அறிக்கைகள்

திறந்தவெளி சேமிப்பு நிலையங்கள் திறக்கவில்லை

நெல்கொள்முதல் குறித்து ஏஐடியுசி கோரிக்கைகள்

நெல் கொள்முதல் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு நிர்வாக இயந்திரத்தை முழுமையாக முடுக்கிவிட்டு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை போக்கவும் நஷ்டத்திலிருந்து மீட்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நெல் கொள்முதல் நெருக்கடியை அரசியல் லாபத்திற்காக சிலர் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் ஒன்றிய அரசு ஈரப்பதத் தளர்வு உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஏஐடியுசி சார்ந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கைகள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நெல்கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் தேக்கம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கொண்டு வருகின்ற நெல் உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியாத நிலையும் அதனை பாதுகாக்க விவசாயிகள் படுகின்ற இன்னல்களும் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது.

மேட்டூர் அணை காலத்தில் திறக்கப்பட்டு இடையிடையே அவ்வப்போது பெய்த மழையால் விவசாய நிலங்கள் முழுமையாக விவசாயம் செய்யப்பட்டு இயற்கை சூழலால் பெரிய அளவிற்கு நெல் மகசூல் கண்டு பெரும் பலனளித்து வரும் நிலையில் விவசாயிகளுக்கு இந்த பெருமழை பேரிழப்பை ஏற்படுத்தி விட்டது.

அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு ஆதரவளித்து உரிய உதவிகளை அரசு செய்ய வற்புறுத்தி விவசாயிகளை பாதுகாக்க குரல் கொடுக்க வேண்டும். அதனை விடுத்து அரசியல் லாபத்திற்காக விளம்பரத்திற்காக சிலர் பொருத்தமற்ற கருத்துக்களை தெரிவித்து விவாத பொருளாக்குவது மிகுந்த வருத்தத்துக்குரியது.

இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் பரப்பளவு விவசாயம் செய்யப்பட்டு வரலாறு காணாத மகசூல் கண்டு இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்து ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. இதனை எதிர்கொள்வது மிக மிக சவாலான பணியாகும். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் கள ஆய்வு செய்து திறந்த வெளி சேமிப்பு நிலையங்கள் உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். அதே போல டெல்டா மாவட்டங்களில் உள்ள நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் உட்பட தஞ்சை, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் நேரில் சென்று விவசாயிகளை சந்தித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருவதோடு மாவட்டத்திற்கும் இதற்கென தனியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களது மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.இவ்வளவு ஏற்பாடுகளுக்கு பிறகும் பணிகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.

இதற்கு முக்கிய காரணம் கொள்முதல் துவங்குவதற்கு முன்பே நிர்வாகம் முன்னேற்பாடுகள் செய்யாததே முக்கிய காரணமாகும். நெல் அதிக அளவு விற்பனைக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே திறந்த வெளி சேமிப்பு நிலையங்கள் அனைத்தும் உடன் திறக்க முனனேற்பாடாக கருங்கல் சவுக்கு மரம் போன்றவை எல்லாம் முன்கூட்டியே டெண்டர் விட்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மேட்டூர் அணை திறந்த சில காலங்களிலேயே ஏஐடியுசி சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

ஆனால் திறந்த வெளி சேமிப்பு நிலையங்கள் திறப்பதில்லை எனவும் கொள்முதல் நிலையங்களில் இருந்து அரவை முகவர்களுக்கு நேரடியாக நெல் அனுப்புவது என்ற நடைமுறைக்கு சாத்தியமற்ற தவறான முடிவு எடுத்தது இவ்வளவு நெருக்கடிக்கு காரணமாக அமைந்துவிட்டது.

மேலும் தற்போது கடுமையான மழை பெய்து வருவதால் ஈரப்பதம்17% க்குள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லாத நிலையில் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லையும் ஒன்றிய அரசின் நெருக்கடி காரணமாக 17% ஈரப்பதம் என்று குறிப்பிட்டு கொள்முதல் செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

வேறு வழியே இல்லாமல் இதை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆய்வு செய்ய வருகின்ற அதிகாரிகள் ஆயிரக்கணக்கில் கொள்முதல் பணியாளர்கள் ஈரப்பத வேறுபாடு தொகை செலுத்த வேண்டும் என்ற நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை கொள்முதல் பணியாளர்களை பெரிதும் பாதிக்கிறது. எனவே விதி மீறலுக்கு இடம் அளிக்காமல் ஒன்றிய அரசு உடனடியாக ஈரப்பத தளர்வு அனுமதித்து விதிப்படி கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

நெல் இறக்கும் இடங்களில் ஒரு மூட்டைக்கு ரூபாய் 1:48 இறக்கு கூலி வழங்கப்படுகிறது இதே பணிக்கு தனியார் ரூ.15 வரை கூலி வழங்கப்படுகிறது. ரயில் வேகன்களில் மூட்டை ஒன்றுக்கு ரூ5 வரை கூலி வழங்கப்படுகிறது. இங்கு சொற்ப கூலி வழங்குவதால் மூட்டை தூக்குவதற்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் முன்வராத நிலை மூட்டைகள் தேக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. தனியாருக்கு இணையாக இறக்குகூலி குறைந்தபட்சம் மூட்டை ஒன்றுக்கு ரூ.10 கூலி வழங்க வேண்டும்

மேலும் தூக்குகின்ற மூட்டைக்கு கூலி என்ற முறையில் கூலி பெற்றுகின்ற சுமை தூக்கும் தொழிலாளர்கள் 60 வயதிற்கு மேல் பணி வழங்க நிர்வாகம் மறுப்பது சுமைப்பணியில் மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தேவையற்ற விதிமுறைகள் புகுத்துவதை கைவிட்டு மூட்டை தூக்க வலுவுள்ளவரை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button