இடிந்துவிழும் மீனவர் குடியிருப்புகளை திரும்பக் கட்டித் தருக!
தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியுசி கோரிக்கை

“மீனவர்களையும், மீனவர்களின் வாழ்விடத்தையும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பாதுகாத்திட வேண்டியும், அவர்களுக்கு மாற்று இடம் வழங்கிட வலியுறுத்தி அகில இந்திய மீனவத் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) பொதுச் செயலாளர் ஆர்.பிரசாத் அவர்களும் தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சின்னத்தம்பி ஆகிய இருவரும் தமிழ்நாடு அரசுக்குக் கூட்டறிக்கையின் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கூட்டறிக்கை பின்வருமாறு:
“தமிழகத்தில் முக்கியத் தலைசிறந்த நகரங்களில் சென்னை மாநகரமாகும். இம்மாநகரத்திற்குப் பெருமை சேர்ப்பதும் கடலும் கடல் சார்ந்த வணிகத் தொழிலாகும்,
அரசுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுப்பது மீன்பிடி மற்றும் அதனைச் சார்ந்த தொழிலாளர்களே சாரும். சென்னை மாவட்டத்தில் அசோக் நகர், பூண்டி தங்கம்மாள் காலனி மீனவர் கிராமத்தில் துவங்கி சீனிவாசபுரம் முல்லிகுப்பம் திருவான்மியூர் குப்பம் வரை 44 மீனவ கிராமங்கள் உள்ளன.
சீனிவாசபுரம் முல்லைக்குப்பம் மீனவர் குடியிருப்புப் பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவர்களும், மற்ற இதர தொழிலாளர்களும் பல ஆண்டு காலமாக அப்போதைய தமிழ்நாடு வீட்டு வாரியம், தற்போது தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சுமார் 1352 குடும்பங்கள் குடும்பம் குடும்பமாய் வாழ்ந்து வருகின்றனர்.
குடியிருப்புக் கட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன்பே சிதிலமடைந்துள்ள அடுக்குமாடுக் குடியிருப்புகள் தற்போது பெய்த தொடர் கன மழையின் காரணமாகக் குடியிருப்புகளின் கான்கிரீட் சீலிங் மேல்பகுதி இடிந்தும் அதில் பல வீடுகள் பலத்த சிதலமடைந்த நிலையில் உள்ளன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். வேறு வழியின்றி அதே இடத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த 25.10.2025 அன்று காலை நேரத்தில் கதவு எண் 157/6 குடும்பத்தோடு வசித்து வந்த சரோஜா க/பெ.நாகராசு — வயது 75 காங்கிரிட் ஆன மேற்கூரை இடிந்து விழுந்து அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சார்பில் நேரில் சென்று ஆறுதல் கூறப்பட்டது.
சீனிவாசபுரம் முல்லிக்குப்பம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள கான்கிரீட் பழைய அடுக்குமாடிக் குடியிருப்புகளை தமிழ்நாடு அரசு உரிய ஆய்வு நடத்திக் குடியிருப்பில் வாழ்ந்து வரும் மீனவர் மற்றும் இதர குடியிருப்புக் குடும்பங்களையும் உயிர் மற்றும் உடல் சேதம் ஏற்படாமல் தடுத்திடவும், காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டியும்
ஒட்டுமொத்தக் குடும்பங்களைப் பாதுகாக்க நிரந்தரமாக வாழ தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் அப்பகுதியை உரிய ஆய்வு நடத்திச் சிதலமடைந்த வீடுகளில் குடியிருந்து வரும் நபர்களைக் குடும்ப உறுப்பினர் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தி மாற்று இடம் தந்து குடிமனைப் பட்டா அனைவருக்கும் வழங்கிட அகில இந்திய மீனவத் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் தமிழ்நாடு அரசு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுத்திட கூட்டறிக்கையின் சார்பில் வேண்டுகிறோம்.
தமிழ்நாடு ஏஐடியூசி மீனவத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தலைமையில் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பிரசாத், கேரளா மாநிலத்தின் ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரகுவரன். துணைத் தலைவர் எட்வின், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் வி.ஆதிமூலம் கூட்ட மைப்பின் சார்பில் ஐஎன்டியுசி சென்னை மாவட்ட பொது செயலாளர் ஆர்.தனசேகரன் மற்றும் பிள்ளைக்குப்பம் சீனிவாசபுரம் மீனவர் நல சங்க தலைவர் பி.சேகர். விஜி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட சங்க நிர்வாகிள் மற்றும் மீனவர்களோடு குழுவாக சென்று அப்பகுதியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டும், சிதலமடைந்த வீடுகளையும், கான்கிரீட் கூரை விழுந்து காயமடைந்துள்ள சரோஜா அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இவ்வாறு பி.சின்னதம்பி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.