
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) லிபரேசன் மாநிலச்செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.
அதில், “டெல்லியில் கூடிய இடதுசாரிக்கட்சிகள் பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாடும் ஆதரவும் தெரிவிக்கும் வகையிலும், இனவெறி பிடித்த இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் முறையிலும் நாடு தழுவிய இயக்கத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளன. இதன்படி 24.06.2025 அன்று மாலை 4.00 மணிக்கு சென்னை, சைதாப்பேட்டையில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆயுத விற்பனையை இந்தியா நிறுத்த வேண்டும்.
இஸ்ரேல் அரசின் இனவெறி கொண்ட படுகொலைகள், போர்க் குற்றச் செயல்களை கண்டிக்கிறோம்;
தேச உரிமைக்கும், இறையாண்மை கொண்ட சுதந்திர தாயக உரிமைக்கும் போராடும் பாலஸ்தீன மக்களுக்கு துணை நிற்போம்.
மோடியின் ஒன்றிய அரசு, இந்தியாவின் பாரம்பரிய வெளியுறவுக் கொள்கை நெறிகளில் உறுதியாக நிற்க வேண்டும்.
பாலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டத்தை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்.
இனவெறி பிடித்த இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுத விற்பனை செய்து ஒத்துழைத்து வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
என்ற முழக்கங்களோடு நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்குமாறு அழைக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
