கட்டுரைகள்

அமைதி நோபல் பரிசில் அரசியல்

மே.து.ரா.

2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடாவுக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் டிரம்புக்கு வழங்கப்படாவிடினும், அவரால் தூண்டிவிடப்பட்டு, வெனிசுலாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுநிலை அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒருவர்தான் பரிசினைப் பெறுகிறார்.
நோபல் பரிசுகளின் வரலாறு

ஆல்ஃபிரெட் நோபல் (1883-1896) என்பவர் சுவீடன் நாட்டு வேதியல் பொறியாளரும் தொழில் முனைவோரும் ஆவார். ‘டைனமைட்’ என்ற வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் இவர். புதிய உலகத்தைப் படைக்கும் முயற்சியில் கட்டமைப்புகளை உருவாக்கவும், மண்ணுக்குள் கிடக்கும் கனிமங்களைத் தோண்டி எடுக்கும் சுரங்கப் பணிகளுக்கும் இந்த வெடிமருந்து அடிப்படையாக அமைந்தது. அத்துடன், அன்றைய போர்க் கருவிகளில் பெரிதும் பயன்படுத்தப்பட்டது.

இத்தகைய பாய்ச்சல்களுக்கு உதவியாக அமைந்த வெடிமருந்து, ஆக்கத்திலும் அழிவிலும் பெருமளவு பயன்படுத்தப்பட்டதால், உற்பத்தியிலும் விற்பனையிலும் நோபல் பெரும்பொருளைக் குவித்தார்.

தனது பெயர் நிலைத்திருக்கும் பொருட்டுத் தான் ஈட்டிய செல்வத்தை அறக்கட்டளையாக உருவாக்கி, மனித இனத்துக்குப் பெரும்பயன் தரக்கூடிய பங்களிப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் செய்வோருக்கு ஆண்டுதோறும் பரிசுகளை வழங்கும் திட்டத்தினை உருவாக்கினார்.

இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம், அமைதி ஆகிய அய்ந்து துறைகளில் பெரும் பங்களிப்பு அல்லது கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவோருக்கு, அதற்கு அடுத்த ஆண்டில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 1901ஆம் ஆண்டிலிருந்து நோபல் பரிசுகள் தரப்படுகின்றன.

1968இல் சுவீடன் நாட்டு நடுவண் வங்கி, ஆல்ஃபிரெட் நோபல் நினைவினைப் போற்றும் வகையில் பொருளிய அறிவியலுக்கென ஒரு பரிசினை உருவாக்கித் தந்தது. இதனால், அய்ந்தாக இருந்த நோபல் பரிசு ஆறாக உயர்ந்து, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ஒருவருக்கு என்றில்லாமல், மூவருக்கு மேற்படாமல் பகிர்ந்தளிக்கும் நடைமுறையும் அவ்வப்போது உள்ளது.

சில ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேற்கு நாடுகளின் சார்பு

உலகம் தழுவியதாக அறியப்பட்டாலும், இயற்பியல், வேதியல், மருத்துவம் போன்றவை பெரிதும் அமெரிக்கா, அய்ரோப்பா, சப்பான் போன்ற முதலாளித்துவ நாடுகளுக்கான நோபல் பரிசுகளாகவே தொடர்ந்து நீடித்து வருவதைக் காண முடிகிறது.

கடந்த 124 ஆண்டுகளில் வழங்கப்பட்ட பரிசுகளில் அய்ரோப்பா (45%), அமெரிக்கா (20%) ஆகியன மிகுவளவில் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன என்பதே இதனை உறுதிப்படுத்தும்.

ஆசியா (16%), ஆப்பிரிக்கா (9%), தென் அமெரிக்கா (2%) ஆகிய நாடுகள் பெற்ற பரிசுகள் குறைவாகவே உள்ளன.

அய்ரோப்பாவின் 45%குள், சோவியத் ஒன்றியம் மற்றும் ரசியப் பரிசாளர்களும் சேர்க்கப்பட்டிருந்தாலும், ரசியாவைச் சார்ந்த 20 பேர் மட்டுமே இதுவரை நோபல் பரிசுகளை வென்றுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளுக்கு அப்பால் வழங்கப்பட்ட நோபல் பரிசுகள் பெரிதும் இலக்கியம் அல்லது அமைதி சார்ந்தவையாகவே உள்ளன.

அரசியல் நோக்கில் நோபல் பரிசுகள்

இலக்கியம், அமைதி ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் பெரிதும் அரசியல் சார்பிலேயே வழங்கப்பட்டு வருகின்றன.

“2025ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு வெனிசுலா மக்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்காக அயராது போராடி, நாட்டில் முழு வல்லாட்சியிலிருந்து மக்கள் ஏற்பு மலரக் குரல் கொடுத்து வரும் மரியா கொரினா மச்சோடாவுக்கு அறிவிக்கப்படுகிறது” என நோபல் குழுத் தலைவர் விளக்கியுள்ளார்.

வெனிசுலா நாட்டு ஆட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த பின்னர், கடந்த 14 திங்கள்களாகத் தலைமறைவாக வாழ்ந்து வருபவர் இவர். தோல்வியை ஏற்காமல் அமெரிக்கத் துணையுடன் வல்லாண்மையில் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று வருகிறார்.

இவர் செயல்பாடுகளில் அமைதி எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை. அமைதி ஏற்பட இயலாமல் வன்முறையைத் தூண்டும் இவர், மக்கள் ஏற்பை இதுவரை பெறவில்லை. மக்களைத் திரட்டிப் போராடும் நிலையினையும் எட்டவில்லை. இவருக்குத் துணையாக அமெரிக்கா பல்வேறு வடிவங்களில் உதவுவதுடன், வெனிசுலா எல்லைகளில் தனது போர்க் கப்பல்களையும் நிறுத்தியுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு அமைதியை ஏற்படுத்துவது, அமைதிக்கான இயக்கங்களை நடத்துவது, மக்கள் ஆட்சிக்காகப் போராடுவது, வல்லாண்மையை எதிர்த்து நிற்பது என்று வகுத்துப் பார்த்தால், எந்த வரையறைக்குள்ளும் இவர் வரவில்லை என்பது புலனாகும்.

காந்திக்கும் ஸ்டாலினுக்கும் நோபல் பரிசு மறுக்கப்பட்டது

காந்தி அமைதி வழியில் ஆட்சி மாற்றம் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர் என்பதை உலகமறியும். வருத்தாமை அல்லது துயர்செய்யாமை என்ற அடிப்படையில் தனது கடமைகளைச் செய்து ஆங்கில ஆட்சியை அகற்ற முயன்றவர்.

காந்தியின் பெயர் நோபல் பரிசுக்காக 1937, 1938 1939, 1947, 1948 ஆகிய ஆண்டுகளில் முன்மொழியப்பட்டன. ஆனால், அய்ரோப்பிய முதலாளித்துவ நாடான இங்கிலாந்தை எதிர்த்து அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்த காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கத் தேர்வு குழுவினர் முன்வரவில்லை.

1948இல் அவருடைய பெயர் முன்மொழியப்பட்ட போது, ‘உயிருடன் இருப்பவர் எவரும் இந்த ஆண்டு இல்லை’ என்ற அறிவிப்போடு நோபல் தேர்வுக் குழு தனது சார்பு நிலையை உறுதிப்படுத்திக் கொண்டது.

இரண்டாம் உலகப் போரினை முடிவுக்குக் கொண்டுவந்தவர் என்ற அடிப்படையில் சோவியத் நாட்டின் ஸ்டாலின் பெயர் 1945, 1948ஆம் ஆண்டுகளில் முன்மொழியப்பட்டது. ஆனால், நோபல் தேர்வுக் குழு கண்டுகொள்ளவேயில்லை.

போரை நடத்திய கிசிங்கருக்குப் பரிசு

1945ஆம் ஆண்டில்தான் அமெரிக்காவை அடிபணிய வைத்து வியட்நாம் வெற்றி கண்டது.
ஆனால், வியட்நாமுக்கும் அமெரிக்காவுக்கும் பாரிசு நகரில் நடந்த பேச்சுக்களில் 1973ஆம் ஆண்டு ஓர் உடன்பாடு ஏற்பட்டது. ஆயினும், வியட்நாம் மக்கள் மேல் குண்டுகள் வீசுவதை அமெரிக்கா தொடர்ந்துகொண்டிருந்தது.

இந்த நிலையில், பாரிசு அமைதிப் பேச்சுக்களில் கலந்துகொண்ட வியட்நாம் தலைவர் லீ டக் தோ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிசிங்கர் ஆகியோருக்குக் கூட்டாக 1973ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. போர் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி வியட்நாம் தலைவர் பரிசினை வாங்க மறுத்துவிட்டார். ஆனால், கிசிங்கர் பரிசினைப் பெற்றுக்கொண்டார்.

வல்லாட்சி எதிர்ப்பாளர்களுக்குப் பரிசு இல்லை

இந்த ஆண்டின் அமைதிப் பரிசுக்கான இலக்கணங்களைக் கொண்டு பார்த்தால், யாருக்கெல்லாம் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன அல்லது யாருக்கெல்லாம் வழங்கப்படவில்லை என்பதைத் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.

ரசிய வல்லாண்மைகளை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவிய லெனினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

சீனாவை மீட்டெடுத்த மா சே துங்குக்கு நோபல் பரிசு தந்திருக்கவேண்டும்.

அமெரிக்க ஊடுருவலை எதிர்கொண்டு போராடிய கோ சி மின்னுக்கு நோபல் பரிசு தேடி வந்திருக்கவேண்டும்.

மக்களுக்கு எத்தகைய துயருமின்றி மக்கள் ஆட்சியை நிறுவிய கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

கியூபா சிக்கலில் அணுப் போரினைத் தவிர்த்து, நல்லிணக்கம் காட்டிய சோவியத் தலைவர் குருச்சேவுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கவேண்டும்.

இந்தியா, பாகித்தான் நாடுகளுக்கிடையே அமைதியினை ஏற்படுத்த தாசுக்கண்டில் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்ற சோவியத் ஒன்றியத்தின் அமைச்சரவைத் தலைவர் கோசிசின் நோபல் பரிசு வாய்ப்புப் பெற்றிருக்கவேண்டும்.

வங்கத்தில் முசிபுர் ரகுமானையும் புறக்கணித்துவிட முடியாது.

இவர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் மேற்கு நாடுகளின் அச்சுறுத்தல்களை முறியடித்துள்ளனர். இவர்களையும் இவர்களைப் போன்ற பலரையும் நோபல் தேர்வுக் குழு உறுப்பினர் எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை.

வல்லாட்சிக்கு அமைதிப் பரிசு

இதுவரை அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்கர்களுக்கே மிகுதியாக வழங்கப்பட்டுள்ளது. 23 அமெரிக்கர்களுக்குக் கிடைத்துள்ளது.

தியோடோர் ரூசுவேல்ட் (1906), உட்ரோ வில்சன் (1919), சிம்மி கார்ட்டர் (2002) ஆகிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் அமைதிக்கான நோபல் பரிசுகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் எவரும் போரினை நடத்தாமல் இருக்கவில்லை. போர்க்கருவிகளைக் குவிக்காமல் ஓயவில்லை. போரினைத் தூண்டாமல் நிற்கவில்லை.

வல்லாட்சித் தலைவர்களுக்கும் வல்லாட்சி நாட்டுக்கும் நோபல் அமைதிப் பரிசு தேடிச் செல்கிறது.

அமெரிக்காவின் தலைவர் ஒபாமா எந்தப் போரையும் நிறுத்தவில்லை. எந்தப் போர் நிறுத்த உடன்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 2009ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

யாருக்குப் பரிசு தரவேண்டும் என்பதை முடிவு செய்துகொண்டுதான் அவரை நோபல் தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கிறது.

விதிகளின் அடிப்படையில், காலக்கட்டுப்பாட்டினால் இந்த ஆண்டு டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போயிருக்கலாம்.

அடுத்த ஆண்டு நோபல் பரிசு அவரைத் தேடி வரும். அல்லது தேடி வருமளவுக்கு நெருக்கடிகளைத் தந்துவிடுவார். போர்க்கருவிகளை வழங்கி, தனக்குச் சார்பான நாடுகளை வெற்றிபெறச் செய்து, தோல்வியடைந்த நாட்டினைப் பணிய வைத்து, போர் நிறுத்தம் என அறிவித்துவிடுவார்.

நோபல் பரிசு வழங்குவதில் அறிவியலில் இருக்கும் பாகுபாடுகள் அளவற்றவை. இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளுக்குள்ளும் அரசியல் புகாமல் இல்லை. இவற்றைத் தனியே காணவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button