இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – 3
தீர்மானங்கள் 20 முதல் 33 வரை

20. மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்
தென் மாவட்டங்களில் விவசாய உற்பத்தித்திறனை பெருக்கவும், பெருகிவரும் இடப்பெயர்வுகளை தவிர்க்கவும், தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வுரிமைகளை பாதுகாக்கவும் தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
தென் மாவட்ட விவசாயிகளுக்கு தேவைப்படும் விவசாய மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சிகள், விரிவாக்கப்பட்ட பணிகளை மேற்கொள்ள, ஒரு புதிய வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை மதுரையில் உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.
21. திருச்சி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட.
1) திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணை முதல் துவாக்குடி வரை இருபுறமும் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியாகும். நான்கு வழி சாலையாக மாற்றிய பின்பு அதிகமான எண்ணிக்கையில் வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்கு முறையான சர்வீஸ் சாலை அல்லது உயர்மட்ட பாலம் அமைத்திட வேண்டும். நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் உள்ள ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். சாலை போக்குவரத்தில் ஏற்படும் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் துரித போக்குவரத்து மெட்ரோ ரயில் திட்டம் திருச்சி மாநகரில் செயல்படுத்திட வேண்டும்
இதனை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது . அக்கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநாடு வலியுறுத்துகிறது.
22. மனித- வனவிலங்கு மோதல் தீர்வு காண வேண்டும்
தமிழ்நாட்டில் மலைப்பகுதி மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு யானைகள், புலிகள், சிறுத்தைகள், காட்டெருமை, காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகளால் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
அவர்களது கடின உழைப்பின் மூலம் உருவாக்கிய விளை பயிர்களும் சேதமாகி இழப்புகள் ஏற்படுகின்றன. வன விலங்குகளுக்கு தேவையான உணவும் தண்ணீரும் வனங்களில் இல்லை என்பதால் அதனைத் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து மனிதர்களையும் வளர்ப்பு பிராணிகளையும் தாக்குகின்றது.
இதனை தடுக்கும் விதமாக குடியிருப்பு பகுதிகளை சுற்றி ஆழமான அகழிகளும், வேலிகளும் அமைத்திட வேண்டும். வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீரும் பயிர்களும் வனங்களில் விளையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன விலங்குகளின் தாக்குதலினால் ஏற்படும் மனித உயிர் இழப்பிற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணமும், உடல் உறுப்பு சேதமாகுதல், விளைந்த பயிர் சேதமாகுதல் ஆகியவைகளுக்கு உரிய நிவாரணமும் தமிழக அரசு வழங்கிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநாடு கேட்டுக் கொள்கிறது.
23. மலைப்பகுதி வாழும் மகளிருக்கு புறநகர் பேருந்துகளில் விடியல் பயணம் விரிவுபடுத்த வேண்டும்.
மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நகர பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் விடியல் பயண திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம் நாள்தோறும் சுமார் 55 லட்சம் பெண்கள் பயண வசதி பெற்று, மாதம் ஒன்றிற்கு ரூபாய் 888/- அவர்களது வருவாயில் மீதமாகிறது.
எனவே, மலைப்பகுதியில் சாலை வசதியை மேம்படுத்தி, போதுமான நகர பேருந்துகள் இயக்கிடவும், தற்போது இயக்கப்படும் புறநகர் பேருந்துகளிலும் மகளிர் விடியல் பயணத் திட்ட பலன்களை பயன்படுத்திடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநாடு வலியுறுத்துகிறது.
24. கைத்தறி தொழிலை பாதுகாத்திடுக!
வேளாண்மைக்கு அடுத்தபடியாக ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது நெசவுத் தொழிலாகும். தற்போது நூல் விலை ஏற்றம் மற்றும் வரம்பு மீறிய ஜிஎஸ்டி வரி விதிப்பால் பருத்தி நெசவுத்தொழில் சுருங்கி வருகிறது. அதுபோல பட்டு நெசவு தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. உற்பத்தி செய்யப்பட்ட துணிக்கு மீண்டும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால் பட்டு மற்றும் பருத்தி நெசவில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே கைத்தறி நெசவு தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்தவும், இந்தத் தொழிலின் தன்மை கருதி ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்கவும், கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 ரக துணி வகைகளை கைத்தறியில் மட்டுமே நெசவு செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும், அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போலவே கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.
25. பாண்டியாறு -மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
ஈரோடு மாவட்டத்தை வாழ்வித்து வருவது பவானி ஆறாகும். கீழ் பவானி பாசன திட்டம், தடப்பள்ளி -அரக்கன் கோட்டை, கொடிவேரி,காளிங்கராயன் பாசன திட்டங்கள் அத்திக்கடவு -அவிநாசி திட்டம், கசிவு நீர் பாசன திட்டம்,நீரேற்று பாசனங்கள் உள்ளிட்ட ஏராளமான குடிநீர் திட்டங்கள் -என பல்வேறு திட்டங்கள் மூலம் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களின் பாசன தேவைகளையும், இலட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவைகளையும், தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவைகளையும் பூர்த்தி செய்து வருவது பவானி ஆறு ஆகும்
தமிழ்நாட்டில் நீலகிரி -தேவாலா காடுகளில் உற்பத்தியாகும் பாண்டியாறு, மேற்கு நோக்கி ஓடி புன்னம்புழா என பெயர் பெற்று கேரளத்தில் உள்ள சாலி யாற்றில் கலந்து கள்ளிக்கோட்டைக்கு அருகில் பயன்பாடற்று அரபிக் கடலில் கலக்கிறது.
இந்த தண்ணீரை கிழக்கு நோக்கி திருப்பி பவானி ஆற்றின் கிளை ஆறான நோயாக்கி சேர்ப்பதன் மூலம் பவானி ஆற்றின் நீர் வரத்தை அதிகரிக்க முடியும் ஈரோடு மாவட்டத்தில் தற்போதைய பற்றாக்குறை, எதிர்கால தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். மின்சாரம் தயாரிப்பதற்கு பயன்படும்.
பாண்டியாறு- மோயாறு இணைப்பு செய்வதன் மூலம் பவானி ஆற்றுக்கு மோயாற்றின் 14 டி எம் சி தண்ணீரை கொண்டுவர முடியும்.
இதற்கான ஒரு நீர் மின்திட்ட அறிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் 2006-ம் ஆண்டு கேரளத்திற்கு அனுப்பியும் அது பரிசீலனை நிலையிலேயே இருக்கிறது. சமீபத்தில் தமிழ்நாடு நீர்வள ஆதார அமைப்பும், ஒரு திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. இந்நிலையில் கேரளத்திற்கு மின்சாரம், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் என்ற வகையில் இரு மாநிலங்களும் பயனடைய முடியும்.
தமிழ்நாடு அரசு, கேரள அரசின் இசைவை பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில 26வது மாநாடு வலியுறுத்துகிறது.
26. கண்டோன்மெண்ட் கழகங்களுக்கு தேர்தல் நடத்துக!
கண்டோன்மெண்ட் கழகம் என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உள்ளாட்சி அமைப்புகளாகும். தமிழ்நாட்டில் பரங்கிமலை- பல்லாவரம், வெலிங்டன் (நீலகிரி) என இரண்டு இடங்களில் இந்த அமைப்புகள் உள்ளன. இராணுவ குடியிருப்புகளை ஒட்டி அமைந்துள்ள கண்டோன்மெண்ட் கழகங்கள், பொதுமக்களுக்கு குடிநீர், பொது சுகாதாரம், சாலை வசதி, பிறப்பு இறப்பு சான்றிதழ் போன்ற சேவைகளை வழங்கி வருகின்றன.
இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த அமைப்புகள் மக்களால் தேர்தெடுக்கப்படும் பிரதிநிதிகளாலும், இராணுவ அதிகாரிகளாலும் இணைந்து நிர்வகிக்கப்படுகின்றன.
கண்டோன்மெண்ட் கழகங்களுக்கு கடைசியாக 2015 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல், அதிகாரிகளால் நியமிக்கப்பட்டு வருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத நிலையில், எந்தவித பொது விவாதமும் இல்லாமல், நூற்றாண்டுகால வரலாறு கொண்ட உள்ளாட்சி அமைப்புகளை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் முடிந்த நிலையில், கண்டோன்மெண்ட் கழகங்களுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
27.பத்திரிகையாளர் அனைவரும் நல வாரிய பலன்களை பெற வகை செய்திடுக! காட்சி ஊடகத்தினரையும் அங்கீகரித்திடுக!
தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு பத்திரிகையாளர் நல வாரியம் தொடங்கப்பட்டது. இதில், அரசு அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவரும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர் என்ற அறிவிப்பு வெளியானது. இதன்படி மாநிலம் முழுவதும் 3,400 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அரசு அடையாள அட்டை இல்லாத பத்திரிகை மற்றும் ஊடக துறையைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நல வாரியத்தில் இணைய முடியாமல் உள்ளனர். எனவே நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான தகுதிகள், யாரெல்லாம் உறுப்பினராக சேர்க்கப்படுவார்கள் என்பது குறித்த விளக்கமான அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
ஜனநாயகத்தின் நான்காம் தூணாகப் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் நல வாரியத்தில், விடுபட்ட (ஆசிரியர் குழு தொடங்கி, கடைநிலை ஊழியர்களான வட்டாரச் செய்தியாளர்கள் வரை) அனைவரையும் சேர்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கோருகிறது.
பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் பணியின் போது மரணமடையும் பத்திரிகையாளர் குடும்ப நிதித் திட்டம் ஆகியவற்றில் பழைய அரசாணையின்படி, அச்சு ஊடகத்தினர் (Print media) மட்டுமே பயன்பெற முடிகிறது. இந்த இரு திட்டங்களிலும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்படக் கலைஞர்களை சேர்க்கும் வகையில் உரிய அரசாணைகளைப் பிறப்பித்து உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கோருகிறது.
28.தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாப்பீர்!
தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்குதலுக்குள்ளாகின்றனர்; கைது செய்யப்படுகின்றனர்.இப்போது கூட இலங்கைச் சிறைகளில் 68 பேர் வாடுகிறார்கள்.
தமிழ்நாட்டு மீனவர்களின் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 365 படகுகளை இலங்கை அரசு கடந்த சில ஆண்டுகளில் தேசிய மயமாக்கி உள்ளது.அதற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட படகுகள் இலங்கை கடற்கரையில் நிறுத்தப்பட்டு சேதம் அடைந்து.அழிந்து விட்டன.
மீன் இனப்பெருக்க காலத்தில் 61 நாட்கள் மீன் பிடிக்க தடை உள்ளது. இந்த காலத்துக்கு இழப்பீடாக அரசு ரூபாய் 5000 வழங்குகிறது. மிக அடித்தட்டு வாழ்க்கையை நடத்துவதற்குக் கூட இத்தொகை போதாது.
மீன்பிடி தடைக்காலம், மழை, புயல், இயற்கை பேரிடர்கள், திருவிழாக்கள் போன்ற நாட்களை எல்லாம் கழித்து விட்டால் மீனவர்கள் தொழில் செய்வது ஆண்டுக்கு 100 நாட்கள் தான்.தமிழ்நாட்டு மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பதற்கு சர்வதேச கடல் பகுதியில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.இயற்கை சீற்றங்களின் போது தகவல் பரிமாறுவதற்கு கூட தகுந்த கருவிகள் அவர்களிடம் இல்லை.இதனால் கடலுக்குள் பல விபத்துகள் நடக்கின்றன.இந்த வகைகளிலேயே ஆண்டுக்கு 50 மீனவர் வரை உயிரிழப்புக்கு ஆளாகிறார்கள்.300க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்து நோய்வாய்ப்படுகிறார்கள்.
இலங்கை அரசுடன் பேசி சிறையில் உள்ள மீனவர்களை விடுவிப்பதோடு, கைப்பற்றப்பட்டிருக்கும் படகுகளை திரும்பத் தருவதற்கும், தேவையே இல்லாமல் தமிழ்நாட்டின் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்துவதற்கும் ஒன்றிய அரசு ஆவன செய்ய வேண்டும்.
அதேபோல தமிழ்நாடு அரசு, மீனவர் நல வாரியத்தில் நிபந்தனைகள் விதிக்காமல், மீனவர்கள் அனைவரையும் இணைத்து நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.மீனவர் சங்கங்கள் தொடர்ந்து பல முறையீடுகளை தமிழ்நாடு அரசிடம் தந்து வருகிறார்கள். மீனவர் கூட்டமைப்பை அழைத்துப் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில தமிழ்நாடு மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.
29. பட்டாசு தொழிலைப் பாதுகாத்திடுக!
பட்டாசுத் தொழிலில் நேரடியாக சுமார் 4 லட்சம் தொழிலாளர்களுக்கும், மறைமுகமாக துணைத் தொழில்கள், போக்குவரத்து, ஏஜென்சிகள் மூலம் இன்னும் நான்கு லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு அளித்து வருகிறது.
2014 முதல் இந்த தொழிலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக உற்பத்தியில் நெருக்கடி ஏற்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்புலத்தில் மாசு ஏற்படுத்தும் தொழில் என்ற கருத்து பரப்பப்படுகிறது.
உலகத்தரம் வாய்ந்த நூற்றுக்கணக்கான பட்டாசு ரகங்கள், வாண வேடிக்கை பட்டாசுகளை நம்மால் உற்பத்தி செய்ய முடியும்.ஆனால் வெளிநாட்டு ஏற்றுமதியில் பட்டாசுகளின் பங்கு அரை சதம் மட்டுமே உள்ளது.இதனை ஐந்து சதவீதமாக உயர்த்தினால் இன்னும் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க முடியும்.
ஏற்றுமதிக்கு வசதியாக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் செல்லும் சாலைகளை மேம்படுத்தி, பட்டாசுகளுக்கான தனி சரக்குக் கப்பல்களைப் பயன்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.
30. தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் விளை நிலங்களுக்கு பட்டா வழங்க உள்ள தடையை நீக்குக.!
தமிழ்நாட்டின் மலை மாவட்டங்களில் பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 90 % பேர் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்கள். இங்கு உள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் ஓன்று அல்லது இரண்டு ஏக்கர் அளவில் நிலம் வைத்துள்ள சிறு,குறு விவசாயிகளாவர்.
இந்நிலங்கள் மலை சரிவுகளிலும், மலைகளுக்கு அப்பால் உள்ள சமவெளி பகுதிகளிலும் அமைந்துள்ளது. பெரும்பாலும் பட்டா இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களாகவே இருந்து வருகிறது.
இதனால் விவசாயிகளுக்கான அரசின் எந்த உதவியும் கிடைக்கவில்லை. வன விலங்குகளால் விளைந்த பயிர்கள் அழிக்கப்படும் போது கூட நிவாரணம் பெற முடியவில்லை. மின் இணைப்பு மற்றும் பயிர் கடன் பெற முடிவதில்லை. வேளாண் துறை உதவியும், பி.எம்.கிசான் திட்ட பலனையும் பெற முடிவதில்லை.
1989 -ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் பெய்த பெரு மழையால் அங்கு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டபோது மலைப்பகுதி நிலங்களுக்கு பட்டா வழங்க வருவாய்த்துறை (அரசாணை எண் 1168) தடை விதித்துள்ளதால் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை. இந்த தடை உத்தரவைக் காரணம் காட்டி வீட்டு மனைகளுக்கும், பட்டா வழங்க மறுக்கப்படுகிறது.
அதே நேரத்தில் 2006- வன உரிமை அங்கீகாரச் சட்டம் வனநிலத்தில் பயிரிட்டு வருவோர் மற்றும் குடியிருந்து வருபவர்களின் வனநில உரிமையை அங்கீகரித்து பட்டா வழங்குகிறது.
எனவே, வருவாய் துறையின் 1989 ஆம் ஆண்டின் அரசாணை 1168 -ஐ திரும்பப்பெற்று, தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் பயிரிடுவோருக்கு நிலப்பட்டாவும், நிலமமற்ற வறியவர்களுக்கு வீட்டுமனை பட்டாவும் வழங்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 26 வது மாநாடு கேட்டுக்கொள்கிறது.
31.விவசாயத் தொழிலாளர்களுக்கு உயர்மட்ட ஆய்வுக்குழு அமைக்கவேண்டும்!
தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும் ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயத் தொழிலாளர் வாழ்க்கை நிலைமைகளை சமூக,பொருளாதார அடிப்படையில் ஆய்வுசெய்து. மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
கடந்த 1990 -& 91ஆம் ஆண்டுகளில் ஒன்றிய அரசால் ஏற்று அறிவிக்கப்பட்ட தராளமயம், தனியார்மயம், உலகமயம் என்கிற நவதாராளமயக் கொள்கைகள் கிராமத் தொழிலாளர் வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகளையும் நெருக்கடியினையும் உருவாக்கியுள்ளது.
வேலையிழப்புக்கு ஆளாகிவரும் உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு நவீன கருவிகளை இயக்கும் பயிற்சிகள் அளித்து திறன் மேம்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
வியசாயத்தில் வேலையின்மை அதிகரிப்பதால் நகர்மயமாதல் தீவிரமாகி வருகிறது. அது நகரங்களில் தொடர் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த நாற்பது ஆண்டுகளில் நிலவுடைமைகளிலும், விவசாயிகள், விவசாயத்தொழிலாளர் உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விவசாயத் தொழிலாளர் வேலை நிலைகளில் உருவாகியுள்ள புதியசூழல் குறித்தும். நிலமில்லாத, கிராமத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சுயமரியாதையுடன், கண்ணியமான வாழ்க்கை அமைத்துக்கொள்ளும் உரிமை உறுதிப்படுத்தவேண்டும். அதற்கான வாய்ப்புகள், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வுசெய்து. பரிந்துரைகள் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு, விவசாயத் தொழிலாளர் சங்கப்பிரதிநிதிகளும், துறைசார்ந்த வல்லுநர்களும் கொண்ட ஒரு உயர்மட்டக்குழுவை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 வது தமிழ்நாடு மாநில மாநாடு அரசைக்கேட்டுகொள்கிறது.
32. உதவாத உழவர் பாதுகாப்புத் திட்டத்தைக் கைவிடு!
திருவாரூரில் நடைபெற்ற தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 7வது மாநிலப் பொதுமாநாட்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதில் தொழிலாளர் வாழ்க்கை மேம்பாடு குறித்து ஆய்வு செய்து .அரசுக்கு பரிந்துரை வழங்க. இந்திய ஆட்சிப்பணி அதிகாரி பெ.கோலப்பன் தலைமையில் வேளாண் தொழிலாளர் தனிக்குழு” அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவித்தார்.
பெ.கோலப்பன் தலைமையிலான உயர்மட்டக்குழு விரிவான ஆய்வு செய்து அரசின் துறைத் தலைவர்களுடன் விவாதித்து 43 பரிந்துரைகளை ஒரு மனதாக தயாரித்து அரசுக்கு வழங்கியது.
உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டது. இந்த நலவாரியம் மூலம் விவசாயத் தொழிலாளர்களுக்கு சமூகபாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது விவசாய தொழிலாளர் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக அமைந்தது. ஆனால் அரசியல் சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அரசியல் காரணங்களால் நலவாரியம் கலைக்கப்பட்டது. “முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம் என புதிய திட்டம்“ அறிவிக்கப்பட்டது.
தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்யும் நலவாரியத்துக்கு மாற்றாக அரசின் சலுகை பெறும் பயனாளிகள் திட்டமாக மாற்றப்பட்டதால் உழவர் பாதுகாப்புத் திட்டத்தால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பயன்பெற முடியவில்லை. விவசாயத் தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகள் பெறும் வகையில் கலைஞர் அரசு 1999 ஆம் ஆண்டில் அமைத்த நலவாரியத்தை அடிப்படையாகக் கொண்டு, நலவாரியத்தில் உறுப்பினர் சேர்த்தல், கேட்பு மனுதாக்கல் செய்தல், அதன் மீது தீர்வு காண தொழிலாளர் தரப்பு பிரதிநிதியாக செயல்பட அனுமதித்தல் உள்ளிட்ட தொழிற்சங்க உரிமைகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையில் கலைஞர் கொண்டு வந்த “தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நலவாரியம்“ அமைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது தமிழ்நாடு மாநில மாநாடு அரசைக்கேட்டுக்கொள்கிறது.
33. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், இடதுசாரிகளின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய வேலை உறுதி உரிமைச்சட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் ஆகும்.
கிராமப்பற மக்களின் ஏழ்மையை ஒழிக்கவும், கிராமப்புற பொருளாதார சுழற்சிக்கும், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர், பட்டியலினத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆகிய சமூகத்தின் அடித்தட்டில் உள்ள சுமார் 25 கோடிக்கும் அதிகமானோருக்கு, ஆண்டிற்கு நூறு நாளாவது வேலைவாய்ப்பினை அளிக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட திட்டம் இது. மேலும் வேலை பெறுவதை சட்டரீதியான உரிமையாக்கிய சட்டமுமாகும்.
ஆனால், ஒன்றிய பாஜக அரசு, அதிகாரத்திற்கு வந்த நாளிலிருந்தே இத்திட்டத்தை வேண்டாத சுமையாக கருதி, ஒழித்துக்கட்டுவதிலேயே குறியாக இருந்து வருகிறது.
பல்வேறு ஆய்வுகள், பொருளாதார வல்லுநர்களின் பரிந்துரைகள், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகள் ஆகிய எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் 2025-26 நிதியாண்டிற்கு 86,000/-கோடி ரூபாய்களை மட்டுமே ஒதுக்கியது; இத்தொகையானது, அதற்கு முந்தைய ஆண்டு ஒதுக்கீட்டின் அளவேயாகும்;
இந்த தொகையிலும் சுமார் நான்கில் ஒரு பங்கு- 27% (23,446 கோடி ரூபாய்) கடந்த ஆண்டு செலவழிக்கப்பட்ட நிலுவைக்கு போய் விட்டது. ஒவ்வோர் ஆண்டும் இத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கான ஊதியம் ஏப்ரல் 1-தேதி முதல் சட்டப்படி உயர்தப்பட வேண்டும். இந்த ஆண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறைவான நிதி ஒதுக்கீட்டால் நெருக்கடிக்குள்ளாயிருக்கும் நிலையில், ஊதியத்தையும் உயர்த்தி அறிவித்து விட்டு, ஊதியத்தை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்தாதன் விளைவு, இந்த ஆண்டு வேலை நாட்கள் பெருமளவு குறைந்து விட்டது.
இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்கள் முடிவுறும் நிலையிலேயே தமிழ்நாடு முழுவதும், நிதி இல்லாததால் -வேலையில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. 100 தொழிலாளர்கள் வேலை செய்த இடத்தில் 10 பேர்கள் கூட வேலை செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் திட்டம் முற்றாக நிறுத்தப்பட்டு விட்டது. தமிழ்நாடு, கடந்த நிதியாண்டில் 30.61 கோடி மனித வேலை நாட்களை பயன்படுத்தியது. இந்த நிதியாண்டிற்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதோ 20 கோடி மனித வேலை நாட்கள்தான்.
மேலும் தொழிலாளர்களுக்கு வேலையளிப்பதற்காக உருவாக்கப்பட்ட இத்திட்டத்திற்கான நிதியை ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள பயன்படுத்துகின்றன;
இதனால் கடும் நெருக்கடிக்கு கிராமப்புற ஏழைகள் ஆளாகியுள்ளனர். ஆகவே, பெரும் தொழில் குழுமங்களுக்கு கடன் தள்ளுபடி, மாணியம், வரிச்சலுகை என பல லட்சம் கோடிகளை அள்ளிக் கொடுக்கும் ஒன்றிய அரசு, 25 கோடி கிராமப்பற ஏழைகளின் வாழ்வாதாரமாக இருக்கும் இத்திட்டத்திற்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கி, ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் போக்கி, நூறு நாட்கள் வேலையளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நூறு நாட்கள் வேலை வழங்க இயலாவிட்டால், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் 2005,பிரிவு 7(1)ன் படி வேலையில்லாக் காலத்திற்கான படியை வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.