநிலை எதிர்கால மனித வளங்களைக் கல்வி அறிவு நிரம்பப் பெற்றவர்களாக உருவாக்குவதில் பலவீனமான போக்கை ஏற்படுத்திவிடும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றோம்.

கல்விக்கூடங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதன் மூலம் வளரும் தலைமுறைகள் கல்வி அறிவு நிறைந்தவர்களாக உருவாவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலைவாய்ப்பகங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஆசிரியர் பயிற்சி முடித்து வேலை வாய்ப்புக்காகப் பதிவு செய்து காத்திருக்கின்றனர். நிரந்தரமான இத்தகைய பணிகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்ற குறைவான ஊதியங்களில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதைக் கைவிட்டு கல்விக்கூடங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 26வது மாநாடு கேட்டுக்கொள்கிறது.

43. பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சீண்டல் மற்றும் ஜாதிய வன்முறைகளைத் தடுத்திட…

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 45,600- பள்ளிகளும், 12,631 தனியார் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் சக மாணவர்களால் கல்வி பயிலும் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களில் ஒரு சிலர் மீது போக்சோ சட்டம் போடப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் பலர் தங்களது அரசியல் மற்றும் அதிகார பலத்தைக் காண்பித்து அதிலிருந்து தப்பித்து விடுகின்றனர். இது தொடர்பாக கல்வி பயிலும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வாரந்தோறும் ஒரு வகுப்பு கட்டாயமாக ஒதுக்கி அவர்களைத் தற்காத்துக் கொள்வதற்கான ஆலோசனைகளும் வழங்கிட வேண்டும். பாலியல் சீண்டல் செய்யும் நபர்கள் மீது அரசியல் மற்றும் அதிகாரப் பலத்திற்கு ஆட்படாமல் உண்மையான புகார்கள் மீது உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் ஒரு சில மாணவர்களின் குரூரமான வன்முறைச் சிந்தனையால் தாக்கப்பட்டுள்ளனர். அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

மாணவர்களுக்கு இடையே மதம் மற்றும் ஜாதியப் பாகுபாடுகள் ஏற்படாதவாறு, ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையில் கூட்டுச் செயல்பாடு, சமூக நல்லிணக்கம், மனிதநேயத்துடன் நடந்து கொள்ளுதல் போன்ற விஷயங்கள் நல்லொழுக்க வகுப்புகளில் கற்பித்து விதைக்கப்பட வேண்டும். இத்தகைய வேறுபாடுகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் துளிர்விடும் நிலையில், உடனடியாக அதனை கண்டறிந்து களையெடுப்பதற்குரிய நடவடிக்கைகளைப் பள்ளிகளில் மேற்கொண்டிட வேண்டும்.

மாணவர்களின் கருத்தறிவதற்காகப் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கொண்ட புகார் பரிசீலனைக் குழு அமைத்திட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளுக்கு உறுதியான சட்டபூர்வ நடவடிக்கைகளும் எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநாடு வலியுறுத்துகின்றது.

இன்னும் வரும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button