இந்தியா

எதிர்காலத்தை நோக்கி செங்கொடி

டி. ராஜா

டெல்லி அஜய் பவனில் நடைபெற்ற கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பொதுச்செயலாளர் டி.ராஜா உரை

=====

2025 டிசம்பர் 26 அன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டை நிறைவு செய்தது.
இந்த நூற்றாண்டு விழா என்பது ஒரு அரசியல் கட்சியின் காலக் கணக்கை மட்டும் குறிக்கும் நிகழ்வு அல்ல; இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை ஆழமாக வடிவமைத்த, நாட்டின் எதிர்காலத்திற்கான பார்வையையும், அதன் சமூக-பொருளாதார திசையையும் நிர்ணயித்த ஒரு இயக்கத்தின் வரலாறாகும்.

மௌலானா ஹஸ்ரத் மொஹானி முதலில் எழுப்பி, பகத்சிங்கும் அவரது தோழர்களும் மகத்தானதாக மாற்றியமைத்த “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற புரட்சிகர முழக்கத்தை ஏந்தி பிடித்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்கள் வழியாக, இந்த புரட்சிகர மாற்றத்திற்கான அழைப்பு நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைந்து, எதிர்ப்பு, நம்பிக்கை மற்றும் தேசபக்தியின் உயிர்ப்பான வெளிப்பாடாக மாறியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காலனிய ஆட்சியை எதிர்கொண்டு தோன்றியது. “விடுதலை யாருக்காக? எதற்காக?” என்ற அடிப்படைக் கேள்விக்கு அது விடை காண முனைந்தது. சமூக, பொருளாதார மாற்றமில்லாத அரசியல் சுதந்திரம், மக்களை பழையதும் புதியதுமான சுரண்டல் வடிவங்களில் சிக்கவைத்தே விடும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று வேர் காலனிய முதலாளியத்துக்கு எதிரான அதன் தளராத போராட்டத்திலேயே உள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், இந்திய பொருளாதாரத்தை வெளிநாட்டு மூலதனத்தின் தேவைகளுக்கு அடிமைப்படுத்தி, உள்ளூர் தொழில்களை அழித்து, சுரண்டல் மிகுந்த நில உறவுகளைத் திணித்து, பரவலான வறுமையை உருவாக்கியது. அதே நேரத்தில், அது ஒரு நவீன தொழிலாளர் வர்க்கத்தை உருவாக்கி, குறிப்பாக 1917-ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில், உலகளாவிய சமூகவாத சிந்தனைப் போக்குகளுக்கு இந்திய புரட்சியாளர்களை அறிமுகப்படுத்தியது.

வெளிநாடுகளில் வாழ்ந்து அல்லது சர்வதேச வலையமைப்புகள் வழியாக மார்க்சியத்தை சந்தித்த இந்திய செயற்பாட்டாளர்களும் புரட்சியாளர்களும், தேசிய விடுதலையும் சமூக விடுதலையும் பிரிக்க முடியாதவை என்பதை உணரத் தொடங்கினர். இந்த புரிதல், 1925 டிசம்பரில் கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியதன் மூலம் அமைப்பு வடிவம் பெற்றது.

கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானது ஆழ்ந்த குறியீட்டு அர்த்தம் கொண்டது. கான்பூர் ஒரு முக்கிய தொழில் நகரமாகவும், வலுவான தொழிலாளர் வர்க்க நிலைக்களனாகவும் இருந்தது; இதைத் தேர்ந்தெடுத்தது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் மையமாக தொழிலாளர்களும் விவசாயிகளும் இருக்க வேண்டும் என்ற கட்சியின் உறுதியை வெளிப்படுத்தியது. கான்பூர் மாநாடு, மார்க்சிய கோட்பாட்டிலும் இந்திய யதார்த்தங்களிலும் வேரூன்றிய ஒரு புரட்சிகர கட்சியை கட்டியெழுப்ப உறுதிபூண்ட புரட்சியாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களை ஒன்றிணைத்தது. தொடக்கத்திலிருந்தே, சிபிஐ கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்டது. காலனிய அரசு கம்யூனிஸ்ட் செயற்பாடுகளை குற்றமாக்கி, கைது, நீண்ட சிறைவாசங்கள், கான்பூர், பெஷாவர், மீரட் போன்ற சதி வழக்குகளை தொடுத்தது. ஆனால் இந்த அடக்குமுறை, இயக்கத்தை அணைத்துவிட முடியவில்லை. மாறாக, அதன் கருத்தியல் தெளிவையும், அமைப்புச் சீரையும், மக்கள்சார்ந்த அரசியலுக்கான அர்ப்பணிப்பையும் மேலும் கூர்மையாக்கியது.

காலனிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் சிபிஐயின் பங்கு தளராத, ஆழ்ந்த தேசபக்தியுடன் இருந்தது. ஏகாதிபத்திய சக்தியுடன் சமரசம் செய்ய முயன்ற தேசியவாதப் போக்குகளுக்கு மாறாக, கம்யூனிஸ்ட்டுகள் காலனியத்தை அரசியல் ஆதிக்கத்தின் மூலம் நிலைநிறுத்தப்பட்ட பொருளாதார சுரண்டல் அமைப்பாகவே புரிந்துகொண்டனர். தொழிற்சங்கப் போராட்டங்கள், விவசாயி இயக்கங்கள், மறைமுக எதிர்ப்பு நடவடிக்கைகள், சிந்தனைக் களப் போராட்டங்கள் ஆகியவற்றின் மூலம் அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தனர். அவர்களது தேசபக்தி உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் அல்ல; சாதாரண இந்தியர்களின் வாழ்விலும் போராட்டங்களிலும் வெளிப்பட்டது. முக்கியமாக, சிபிஐ காலனிய எதிர்ப்பை பிரிட்டிஷ் இந்தியாவைத் தாண்டியும் விரிவாக்கியது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிரெஞ்சு காலனிகளிலும், கோவா, டாமன், டையூ ஆகிய போர்ச்சுகீசிய ஆட்சிப் பகுதிகளிலும் எதிர்ப்பை இயக்குவதில் அது முன்னோடியான பங்கு வகித்தது. இந்த விவகாரங்கள் தேசிய அரசியலின் மையத்துக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, அந்தப் பகுதிகளில் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் கம்யூனிஸ்ட்கள் ஒருங்கிணைத்து, இந்தியாவின் எந்தப் பகுதியும் வெளிநாட்டு ஆட்சியில் இருக்கும் வரை விடுதலை முழுமையடையாது என்பதை உறுதியாக வலியுறுத்தியுறுத்தியது.

வெகுமக்கள் அமைப்புகளை கட்டியெழுப்புவதில் சிபிஐ அளித்த முக்கியத்துவம் அதன் நீடித்த பங்களிப்புகளில் ஒன்றாகும். அரசியல் விடுதலை என்பது சமூகத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் இயக்காமல் சாத்தியமில்லை என்பதை கட்சி உணர்ந்தது. அகில இந்திய தொழிற்சங்க பேராயம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய மக்கள் நாடக மன்றம் போன்ற பண்பாட்டு-எழுத்தாளர் அமைப்புகள், பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கவும் வலுப்படுத்தவும் அது உதவியது. இவ்வமைப்புகள் வழியாக, தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள் ஆகியோரை பொதுப் போராட்டங்களில் சிபிஐ ஒன்றிணைத்தது. அன்றாட பொருளாதார குறைகளை அரசியல் விழிப்புணர்வாக மாற்றி, நீதி, சமத்துவம், மரியாதை என்ற இலக்குகளை விடுதலைப் போராட்டத்தின் மையத்துக்குக் கொண்டு வந்தது.

மக்கள் போராட்டங்களின் மூலமே கம்யூனிஸ்ட் அரசியல், ஆழமாக வேரூன்றியது. நிலமும். மரியாதையும் கோரிய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களை சிபிஐ வழிநடத்தியது. நிலச்சுவான்தார்களின் அடக்குமுறைக்கு எதிரான தெலங்கானா ஆயுதப் போராட்டம், விவசாயிகள் தங்கள் விளைபொருள்மீது உரிமை கோரிய வங்காளத்தின் தெபாகா இயக்கம், நிலப்பிரபுக்களின் கொடுமைக்கு எதிரான கேரளாவின் புன்னப்புரா-வயலார் போராட்டம், தஞ்சாவூர் டெல்டாவின் போராட்ட நில இயக்கங்கள் ஆகியவை அதில் அடங்கும். கான்பூர், பம்பாய், கல்கத்தா, புதுச்சேரி போன்ற தொழிற்நகரங்களில், கம்யூனிஸ்ட் தலைமையிலான தொழிற்சங்க இயக்கம் முக்கியமான தொழிலாளர் வெற்றிகளைப் பெற்றுத் தந்து, உரிமைகள், ஊதியங்கள், கண்ணியத்தை உறுதிப்படுத்தியது. சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தில், நிலம் மீட்பு, மறுவினியோகம், மறுசீரமைப்பு ஆகிய போராட்டங்கள் பீகார், திரிபுரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய உறவுகளை மாற்றியமைத்தன. இவ்வியக்கங்கள் பொருளாதாரப் பற்றாக்குறையை மட்டுமல்ல; நூற்றாண்டுகளாக நிலவி வந்த அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு புறம்தள்ளி, ஒடுக்கப்பட்டோரின் மனித மரியாதையை உறுதிப்படுத்தின.

தேச விடுதலைப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக தீவிரப்படுத்தியது. ஆதிக்க நிலை (டொமினியன் ஸ்டேட்டஸ்) ஒரு சமரசமாக விவாதிக்கப்பட்ட காலத்தில், கம்யூனிஸ்ட்கள் முழு சுதந்திரத்தையே வலியுறுத்தினர். மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு இறையாண்மை கொண்ட அரசியல் சபை மட்டுமே ஜனநாயக அரசியலமைப்பை உருவாக்க முடியும் என்று வாதிட்டு, அரசியலமைப்புச் சபை கோரிக்கையின் ஆரம்பத்திலும் தொடர்ச்சியிலும் முன்னணியில் இருந்தனர். இந்த கோரிக்கை பின்னர் இந்தியாவின் சுதந்திர மாற்றத்தில் மையமாகியது. நிலச் சீர்திருத்தம், தொழிலாளர் உரிமைகள், சமூக சமத்துவம் இன்றி சுதந்திரம் என்பது வெளிநாட்டு ஆட்சியாளர்களுக்கு பதிலாக உள்ளூர் உயர்சாதி-உயர்வர்க்கத்தை மட்டும் கொண்டு வரும் என்று வாதிட்டு, கட்டமைப்பு மாற்றங்களை விடுதலைப் போராட்டத்தின் மையமாக கட்சி வைத்தது.

நிலப் பகிர்வு, ஜமீன்தாரி முறை ஒழிப்பு, குத்தகைதாரர் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமைகள், குறைந்தபட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு ஆகியவை கம்யூனிஸ்ட் தலைமையிலான இயக்கங்களால் தேசிய விவாதப் பொருளாக மாற்றப்பட்டன. வர்க்கமற்ற, சாதியற்ற இந்தியா என்ற கனவைக் சிபிஐ முன்வைத்தது. சாதியை அது ஒரு பண்பாட்டு எச்சமாக அல்ல, வர்க்கச் சுரண்டலுடன் ஆழமாக பின்னிப் பிணைந்த பொருளாதார அமைப்பாகவே புரிந்து கொண்டது. சாதி ஒடுக்குமுறையை பொருளாதார கட்டமைப்புகளுடன் இணைத்ததன் மூலம், சமூக நீதியின் அர்த்தத்தை விரிவுபடுத்தி, விடுதலைப் போராட்டத்திற்கு மாற்றுத்திறன் கொண்ட உள்ளடக்கத்தை வழங்கியது. இக்கோரிக்கைகளில் பல அரசியலமைப்பிலும் சுதந்திரத்துக்குப் பிந்தைய கொள்கை விவாதங்களிலும் பிரதிபலித்தன; இது கம்யூனிஸ்ட் தலையீட்டின் நீடித்த தாக்கத்தை நிரூபிக்கிறது.

சர்வதேசவாதம் சிபிஐயின் அரசியல் உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படை அம்சமாக இருந்தது. ஏகாதிபத்திய போர்கள், பாசிசம், இராணுவவாதம் ஆகியவற்றை கட்சி தொடர்ந்து எதிர்த்தது. உலகெங்கிலும் உள்ள காலனிய எதிர்ப்பு மற்றும் முற்போக்கு இயக்கங்களுடன் ஒற்றுமையை கட்டியெழுப்புவதில் முன்னணியில் நின்றது. ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் கருவியாகப் போரை எதிர்ப்பதோ, அமைதி மற்றும் சுயநிர்ணயத்திற்காக போராடும் மக்களுடன் ஒற்றுமை காட்டுவதோ, இந்தியாவில் நீதிக்கான போராட்டம் உலகளாவிய சுரண்டல் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது என்பதை சிபிஐ உறுதிப்படுத்தியது.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இறுதிக் கட்டத்தில், 1946-ஆம் ஆண்டின் ராயல் இந்திய கடற்படை கிளர்ச்சி தொழிலாளர் வர்க்கத்தின் தீர்மானமான தலையீடாக அமைந்தது. இதை இந்திய சுதந்திரத்தின் இறுதி போராக சிபிஐ கருதியது. இனவெறிப் பாகுபாட்டுக்கும் காலனிய கட்டுப்பாடுகளுக்கும் எதிராக இந்திய கடற்படை வீரர்கள் எழுந்து நின்றனர். பம்பாயை மையமாகக் கொண்டு தொழிலாளர்களும் மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். கடுமையான அடக்குமுறையையும் மீறி, ஒற்றுமைப் போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் ஒருங்கிணைப்பதில் கம்யூனிஸ்ட்கள் முக்கியப் பங்கு வகித்தனர். இந்த கிளர்ச்சி, ஆயுதம் இந்தியப் படைகளை அடிப்படையாகக் கொண்ட காலனிய கட்டுப்பாடு சிதைவடைவதை வெளிப்படுத்தி, பிரிட்டிஷ் ஆட்சி இனியும் நீடிக்க முடியாது என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தியது. ஒன்றிணைக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள், குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்தின் பங்கு, அதிகார சமநிலையை மாற்ற முடியும் என்ற சிபிஐயின் நிலையை இது உறுதிப்படுத்தியது.

1947-இல் விடுதலை பெற்றதோடு, சிபிஐயின் போராட்டம் முடிவுறவில்லை. அது புதிய கட்டத்தின் தொடக்கமாக அமைந்தது. ஜமீன்தாரி முறைமையை களைவதும், ஒற்றை மைய மூலதனவாதத்தை எதிர்ப்பதும், ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதும் அந்தக் கட்டத்தின் நோக்கமாக இருந்தன. நிலப்பிரபுக்களுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விவசாயப் போராட்டங்களை கட்சி வழிநடத்தியது. கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், திரிபுரா, பீகார் போன்ற மாநிலங்களில் நிலச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் தீர்மானமான பங்கு வகித்தது. பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும், பொருளாதாரத்தின் முக்கியத் துறைகள் பொதுச் சொத்தாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வங்கிகள், நிலக்கரி, காப்பீடு உள்ளிட்ட துறைகளை தேசியமயமாக்க வேண்டும் என்று தொடர்ந்து வாதிட்டது; மூலவளங்கள் தனியார் லாபத்திற்கல்ல, தேசிய வளர்ச்சிக்கும் சமூக நலனுக்கும் சேவையாற்ற வேண்டும் என்பதே அதன் நிலைபாடு.

கூட்டாட்சி முறைமையும், மொழி. பன்முக பண்பாடும் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று சிபிஐ உறுதியாகப் பாதுகாத்தது. தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அதன் சமூக நீதி அர்ப்பணிப்பு வெளிப்பட்டது. மதச்சார்பின்மையும் பகுத்தறிவும் அதன் உறுதியான அடையாளங்களாக இருந்தன. பல பத்தாண்டுகளாக, சீர்திருத்தம், முன்னேற்றம், பின்னடைவு சக்திகளுக்கெதிரான எதிர்ப்பு ஆகியவற்றின் சின்னமாக செங்கொடி விளங்கியது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் மனப்பான்மையையும், பிரிவினைவாத மதவாத அரசியலுக்கு எதிரான ஒற்றுமையையும் அது பிரதிநிதித்துவப்படுத்தியது.

இன்று, சிபிஐ தனது இரண்டாம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கும் வேளையில், இந்தியா கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. வகுப்புவாதமும், உருவெடுக்கும் பாசிசமும் குடியரசின் அடித்தளங்களை அச்சுறுத்துகின்றன. பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து பெருமளவு வேலையின்மை, பாதுகாப்பற்ற தொழில் நிலை, விரிவடையும் சமத்துவமின்மை ஆகியவை உருவாகியுள்ளன. கட்டுப்பாடற்ற மூலதனவாதம் தூண்டிய சுற்றுச்சூழல் நெருக்கடிகள் வாழ்வாதாரங்களையும் எதிர்காலத்தையும் ஆபத்தில் ஆழ்த்துகின்றன. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் வேலை நிலைமைகளை மாற்றி, பாதுகாப்பற்ற தன்மையை அதிகரித்து, தொழிலாளர் பாதுகாப்புகளை பலவீனப்படுத்துகின்றன; தானியக்க காலத்தில் உரிமை, கட்டுப்பாடு, மனித கண்ணியம் குறித்த அவசரமான கேள்விகளை எழுப்புகின்றன.

இடதுசாரிகளுக்கு, மீண்டும் மக்களின் விழைவுகளுடன் ஒன்றிணைந்ததாக மாறுவது தான் மையச் சவால். இதற்கு, சமகால முதலாளியத்தை புதுப்பித்துப் புரிந்துகொள்ளும் முயற்சியும், சமத்துவம், ஜனநாயகம், நீதி என்ற மைய மதிப்புகளுடன் உறுதியாய் நிலைத்திருப்பதும் அவசியம். தொழில்நுட்ப மாற்றத்தை சமூகப் பொறுப்பிலிருந்து துண்டிக்கப்பட்ட தவிர்க்க முடியாத முன்னேற்றமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மனித முன்னேற்றம் சுரண்டலை ஆழப்படுத்தாமல், சமூக நலனுக்குச் சேவை செய்யுமாறு, அதை விமர்சனத்துடன் ஆய்ந்து அரசியல்மயமாக்க வேண்டும்.

இந்த நெருக்கடி மிகுந்த நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு பழைய நிலைகளை நினைவுபடுத்திக் கொள்வதோடு நின்று விடாது, புதிய நிலைக்கேற்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான அழைப்பாகவே கருத வேண்டும். ஜனநாயகமே தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது. மக்களின் உரிமைகளும் வாழ்வாதாரங்களும் திட்டமிட்ட வகையில் அரிக்கப்படுகின்றன. விடுதலை இயக்கத்தில் சாதனைகள் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன.

ஆர்எஸ்எஸ்-பிஜேபி கூட்டணி நமது சமூக ஒருமைப்பாட்டை சீர்குலைக்கவும், நமது பொருளாதார இறையாண்மையை உள்ளீடற்றதாக மாற்றவும், ஒரு சர்வாதிகார, மக்களை விலக்கி வைக்கிற முறைமையை திணித்து, அரசியலமைப்புச் சட்டத்தை சீர்குலைக்கவும் முயல்கிறது. இந்த ஆபத்தை துண்டு துண்டாக எதிர்க்க முடியாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் வலுப்படுத்தப்பட வேண்டும்; ஒரு பரந்த ஜனநாயக எதிர்ப்பிற்காக நெருக்கமாக கொண்டு வரப்பட வேண்டும். வர்க்கச் சுரண்டல், சாதிய ஒடுக்குமுறை மற்றும் ஆணாதிக்கம் ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் வலிமையான கட்டமைப்புகளாகத் தொடர்கின்றன. இவற்றை எதிர் கொள்ள ஒழுங்கமைக்கப்பட்ட, சமரசமற்ற போராட்டங்கள் அவசியம். நம் முன்னால் உள்ள பணி தெளிவானது: பிற்போக்கு சக்திகளைத் தோற்கடிப்பது, நிறுவனங்களை அவற்றின் அரிக்கும் செல்வாக்கிலிருந்து தூய்மைப்படுத்துவது, குடியரசை மீட்டெடுப்பது, சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் நீதியின் அடித்தளத்தில் இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்புவது. ஒற்றுமையுடன் நாம் எதிர்க்க வேண்டும். ஒற்றுமையுடன் நாம் முன்னேற வேண்டும். ஒற்றுமையுடன் சமத்துவமான, ஜனநாயகமான மற்றும் வளமான ஒரு புதிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். செங்கொடி இன்னும் உயரப் பறக்க வேண்டும். மக்கள் வெல்ல வேண்டும். எதிர்காலம் நம்முடையதாக இருக்க வேண்டும்.

​இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டை தாண்டும் வேளையில், அதன் வரலாறு அச்சமின்மை மற்றும் தியாகங்களின் பதிவாக நிற்கிறது. கான்பூரில் அதன் தோற்றம் முதல் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்களில் அதன் பங்கு வரை, விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது முதல் விடுதலைக்கு பிந்தைய சீர்திருத்தங்களை வடிவமைத்தது வரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய இறையாண்மையை சமூக மாற்றத்துடன் சீரமைக்க தொடர்ந்து முயன்று வருகிறது. வரவிருக்கும் சவால்கள் மகத்தானவை. ஆனால் கம்யூனிசக் கருத்துக்களால் வழிநடத்தப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் வரலாற்றை மாற்ற முடியும் என்பதை ஒரு நூற்றாண்டு கால மரபு உறுதிப்படுத்துகிறது. நிச்சயமற்ற மற்றும் நெருக்கடியான காலக்கட்டத்தில், செங்கொடி மீண்டும் நம்பிக்கையின் அடையாளமாக உயர வேண்டும், இது இந்தியாவிற்கு ஒரு நீதியான, ஜனநாயகமான, வர்க்கமற்ற மற்றும் சாதியற்ற சோசலிச சமூகம் என்பது ஒரு கனவு மட்டுமல்ல, அது அவசியமான மற்றும் அடையக்கூடிய எதிர்காலம் என்பதை நினைவூட்டுகிறது.

​பாஜக-ஆர்எஸ்எஸ் ஆட்சியிலிருந்து நாட்டை விடுவிப்பது, இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் சக்திகளை ஒன்றிணைப்பது மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்துவது ஆகியவையே இனிவரும் பணிகள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button