கட்டுரைகள்

கலப்பட நெய் விற்கும் பதஞ்சலி!

த.லெனின்

ஆன்மீக குரு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ராம்தேவ் சுதேசி வியாபாரம் என்கிற பெயரில் மிக மோசமான சரக்குகளை விற்பனை செய்யும் ஒரு சராசரி வியாபாரியாகவே இருக்கிறார்.

மோடி பிரதமராவதற்கு தனது யோகக் கலையையும், ஆன்மீக ரீதியிலான பிரச்சாரத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தியவர் அதற்கு கைமாறாகத்தான் இவ்வளவு பெரிய வளர்ச்சி அவருக்கு அளிக்கப்பட்டது. போலிச் சாமியார்கள் வரிசையில் இருக்கும் பாபா ராம்தேவ் முழங்காலுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்.அவரது யோகக் கலை அவருக்கே கை கொடுக்கவில்லை.

அவர் உருவாக்கிய, பதஞ்சலி ஆயுர்வேத், ஹரித்துவாரை தளமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு, கூட்டு நிறுவனமாகும். இது ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகியோரால் 2006 இல் நிறுவப்பட்டது. இதன் அலுவலகம் டெல்லியில் உள்ளது, இந்த நிறுவனம் அழகுசாதனப் பொருட்கள், ஆயுர்வேத மருத்துவம் , தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால்கிருஷ்ணா 94 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்.

ராம்தேவ் நிறுவனத்தின் முக்கிய முடிவுகளை எடுப்பவர் ஆவார்.

பதஞ்சலி நெய், பொய்!

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரித்த நெய்யின் மாதிரி, தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததையடுத்து,

அந்த நிறுவனத்திற்கு உத்தரகாண்ட் மாநில நீதிமன்றம் ரூ. 1.40 லட்சம் அபராதம் விதித்து, தனது அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் அந்நிறுவனம் பொது மன்னிப்பையும் மக்களிடம் கேட்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கு அக்டோபர் 2020-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. உணவு பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி திலீப் ஜெயின், வழக்கமான பரிசோதனையின்போது பித்தோராகரில் உள்ள ஒரு கடையில் பதஞ்சலி நெய்யை வாங்கி, ருத்ரபூரில் உள்ள அரசு ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது, நெய்யின் மாதிரி நிர்ணயிக்கப்பட்ட தரத்தை எட்டவில்லை என்றும், கலப்படப் பொருட்கள் அதில் இருந்ததாகவும் தெரியவந்தது.

எனவே நெய்யின் மாதிரி பரிசோதனைக்காக, காஜியாபாத்தில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேசிய ஆய்வகமும் நெய் தரமற்றது என்று உறுதிப்படுத்தியது என்பதுடன்,

நெய்யில் கலப்படம் இருந்ததும் பரிசோதனையில் அம்பலமானது, உணவு பாதுகாப்பு அதிகாரி பித்தோராகர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தான் இந்நிறுவனத்தின் மீது உயர்நீதிமன்றம் இந்த மெச்சத் தகுந்த தீர்ப்பை அளித்துள்ளது.

திருப்பதி லட்டுக்கு பொங்கி எழுந்த சங்கிகள் இப்போது வாலை சுருட்டிக் கொண்டு அமைதி காக்கிறார்கள் ஏனென்றால் அவர்களுக்கும் இவர்தான் நீர் வார்க்கிறார் போலும்! பணம், பத்தும் செய்யும் அல்லவா? எப்படி வாய் திறப்பார்கள்.

பதஞ்சலியுடன் இணைந்த ஃபியூச்சர் குரூப் , ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 30 கோடி (US$3.5 மில்லியன்) மதிப்புள்ள பதஞ்சலி தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.

35,000 கோடி உற்பத்தி திறனுடன் (2023 இல் ரூ. 470 பில்லியன்), நொய்டா, நாக்பூர் மற்றும் இந்தூரில் உள்ள புதிய உற்பத்தி அலகுகள் மூலம் ரூ. 60,000 கோடி (2023 இல் ரூ. 860 பில்லியன்திறனுடன் விரிவடைந்திருக்கிறது.

2016 ஆம் ஆண்டில், பதஞ்சலி உணவு மற்றும் மூலிகை பூங்காவிற்காக 35 முழுநேர, ஆயுதமேந்திய மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) கமாண்டோ பாதுகாப்பைப் பெற்றது. மோடியின் உபயத்தால் இந்தப் பூங்கா இந்தியாவில் துணை ராணுவ படைகளால் பாதுகாக்கப்படும் எட்டாவது தனியார் நிறுவனமாக மாறியது.

பதஞ்சலியின் மீதான குற்றச்சாட்டுகள்!

உத்தரகண்ட் அரசு ராம்தேவ் மீது பல்வேறு குற்றங்களுக்காக 100 க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது. இவற்றில், பதஞ்சலி யோகபீடம் மற்றும் ஹரித்வாரில் உள்ள அதன் சகோதர நிறுவனங்கள் மீது 81 வழக்குகள் நில உச்சவரம்பு மற்றும் ஜமீன்தார் ஒழிப்பு, நில சீர்திருத்தச் (ZALR) சட்டம், இந்திய முத்திரைச் சட்டத்தின் மீறல்களுக்காக பதிவு செய்யப்பட்டன. இப்படி மோசடியின் மொத்த உருவமான ஒரு நிறுவனம்தான் பதஞ்சலி நிறுவனம்!

தொழிலாளர் சுயமரியாதையை மிதிக்கும் ராம்தேவ்!

ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா தொழிற்சாலைக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் தொழிலாளர்கள், அவர்களின் கால்களைத் தொட வேண்டும். அவர்கள் ஆன்மீக குருக்களாகக் கருதப்படுகிறார்கள் அதனால்தான் இந்த இழி நிலை.

தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு ரூ. 6,000 (US$71) என்ற சொற்ப ஊதியம் வழங்கப்படுகிறது, வாரத்திற்கு ஆறு நாட்கள் 12 மணி நேர ஷிப்டுகளில் சட்ட விரோதமாக வேலை செய்கிறார்கள். தொழிற்சாலையில் பணிபுரிவது “சேவை” (தன்னார்வ சேவை) என்று கருதப்படுகிறது. அதுவே ஒரு ஊதியம் என்ற காரணத்துடன், அவர்கள் சம்பள உயர்வு கேட்பதை ஊக்கப்படுத்துவதில்லை, போராட்டங்களுக்கு அனுமதி இல்லை. இந்துத்துவ ஆட்சி அமைந்தால் இதுதான் தொழிலாளர்களின் உண்மை நிலை என்பதற்கான எடுத்துக்காட்டாக இதனைக் கொள்ளலாம்.

கோவிட் மருந்து என்ற பெயரில் கொள்ளை!

பதஞ்சலி ஆயுர்வேதம் ஜூன் 2020 இல் கோவிட்-19 சிகிச்சைக்காக கொரோனில் என்ற மருந்தை அறிவித்தது, ராம்தேவ் இந்த நோயைக் குணப்படுத்தியதாகக் கூறினார். புதிய மருந்து பயனுள்ளது அல்லது பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க எந்த மருத்துவ தரவுகளும் இல்லை, இது ஆயுஷ் அமைச்சகத்தின் பங்கைக் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் சமூக ஊடகங்களில் பின்னடைவை கண்டது. கொரோனில் அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள், புதிய மருந்துக்கான அங்கீகாரத்தை மறுத்து, மருத்துவ அதிகாரிகளால் சோதனை முடிவுகள் ஆராயப்படும் வரை அதை விற்பனை செய்வதை மற்றும் விளம்பரப்படுத்துவதை நிறுத்துமாறு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

ஆய்வக சோதனைகளில், கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவோ அல்லது தடுக்கவோ கூடிய எந்த பொருட்களும் மருந்தில் இல்லை என்பது தெரியவந்தது. இந்திய அரசாங்கம் பதஞ்சலி ஆயுர்வேதத்தை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாக (மருந்து அல்ல) கொரோனிலை சந்தைப்படுத்த அனுமதித்தது. இதன்மூலம் தவறான முறைகளில் வியாபாரம் செய்ய பாஜக அரசு வழி வகுத்தது என்பதே உண்மை.. ஆனால் மகாராஷ்டிரா அரசு, மாநிலத்தில் கொரோனிலை விற்பனை செய்வதை தடை செய்துள்ளது.

மருந்து பற்றி தவறான கூற்றுக்களை வெளியிட்டதற்காக சென்னை உயர் நீதிமன்றம், நிறுவனத்திற்கு ரூ.10,00,000 அபராதம் விதித்தது, மேலும் கொரோனில்,கோவிட்-19 ஐ குணப்படுத்த முடியும் என்ற தனது கூற்றையும் பதஞ்சலி வாபஸ் பெற்றது. அங்கீகரிக்கப்படாத பொருட்கள் இங்கிலாந்தில் விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து மருந்து ஒழுங்குமுறை ஆணையமும் அச்சுறுத்தியது இது இந்தியாவிற்கு எவ்வளவு பெரிய தலை குனிவு.

சட்ட விரோத விளம்பரம்!

“புத்ராஜீவக்“ (மகனின் வாழ்க்கை) என்ற மருந்தை குழந்தையின்மைக்கான மருந்தாக பிரச்சாரம் செய்தது.சில பதஞ்சலி மருந்தகக் கடைகள் ஆண் குழந்தை பிறப்பதை உறுதி செய்யும் என்ற கூற்றுடன் மருந்தை விற்றன, இது பெண் சிசுவை கட்டுப்படுத்தும் விதத்தில் உள்ளதால். இது சட்ட விரோதம் ஆனாலும் வியாபாரம் பெருக எந்த கேடுகெட்ட செயலையும் செய்யும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இது அமைந்தது.

போட்டியாளர்களை இழிவுபடுத்தும் அதன் தயாரிப்பான சியவன்பிராஷிற்கான விளம்பர, ஒளிபரப்பை நிறுத்துமாறு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.

பதஞ்சலி ஆயுர்வேதத்தின் ஆம்லா சாற்றிற்கு எதிரான மாநில ஆய்வக சோதனை அறிக்கையைப் பெற்ற பிறகு, இராணுவ,பாதுகாப்பு அமைச்சகத்தின் கேன்டீன் ஸ்டோர்ஸ் துறை (CSD) அதை நிறுத்தி வைத்தது,மத்திய உணவு ஆய்வகம் இந்தச் சாறு நுகர்வுக்கு தகுதியற்றது என்று கண்டறிந்தது. எனவே ராணுவ அங்காடிகளில் இருந்து அவை அப்புறப்படுத்தப்பட்டது.

போலி மருந்துகள்!

நீரிழிவு, இதயம் மற்றும் கல்லீரல் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறும் தயாரிப்புகளை, சட்டவிரோதமாக விளம்பரப்படுத்தியதற்காக பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதத்திற்கு எதிராக, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆயுஷ் அமைச்சகம் சில மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. லிப்பிடோம், லிவோகிரிட் மற்றும் லிவாமிரிட் ஆகிய மூன்று பதஞ்சலி தயாரிப்புகளின் விளம்பரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமைச்சகம் குறிப்பாக கோரியுள்ளது என்பது கரடி யே காரி துப்பிய கதையாக உள்ளது.

சர்பத் ஜிஹாத்!

லவ் ஜிகாத் என்று சங்கிகள் பேசுவதைப் போல ஹம்தார்டின் பிரபலமான பானமான ரூஹ் அப்சாவை “சர்பத் ஜிஹாத்” என்று குறிவைத்து பாபா ராம்தேவ் கூறியதாக டெல்லி உயர்நீதிமன்றம் தனது கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, யோகா குரு உடனடியாக அது தொடர்புடைய அனைத்து வீடியோக்களையும் நீக்க ஒப்புக்கொண்டார்.

எனவே பாஜகவும் சரி சங்க பரிவாரங்களும் சரி அதனை பின்பற்றுவதாக கூறும் ஆன்மீக குருக்கள் ஆனாலும் அவர்கள் நிறுவனங்களானாலும், பொய்யில் பூத்தே தங்கள் வியாபாரத்தை நடத்துகின்றன. வியாபார தந்திரங்களுக்காக இந்து மதத்தை, மக்களின் ஆன்மீக உணர்வுகளை பயன்படுத்துவது மாபெரும் சாபக்கேடு!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button