இந்தியா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது கட்சிப் பேராயத் தீர்மானங்கள்

பாலஸ்தீன மக்களுடன் ஒருமைப்பாடு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது பேராயம், தேசிய விடுதலை, நீதி மற்றும் இறையாண்மையைக் காப்பதற்காக நீண்டகாலமாக தீரமிக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாலஸ்தீன மக்களுடன் தனது உறுதியான ஒருமைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பாலஸ்தீனப் பிரச்சனை, உலகளாவிய சமூகத்தின் விவாதப் பொருளில் தீர்க்கப்படாத மிக நீண்டகாலப் பிரச்சனைகளில் ஒன்றாகவே உள்ளது. பாலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமைக்கும், 1967 எல்லைகளின் அடிப்படையில் கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட தன்னுரிமையான பாலஸ்தீன நாட்டை அமைக்கும் உரிமைக்கும் ஆதரவாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடக்க காலத்திலிருந்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வந்திருக்கிறது.

இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்ட குண்டுவீச்சுகள், முற்றுகை மற்றும் இராணுவத் தாக்குதல்களால் காசா மற்றும் மேற்குக் கரையில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்து, பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 65,000 பேர் உயிரிழந்தும், 1.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதில் பெருமளவு குழந்தைகளும் அடங்குவர். வீடுகள், மருத்துவமனைகள், அகதி முகாம்கள், அடிப்படை அமைப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. உணவு, குடிநீர், மின்சாரம், மருந்து போன்ற அத்தியாவசியங்களின் கடுமையான பற்றாக்குறையுடன், பொதுமக்கள் பலர் உதவியின்றிச் சிக்கித் தவிக்கின்றனர். இவை அனைத்தும் இனப்படுகொலை தவிர வேறில்லை.

கடந்த சில ஆண்டுகளில், இஸ்ரேல் நில அபகரிப்பு, கட்டாய வெளியேற்றம், சட்டவிரோதக் குடியேற்றக் குடியிருப்புகள் ஆகியவற்றின் மூலம் தனது குடியேற்றக் கொள்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இது பாலஸ்தீன சுயாட்சி வாய்ப்புகளை மேலும் சிதைக்கின்றது.

ஐ.நா. பொதுச் சபையின் தொடர் தீர்மானங்களும், உலக மக்களின் பெரும்பான்மையான கருத்தும் பாலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துகின்றன. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு, இன ஒழிப்புக் கொள்கைகள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என அவை வலியுறுத்துகின்றன.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாலஸ்தீன மக்களின் நீங்காத உரிமைகளான தன்னாட்சி, சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு உறுதியான ஆதரவை வெளிப்படுத்துகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, முற்றுகை, குடியேற்ற விரிவாக்கம், இன ஒழிப்புக் கொள்கைகள், போர்க் குற்றங்கள், மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைக் கடுமையாகக் கண்டிக்கிறது. உடனடியான, நிரந்தரப் போர் நிறுத்தம், காசா முற்றுகை நீக்கம், மனிதாபிமான உதவிகளுக்கான முழு அனுமதி ஆகியவற்றைக் கோருகிறது. கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட, 1967 எல்லைகளின் அடிப்படையிலான சுயாதீன பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டும் என்பதையும், ஐ.நா. தீர்மானம் 194ன்படி பாலஸ்தீன அகதிகளுக்கு தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லும் உரிமையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இந்திய அரசாங்கம் பாலஸ்தீனப் பிரச்சனையில் இந்தியா, வரலாற்றுரீதியாகக் காண்பித்து வந்த உறுதியைத் தொடர்ந்து கடைப்பிடித்து, இருதரப்பு, மண்டல, ஐநா சபை உள்ளிட்ட பன்னாட்டு அரங்குகளில் அதை நிலைநிறுத்த வேண்டும். இஸ்ரேலுடன், ஆக்கிரமிப்பு நடவடிக்கையை வலுப்படுத்தும் வகையிலான இராணுவ, பாதுகாப்பு, ஆயுத ஒத்துழைப்பைத் தவிர்க்க வேண்டும். பாலஸ்தீனத்தின் காஸா மற்றும் மேற்குக் கரைக்கு மருத்துவ உதவி, கல்வி உதவித்தொகைகள், மறுகட்டமைப்புத் திட்டங்களுக்கு ஆதரவு போன்ற மனிதாபிமான உதவிகளை விரிவுபடுத்த வேண்டும்.

ஏகாதிபத்தியம், காலனியக் கொள்கைகள், இனவெறி ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்துடன் பாலஸ்தீன விடுதலை என்பது பிரிக்கப்பட முடியாதது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. பாலஸ்தீன மக்களின் திரும்பிச் செல்லும் உரிமை, இறையாண்மை உரிமை, தங்கள் தாய்நாட்டில் அமைதி மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமை ஆகியவை நிறைவேறும் வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் மேலும் அதிகரிக்க உறுதியளிக்கிறது.

கியூபாவுடன் ஒருமைப்பாடு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது பேராயம், வீரஞ்செறிந்த கியூப மக்களுடனும், அவர்களின் புரட்சிகரத் தலைமையோடும் கொண்டுள்ள வரலாற்று, சகோதர உறவுகளை மறுபடியும் உறுதிப்படுத்துகிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில், மருத்துவ, மனிதாபிமான உதவிகளில், கல்வி, சுகாதாரம், சமூக நலன்களில் கியூபப் புரட்சி நிகழ்த்தியுள்ள சாதனைகளை நினைவு கூருகிறது.

60 ஆண்டுகளுக்கும் மேலாக கியூபா மீது, அமெரிக்கா விதித்து வரும் பொருளாதாரத் தடைகள், ஒருதலைப்பட்சமான சுங்கத் தடைகள், தடைச் சட்டங்கள் கியூப மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளன. தேசிய மற்றும் மண்டல அளவிலான அதிகாரச் செயலிழப்புகள், அத்தியாவசிய சேவைகள் பாதிப்பு, வர்த்தகம், பயணம், பணம் அனுப்புதல் ஆகியவற்றின் மீதான தடைகள் மக்கள் வாழ்க்கையை மிக மோசமாகப் பாதித்துள்ளன. ஐ.நா. பொதுச் சபை உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் இந்தத் தடைகளை அகற்ற வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

மிகக் கடினமான சூழ்நிலைகளிலும் கூட, உலக அளவிலான மருத்துவ ஒத்துழைப்பு, பேரிடர் நிவாரணம், பன்னாட்டு ஒருமைப்பாட்டுச் செயல்பாடுகளில் கியூபா தனது பங்களிப்பைச் செலுத்தி வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செயல்பாடுகளால், கியூபாவின் ஆட்சி நிர்வாகமும் உள்கட்டமைப்பு மேம்பாடும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கவலையோடு நோக்குகிறது. மின்சாரம், சுகாதாரம், நீர் மேலாண்மை, வேளாண் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி போன்ற துறைகளில் இந்தியா- & கியூபா ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்று கோருகிறது. இந்திய அரசு, கியூபாவுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளைத் தடையின்றி வழங்க வழிவகுக்க வேண்டும்.

கியூப அரசு மற்றும் மக்களுடன் தனக்குள்ள நிலையான ஒருமைப்பாட்டை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது. கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார, வர்த்தக, நிதித் தடைகளைக் கண்டித்து, அவற்றை உடனடியாக, நிபந்தனையின்றி நீக்க வேண்டும் எனக் கோருகிறது.

தனது அரசியலில் பிரிக்க முடியாத பகுதியான சர்வதேசியத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது பேராயம் மறுபடியும் உறுதி செய்கிறது. இந்தியாவின் அனைத்து முற்போக்கு சக்திகளும், கியூப மக்களுக்கு ஆதரவாகவும், ஏகாதிபத்தியம் விதிக்கும் அநியாயத் தடைகள் அனைத்துக்கும் எதிராகவும் குரல் எழுப்ப வேண்டும் என்றும் கியூபா தற்போதைய கடினமான சூழலைக் கடக்கக்கூடிய ஆற்றலை வளர்க்கும் வகையில் உறவுகளை உருவாக்குமாறும் அறைகூவி அழைக்கிறது.

ஜிஎஸ்டி சீர்திருத்தம் 2.0 -மோடி அரசின் மற்றொரு ஏமாற்று வித்தை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது பேராயம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 சீர்திருத்தங்களைப் பற்றித் தீவிரமான கவலைகளை வெளிப்படுத்துகிறது. இவை 22 செப்டம்பர் 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்தச் சீர்திருத்தங்கள் பொருளாதாரச் சமத்துவத்தைப் பாதிக்கக்கூடிய தீய விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்கள் அதிகமான சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும். கொள்கை நிர்ணயிப்பவர்கள் இந்தச் சீர்திருத்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது, இதனை செய்யத் தவறினால் மக்கள் மத்தியில் நிலவுகிற சமூகப் -பொருளாதாரச் சமமின்மைகள் மேலும் அதிகரித்து விடும்.

2017-இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, இந்தியாவின் மறைமுக வரி அமைப்பை ஒருமுனை வரியாகச் சீர்படுத்தி, ஒரே தேசியச் சந்தையை உருவாக்கும் முக்கியமான சீர்திருத்தமாக கூறப்பட்டது. ஜிஎஸ்டி 2.0 இந்த இலக்குகளை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. வரி விகிதங்களை நியாயப்படுத்துதல், விகிதங்களை எளிமைப்படுத்துதல், இணக்கப் பின்பற்றுதலை மேம்படுத்துதல், கட்டமைப்புக் குறைபாடுகளைச் சரிசெய்தல் ஆகியவை சீர்படுத்தப்பட்டதாக அரசு சொல்கிறது. ஆனால், இந்தச் சீர்திருத்தங்கள் எதிர்பார்த்தபடியில்லை. முக்கியக் குறைபாடுகள் வெளிப்பட்டுள்ளன, குறிப்பாக பின்தங்கிய வரி தன்மை காரணமாக.

மக்கள் தொகையில் அடிநிலையில் உள்ள 50% நுகர்வோர்களே ஜிஎஸ்டி வருவாயின் பெரும்பகுதியைச் செலுத்துகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கிராமப்புறக் குடும்பங்கள் 31% மற்றும் நகர்ப்புறக் குடும்பங்கள் 29%.

அதற்கு மாறாக, உயர் வருமானம் பெறும் சமூகத்தின் மேலடுக்கை சேர்ந்த கோடீஸ்வரர்கள் உள்ளிட்ட 20% மிகக் குறைவாகவே வரி செலுத்துகின்றனர். மொத்த ஜிஎஸ்டி வசூலின் 3% பங்கு மட்டுமே கோடீஸ்வரர்கள் செலுத்தும் வரி. இந்தச் சமமற்ற சுமை விநியோகம், ஜிஎஸ்டி போன்ற ஒரு முனை நுகர்வு வரியின் அடிப்படையே அநீதியானது என்பதை வெளிப்படுத்துகிறது.

எந்த வருமானப் பிரிவை சேர்ந்தவர் என்றால், செலுத்தும் வரி மட்டும் சமமான நிலை கொண்டது என்பதாலும், வரிக்குறைப்பு நடவடிக்கையில் அடிமட்ட வருவாய் பிரிவினரின் நிலையை கருத்தில் கொள்ளாததால் இந்த சமமின்மை மேலும் மோசமடையும் அபாயம் உள்ளது.

நிதி நிலைத்தன்மை

ஜிஎஸ்டி 2.0-வரி குறைப்பை செய்வதால் ஆண்டுதோறும் மிகப்பெரிய வருவாய் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதற்காக மாநிலங்களுக்கு பகிர்ந்து தரப்படும் வரி தொகையை நீக்கம் செய்தால், மாநிலங்களின் வருவாய் வெகுவாக பாதிக்கப்படும். வேறு வருமானம் எதுவும் இல்லாத நிலையில், வரி வருவாய் பங்கை இழந்து மாநிலங்கள் பணப் பற்றாக்குறைக்கு ஆளாகும் இதனால் மாநிலங்களால் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலையும், உள்கட்டுமான மேம்பாடுகளில் இது விட முடியாத சூழலும் உருவாக்கப்படும்.

வருவாய் பற்றாக்குறையால் ஒன்றியமும், மாநிலங்களும் அத்தியாவசிய பொதுச் செலவுகளை குறைக்கவோ அல்லது கடன் அதிகரிக்கவோ நேரிடலாம். இது நீண்டகால நிதி ஒழுங்கை பாதிக்கும். உயர் வருமானம் கொண்டவர்களிடமிருந்து, அவர்களது வருவாய்க்கேற்ற வரியை வசூலிக்காமல் தவிர்ப்பதால், வருவாய் தேக்கம் படிப்படியாக அதிகரிக்கும்.

நேரடி வரிகளுக்கு குறைந்து, மறைமுக வரி அதிகரிப்பதால், அவை உற்பத்தி செலவுகளை அதிகரிக்கும். இதனால் சந்தையில் கழுத்தறுக்கும் போட்டி நடைபெறும். கார்ப்பரேட் பெரு நிறுவனங்களை சந்தையில் எதிர்கொள்ள முடியாமல் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் திணறும்.

சிறு குறு நடுத்தர தொழில்கள் இப்போதே நலிவுற்று உள்ளன. மறைமுக வரிகள் காரணமாக அவற்றின் மீது இன்னும் கூடுதல் சுமை ஏற்றப்படும். இது அந்த தொழிலகங்களை மூடும் நிலைக்கு மூடு விழாவுக்கு இட்டுச் செல்லும்.

ஜிஎஸ்டி 2.0-ன் நோக்கம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து டொனால்ட் டிரம்ப் விதித்த வரிவிதிப்பின் பாதிப்புகளை சமன்படுத்துவதாகும். ஆனால் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு எந்த சலுகையையும் வழங்காது. புதிய குறைப்பு எதுவும் இல்லை.

எதிர்க்கட்சிகள் தொடக்கத்திலிருந்தே ஜிஎஸ்டி தவறானது, பிழையானது என்று சுட்டிக்காட்டி வந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி அரசு தன் தவறை ஒப்புக்கொண்டு சில மாற்றங்களை செய்துள்ளது. இது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துகிறது, அரசின் பிழையான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

இந்த வரி குறைப்பு, சேமிப்புத் திருவிழா’ என்று ஒன்றிய அரசு கூறுவது ஏழை மக்களைக் கேலி செய்கிறது. பல அத்தியாவசிய பொருட்களுக்கு இன்னும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது, இது மக்களின் சுமையை அதிகரிக்கிறது. சேமிப்பதற்கான வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படவில்லை.

2020-21 நிதியாண்டிலிருந்து 2023-&24 வரை, குடும்ப சேமிப்புகள் 23.29 லட்சம் கோடியிலிருந்து 14.16 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. குடும்ப நிதி கடன்கள் 2021&-2023 இடையில் 30% அதிகரித்து, மொத்த சேமிப்புகளை மிஞ்சியுள்ளன. ஜிஎஸ்டி 2.0-ன் பின்னேற்றமான வடிவமைப்பு, விகித நியாயப்படுத்தலால் ஏற்படும் விலை உயர்வு தாக்கம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இதுவரை அரசு ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு சுயாட்சி அமைப்பு என்று சொன்னது. இப்போது அதையும் பிஜேபி அலுவலகத்தின் நீட்டிக்கப்பட்ட அறையாக மாற்றப்பட்டுவிட்டது. மேலும், அரசு இந்த ஜிஎஸ்டி விகித மாற்றங்களையும் மத அடிப்படையில் அரசியல் கருவியாக்கி, ஒரு மதத்தின் வரவிருக்கும் திருவிழாவை முன்னிட்டு ‘பரிசு’ என அறிவித்துள்ளது என்பது துரதிர்ஷ்டவசமானது.

பணக்காரர்களுக்கு வரி விதித்து, ஏழை மக்களை பாதுகாக்கிற மக்களுக்கு சாதகமான முன்னேற்றமான வரி கொள்கைகளை வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இயக்கங்களை மேற்கொள்ள உறுதியளிக்கிறது.

இன்னும் வரும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button