தலையங்கம்

தலைமை நீதிபதியின் பகிரங்கக் குற்றச்சாட்டு!

தலையங்கம்

“ஒன்றிய அரசு எனது நீதிமன்றத்தை வேண்டுமென்றே தவிர்க்கிறது” என்ற குற்றச்சாட்டை இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வழக்கு விசாரணையின் போதே பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஜனநாயகத்தையும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அரசியல் சாசனம் உருவாக்கிய நடுநிலை அமைப்புகளான நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, மத்தியப் புலனாய்வுத்துறை உள்ளிட்ட அனைத்தையும் ஆர்எஸ்எஸ்- பிஜேபி அரசு வளைத்து, தன் விருப்பத்தை நிறைவேற்றும் முகவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

இதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே வெளிப்படுத்திருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

தீர்ப்பாயங்கள் சீர்திருத்தம் (சீராக்கல் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம் குறித்து, சென்னை பார் கவுன்சிலின் முறையீடு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோரின் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், முதல் நாள் இரவில் இந்த வழக்கை ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றொரு மனு ஒன்றிய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த போதுதான் தலைமை நீதிபதி மேற்சொன்ன கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் நவம்பர் 23ஆம் நாள் அன்று ஓய்வு பெற இருக்கிறார். அவரிடம் வழக்கு சென்றால், அதில் தான் விரும்பும் தீர்ப்பு கிடைக்காது என்பதற்காக, அவரை விசாரிக்க விடாமல் நாள் கடத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பிஜேபி விரும்புகிறது.

இது ஒரு தனி வழக்கின் மீதான அவரது கருத்து என்று மட்டுமே எடுத்துக் கொள்ள முடியாது.

அமித்ஷா சம்பந்தப்பட்ட, சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பி.ஹெச். லோயா, மர்மமான முறையில் ‘மரண’மடைந்தது குறித்த வழக்கு, மூத்த நீதிபதிகளைப் புறக்கணித்து குறிப்பிட்ட நீதிபதிக்கு ஒதுக்கப்பட்ட போது, நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊடகங்களைச் சந்தித்தனர். அதற்கு முன் எந்த நீதிபதியும் ஊடகங்களைச் சந்தித்ததில்லை.

“நாட்டுக்கும், அரசு நிர்வாகத்துக்கும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் அரசியல் முக்கியத்துவம் மிகுந்த, நுட்பமான வழக்குகள், சீனியாரிட்டி, வெளிப்படைத்தன்மை எதுவும் பின்பற்றப்படாமல், ‘விருப்பமான’ நீதிபதிகளுக்கு அனுப்பப்படுகின்றன” என்று அப்போது அவர்கள் கூறினர். அதன் தொடர்ச்சியாகவே தலைமை நீதிபதியின் தற்போதைய கருத்தைப் பார்க்க வேண்டும்.

பதவி ஏற்கும் போதே, நான் ஓய்வுக்குப் பின்னால் அரசு வழங்கும் எந்தப் பதவியையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அறிவித்தவர் கவாய்.

முந்தைய நீதிபதிகள் சிலர், ஓய்வுக்குப் பின் மாநில ஆளுநராக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, வேறு சில முக்கியப் பொறுப்புகளுக்கு மோடி அரசால் நியமிக்கப்பட்டனர். அவர்கள் நீதிபதிகளாக இருந்த காலத்தில், ஆர்எஸ்எஸ் பிஜேபியின் விருப்பங்களை நிறைவேற்றும் தீர்ப்புகளைத் தந்தார்கள்!

ஓய்வுக்குப் பின் வேறு பதவி ஏற்க மாட்டேன் என்று சொல்வது, ஆர்எஸ்எஸ் பிஜேபியின் கட்டளைகளுக்கு ஒரு நீதிபதியாக உடன்படமாட்டேன் என்பதை வெட்ட வெளிச்சமாக அறிவிப்பதுதான்!

அது அவரது தீர்ப்புகளிலும் வெளிப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர், சட்டப்பேரவை இயற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் தர மாட்டேன் என்று மறுத்ததை தவறு என்றதோடு மூன்று மாத அவகாசத்தில் முடிவெடுக்க வேண்டும், நிலுவையில் உள்ள சட்டங்கள் அவர் ஒப்புதல் தராவிட்டாலும் ஒப்புதல் பெற்று நிறைவேறியதாகவே கருத வேண்டும் என்றும் பொட்டில் அடித்தால் போல தீர்ப்பு சொன்னவர் அவர்.

இந்தத் தீர்ப்பைச் சீர்குலைக்க குடியரசுத் தலைவர் மூலம் கேள்விகள் அனுப்பப்பட்டன. நாடாளுமன்றமா, குடியரசுத் தலைவரா, உச்சநீதிமன்றமா எது பெரிது என்ற கேள்வியை ஆர்எஸ்எஸ் பிஜேபி எழுப்பியது. அதிலும் கூட “எல்லாவற்றையும் விட பெரியது, மதிப்பு மிக்கது இந்திய அரசியல் சாசனம் தான்” என்று சலனமின்றி அவர் பதில் சொன்னார்.

அதனால் தான் உச்சநீதிமன்ற இருக்கையில் அமர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தபோது அவர் மீது செருப்பு வீசப்பட்டது. செருப்பை வீசியவன் ‘இது கடவுளின் ஆணை’ என்று சொல்லி ஒரு வழக்கு கூட பதிவாகாமல் தப்பிக்கவும் முடிந்தது.

அதனால் தான், ‘நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு போவோம்’, ‘உன் அப்பன் சிபிஐ வந்துட்டான்’ என்று தவெக கூட்டத்தில் குதூகலிக்கவும் முடிகிறது!

அரசியல் பிழைகளைத் தொடர்வோரை அகற்றி முடிக்க வேண்டிய அறம், மக்கள் கரங்களில் தான் உள்ளது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button