சிபிஐ 26வது தமிழ்நாடு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது தமிழ்நாடு மாநில மாநாட்டில் அரசியல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு:
கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வாக்கு திருட்டு உட்பட பல்வேறு முறைகேடுகளைச் செய்த பின்னும் கூட, பாஜக அறுபத்து மூன்று தொகுதிகளை இழந்தது, ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெற இயலவில்லை. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட சந்தர்ப்பவாத கட்சிகளின் ஆதரவைப் பெற்று கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பற்ற, வேற்றுமையில் ஒற்றுமை பேணும் மரபுக்கும் எதிரான இந்துத்துவ பாசிச கொள்கையை முழுமூச்சாக அமலாக்கி கொண்டிருக்கிறது.
தொழிலாளர் உரிமைகளை பறிக்க, நூறாண்டுகள் போராடிப் பெற்ற 44 சட்டங்களை நீக்கிவிட்டு, நான்கு சட்ட தொகுப்புகளாக சுருக்கி செயல்படுத்த முயற்சிக்கிறது. விவசாய நிலங்களை குழும நிறுவனங்களுக்கு கை மாற்றுகிற, விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற்றாலும், அவற்றின் நோக்கங்களை பல வடிவங்களில் செயல்படுத்துகிறது. விவசாயிகளுக்கு தந்த வாக்குறுதி எதனையும் நிறைவேற்ற மறுத்து வருகிறது.
கடும் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. பெண்களை இழிவு செய்யும், சனாதனக் கருத்தியலுக்கு ஏற்ப, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பதைத் தூண்டுகிறது. பணமதிப்பிழப்பு மற்றும் தன்னிச்சையான ஜிஎஸ்டி வரிவிதிப்பு மூலம் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை அழித்து, பன்னாட்டுப் பெரும் குழும நிறுவனங்களின் ஏகபோகம் வளரத் துணை செய்கிறது. சிறு வணிகர்களைப் புறக்கணித்து, பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்தை வளர்க்கிறது.
பாட புத்தகங்களில் அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துக்களைத் திணிக்கிறது. வரலாற்றை புரட்டித் திரிக்கிறது. பண வசதியற்ற, சமூகத்தின் அடித்தட்டுப் பிரிவு மாணவர்களை கல்வி கற்றலில் இருந்து விலக்கி வைக்க மூன்று, ஐந்து, எட்டு, பத்து, பன்னிரண்டு ஆகிய வகுப்புகளுக்கு எல்லாம் பொதுத் தேர்வை கொண்டு வருகிறது. இந்த முறையில் தேர்ச்சி பெற்றாலும் கூட, பல நுழைவுத் தேர்வுகளைக் கட்டாயமாக்கி, வருமான வசதியற்ற, சாமானியக் குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள் உயர்கல்வியைத் தொட விடாமல் தடுத்து, வர்ணாசிரமத்தை நவீன வகையில் உயிர்ப்பித்து வருகிறது.
இந்தியாவின் தன்னிறைவை, பொருளாதாரச் சுயசார்பை வலுவாக்குவதற்காக, 70 ஆண்டுகளாக நாடு உருவாக்கி, பாதுகாத்து வந்த மக்களின் பொதுச் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை, அதானி, அம்பானி உள்ளிட்ட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து வருகிறது. இதன் காரணமாக கற்பனைக்கு எட்டாத பல கோடி சொத்துகளைச் சுருட்டிய ஒரு சிறு குழுவும், ஏழ்மையிலும் வறுமையிலும் உழலும் பல கோடிக்கணக்கான குடும்பங்களுமாக நாட்டை இரண்டாகப் பிரித்து விட்டது. இவர்களிடையேயான இடைவெளி படுவேகமாக அதிகரிக்கிறது. மதம், சாதி என மக்களைப் பிளவு படுத்தி, சொந்தச் சகோதரர்களை எதிரும் புதிருமாக நிறுத்தி சண்டையிட வைத்து, சமூக வாழ்வைப் பெரும் பதற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கால் ஊன்றி, தளம் அமைத்துக் கொள்ள இந்துத்துவ சக்திகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தொழில்களிலும், உற்பத்தியிலும் தமிழ்நாடு முதனிலை மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. மதச்சார்பின்மையும் சகிப்புத்தன்மையும் இணைந்த நிலையில், சமூக அமைதி நிலவுகிறது. இவற்றைச் சீர்குலைக்க, ஆர்எஸ்எஸ்- பாஜக ஒன்றிய அரசு தனது முழு சக்தியினையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது.
ஜிஎஸ்டி வரி மூலம் தமிழ்நாட்டில் இருந்து பெரும் வருவாயை ஈட்டுகிற ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு உரிய பங்கீட்டையும் வழங்குவதில்லை. ஒரு ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டால், அதில் வெறும் 27 பைசா மட்டுமே தமிழ்நாட்டுக்குத் தரப்படுகிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் வசூலிக்கப்படும் வரித் தொகையை விட, இரண்டு மூன்று மடங்கு அதிகமாக திருப்பித் தரப்படுகிறது.வசூலிக்கப்படும் வரித்தொகையில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தை மாநிலப் பங்கீடாக வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை அலட்சியப்படுத்துகிறது.
இது தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு தேவையான நிதியைக் குறைத்து, உள் கட்டமைப்புகளில் முதலீடு செய்வதைத் தடுத்து, உள்ளாட்சிகள் நிர்வாகத்துக்கும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் தமிழ்நாடு பலமுறை பேரழிவை சந்தித்த போதும், அதற்கான பேரிடர் நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது.
ஒன்றிய அரசுப் பணிகளுக்கான யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி போன்ற தேர்வுகளில் இந்திக்கு முன்னுரிமை தரப்படுகிறது. தமிழும் ஆங்கிலமும் பயின்ற தமிழ்நாட்டின் இளைஞர்களை ஒன்றிய அரசுப் பணியில் சேர முடியாமல் தடுக்கிறது. வங்கி, ரயில்வே போன்ற மக்களோடு தொடர்புடைய துறைகளிலும் கூட, தமிழ்நாட்டில் வட மாநில ஊழியர்களை நியமிக்கிறது. ஒன்றிய அரசின் ஆவணங்கள் மற்றும் இணையதளங்களில் இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றான தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.
காவிரி உள்ளிட்ட நீர் வளங்கள், கடலோர வளங்கள் ஆகியவற்றைத் தீர்மானிப்பதில் ஒன்றிய அரசு மேலாதிக்கம் செலுத்துகிறது. விவசாயம், மீன்வளம் போன்ற தொழில்களை இது கடுமையாக பாதிக்கிறது. மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில், மின் கட்டணங்களை தொடர்ந்து உயர்த்துவது உள்ளிட்ட ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள திட்டங்கள் மூலம் மாநில நிர்வாகத்தை தடம் புரட்டுகிறது. தமிழ்நாட்டில் நிறைவேற்ற வேண்டிய 15க்கு மேற்பட்ட இரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் ஒன்றிய அரசு கிடப்பில் போடுகிறது.
தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில், தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கிறது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதி தர மறுத்து நிர்பந்திக்கிறது.ஆசிரியர்களுக்கு ஊதியம் தரக் கூட இயலாத இக்கட்டான நிலைக்குள் மாநில அரசைத் தள்ளுகிறது.
தமிழர்களின் தொன்மையை, உலத்தில் முதலாவதாக இரும்பைப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் என்ற உண்மையை வெளிப்படுத்த, வேண்டுமென்றே மறுக்கிறது. கீழடி ஆய்வுகள், அங்கு மக்கள் வாழ்ந்த காலத்தை அறிவியல் பூர்வமாக நிரூபித்த பின்னும், அது போதாது என்கிறது.
அநேகமாக மனிதர்கள் தமக்குள் பேசிக் கொள்ளாத சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு, கடந்த பத்து ஆண்டுகளில் 2532.59 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்த ஒன்றிய அரசு, தொன்மை நிறைந்த, இலக்கிய இலக்கண வளமை பெற்ற, இன்றும் பேசப்பட்டு வருகிற தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய தென்னிந்திய மொழிகள் அனைத்துக்கும் சேர்த்து வெறும் 147 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி இருக்கிறது.
குடியரசுத் தலைவர் மூலம் நியமிக்கப்படும் ஆளுநரைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசை நடத்துகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்ட வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் அதிகார அத்துமீறல் தொடர்கிறது. உச்ச நீதிமன்றமே தலையிட்டு, ஆளுநரின் நடவடிக்கை தவறு எனச் சுட்டிக்காட்டி, கால வரம்பும் நிர்ணயித்து விட்டது. ஆனால் அதனை அலட்சியப்படுத்தி தன் போக்கிலேயே செயல்படுகிறது.
அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரிடமும் இந்துத்துவ அரசியல் கருத்தியல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக நடத்துவதற்கு ஆளுநர் பதவி பயன்படுத்தப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் -பாஜக கருத்தியலுக்கும் அரசியலுக்கும் எதிராக செயல்படுகிற எதிர்க்கட்சியினரை ஒடுக்க, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வு துறை உள்ளிட்ட துறைகளை ஏவி விட்டு, கைது செய்து சிறையில் அடைத்து அச்சுறுத்துவதும் மக்களிடம் இருந்து அவர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களது பிம்பத்தை சிதைப்பதுமான செயல்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.இவற்றோடு சேர்த்து, மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், கடவுளின் பெயரால், இனத்தின் பெயரால் தமிழக மக்களைப் பிளவு படுத்த பல்வேறு வகைகளில், தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
உள்ளூர் திருவிழாக்களில் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை அழித்து, விளக்கு பூஜை, சிறு தெய்வ வழிபாட்டிலும் சமஸ்கிருத திணிப்பு, இறைச்சி உண்பது இழிவு என்ற மனநிலையை உருவாக்குதல், கேட்டறியாத வடபுல பண்டிகைகளை மதத்தின் பெயரால் உள் நுழைத்தல், சாதிச் சண்டைகளை விசிறி விடுதல், ஆணவப் படுகொலைகளை அங்கீகரித்தல் என தமிழ்ச் சமூக வாழ்வில், தீய மாற்றங்களை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ்- பாஜக, சங்கப் பரிவாரங்கள் பல்வேறு பெயர்களில் பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.
சமூகம், அரசியல், பொருளாதாரம், கருத்தியல், பண்பாட்டுத் துறைகளில் பெரும் அச்சுறுத்தல்களை, தமிழ்நாடு எதிர்கொள்கிறது. இவற்றுக்கு எதிராக மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி, முற்போக்கு சக்திகள் ஒருங்கிணைந்து, இன்னும் கூடுதல் வலிமை பெறுவது இன்றைய அவசிய தேவையாகிறது.
சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவோடு இனி உறவு இல்லை என்று தோற்றம் காட்டிய அஇஅதிமுக தலைமையை நிர்பந்தம் செய்து பாஜக தனது கூட்டணிக்கு கொண்டு வந்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி அரசு என்று மீண்டும் மீண்டும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்து வருகிறார்.
அஇஅதிமுக வின் தொடக்க காலத்தில், திராவிடக் கருத்தியலின் அடையாளங்கள் இருந்தன. அவை நீர்த்துக்கொண்டே வந்து, தற்போது பாஜகவின் கருத்தியலோடு ஒன்றி விட்டன. பாஜகவுடன் கூட்டணி சேர்வதை அஇஅதிமுக தொண்டர்கள் ஏற்க மறுப்பதால், கட்சிக்குள் பெரும் அதிருப்தி நிலவுகிறது.
மகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் படுதோல்வி கண்ட அஇஅதிமுக தலைமை, மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் மீது அவதூறு பரப்புரை செய்து வருகிறது.
பல மாநிலங்களில், ஏதாவது ஒரு பெரிய கட்சியோடு கூட்டுச் சேர்ந்து, அதற்குள் செல்வாக்குச் செலுத்தி, அந்தக் கட்சியை உடைத்துச் சிதைத்து, அதன் மூலம் தன்னைப் பெரிய கட்சியாக மாற்றிக் கொள்வது ஆர்எஸ்எஸ்- பாஜகவின் அரசியல் உத்தி என்பது நாடு நன்கறிந்த செய்தியாகும்.வேறு சில கட்சிகளை கூட்டணிக்கு வெளியே வைத்துக் கொண்டு, திமுக ஆட்சியின் மீது வசை பாடுவதற்கும், சிறந்த சமூக சீர்திருத்த சிந்தனையாளரும் கிளர்ச்சியாளருமான பெரியார் மீது தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைப்பதற்கும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.
திமுக தலைமையிலான கூட்டணியை உடைப்பதற்கும், பாஜக இடைவிடாமல் முயற்சிக்கிறது. திமுக ஆட்சி மீது, கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இயல்பாக ஏற்படும் கருத்து மாறுபாடுகளைப் பெரிதுபடுத்தி, கூட்டணி உடையப் போகிறது என்பது போன்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. அவர்களின் முயற்சி வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்பதை நிகழ்ச்சிப் போக்குகள் உறுதி செய்துள்ளன.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் தேசிய லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்டவை நீடிக்கின்றன.
இக் கட்சிகள் வகுப்புவாதத்திற்கு எதிராக, அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். மதச்சார்பின்மை கொள்கை காக்கப்பட வேண்டும், மாநில உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் அரசியல் ரீதியாக உறுதியாக இருப்பது அரசியல் அணிச் சேர்க்கையின் அடித்தளமாகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
பாஜக-வால் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பது ஒரு புறம் இருந்தாலும், அது தனது தகிடு தத்தங்கள் மூலம் வளர்வதும் கூட தமிழ்நாட்டுக்கு பேராபத்தானது. அதனைத் தடுப்பதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் கட்சி அங்கம் வகிக்கும் அணி மாபெரும் வெற்றி பெறுவதற்கு உரிய வகையில் நமது அணுகுமுறையும், நடவடிக்கைகளும் அமைய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது தமிழ்நாடு மாநாடு தீர்மானிக்கிறது.