வரலாறு

ஆவணம் அறிவோம் – 6: பெண்டிர் பண்டாரமும் கொண்டு

ஆ.சிவசுப்பிரமணியன்

தமிழக வேந்தர்கள் அல்லது பேரரசர் என்போர், பிறப்பித்த கட்டளைகள், வழங்கிய தீர்ப்புகள் அல்லது கொடைகளை வெளிப்படுத்தும் தன்மையில் அமைந்த கல்வெட்டுக்கள் பரவலாகக் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுக்களின் தொடக்கப் பகுதி அவர்களின் போர் வெற்றிகள், அறச்செயல்கள் என்பனவற்றையும் குடிப்பெருமையையும் கூறும் தன்மையில் அமைந்திருக்கும்.

குறிப்பிட்ட மன்னரது செயல்கள் மட்டுமின்றி அவனது முன்னோர் செயல்பாடும் இதில் இடம் பெறுவதுடன் அவனது முன்னோர்களை புராண மூதாதையர்களுடன் இணைக்கும் வகையிலான செய்திகளும் இடம் பெற்றிருக்கும். இவற்றில் உயர்நவிற்சிக்கும் மீவியற்கை நிகழ்வுகளுக்கும் குறைவிராது. இச்செய்திகள் அடங்கிய பகுதி மெய்க்கீர்த்தி அல்லது பிரசஸ்தி எனப்படும்.

இதனால் மெய்க்கீர்த்தியானது புராணம் காவியம் என்பனவற்றில் பயிற்சி பெற்றவர்களால் எழுதப்படவேண்டியிருந்தது. எனவே சமஸ்கிருதப் பயிற்சி கொண்ட பிராமணர்கள் இதை எழுதியுள்ளனர். இதன் பொருட்டு தனிக் குடியிருப்புகளையும் விளைநிலங்களையும் கொடையாகப் பெற்றனர். மன்னர்களின் போர் வெற்றிச் சிறப்பைக் கூறும் பகுதியில் பரவலாக இடம் பெறும் ஒரு முக்கியத் தொடர் “பெண்டிர் பண்டாரமும் கைக்கொண்டு”என்பதாகும்.

இத்தொடர் சிறு வேறுபாடுகளுடன் பின்வருமாறு அமைவதுண்டு :

  • ‘ஆனையும் குதிரையும் பெண்டிர் பண்டாரமும் கொண்டு’,
  • ‘ஆனையும் பெண்டிர் பண்டாரமும் கொண்டு,’
  • ‘இவர்கள் பெண்டிர் பண்டாரம் உள்படக் கவர்ந்து கொண்டு’
  • ‘யானையும் பெண்டிர் பண்டாரமும் தண்டாற் கொண்ட ‘(*தண்டு-சேனை).
  • ‘பெண்டிர் பண்டாரமும் விபவமும் (செல்வமும்) அடங்கலும் கைக்கொண்டு’,
  • ‘ஆனையும் குதிரையும் பெண்டிர் பண்டாரமும் அடங்கக் கைக்கொண்டு’.
  • ’ஓட்டக நிரைகளும் பெண்டிர் பண்டாரமும்’

இனி இத்தொடர்களில் தொடர்ச்சியாக இடம்பெறும் ‘பெண்டிர்’ ‘பண்டாரம்’ என்ற இரு சொற்கள் குறித்த சில செய்திகளை அறிந்து கொள்வோம்.

பெண்டிர்:

மேற்கூறிய கல்வெட்டுத் தொடர்களில் இடம் பெறும் பெண்டிர் என்ற சொல் படை எடுப்புக்கு ஆளாகித் தோல்வியுற்ற நாட்டின் பெண்களைக் குறிக்கிறது. அத்துடன் யானை, குதிரை, ஒட்டகம் போன்று வெற்றிபெற்ற மன்னன் இப்பெண்களையும் கவர்ந்து சென்றமையை, ‘கொண்டு’ ‘கைக்கொண்டு’ என்ற சொற்கள் வெளிப்படுத்துகின்றன. சங்க இலக்கியமான புறநானூற்றில் நெட்டிமையார் என்ற புலவர் எழுதிய செய்யுளில் (எண்9) பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி பகைநாட்டின் மீது படை எடுக்கும் போது யாரெல்லாம் ஒதுங்கி நிற்க வேண்டும் என்று அறிவிப்பான் என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வறிவிப்பில், பசு, பசு போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்கள், நோய்வாய்ப்பட்டோர், மகப்பேறு இல்லாதார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இச்செயலை ‘அறத்தாறு நுவலும் பூட்கை’ என்கிறார் புலவர்.

இதற்கு நேர்மாறாகப் பாண்டியன் நெடுஞ் செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட மதுரைக்காஞ்சி ‘நெஞ்சு நடுக்குறுஉக் கொண்டி மகளீர்’(அடி583) என்று கொண்டி மகளீர் என்போரின் துயர நிலையைக் குறிப்பிடுகிறது. பெற்றோரையும் கணவனையும் உறவுகளையும் பிரிந்து முன் பின் அறியாத நாட்டில் யானை, குதிரை, ஒட்டகம் போன்று கடத்தி வரப்பட்டு வாழ்வை எதிர்கொள்ளும் பெண்களுக்கு உள்ளம் நடுங்கத்தானே செய்யும்.

கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பட்டினப்பாலையிலும் (அடி: 245&-249)கொண்டிமகளீர என்போர் குறிப்பிடப்படுகின்றனர். கொண்டி என்ற சொல்லுக்கான பொருள்களில் ஒன்று கொள்ளை என்பதாகும். பட்டினப்பாலையில் கொண்டி மகளிர் நீராடிவிட்டுக் கோயிலை மெழுகி விளக்கேற்றும் பணியை மேற்கொண்டிருந்தனர். ‘இவர் தோற்றார் பாற்பிடித்து வந்த மகளீரென்பர்’ என்று கொண்டி மகளீரை, உரையாசிரியர் குறிப்பிடுவார். போருக்கும் கொள்ளைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளமை நாம் அறிந்ததே.

எனவே போரில் வென்ற மன்னன் பகைநாட்டுப் பெண்களைக் கவர்ந்து வரும் வழக்கம் சங்ககாலத்திலேயே தோன்றிவிட்டது எனலாம். இது உலகளாவிய ஒன்றுதான். தோற்ற நாட்டவரை அடிமைகளாக்கும் செயலின் வளர்ச்சியாக அவர்கள் விற்பனைப் பொருளாகப் பாவிக்கப்படலாயினர். ஒரு சரக்கைப் போன்று விற்கவும் வாங்கவும் பயன்பட்ட காரணம் பற்றியே அடிமைகளையும் சரக்கு (commodity) என்றார் மார்க்ஸ். அடிமைகளின் உழைப்பால் வளர்ந்த ரோம் நாட்டில் அவர்களை ஒரு கருவியாகவே கருதியதனால் பேசும் கருவிகள் (Speaking Tools) என்றனர்.

இவ்வாறு பெண்களைக் கவர்ந்து வருவதை மனுதர்ம சாஸ்திரம் என்ற சமஸ்கிருத நீதி நூல் ஆதரிக்கிறது. இந்நூலின் ஏழாவது இயலில் ‘போர் அறம்’ என்ற துணைத் தலைப்பில், 96வது சுலோகத்தில் அதன் ஆசிரியரான மனு கூறியுள்ளது வருமாறு:

‘தேர் பரி (குதிரை), கரி (யானை), குடை, ஆடை தானியம், பசு, பெண், படைக்கலம் முதலியனவும், வெள்ளி, தங்கம் தவிர்த்த பாண்டங்களும், அவற்றைப் போரில் வென்றவனுக்கே உரிமையுடையனவாகின்றன’.

மனு இவ்வாறு கூற, திருவள்ளுவர் தமது திருக்குறளில் ‘படைமாட்சி’ என்ற அதிகாரத்தில் ‘சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையும், இல்லாயின் வெல்லும் படை‘(குறள் 769) என்கிறார்.

இக்குறளில் இடம் பெறும் ‘செல்லாத் துனி’ என்ற சொல்லுக்கு ‘மகளிரை வௌவல் (கவர்தல்) இளிவரன் செய்தல் (இழிவான செயல்) முதலியவற்றான் வருவது’என்று பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். போர் அறங்களில் ஒன்று என்று மனு எதைக் கூறுகிறாரோ அதை இழிவான செயலாக திருவள்ளுவர் கருதுகிறார்.

ஒரு நிறுவனம் போன்றமைந்த தேவரடியார் அமைப்பில் இவ்வாறு கவர்ந்து வரப்பட்ட மகளிர் பலர் இணைக்கப்பட்டிருக்கலாம். சிலர் அந்தப்புர மகளீராயிருக்கலாம். இதுகுறித்து மேலும் ஆராய இடமுள்ளது.

இதன் தொடர்ச்சி போன்று சிறையெடுத்தல். சிறைகேட்டல் என்ற பெயரில் தன் ஆட்சிப் பகுதியில் வாழும் அழகிய பெண்களைக் கவர்ந்து வந்த கொடுமையைப் பாளையக்காரர்களும் சமிந்தார்களும் மேற்கொண்டுள்ளனர்.ஆங்கிலக் காலனிய ஆட்சியிலும் இது தொடர்ந்துள்ளது. மன்னர்களைப் போன்று படைஎடுத்துச் செல்லுமளவுக்குப் பொருளாதார நிலையும் ஆள் பலமும் இல்லாத இவர்களால் இதற்குமேல் செயல்பட முடியவில்லை. தஞ்சை மராத்திய மன்னர்கள் பெண்களை விலைக்கு வாங்கியுள்ளதுடன் இப்பெண்களுக்கென்று தனி அரண்மனையும் கட்டிவைத்துள்ளனர். தஞ்சை மராத்திய மன்னர்களின் மோடி ஆவணங்களில் இது பதிவாகியுள்ளது. முராரிராவ் என்ற மராட்டியத் தளபதி திருச்சியில் தங்கி திருவண்ணாமலை கடலூர் பரங்கிப்பேட்டை சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கும் அதன் சுற்றுப்புற ஊர்களுக்கும் தன் படையுடன் வந்து பெண்களைச் சிறையெடுத்துச் சென்றதை ஆனந்தரங்கப் பிள்ளை தன் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.

பண்டாரம்:

இன்று ஒரு சாதியினரின் பட்டமாக விளங்கும் பண்டாரம் என்ற சொல் மன்னர் ஆட்சியில் கருவூலம் என்பதைக் குறிக்கும் சொல்லாக இருந்துள்ளது. பெரிய கோவில்களிலும் பண்டாரம் என்ற அமைப்பு இருந்துள்ளது. இவ்வமைப்பு மன்னர் ஆட்சியின் முக்கிய நிர்வாக அமைப்பாக விளங்கியுள்ளது. இங்கு சேமித்து வைத்திருந்த பொருள்கள் ‘பண்டாரங்கள்’ எனப்பட்டன. போரில் வென்ற மன்னர்கள் பகை நாட்டில் இருந்து கவர்ந்து வந்த பொருள்கள் இங்குதான் சேமித்து வைக்கப்பட்டன.

இந்தியாவைக் குறித்த தமது பதிவில் இங்கு நிதித்துறை, போர்த்துறை, நீர் மேலாண்மைத் துறை என மூன்று துறைகள் மன்னர் ஆட்சியில் இருந்ததாக மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் நிதித்துறையானது வரி என்ற பெயரில் தன் ஆட்சிப்பகுதியைக் கொள்ளையடிப்பது என்றும் போர்த் துறையானது படையெடுப்பு என்ற பெயரில் அயல் நாட்டைக் கொள்ளையடிப்பது என்றும் செயல்பட்டதாக விமர்சித்துள்ளார். அவரது கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் ‘மலைநாட்டை எறிந்து கொண்ட பண்டாரங்களிலும்’ என்ற கல்வெட்டுத் தொடர் அமைந்துள்ளது.

கருவூல ஊழியர்கள்:

கருவூலத்தை நிர்வகிக்கப் பல ஊழியர்கள் இருந்துள்ளனர். இவர்களின் பதவிப் பெயர்கள், பண்டார உள்ளிருப்பு, பண்டாரக் கண்காணி, பண்டாரங் காப்போன் எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பண்டாரி என்பது கருவூல அதிகாரியின் பதவிப் பெயராகும்.

கருவூலத்தில் பயன்படுத்தப்பட்ட எடைக்கல் பண்டாரக்கல் என்ற பெயரைப் பெற்றிருந்தது. கருவூலத்தின் பதிவேடு பண்டாரப் பொத்தகம் என்றழைக்கப்பட்டது. கருவூலம் என்ற அமைப்பும் அதன் ஊழியர்களும் நிலமானியச் சமூகத்தை நினைவூட்டினாலும் தமிழர்களின் கடந்தகால நிர்வாக அமைப்பின் சிறப்பை உணர்த்தி நிற்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button