
தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டம் (2019) அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டது.
அந்தச் சட்டத்தில், தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்குத் தொடர்ச்சியாக 100 ஏக்கர் நிலம் இருக்கவேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டிருந்தது.
மாறாக, மாநகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கர், நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் 35 ஏக்கர், பிற பகுதிகளில் 50 ஏக்கர் நிலம் இருந்தால் போதும் என்ற சட்டத் திருத்தம் தற்போது தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதன்றி, தற்போது செயல்பாட்டிலிருக்கும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் உரிய கட்டமைப்புகளும் ஏற்பாடுகளும் கொண்டிருந்தால் தனியார் பல்கலைக்கழகங்களாகத் தங்களை மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்போது பயிலும் மாணவர், ஆசிரியர் மற்றும் பிற பணியாளர்களது நலன்கள் தற்போதுள்ள நிலைகளுக்குக் குறையாமல் தொடரவேண்டும் என்ற கட்டுப்பாடு சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர் சேர்க்கையில் 65% அரசு இடங்களாகத் தரப்படவேண்டும். சிறுபான்மையினர் பல்கலைக்கழகமாக இருந்தால் 50% இடங்களை மாநில அரசுக்கு வழங்கியாகவேண்டும்.
இவ்வாறு பல்கலைக்கழகமாக ஒரு நிறுவனம் மாறினால், அரசு உதவி முழுமையாக நிறுத்தப்படும்.
ஆனால், மாணவர்கள் செலுத்தவேண்டிய கல்விக் கட்டணம் குறித்த எந்த விவரமும் தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திலோ அல்லது இப்போதைய சட்டத் திருத்தத்திலோ இடம்பெறவில்லை என்பதைப் புறக்கணித்துவிட முடியாது. இதனால்தான், தற்போது எதிர்ப்புகள் தோன்றியுள்ளன.
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களாக மாறுவதற்கான பிரிவுகள் ஏதும் இடம்பெறாததால், அது அப்போது பெரிதும் கண்டுகொள்ளப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
நில அளவுக் குறைப்பு ஏன்?
கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்கள் உருவானபோது ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன என்பதை இந்த இடத்தில் நினைவில்கொள்ளவேண்டும். சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மட்டும் இதற்கு விலக்கு.
சென்னை, கோவை போன்ற மாநகராட்சிகளில், புறநகர்ப் பகுதிகளில்தான் பல கல்லூரிகள் செயல்படுகின்றன. தற்போது எட்டுத் தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை யாவும் பெருநகர்களுக்குப் புறத்தேதான் உள்ளன.
அத்துடன், தனியார் பல்கலைக்கழகங்கள் ஒற்றை வளாகத்தில் இயங்கும் என்று சட்டம் கூறினாலும், உறுப்புக் கல்லூரிகள், வேற்றிட நடுவங்கள், கூடுதல் வளாகங்கள், கற்றல் நடுவங்கள் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொள்ளவும் சட்டம் இடம் தந்துள்ளது.
இந்த நிலையில், நில அளவுக் குறைப்பு ஏன் என்பது புரியவில்லை. அரசு உதவி பெறும் சில தனியார் கல்லூரிகளுக்கு உதவும் பொருட்டு நில வேண்டலின் அளவு குறைக்கப்பட்டுள்ளதா என்ற அய்யம் எழாமல் இல்லை.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்
பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையத்தினால் ஏற்பளிக்கப்பட்ட 28 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவை மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட பல நிலைகளில் உள்ள படிப்புகளுக்காக மாணவர்களைச் சேர்த்துவருகின்றன.
மாணவர் சேர்க்கை, கல்விக் கட்டணம், இட ஒதுக்கீடு என எவற்றையும் பின்பற்றாது தன்விருப்பாகச் செயல்படும் வாய்ப்பு அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், தங்கள் விருப்பத்திற்கேற்ப மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு, பெருந்தொகையினைக் கல்விக் கட்டணமாகப் பெற்று, இவை வணிக நோக்கோடு கொள்ளையடித்து வருகின்றன என்று எளிதில் கூறிவிட முடியும்.
தன்னாட்சிக் கல்லூரிகள் நிலை
கல்வித் தரம் ஆய்வு, கண்டுபிடிப்புகள் போன்றவற்றை ஊக்குவிக்கவும் பாடத்திட்டங்களை மேம்படுத்திக்கொள்ளவும் இன்றைய நுட்ப வளர்ச்சிகளை எதிர்கொள்ளவும் முன்னேற்ற எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கவும் தனியார் பல்கலைக்கழகங்கள் வேண்டப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
இத்தகைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக 1990களில் ‘தன்னாட்சிக் கல்லூரிகள்’ என்ற பெயரில் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் பலவற்றுக்குத் தனித்த தகுதிகள் வழங்கப்பட்டன.
பாடத் திட்டங்களை வகுத்தல், தேர்வுகளை நடத்துதல் போன்ற கடமைகளும் அவற்றுக்குத் தரப்பட்டன.
இதனால் மாறுபட்ட பாடத் திட்டங்களும் மேம்பட்ட கல்வி முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுத் தரம் உயரும், தரமான கல்வி மாணவர்களுக்குக் கிடைக்கும் என நம்பப்பட்டது.
ஆனால், எத்தகைய சிறப்பினையும் மாறுதலையும் இவை கொண்டுவரவில்லை. வழக்கமான கல்வி முறையிலேயே அவை தொடர்ந்துகொண்டிருக்கின்றன. தங்களது கல்லூரி மாணவர்களுக்கு மிகு மதிப்பெண்கள் கொடுத்து, பல தன்னாட்சிக் கல்லூரிகள் தங்களை மேம்படுத்திக் காட்டிக்கொள்கின்றன என்பன போன்ற குற்றச்சாட்டுகளும் எழாமல் இல்லை.
இந்த நிலை தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் ஏற்பட்டுப் பட்டம் பெறுவோர் பட்டியலைப் பெருக்கும் நிலை நேர்ந்துவிடக்கூடாது.
மேற்படிப்புக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்
2025இல் 7,53,142 மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2021-22ஆம் கல்வியாண்டில் 45% அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே உயர் கல்வியில் சேர்ந்திருந்தனர். 2022-&23ஆம் ஆண்டில் இது 69% என உயர்ந்தது. 2023-&24ஆம் ஆண்டில் 74% அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு மாணவியருக்குத் திங்கள்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்குவதும் கல்விக் கட்டணக் குறைவும் இத்தகைய வளர்ச்சிக்கு வித்திட்டன. தற்போது மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகைத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய 75% சேர்க்கை என்பது மேலும் உயரும்போது, உயர் கல்விக்கான இடங்களும் பெருகவேண்டும்.
தனியார் பள்ளிகளில் படித்த செல்வ மாணாக்கரில் பெரும்பான்மையோர் தன்நிதிக் கல்லூரிகளில் மிகு கட்டணம் செலுத்திச் சேர்ந்துவிடுகின்றனர்.
ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தோர் பெரிதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளையே நம்பியுள்ளனர். கல்விக் கட்டணக் குறைவு இதற்கு முதன்மையாக அமைகிறது.
குறிப்பாக அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டால், 65% அரசு இடங்கள் கிடைக்கலாம். ஆனால், மிகுதியான கல்விக் கட்டணம் செலுத்தும் நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்களாக மாறினால் 65% இடம் கிடைத்தாலும், ஏழை எளிய மாணவர்கள் சேர இயலாமல் போய்விடும்
இந்தக் கல்வியாண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இவை எளிய மாணவர்களுக்குப் பெரும் பயனைத் தந்துள்ளன என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனாலும், எளிய மாணவர் முழுமையாகப் பயன்பெறும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்பதில் அய்யமில்லை.
அரசு உதவி பெறும் கல்லூரிகள்
தமிழ்நாட்டில் உள்ள 142 அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு சில தனியார் பல்கலைக்கழகங்களாக மாறினாலும், அவற்றில் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் பெரிதும் உயர்ந்துவிடும். எளிய மாணவர்களுக்கான இடங்கள் குறைந்துவிடும்.
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில், மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்ற நடைமுறையில், தனியார் பள்ளிகளில் படித்த வளம் கொண்ட மாணவர்களே பெரிதும் பயன்பெறுகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.
அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்குத் தற்போது 100% அரசு உதவி வழங்கப்படுகிறது.
அத்துடன், மாநில அரசு, பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையம் ஆகியன கட்டடங்கள், ஆய்வுக்கூடங்கள் போன்ற கட்டமைப்புகளுக்குப் பொருளுதவி செய்து வருகின்றன. மேலும், பலருடைய நன்கொடைகளும் பெறப்படுகின்றன.
தன்நிதிக் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்க ஏற்பு வழங்கும் நிலை 1990களில் மிகுந்த பின்னர், அரசு உதவி பெறும் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்படவில்லை.
இப்போது இருப்பது போல மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை என்ற நடைமுறை இல்லாதபோது, இந்த அரசு உதவி பெறும் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்குக் கூடுதலாகப் பெருந்தொகை பெற்றுவந்தன என்பதிலும் மாற்றமில்லை. ஆசிரியர் ஊதியம், கட்டமைப்பு ஆகிய அனைத்துக்கும் தமிழ்நாடு அரசின் பொருளுதவி கிடைத்துள்ளன – கிடைத்து வருகின்றன.
அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவை யாவும் அரசு சார்ந்த பொதுச் சொத்துக்கள் என்பதுதான் உண்மை.
அரசு உதவி பெறும் கல்லூரிகளின் உரிமையாளர்கள் அல்லது மேலாண்மையினர், அறக்கட்டளை மற்றும் பதிவு நிறுவனம் என்ற பெயர்களில் எவ்வாறு இருந்தாலும், அவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்க விரும்பினால் தனித்து வேறொரு நிறுவனமாகத் தொடங்கலாம்.
அப்போது அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசே ஏற்று நடத்துவதுதான் முறையாக இருக்கும். மாணவர், ஆசிரியர் நலன் உள்ளிட்ட அனைத்தும் அப்போது காக்கப்படும்.
இந்த இடத்தில் மற்றொன்றையும் மறந்துவிடக்கூடாது. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் அனைத்தும் குறைந்த கட்டணம் பெறுவது உண்மையென்றாலும், இத்தகைய கல்லூரிகள் பெரிதும் தன்நிதி வகுப்புகளையும் நடத்திவருகின்றன. இத்தகைய வகுப்புகளில் சேரக் கட்டணங்கள் மிகுதி. வருவாயும் மிகுதிதான்.
அரசின் கட்டுப்பாடுகளால், தன்நிதி வகுப்புகள் தனியாக நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு செயல்படும் தன்நிதி நிறுவனங்களை மட்டும் தனியார் பல்கலைக்கழகமாக மாற ஒப்புதல் வழங்கலாம்.
அரசு சார்ந்த உதவிகளோடு ஏற்படுத்திக்கொண்ட கட்டமைப்புகளைக் காட்டி, தனித்துப் பிரிந்து சென்று தனியார் பல்கலைக்கழகமாக மாறுவது மக்களது வரிப்பணத்தைக் கொள்ளை கொள்வதற்கு இணையானதாகும்.
கட்டணக் கொள்ளைக்கு எடுத்துக்காட்டு
மென்பொருள் பணி வணிகத்தில் முன்னணி நிறுவன உரிமையாளர் சிவ நாடார் நடத்தும் எசு.எசு.என், தன்நிதிப் பொறியியல் கல்லூரி சென்னையில் உள்ளது. தரமான கல்வி, அரசுக் கட்டணம் மட்டும் எனச் சிறப்பாக நடைபெறும் கல்லூரி அது.
தனியார் பல்கலைக்கழகச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் சிவ நாடார் பல்கலைக்கழகம்தான் முதலாவதாக உருவானது. இங்கு கல்விக் கட்டணம் அரசுக் கட்டணத்தைவிட ஏறக்குறைய ஆறு பங்கு மிகுதி.
சிவ நாடார் நடத்தும் தன்நிதிப் பொறியியல் கல்லூரியும் சிவ நாடார் பல்கலைக்கழகமும் அடுத்தடுத்து இருந்தாலும், தன்நிதிப் பொறியியல் கட்டணம் குறைவாகவே இருந்தது.
ஆனால், இந்த ஆண்டு தன்நிதிப் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுவிட்டது. மாறாக, அக்கல்லூரி சிவ நாடார் பல்கலைக்கழகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டுவிட்டது.
இது போலத் தனியார் பல்கலைக்கழகம் என்ற பெயரில், அரசுக் கட்டணத்தைவிடப் பல மடங்கு தொகை பெறும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கிவிடக்கூடாது.
அரசு உதவி பெறுவதைவிடப் பல மடங்கு கட்டணம் கிடைக்கும்போது, அனைவரும் தனியார் பல்கலைக்கழக வாய்ப்புக்கு மாறுவர் என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான்.
மதிப்பெண் முறையால், அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர இயலாத ஏழை எளிய பெற்றோர் பலர் தங்களது வருவாய்க்கு எட்டாத கல்வி தரக் கடன் பெற்றுத்தான் தன்நிதிக் கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர்.
தனியார் பல்கலைக்கழகங்களின் வரவால் ஏழை மாணவர்க்குக் கல்வி எட்டாக் கனியாகிவிடக்கூடாது.
இந்த நிலையில், தொழில் படிப்புகளுக்கு ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீடு இருப்பதுபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அரசு, அரசு உதவி பெறுபவை, தன்நிதி, தனியார் பல்கலைக்கழகங்கள் என அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அரசுப் பள்ளி மாணவர்க்கு இன்னும் மிகுதியான ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். அத்துடன் அரசுக் கல்லூரிக் கட்டணங்களை இந்த ஒதுக்கீடு இடங்களுக்கு உறுதிப்படுத்தவேண்டும்.
இவை மட்டுமே சமூக நீதிக்கு வழிவகுக்கும்.