
ஒன்றிய மோடி அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கருப்புச் சட்டங்களுக்கு எதிராக தொழிலாளர்களும் விவசாயிகளும் நாடு தழுவிய கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்கள், உழைக்கும் வர்க்கத்தின் ஆவேசத்தை ஒன்றிய அரசுக்கு அழுத்தமாக வெளிப்படுத்தியது.
பத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) விடுத்த கூட்டுப் பிரகடனத்தின் அடிப்படையில், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் அனலாய்ப் பறந்தன. தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒன்றாக இணைந்து தங்களின் உரிமைகளுக்காகப் போராடினர்.

சென்னையில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆவேசத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 150 ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற சட்டங்களை எல்லாம் மோடி அரசு அகற்றிவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை அடகு வைத்துவிட்டதாக ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச்செயலாளர் ம.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தொமுச கி.நடராஜன், ஏஐடியூசி சி.எச்.வெங்கடாசலம், எஸ்.காசி விஸ்வநாதன், மு.சம்பத், சிஐடியு அ.சவுந்தரராசன் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்களும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி லில்லி பாய் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.
இதேபோன்று தமிழ்நாட்டில் மதுரை, கோவை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களிலும் நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களிலும் தொழிலாளர் – விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் ஆவேசத்துடன் நடைபெற்றன.
ஒன்றிய மோடி அரசு, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், மிகப்பெரும் கிளர்ச்சியை சந்திக்க நேரும் என ஆர்ப்பாட்டங்களில் எச்சரிக்கை விடுத்தனர்.








