
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை, வெகுஜனங்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்ற தலைவர் பி.சி.ஜோசி என்று அழைக்கப்படும் பூரன் சந்த் ஜோஷி. இவர் 1935 முதல் 1947 வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார்.
ஜோஷி 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் அல்மோராவில் ஹரிநந்தன் ஜோஷி என்ற ஆசிரியரின் மகனாகப் பிறந்தார். இவர் விடுதலை இயக்கத்தில் பங்கேற்றதற்காக 1928 ஆம் ஆண்டு, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் கலை முதுகலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற உடனேயே கைது செய்யப்பட்டார். 1928–&1929 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு, யூசுப் மெஹரல்லி உள்ளிட்டோருடன் சேர்ந்து, இளைஞர் கழகங்களின் முன்னணி அமைப்பாளராக ஆனார்.
பின்னர் அக்டோபர் 1928 இல் மீரட்டில் உருவாக்கப்பட்ட உத்தரப்பிரதேசத் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கட்சியின் பொதுச் செயலாளரானார். 1929 ஆம் ஆண்டு, தனது 22 ஆம் வயதில், மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டி, பிரிட்டிஷ் அரசாங்கம் அவரைக் கைது செய்தது. அவருடன் கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஷௌகத் உஸ்மானி, முசாபர் அகமது, எஸ்.ஏ.டாங்கே, எஸ்.வி.காட்டே ஆகியோராவர். ஜோஷி ஆறாண்டுகள் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார். பின்னர், அவரது வயதைக் கருத்தில் கொண்டு அது மூன்றாண்டாகக் குறைக்கப்பட்டது.
1933 இல் இவர் விடுதலையான பிறகு, பல குழுக்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைக்கப் பாடுபட்டார்.
1935 ஆம் ஆண்டின் இறுதியில், அப்போதைய சிபிஐ செயலாளரான சோம்நாத் லஹிரி திடீரெனக் கைது செய்யப்பட்ட பிறகு, ஜோஷி புதிய பொதுச் செயலாளரானார். இதனால் அவர் 1935 முதல் 1947 வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்தார். அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் சீராக வளர்ந்து வந்தது, பிரிட்டிஷ் அரசாங்கம் 1934 முதல் 1938 வரை கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு ஜோஷி ஆற்றிய ஒரு சிறந்த பங்களிப்பு, அரசியல்- சித்தாந்த மேலாதிக்கத்தையும் கலாச்சார மறுமலர்ச்சியையும் அவர் துவக்கியதாகும்.
ஏகாதிபத்தியம், காலனித்துவம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான அவரது “தேசிய முன்னணி” என்ற முழக்கம், படித்த மக்களின் மனநிலைக்கும், அபிலாஷைகளுக்கும் முழுமையாக ஒத்துப்போனது. கம்யூனிஸ்ட் கட்சியில் சேராவிட்டாலும் கூட, மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஈர்க்கப்பட்டனர். மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், தொழில் வல்லுநர்கள், திரைக் கலைஞர்கள், அறிவாளிகள் எனப் பலர் மார்க்சியத்தின் அம்சங்களை, அவற்றின் பரந்த அர்த்தத்தில் ஏற்றுக்கொண்டனர்.
அவரது தலைமையின் போது, கம்யூனிஸ்டுகள் காங்கிரஸை வலுவான இடது செல்வாக்கு கொண்ட ஒரு பரந்த முன்னணியாக மாற்றினர். மார்க்சியத்தின் செல்வாக்கு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அப்பால் பரவியது, 1930களின் இறுதியிலும், 1940களின் முற்பகுதியிலும், ஏராளமான மக்கள் மார்க்சியத்திற்கு மாறி, தேசிய இயக்கத்தின் சித்தாந்தத்தில் ஆழமான முத்திரையைப் பதித்தனர்.
கலை மற்றும் கலாச்சாரத்திற்கு ஜோஷி ஒரு வெகுஜன ஜனநாயக மற்றும் புரட்சிகர வடிவத்தை வழங்கினார். பாடல்கள், கவிதை, இலக்கியம், நாடகம் மற்றும் சினிமா ஆகியவை வெகுஜன செல்வாக்கைப் பெற்றது. இவை அனைத்தும் தேசிய அரங்கில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கின.
பல இளைஞர்கள் பிரேம்சந்த் மற்றும் ராகுல்ஜியின் புத்தகங்களைப் படித்து கம்யூனிஸ்டுகளாக மாறினர், வெகுஜன கலாச்சாரத்தில் பங்கேற்றனர். வங்காளப் பஞ்சத்தின் போது அவரது பணி ஈடு இணையற்றது. அதிலிருந்து பிறந்ததுதான் இப்டா.
மகாத்மா காந்தியுடனான அவரது கடிதப் போக்குவரத்து கம்யூனிஸ்டுகளின் பல கருத்துக்களை “தேசப்பிதா”வுக்கு உணர்த்தியது.
கையூர், புன்னப்புரா-வயலார் கிளர்ச்சி, தெபாகா மற்றும் தெலுங்கானா போன்ற ஆயுதப் போராட்டங்கள் அவரது தலைமையின் போதுதான் நடந்தன. பின்னர் கட்சியில் சில நெருக்கடிகளை, அவர் சந்திக்க வேண்டி இருந்த போதும், அவர் எப்போதும் கட்சியோடு இருந்தார். கட்சியின் வார இதழான நியூ ஏஜ் ஆசிரியராக பணியாற்றினார்.
தனது கடைசி நாட்களில் கூட, இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்த ஆவணக் காப்பகத்தை நிறுவுவதற்காக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுப் பணிகளில் தன்னை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டார். கட்சியின் நூற்றாண்டு சமயத்தில் அவரது தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் நாம் நினைவுகூர வேண்டிய முக்கிய தருணம் இதுவாகும்.
பி.சி.ஜோசி நினைவு நாள் நவம்பர் 9