இந்தியா

கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்ட செயலாக்கம் நிறுத்திவைப்பு!

“இடது ஒற்றுமையின் வெற்றி!”

கேரளா இடதுசாரி அரசு, பிஎம்ஸ்ரீ கல்வித் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்ததும், அதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்ததும் மலையாள ஊடகத்தில் மட்டும் இன்றி இந்தியா முழுமையும் கடந்த ஒரு வாரமாக விவாதிக்கப்பட்டது.

“மாநில அமைச்சரவைக் கூட்டத்திலோ அல்லது கூட்டணி கட்சிகளிடமோ கலந்து பேசாமல், பிஎம்ஸ்ரீ திட்டத்தை அமலாக்க கேரளா கல்வி அமைச்சர் ஒப்புக்கொண்டது சரி அல்ல” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

“இடது ஜனநாயக அரசு, புதிய கல்விக் கொள்கையை அமலாக்கினால்….

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்படவில்லை தானாக செத்துப் போனார்;

ஆகாய விமானத்தை கண்டுபிடித்தது ரைட் சகோதரர்கள் இல்லை, ராவணன் பயன்படுத்தினான்,

டார்வின் கண்டறிந்தபடி பரிணாமக் கொள்கை இல்லை, மனிதனை ஆண்டவன் படைத்தான் என்று தான் சொல்லித் தர முடியும்.

ஆர்எஸ்எஸ்-சின் கல்விக் கொள்கையை கேரளத்தில் அமலாக்குவதா? ஒரு இடது அரசாங்கம் இதைப் பற்றி சிந்திக்க வேண்டாமா?

மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியாக கழிவறை கட்ட வேண்டும் என்று அந்த திட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதாம்!

1957ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேரளத்தில் ஆட்சிக்கு வந்தபோதே இவற்றையெல்லாம் அமலாக்கத் தொடங்கி விட்டோம்!” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம் பேசியது பரபரப்பானது.

இதனை சிபிஐ, சிபிஐ(எம்) இடையிலான மோதலாக முதலாளித்துவ இதழ்கள் சித்தரித்து வந்தன.

அதை மிகுந்த பொறுப்போடு பினாய் விஸ்வம் மறுத்தார். பிஎம்ஸ்ரீ திட்டம் என்பது, ஆர்எஸ்எஸ் கொள்கைகளை அமலாக்குவதற்கான திட்டம் என்று ஏற்கனவே சிபிஐ, சிபிஐ(எம்) ஆகிய இரண்டு கட்சிகளும் முடிவு செய்திருக்கின்றன. அந்தக் கொள்கை நிலைக்கு மாறான ஒரு முடிவை இடது ஜனநாயக அரசு மேற்கொள்ளக் கூடாது என்பதே எமது நிலை என்று தெளிவு படுத்தினார்.

25.10.2025ல் கூடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டமும் இதனை அங்கீகரித்தது. அதே நேரத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசை வீழ்த்துவது அல்ல, அதைப் பாதுகாப்பதே எமது கடமை என்றும் உறுதிப்படுத்தியது.

அதனை அடுத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக் குழு, தனது ஆட்சேபனையைப் பதிவு செய்யும் வகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 4 அமைச்சர்களும், கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்தது

29.10.2025 அன்று இதற்கு ஒரு சுமூகமான முடிவு எட்டப்பட்டது.

முதலமைச்சர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி ஆகியோரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம் உள்ளிட்ட தலைவர்களும் சந்தித்து பேசிய பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன் பின்பு, பினாய் விஸ்வம் பின்வருமாறு தெரிவித்தார்:

“கேரளா அரசு முடிவை மறுபரிசீலனை செய்யும். இதற்காக அமைச்சரவை ஒரு துணைக் குழுவை ஏற்படுத்தும். அது ஒரு முடிவு எடுக்கும் வரை பிஎம் ஸ்ரீ திட்டம் நிறுத்தி வைக்கப்படும். இந்த முடிவு ஒன்றிய அரசுக்கும் தெரிவிக்கப்படும்”

“இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரிய வெற்றி அல்லவா?” என்று ஊடகங்கள் கேட்டபோது அதனையும் பொறுப்போடு அவர் மறுத்தார்.

“இதில் வெற்றியா, வெற்றியல்லவா என்பதல்ல பிரச்சனை. இது இடது ஒற்றுமையின் வெற்றி; இடது கருத்தியலின் வெற்றி; சிபிஐ, சிபிஐ (எம்) ஆகிய இரு கட்சிகளின் வெற்றி” என்று பதிலளித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button